இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம்  ஏற்படுத்தும் செயற்பாட்டை தமிழர்களாகிய நாங்கள் ஏற்க மாட்டோம் ரெலோவின் தலைவர் செல்வம்

இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து  மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் செயல்படவில்லை. ஏனெனில்   இந்தியாவினுடைய புலனாய்வு அறிக்கையின் படி சீனாவினுடைய உளவு கப்பல் வருகை என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரிய ஒரு இடைவெளியை கொண்டு வரும் என  நாங்கள் நினைக்கிறோம் என
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான (ரெலோ) செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(2) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கின்றது.
 சீனாவின்  உளவு  பார்க்கும் கப்பல் இலங்கை நோக்கி வருகை என்பதை இலங்கை அரசு மற்றும் ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்.
எங்களைப் பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை வருமாக இருந்தால் அதனை அனுமதிக்க முடியாது என்பதில் எமது மக்கள் உறுதியாக உள்ளார்கள்.
 தற்போது இந்திய மீனவர்களின் வருகை என்பது  கவலையான விடயமாக இருந்தாலும் தமிழ் பேசும் சமூகமாகிய நாங்கள் இந்தியாவை ஒருபோதும் கைவிட முடியாது.
 அதை விட தமிழ்நாடு இன்றைக்கும் எங்களோடு இருந்து கொண்டிருக்கிறது.
எமது ஈழப் பிரச்சனையில் எமக்காக பல பேர் தங்களை எரித்து தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
அப்படியான ஒரு சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கின்ற சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் எமது தமிழ் தரப்பு எதிர்க்கும் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
 அண்மையில் சீனாவினுடைய தூதுவர் இங்கு வந்து ஒரு சர்ச்சையை கிளப்பி சென்ற பின்னணியில் பல எதிர்ப்புகளை எமது மக்கள் காட்டியிருந்தார்கள்.
 ஆகவே இலங்கை அரசாங்கம் ராஜா தந்திர நடவடிக்கையாக இரண்டு நாடுகளையும் சாதகமாக வைத்திருக்க வேண்டும் என்றால் இந்தியாவை பகைக்க கூடாது என்பது எனது கருத்து.
 ஏனெனில் இந்தியா தான் பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற இலங்கையை அண்மைக்காலமாக கை தூக்கி வருகிறது.
எமது தமிழர்களை பொருத்தமட்டில் இந்தியா தான் எமக்கான தீர்வை பெற்று தரக்கூடியதும்  எங்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியதாக இருக்கிறது.
 இந்த விடயத்தில் சீனாவின்   வேவு  பார்க்கும் கப்பல் வருகையை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
 இல்லையெனில் இந்தியா இலங்கையை விட்டு  அதிக தூரம் செல்லக்கூடிய  வாய்ப்பு இருக்கிறது.
 ஆகவே இந்தியாவை பகைப்பதால்   இலங்கைக்கு ஒருபோதும் நன்மை கிடைக்காது.  அதை தமிழர்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
 மேலும் முல்லைத்தீவில் எமது மீனவர் சமாசம் ஒன்று கூடி இந்த மீனவ பிரச்சினை தொடர்பான ஆதங்கத்தை வெளியிட்டு செய்திருந்தது உண்மையில் அது ஒரு நியாயமான கோரிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
  அமைச்சரிடம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் எமது மீனவர்கள் நான்கு மாதங்களுக்கு மேலாக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்று நேரடியாக தெரிவித்து  அது உடனடியாக நடவடிக்கைக்கு வர வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தோம்.
 தற்போது    அந்த தீர்மானத்தின் படி  அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால்  பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்து இருந்தார்கள்.
 எமது மீனவர்களும், விவசாயிகளும் போராட்டத்தில் இறங்கினால் நாடு தாங்காது என்பதை இங்கு   குறிப்பிட விரும்புகிறேன்.
ஏற்கனவே கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் விவசாயிகளுடைய வயிற்றில் கை வைத்ததன் பின்பு தான் அவர் நாட்டை விட்டு ஓடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
 அதேபோல் எமது மீனவ சமூகத்தையும் நோகடிக்கும் அல்லது அவர்களுடைய   வயிற்றில் அடிக்கின்ற செயற்பாடுகளை இந்த அரசும் செய்யுமானால் அவர்களுடைய போராட்டம் வெடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
 ஆகவே பெட்ரோல் , டீசலுக்கு கொடுக்கின்ற முன்னுரிமையை மண்ணெண்ணெய்கும் வழங்க வேண்டும்.
 இதனால் எமது விவசாயிகளும் மீனவ சமூகமும் பயனடைய வேண்டும். எனவே முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளும் மீனவர்களும் விடும் கோரிக்கையை நிறைவு செய்து கொடுக்க வேண்டும் .  நாம் ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் மீண்டும் வலியுறுத்தி  கோரிக்கை விடுக்கின்றோம்  என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்   ஊடக சந்திப்பில்  தெரிவித்தார்

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது -மனுஷ நாணயக்கார

வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக வெளிநாட்டுப் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை நேற்று அனுமதி அளித்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு முன்மொழிவில் சட்டப்பூர்வ பணம் செலுத்தும் அடிப்படையில் புதிய வரியில்லா கொடுப்பனவை அறிமுகப்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பும் பணத்தில் 50 வீதத்திற்கு சமமான பெறுமதியான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விமான நிலையத்தில் அமெரிக்க டொலரில் பணம் செலுத்த விரும்பும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் உரிமம் வழங்கும் முன்மொழிவுக்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை வரும் சீன கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்?

யுவான் வாங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான வருகை,  இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததோடு தென் இந்திய அரசியல்வாதிகளும்  எச்சரிக்கை செய்கின்றனர்.

குறித்த கப்பல் இலங்கைக்கு வரப்போவதில்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பல சந்தர்ப்பங்களில் மறுத்த போதிலும், தற்போது கப்பல் வந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கப்பல் ஓகஸ்ட் 11 மற்றும் 17ம் திகதிக்கு இடையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, வசதிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தரவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

”இது முதல் முறையாக வருகைத் தருகின்ற கப்பல் கிடையாது. சீனா, இந்தியா, தென் கொரியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இதற்கு முன்னர் இவ்வாறான கப்பல்கள் வருகைத் தந்துள்ளன. வணிக கப்பலை போன்று, கடற்படைக்கு சொந்தமான கப்பல்களும் வருகைத் தருகின்றன” என அவர் குறிப்பிடுகின்றார்.

யுவான் வாங் 5 (IMO: 9413054) என்ற கப்பலானது, 2007ம் ஆண்டு (15 வருடங்களுக்கு முன்பு) சீனாவின் தேசிய கொடியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வு மற்றும் கண்காணப்பு கப்பலாகும்.

இந்த கப்பலில் 11000 மெற்றிக் தொன் எடையுடைய பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்பதுடன், கப்பல் 222 மீட்டர் நீளமும், 25.2 மீட்டர் அகலமும் கொண்டமைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விண்கல கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, நாட்டின் Long March-5B ரொக்கெட்டை ஏவுவதற்கான கடல் சார் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றது.

2000ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையததில் உறுப்பு நாடாக சீனா ஆர்வம் காட்டியது. எனினும், சீனாவின் உறுப்புரிமைக்கான கோரிக்கை பல முறை நிராகரிக்கப்பட்டது. இந்த பின்னணியிலேயே, யுவான் வாங் 5 போன்ற அறிவியல் ஆராய்ச்சி கப்பல் சீனாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இந்நிலையில்,விண்வெளி மற்றும் செயற்கை கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை கொண்டமைக்கப்பட்டுள்ள யுவான் வாங் 5 ஆய்வு மற்றும் கண்காணப்பு கப்பலானது, சீனாவின் உளவு கப்பலாவே இந்திய ஊடகங்கள் அடையாளப்படுத்துகின்றன.

இந்த கப்பலின் வான் வழி 750 கிலோமீற்றருக்கு அதிகமாக உள்ளமையினால், தென்னிந்தியாவின் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய எல்லைக்குள் காணப்படுகின்ற அணு ஆராய்ச்சி மையங்களை மறைமுகமாக இந்த கப்பலினால் கண்காணிக்க முடியும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர் இந்திய பெருங்கடலில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறு சுவிஸ் அரசிடம் OMCT கோரிக்கை

மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இலங்கையர்களான புலம்பெயர்ந்தோர் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை சுவிட்சர்லாந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என சித்திரவதைக்கெதிரான உலக அமைப்பு (OMCT) கடிதம் ஒன்றின் ஊடாக  கோரியுள்ளது.

மேலும்  குறித்த கடிதத்தில்,

இலங்கையில் தற்போது நிலவும் சூழல் பயங்கரமானது, பொருளாதார நெருக்கடிகள் வன்முறைக்கு வழிவகுத்துள்ள நிலையில், அங்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கூட நிச்சயமில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், புகலிடக் கோரிக்கையாளர்களையும், புலம்பெயர்ந்தோரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்.

அவர்களில் சிலருக்கு இன்னமும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அப்படி அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது, சுவிட்சர்லாந்தை அதன் சர்வதேச சட்ட ரீதியான பொறுப்புக்களை மீறவைப்பதாக அமையும்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் பலருக்கு இப்போது சுவிட்சர்லாந்தில் போதுமான சிகிச்சை கிடைத்து வருகிறது. அவர்களில், பாலியல் வன்புணர்வு முதலான பல்வேறு கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளான இலங்கைத் தமிழர்களும் அடங்குவர்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், அவர்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்புவது அவர்களுக்கு மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ புனர்வாழ்வு சேவைகள் கிடைப்பதற்கும் தடையாக அமையும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துங்கள்! தேசிய சமாதான பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை

பாராளுமன்ற ஆணையை புதுப்பிப்பதற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு ஸ்ரீ தேசிய சமாதான ஆணைக்குழு (NPC) கோரியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “உலகில் அரிதாகவே காணக்கூடிய அரசியல் புரட்சியை இலங்கை கண்டுள்ளது. மக்களால், மக்களுக்காக ஒரு நிராயுதபாணியான எதிர்ப்பு இயக்கம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையை இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது. எதிர்ப்பு இயக்கம் அதன் அளவு, செயல்திறன் மற்றும் வன்முறையற்ற தன்மை காரணமாக சர்வதேச சமூகத்தின் வரவேற்பை பெற்றுள்ளது. போராட்ட இயக்கத்தின் வெற்றிக்கு அதன் தன்னிச்சையான மற்றும் அமைதியான தன்மையே காரணம்.

மக்களின் உண்மையான மனக்குறைகளே போராட்ட இயக்கத்தை உருவாக்கி அதை வெகுஜன இயக்கமாக மாற்றியது. நாட்டில் நிலவும் பேரழிவு நிலைமைக்கான பொறுப்பை முன்னாள் அரசாங்கம் மறுத்ததுடன், நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது. வன்முறையைத் தொடங்கியதே அரசுதான். தற்போது புதிய ஜனாதிபதியுடன் ஒரு புதிய அரசாங்கம் உள்ளது, ஆனால் 2022 மே மாதம் இராஜினாமா செய்த அமைச்சரவையே பெரும்பான்மையாக உள்ளது. இது எதிர்ப்பாளர்களின் விரக்தியை அதிகப்படுத்தியுள்ளது.

பொருளாதார சரிவுக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அமைதி கவுன்சில் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக நாடு அனுபவித்த பல சீரழிவுகள் காரணமாக மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் இழந்துள்ள பாராளுமன்ற ஆணையை புதுப்பிப்பதற்கு முன்கூட்டியே தேர்தலை அறிவிக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என இலங்கை தேசிய சமாதானப் பேரவை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் தொடரும் பொருளாதர நெருக்கடி- ஆடை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

பொருளாதார நெருக்கடியால் ஆடை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய வர்த்தக வலய சேவை மையம் தெரிவித்துள்ளது.

வர்த்தக வலய தொழிலாளர்களுக்கான தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் ஆடை உற்பத்தித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் மின்சாரம் இன்மையால் தமது பொருட்களை உரிய நேரத்தில் வழங்க முடிவதில்லை எனவும் இதன் காரணமாக சர்வதேச சந்தையில் இலங்கை பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு நிதி உதவி வழங்க இத்தாலி தீர்மானம்

உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்கள் பெறுமதியான அவசர உதவியை வழங்க இத்தாலி தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.

“உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் இந்த நிதி பங்களிப்பு வழங்கப்படும், மேலும் உணவு உதவி மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வவுச்சர்களை விநியோகித்தல் ஆகிய வேலைத்திட்டங்கள் இந்நிதி மூலம் மேற்கொள்ளப்படும் என்று தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், சர்வதேச சமூகம் தனது முயற்சிகளை முடுக்கி விடுவதும் இலங்கைக்கு தனது ஆதரவைக் காட்டுவதும் மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அவசர உதவி நடவடிக்கை இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய வலுவான கூட்டாண்மையின் கட்டமைப்பிற்குள் வருகிறது மற்றும் கடந்த ஏப்ரலில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக 350.000 யூரோகள் வழங்கப்பட்டன .
மேலும் கடந்த காலங்களில், 2004 சுனாமிக்குப் பின்னரும் உட்பட, இலங்கைக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் இத்தாலி தொடர்ந்து ஆதரவளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, விவசாயத் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு இத்தாலி ஆதரவளித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சீன கப்பல் விவகாரம் – இந்தியா சீனாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் கப்பல் வர அனுமதிதொடர்பில் சுமூகமான தீர்வை காண்பதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவுடனும் இந்தியாவுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவின் யுவான் வான் 5 கப்பல் தொடர்பிலேயே இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது

ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னரே குறிப்பி;ட கப்பல் இலங்கைக்கு வருகை தருவதற்கு வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் மற்றும் துறைமுகங்கள் அதிகாரசபையும் அனுமதிவழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,கப்பல் 11 ம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளது.

எனினும் இந்தியா இந்த நடவடிக்கைகுறித்து அதிருப்தியடைந்துள்ளது இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கை குறித்தும் இந்தியா உன்னிப்பாக அவதானித்து என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இந்த வாரம் தெரிவித்திருந்தார்.

.இதனை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளது இதுவே தெளிவான செய்தி எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு அதிகளவு கடனையும் ஒத்துழைப்பையும் வழங்கிய சீனா இந்தியாவுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.

Posted in Uncategorized

நல்லெண்ண செயற்பாடாக தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கும் பட்சத்தில் சர்வகட்சி அரசாங்கம் அமைய தமிழ் தரப்பினர் பரீசீலிக்கலாம். – முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்தவேளையில் தமிழ் மக்கள் மத்தியில் புரையோடியிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டுவதற்கு முதலில் நல்லெண்ண செயற்பாடாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் தமிழ் கட்சி தரப்பினர் சர்வ கட்சி அரசு அமைவதற்கு சாதகமாக அமைய வாய்ப்பு ஏற்படும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் தூரநோக்கு சிந்தனையாளரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் ஜனாதிபதி சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதற்காக விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பாக தமிழ் தரப்பு அரசியல் கட்சிகளுக்கு விடுத்திருக்கும் செய்தியில்

நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் தொடர்பாக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்

உண்மையிலேயே சர்வ கட்சி அரசாங்கம் அமைய பெறுவதற்கு சிங்கள பெரும்பான்மை கட்சிகள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அவற்றிற்கு ஆதரவு வழங்க இருக்கின்றனர்

அந்த வகையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவையும் அவர் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்து இருக்கின்றார்

உண்மையில் தமிழ் தரப்பு கட்சினர் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கிய செயல்பாடாக ஜனாதிபதியிடம் தெரிவித்து நல்லெண்ண வெளிப்பாடாக அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மக்களின் மத்தியில் நிலவும் உடனடி மற்றும் நீண்ட கால பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் பரிசீலிக்க கூடியதாக இருக்கும்

ஏனென்றால் தமிழ் மக்களின் உடனடி பிரச்சனைகள் பல தீர்க்கப்பட வேண்டி இருக்கின்றது

இதில் முதன்மையாக இருப்பது அரசியல் கைதிகளின் விவகாரம் இந்த அரசியல் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படும்போது சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பான விடயத்தை தமிழர் தரப்பு பரீசீலிக்க முடியும்.

அந்த வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் காணி அபகரிப்பு மற்றும் வடகிழக்கு பகுதிகள; மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப புலம்பெயர்ந்தோரை இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு ஒரு சாதகமான செயற்பாடாக அமையும் .

குறிப்பாக மாகாணங்களுக்கு உள்ள நிதி அதிகாரங்கள் சம்பந்தமாக பேசப்பட வேண்டும் அத்துடன் இதற்கான உடனடி தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும்

அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைகளுக்கு சர்வ கட்சி அரசாங்கத்தின் மூலம் ஒரு நிலையான அரசியல் தீர்வின் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உடனடி தீர்வு எட்டப்பட வேண்டும்

இவ்வாறான சூழ்நிலை உருவாகும்போது தமிழ் தரப்பு சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பாக சாதகமாக பரீசீலிக்க கூடியதாக இருக்கும்

ஆகவே சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவற்றை சரியாக தமிழ் தரப்பினர் பயன்படுத்த வேண்டும். ஆகவே முதலில் அரசியல் தமிழ் கைதிகள் விடுதலை நல்லெண்ண வெளிப்பாடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைபெறுமாகில் தமிழ் மக்களின் நீண்டகால மற்றும் உடனடி பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மேற்கொள்வதன் மூலம் ஜனாதிபதியின் அழைப்பு சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு என இவ்வாறு தெரிவித்தார்.

22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி !

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருத்தச்சட்டமூல வரைபினை இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதியமைச்சர் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் ஒருசில விடயங்கள் திருத்தங்களுக்குட்படுத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கமைய நீதியமைச்சர் சட்டமூல வரைபில் திருத்தங்களை முன்வைத்துள்ளார்.

நீதியமைச்சர் சமர்ப்பித்த சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.22ஆவது திருத்தச்சட்ட வரைபு திருத்தம் செய்யபட்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து,இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துடனான அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சி தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.