புதுடெல்லியில் நடைபெறும் தெற்காசிய பிராந்திய பாராளுமன்ற பொதுக்குழு ஒன்றுகூடலில் ரெலோ தலைவர் செல்வம்

தெற்காசிய பிராந்திய பாராளுமன்ற பொதுக்குழு ஒன்றுகூடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பங்கேற்பு.

எரிசக்தி ஒத்துழைப்புக்கான தெற்காசிய பிராந்தியத்தின் பாராளுமன்ற முதலாவது பொதுக்குழு ஒன்றுகூடல் இன்றைய தினம் 18/12/2024 புதன்கிழமை மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை ஹோட்டல் லீ மெரிடியன் புதுடெல்லி இந்தியாவில் நடைபெறுகிறது .

மேற்படி பொதுக்குழு ஒன்றுகூடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்வு விடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது: சுமந்திரனுக்கு பதிலளித்த செல்வம் அடைக்கலநாதன்

இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு மற்றைய கட்சிகள் செல்ல வேண்டும் என்பது சாத்தியமற்ற செயல்.

ஒரே மேசையில் இருந்து எல்லோரும் கலந்துரையாடி இந்த புதிய அரசியல் சாசனத்திலே தமிழ் தரப்பிலே நாங்கள் என்ன கோரிக்கையை வைக்கலாம் என்பதை முடிவு செய்கின்ற கடமைப்பாடு எங்களிடம் இருக்கிறது.

ஆகவே தமிழரசு கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டோம் என்பதற்காக வேண்டி அவர்கள் எடுக்கின்ற முடிவுக்கு மற்றவர்கள் ஒத்து வரவேண்டும் என்பது முறையற்ற செயல். அந்த வகையிலே ஒரு மேசையில் இருந்து நாங்கள் பேசி இந்த விடயங்களை கையாளுகின்ற போதுதான் ஒட்டுமொத்தமான ஒரு ஒற்றுமையான ஒற்றமையோடு கூடிய ஒரு தீர்வுத்திட்டத்தை வைக்கின்றபோது தான் எங்களுடைய மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள் கூடுதலாக விரும்புவார்கள் .

அதைவிட தென்னிலங்கையிலே இப்பொழுது இருக்கிற புதிய அரசாங்கமும் , ஜனாதிபதி அவர்களும் ஒரு பலமாக நாங்கள் ஒற்றுமையாகிவிட்டோம் என்ற ஒரு விடயத்திலே அவர்களும் இதை பரிசீலிக்கின்ற நிலையை உருவாக்க முடியும். ஆகவே நாங்கள் செய்வோம் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றல்லாம் சொல்வது அது ஒரு சாத்தியமற்ற ஒரு விடயமாகத்தான் நான் பார்க்கிறேன்.

சுமத்திரன் அவர்களுக்கு நன்றாக தெரியும் எல்லோரையும் இதிலே இணைத்து இந்த புதிய அரசியல் சாசனத்திலே எங்களுடைய தரப்பு சார்பாக நாங்கள் கொடுக்கின்ற விடயங்களை ஒற்றுமையாக கொடுக்கின்ற ஒரு சூழலை உருவாக்குவது அவரும் அதற்கு ஒத்தசவருவார் என்று நினைக்கின்றேன், தமிழரசு கட்சியும் அதற்கு ஒத்துவரும் என்று நான் நினைக்கின்றேன்.

ஆகவே நாங்கள் ஒன்றாக ஒரு மேசையில் இருந்து பொதுவான ஒரு தீர்வுத்திட்டத்தை நாங்கள் கொடுக்கின்ற போதுதான் அது வலுவாக பலமாக இருக்கும். இல்லை தனித்தனியாக கொடுத்தோம் என்றால் புதிய அரசாங்கம், புதிய ஜனாதபதி அதை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துகின்ற வாய்ப்புகளை உருவாக்க கூடும். அந்தவகையிலே நாங்கள் பலமாக, நாங்கள் பிரிந்து சென்றதால் இந்த தேர்தலிலே பல பாடங்களை கற்றிருக்கிறோம்.

ஆகவே இந்த இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் நாங்கள் ஒற்றுமையாக ஒரு பாரிய பிரச்சனை எங்களுடைய இனப்பிரச்சனை அது தீர்ப்பதற்கான ஒரு திட்டத்தை நாங்கள் வரயவேண்டுமாக இருந்தால் ஒரு ஒற்றுமையான ஒரே மேசையிலே இருந்து ஒற்றுமையாக நாங்கள் விவாதித்து ஒற்றுமையாக ஒரு தீர்வுத்திட்டத்தை புதிய அரசாங்கத்திடம் கொடுப்பதன் ஊடாகத்தான் எங்களுடைய மக்கள் அதை பெரீய பலமாக கருதுவார்கள், அதை ஏற்றுக்கொள்வார்கள். அரசாங்கமும் இந்த விடயத்திலே எல்லோரும் ஒன்றாக கொடுத்த அந்த தீர்வு திட்டம் சம்மந்தமான விடயத்திலே அக்கறை காட்டுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கலாம், உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்க வேண்டும்.

ஆகவே இந்த இனப்பிரச்சனை பல வருடங்களாக இன்றைக்கு புரையோடிப்போய் இருக்கிற சூழலிலே தீர்வு , இனப்பிரச்சனை சார்ந்த விடயங்களில் இன்னும் எங்களுடைய மக்கள் சார்ந்த, எமது நிலம் சார்ந்த, காணாமல் ஆக்கப்பட்டோர் சார்ந்த, மனித உரிமை மீறல்கள் சார்ந்த, இப்படியான ஐ.நா. தீர்மானங்கள் எல்லாம் இன்றைக்கு எங்களுடைய பிரச்சனையிலே அக்கறை கொண்டிருக்கிற போது அது தீர்வில்லாத ஒரு சூழலிலே நாங்கள் கொடுக்கின்ற ஒற்றுமையான பலத்தோடு கொடுக்கின்ற அந்த தீர்வு திட்டம் என்பதுதான் வலுவாக இருக்கும்.

இலங்கை அரசாங்கம் அதை தட்டிக்களிக்க முடியாத ஒரு சூழலை நாங்கள் உருவாக்கலாம் என்று நான் கருதுகின்றேன்.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.

Posted in Uncategorized

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ – தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடையே விசேட கலந்துரையாடல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ – தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடையே விசேட கலந்துரையாடல்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேற்படி சந்திப்பின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கெளரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா. கஜேந்திரன் அவர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்தேசிய கட்சிகளை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகள்

சுவிஸ் நாட்டின் தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பு.

நேற்றைய தினம் 7/12/2024 சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

மேற்படி சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் உட்பட தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கௌரவ சிறிதரன் அவங்களும், கௌரவ சத்தியலிங்கம் அவர்களும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

எமது அரசியல் தீர்வு விடயமாக அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் பற்றியும் அவசரகால சட்டம் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை சம்மந்தமாகவும், எமது இனப்பிரச்சினை சம்மந்தமாக ஒரு தீர்வை சுவிஸ் அரசாங்கம் பெற்றுத்தருவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்னிலைப்படுத்திய கலந்துரையாடலாக இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

Posted in Uncategorized

இவ்வார இறுதியில் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களை சந்திக்கிறார் கெளரவ கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு மற்றும் தமிழ்த்தேசிய கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வார இறுதியில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் சந்திக்கவிருக்கிறார்.

அண்மையில் நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, இனிவருங்காலங்களிலேனும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்கவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

அதன்படி தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அண்மையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

அதேவேளை இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இத்தீர்வுத்திட்ட முன்மொழிவு குறித்தும், அதற்கு அப்பாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிதரனை அவரது யாழ் இல்லத்தில் சந்தித்த கஜேந்திரகுமார், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்படவேண்டியதன் அவசியம், அதனை முன்னிறுத்திய அடுத்தகட்ட நடவடிக்கைகள், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

அதே போன்று இவ்வார இறுதியிலோ அல்லது எதிர்வரும் திங்கட்கிழமையோ செல்வம் அடைக்கலநாதன் அவர்களை மன்னாரில் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் கஜேந்திரகுமார், அவருடனும் இதுபற்றிக் கலந்துரையாடியதன் பின்னர், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீர்மானிக்கவிருக்கிறார்.

Posted in Uncategorized

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது ரெலோ தலைவர் செல்வம்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது-தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.-
செல்வம் அடைக்கலநாதன்mp கோரிக்கை.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் 02-12-2024 செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

புதிய அரசியல் சாசனத்திலே 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் நோக்கம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறுகின்ற ஒரு செயல்பாடாக அமையும்.ஒரு அரசியல் சாசனம் வருகின்ற போது, தமிழ் தரப்பையும், ஆலோசனையும் பெற்று அதன் பின்னர் அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும்.

எங்களுக்கு இனப்பிரச்சினை இருக்கிறது.அதற்கு தீர்வு தருகின்ற வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.

அண்மைக்காலங்களில் ஜனாதிபதி அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டம் சம்மந்தமாக, மாகாண சபை தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில் ஜே.வி.பியின் முக்கிய செய்தியாக 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கின்ற நிலை இருக்கிறது என்தை தெட்டத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையிலே எமது பார்வை என்னவென்றால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள ஒப்பந்தத்தை மீறுகின்ற வகையில் இந்தியாவை ஓரங்கட்டுகின்ற வகையில் அல்லது இந்தியாவின் ஒப்பந்தத்தை இல்லாது செய்கிற நிலை இருக்கிறதா?என்பதனை ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

எனவே அரசியல் சாசனம் எழுதப்படுகின்ற போது தமிழ் தரப்புக்களையும்,தமிழ் தரப்புக்களின் ஆலோசனைகளையும் பெற்று புதிய அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.13 ஆவது திருத்தச் சட்டத்தை அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது.

அதனை நிறைவேற்ற வேண்டும்.இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை இந்தியாவிற்கும் இடையில் அழிக்க முடியாத ஒப்பந்தமாக காணப்படுகின்றது. எனவே புதிய அரசியல் சாசனத்தை எழுதி அதனை இல்லாது ஒழிக்கும் சூழலை தற்போதைய புதிய அரசாங்கம் , ஜனாதிபதி அவர்கள் செய்ய கூடாது.

பாரிய அளவிலான மக்கள் அவரை நம்பி வாக்களித்து உள்ளனர்.தமிழ் மக்களும் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். எனவே தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கின்ற வகையிலே புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.அதே போல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்தச் சட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் செயல்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.என தெரிவித்தார்.

மேலும் மன்னார் மாவட்ட மக்கள் அதிக அளவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகாரிகள் சிறந்த முறையில் பணி செய்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.மேலும் விவசாய செய்கையும் பாரிய அளவில் அழிவடைந்துள்ளன.எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.மேலும் குறித்த மழை வெள்ளத்தினால் அரச உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களை புறம் தள்ளாது மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளமை போன்று பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற ஒத்துழைத்த ஜனாதிபதி அனுரவிற்கு நன்றி-ரெலோ தலைவர் செல்வம்

மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

(29-11-2024) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

-மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்களை நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தையும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிபதிக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் நாங்கள் பார்க்கின்ற போது மாவீரர் நினைவேந்தலின் போது பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்ட நிலையில்,இம்முறை மாவீரர் தின நினைவேந்தலின் போது ஒரு சில இடங்களில் பொலிஸாரினால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது.

எனினும் இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜனாதிபதிக்கும்,தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

நாட்டில் அனைவரும் சமம் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி, பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை அனைத்து மதங்களுக்கும் வழங்குமா ரெலோ செயலாளர் ஜனா

இந்த நாட்டில் அனைவரும் சமம் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி எனும் ஜே.வி.பி பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை அனைத்து மதங்களுக்கும் வழங்குமா? என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்றையதினம் (02.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனைவரும் இலங்கையர்கள், அனைவரும் சமம், சமத்துவமானவர்கள் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி எனும் ஜே.வி.பி யினருக்கு முடியுமாக இருந்தால் இந்த நாட்டிலே பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமயை இந்த நாட்டிலுள்ள ஏனைய மதங்களுக்கும் கொடுத்துக்காட்டுங்கள். உங்களால் இயலுமென்றால் முதலில் அதைச் செய்து காட்டுங்கள் அதன் பின் இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்று கூறுங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா சவால் விடுத்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பை உருவாக்கி அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்து மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பதற்கான திட்டங்களை வகுப்பதாக ஜே.வி.பி இன் செயலாளர் ரின்வின் சில்வா ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறும் ரின்வின் சில்வா ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் 13வது திருத்தச் சட்டமானது 1987ம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட ஒரு விடயம். அவ்வாறிருக்கையில் அது இலங்கை மக்களின் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என எவ்வாறு சொல்ல முடியும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டதில் இருந்து அதற்கு எதிராகப் போராடியவர்கள் ஜே.வி.பி இனர் என்பது உண்மைதான். இதை மறந்து தற்போது எமது மக்கள் கனிசமாக ஜே.வி பி ஐ ஆதரித்திருக்கின்றார்கள். ஆனால், இந்த 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட்டிருந்தால் எமது மக்கள் விரும்பியோ விரும்பாமலோ தேசிய அரசியலுக்குள் வந்திருப்பார்கள் என்பதையும் ரின்வின் சில்வா விளங்கிக்கொள்ள வேண்டும்.

1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு கொடுவரப்பட்டதில் இருந்து தற்போது வரை 22 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், 13வது திருத்தச் சட்டம் மாத்திரமே இன்னமும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றது.

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக எதிர்த்து வந்த ஜே.வி.பி யினரே 2006லே இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்தும் வைத்தனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களின் போது கூட ஜே.வி.பி யினால் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை. ஜே.வி.பியை பொறுத்த மட்டில் ஜனாதிபதி, அமைச்சர்களின் கருத்தை விட கட்சியின் செயலாளரின் கருத்தே முதன்மையாக இருக்கும். எனவே அவரின் கருத்தை தட்டிக் கழித்துவிட முடியாது.

13வது திருத்தச் சட்டம் தமிழர்களுக்கு முழுமையான தீர்வு இல்லை என்பதே எங்கள் போன்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடகவும் இருக்கின்றது. ஆனால் தமிழர்களின் தீர்வு விடயத்தில் இது ஒரு முதற் புள்ளி என்பதே எங்களது கருத்து.

ஆனால் இன்று 13வது திருத்தம் தமிழர்களுக்கு தீர்வு இல்லை என்று கூறும் ஜே.வி.பி யினர் இதுவரையில் தமிழர்களின் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு என்று எதனையும் சொல்லுவதாக இல்லை.

இலங்கையில் அனைவரும் சமம், அனைவரும் சமத்துவமாக வாழ்வதற்கான ஒரு தீர்வினைக் கொண்டுவரப் போகின்றோம், 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள், அதனை இல்லாமல் ஆக்கப் போகின்றோம் என்று சொல்லுபவர்கள் தமிழர்களின் புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வினைத் தரப்போகின்றோம் என்பதையும் அவர்கள் கூற வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்போம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை நிலைநாட்டுவோம் என்ற வாக்குறுதிகளை வழங்கியவர்கள் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஜனாதிபதி ஆன பின்பும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் முடிந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாக 159 ஆசங்களை மக்கள் வழங்கியிருந்தும் இன்றும் மூன்று தமிழர்களைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மூன்று தமிழர்களைக் கைது செய்திருக்கின்றார்கள்.

தற்போது வரையில் அனைவரும் சமம் என்று கூறுபவர்கள் வடகிழக்கைச் சார்ந்த தமிழர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ அவர்களது அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. வடகிழக்கில் தமிழர்கள் மாத்திரம் எழுவர் அவர்களின் கட்சியிலே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் இரண்டு தமிழர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கலாம் ஆனால் அவர்கள் வடகிழக்கைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் கிடையாது. இனவாத ரீதியாக தமிழர்களையும், முஸ்லீம்களையும் புறக்கணிக்கின்றீர்கள் என்பதை நடைமுறை ரீதியிலே காட்டிக்கொண்டு அனைவரும் ஒன்றாக வாழவேண்டும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாய் வார்த்தையில் மாத்திரம் கூறிக்கொள்கின்றீர்கள்.

இந்த தேசிய மக்கள் சக்தி எனும் ஜே.வி.பி க்கு நான் ஒரு சவால் விடுகின்றேன். நாங்கள் அனைவரும் இலங்கையர்கள், அனைவரும் சமம் என்று கூறும் நீங்கள் இந்த நாட்டிலே பௌத்த மதத்திற்கு நீங்கள் கொடுக்கும் முன்னுரிமயை இந்த நாட்டிலுள்ள ஏனைய மதங்களுக்கும் கொடுத்துக்காட்டுங்கள். உங்களால் இயலுமென்றால் முதலில் அதைச் செய்து காட்டுங்கள் அதன் பிறகு இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்று கூறுங்கள் என்று தெரிவித்தார்.

மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா?  மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் கேள்வி?

மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்து கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா?அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இனி வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா?என்பது குறித்து கட்சியின் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ரெலோ கட்சிக்காக பல்வேறு வகையிலும் உதவி புரிந்த கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பும் மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(24) மதியம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

இதன் போது தலைமை தாங்கி உரையாற்றுகையிலே மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

எமது கட்சியின் தலைமைத்துவத்திற்கு எவ்வித பாதிப்புகளும் இன்றி மீண்டும் பாராளுமன்றம் அனுப்ப பல வழிகளிலும் உதவி புரிந்த தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்களுக்கு தலைவர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்டது.அந்த 5 கட்சிகளில் 4 கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.தமிழீழ விடுதலை இயக்கம் மட்டும் இத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொண்டுள்ளது.

மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் பயணிப்பதா?அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் இனி வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா?,போன்ற விடயங்கள் குறித்து ஆலோசனைகளை உங்களிடம் முன் வைக்கின்றோம்.

நாங்கள் எதை நினைத்தாலும் மக்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர்.ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து பலத்துடன் போட்டி யிடுகின்றோம் என நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

மக்கள் எமது கூட்டிற்கு ஆதரவு வழங்குவார்கள்.நாங்கள் தான் ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.ஐந்து போராட்ட குழுக்கள் ஒன்றாக நிற்கின்றோம் ,நாங்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்.எனவே எங்களுக்குத்தான் மக்களின் ஆதரவு இருக்கிறது என்று நாங்கள் எண்ணி இருந்தோம்.

அந்த எண்ணத்தில் மண்ணை போடுவது போல இலங்கை தமிழரசு கட்சி எவ்வாறு எம்மை விட்டு வெளியே சென்றார்களோ அவர்கள் நினைத்தது நடந்து விட்டது.

நாங்கள் தவறானவர்களாகவும்,அவர்கள் சரியான வர்களாகவும் காண்பித்து இத் தேர்தலில் வடக்கு கிழக்கில் அவர்கள் 8 ஆசனத்தை பெற்றுள்ளனர்.

உண்மையில் இது எமது அரசியல் இருப்பிற்கு ஒரு கேள்விக்குறியாகி உள்ளது.எனவே இனி வருகின்ற தேர்தல்களில் நாங்கள் தோற்போமாக இருந்தால் எமது கட்சியின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை இயக்கம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.எனவே உங்களின் ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்தும் எதிர் பார்க்கிறோம்.எமது கட்சியின் உறுப்பினர்களை நம்பியே நாங்கள் அரசியலை முன்னெடுக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இத்தேர்தலில் தனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு,கட்சி எதிர் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது

நாம்பல விலைகளை கொடுத்திருக்கிறோம் இனப்பிரச்சனை விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது ரெலோ தலைவர் செல்வம்

நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம் சொல்லியிருக்கிறார்கள். எனவே இனியாவது ஒன்றுபடவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்……

தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது தேசியமக்கள் சக்தி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.வடகிழக்கிலும் அந்த அலை பாதிப்பை ஏற்ப்படுத்தியிருக்கும் நிலமை உள்ளது. மக்களின் எதிர்பார்பை இந்த அரசாங்கம் தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. அதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் தேசியஇனப் பிரச்சனை தொடர்பாக பேசாமை வருத்தமளிக்கிறது.
விவசாயிகள் கடற்தொழிலாளிகள் ஏழைமக்களின் பொருளாதாரம் தொடர்பாக அவரால் சொல்லப்பட்ட கருத்தை வரவேற்கின்றேன்.அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே அவரது செயற்பாடு இருக்கிறது.

எங்களை பொறுத்த வரை நாம்பல விலைகளை கொடுத்திருக்கிறோம். எனவே இனப்பிரச்சனை விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவாக கூறவேண்டும்.

புதிஅரசியலமைப்பு உருவாக்கப்படும் போது 13வது திருத்தமும் இல்லாமல் செய்யப்படும் என்ற நிலைவரலாம் என கூறப்படுகின்றது.எனவே நல்லவிடயங்களை ஆதரிப்போம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் நிலை தொடர்ந்தால் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம்.

நாங்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்த ஆசனங்கள் தேசியமக்கள் சக்திக்கு சென்றிருக்காது.
தமிழ்க்கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளை பார்த்தால் அது புலப்படும்.

பாராளுமன்றத்தில் தனித்தனியாக நாங்கள் செயற்ப்பட முடியாது என்பது எனது கருத்து. பொதுவானவிடயத்தில் ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையாக செயற்ப்படவேண்டும். அதன் மூலமே பலவிடயங்களை நாம் சாதிக்கமுடியும்.

நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம் சொல்லியிருக்கிறார்கள்.யாழில் டக்ளஸ் மற்றும் அங்கயன் ஆகியோரது வாக்குகளே தேசியமக்கள் சக்திக்கு சென்றுள்ளது. தேசியத்தை நேசிக்கின்ற மக்களின் வாக்குகள் அவர்களுக்கு செல்லவில்லை.

எனவே இனிவரும் காலங்களிலும் நாங்கள் ஒன்றிணையவில்லை என்றால். வடகிழக்கில் அரசாங்கம் ஆளும் சந்தர்ப்பத்தை உருவாக்கிய தவறை நாங்கள் விட்டவர்களாக இருக்கபோகிறோம்.

அந்த நிலையைமாற்றி இனியாவது ஒன்றாக செயற்படவேண்டும். நான் அதில் முனைப்புகாட்டுகின்ற ஒருவன் மக்களும் அதையே எதிர்பார்க்கின்றனர் என்றார்.