தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி நிறுத்தப்பட்டது

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றையதினம் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்வதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் குறித்த பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர்.

அத்துடன், இராணுவத்தினர் பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மக்களின் ஆர்ப்பாட்டம்

எனினும் குறித்த முயற்சி தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

அவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, குருந்தூர்மலையில் எவ்வித மதக்கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி அங்கு தொல்பொருள் அகழ்வாராட்சி என்னும் போர்வையில் புதிதாக பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட புதிய விகாரைக்குரிய விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், ‘கபோக்’ கல்லினால் ஆன புத்தர் சிலைஒன்றினை குருந்தூர் மலையில் நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இவ்வாறு தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தின்மூலம் தடுக்கப்பட்டது.

இராணுவத்தினரின் நடவடிக்கை

குறிப்பாக கடந்த பல நாட்களுக்கு முன்பிருந்தே இந்த விசேட வழிபாடுகளுக்குரிய ஏற்பாடுகளில் முப்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இருப்பினும் இன்றையதினம் முப்படையினர் இராணுவ உடையின்றி, சிவில் உடைகளில் இந்த வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து பெருந்திரளான பெரும்பாண்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் அதி சொகுசு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வருகைத் தந்திருந்தனர்.

இவ்வாறாக வழிபாட்டு முயற்சிகள் இடம்பெறுவதற்கு அப்பகுதித் தமிழ் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக சயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கென வருகைதந்த மூவரை வழிமறித்த பொலிஸார் அவர்களைத் தாக்கி கைதுசெய்து, பின்னர் விடுவித்திருந்தனர்.

 

தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் விஜயம்

தொடர்ந்து குறித்த பகுதிக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், குருந்தூர் மலையையும் பார்வையிட்டிருந்தார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த அனுரமானதுங்க, குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின்மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப் பாதுகாப்பதற்காக புணர்நிர்மாணம் செய்யும் வேலையையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டுமானங்களை கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்தோடு தமது திணைக்களத்துக்கும், பௌத்த துறவிகளுக்கும், இராணுவத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

 

இருப்பினும் அவர் தெரிவித்த கருத்திற்கு மாறாக முன்பிருந்ததைவிட குருந்தூர் மலையில் பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குருந்தூர்மலையில் பெருமளவான, பௌத்த பிக்குகளும், முப்படையினரும் வழிபாடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை இதன்போது குருந்தூர் மலையைச்சூழ உள்ள வயல்நிலங்கள் தொல்லியல் இடமெனக்கூறி, பௌத்தபிக்கு தமிழ் மக்களைத் தடுப்பது தொடர்பிலும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அவ்வாறு பௌத்த பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர் அதற்குப் பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ்மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த விசேட வழிபாட்டு முயற்சிகள் நிறுத்தப்பட்டது.

அந்தவகையில் முன்னெடுக்கப்பட்ட விசேட வழிபாடுகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டதுடன், பிறிதொருநாளில் இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் மக்கள், இதனோடு தொடர்புடைய திணைக்களங்கள், அமைச்சர் உள்ளிட்டவர்களுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக அதிகாரிகள் செயற்படுகின்றார்களா?

பெருந்தோட்ட பகுதிகளில் விவசாயம் செய்கின்ற காணிகளை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறு பெருந்தோட்ட அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் பிரிவின் அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார் என மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துமாறு அனைவரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள நிலையில் ஒரு சில அதிகாரிகள் கொழும்பில் ஏ.சி அறைகளில் இருந்து கொண்டு சரியான தவல்களை பெற்றுக் கொள்ளாமல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவிப்பது என்பது அரசாங்கத்தின் கொள்கைக்கு மாறாக அதிகாரிகள் செயற்படுகின்றார்களா? என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹட்டன் வெலிஒயா தோட்டத்தில் விவசாயம் செய்துவருகின்ற வேலு இராமச்சந்திரன் என்பவருடைய காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறு பெருந்தோட்ட அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் பிரிவின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் காணி சட்டவிதிகளுக்கு முரனாக காணியை தன்வசம் வைத்திருப்பதாகவும் இது காணி சட்ட விதிகறுக்க முரணானது எனவும் எனவே எதிர்வரும் 05.07.2022 திகதிக்கு முன்பு காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறும் கடிதம் மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

பதிவுத்தபாளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில் அப்புறப்படுத்தல் அறிவித்தல் எனும் தலைப்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலு ராமச்சந்திரன் என்பவர் காணி சட்ட விதிகளுக்கு முரனாக செயற்படுவதாகவும் எனவே இந்த காணியை குறிப்பிட்ட திகதிக்கு முன்பதாக தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக எங்களுடைய கட்சியின் மலையக தொழிலாளர் முன்னணியின் உப தலைவர் கிருஸ்ணன் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். நான் எந்த காரணம் கொண்டும் காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளேன்.

இது எவ்வாறு நடைபெறுகின்றது என்பது தொடர்பாக குறித்த தொழிலாளர்களுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. வேலு ராமச்சந்திரன் என்பவர் நீண்டகாலமாக குறித்த காணியில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார். தோட்ட நிர்வாகம் இது தொடர்பாக எந்தவிதமான ஆட்சேபனையையும் தெரிவிக்காத ஒரு நிலையில் கொழும்பில் இருந்து இந்த கடிதம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பாக புரியாத பதிராகவே இருக்கின்றது.

1989 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வெலி ஒயா தோட்ட அதிகாரி அகரவத்த நோட்டன் கிராம சேவகருக்கு குறிப்பிட்ட காணியில் வேலு ராமச்சந்திரனின் தந்தையான சின்னக்கன்னு வேலு விவசாயம் செய்வதை உறுதிப்படுத்தி கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

அதாவது 32 வருடங்களுக்கு முன்பு வேலு ராமச்சந்திரனின் தந்தையார் விவசாயம் செய்து வந்த காணியை திடீரென தற்பொழுது தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பமையானது எதிர்காலத்தில் ஏனைய தொழிலாளர்களுக்கும் இவ்வாறான கடிதங்களை அனுப்புவதற்கான ஒரு முன்ஏற்பாடா என்ற சந்தேகமும் எமக்கு இருக்கின்றது.

எனவே எந்த காரணம் கொண்டும் எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்கள் தற்பொழுது விவசாயம் செய்து வருகின்ற காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்க முடியாது.

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு உடனடியாக இந்த கடிதம் அனுப்புகின்ற விடயத்தை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு பின்றபற்ற வேண்டிய நடைமுறை தொடர்பாகவும் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் நாம் கோரிக்கை ஒன்றையும் முன்வைக்கின்றோம்.

இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் பாராளுமன்றத்திலும் குரல் எழுப்பவுள்ளதுடன் ஏற்கனவே நான் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கின்றேன். இதற்கு அனைவரும் கட்சி அரசியல் பேதங்களை மறந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஷேட சந்திப்பில்

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரிலா உரையாடலின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அவுஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கலாநிதி ரிச்சர்ட் மார்லஸைச் சந்தித்தார்.

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கத்திற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அபிவிருத்தி உதவியாக 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை அறிவித்தமைக்காக அவர் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையின் கொவிட்-19 பிரதிபலிப்புக்கான 11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியிலான அவுஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த ஆதரவிற்கு அவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவின் பின்னர் இலங்கையின் கரையோரங்களை சுத்தப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட உபகரணங்களுக்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு உதவக்கூடிய வழிகள் குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள், குடியேற்றம் மற்றும் எல்லை நிர்வாக ஒத்துழைப்பு, இலங்கை மாணவர்களுக்கான அதிக வாய்ப்புக்கள் மற்றும் ஆசியான் பிராந்திய மன்றம், பாலி செயன்முறை, பொதுநலவாயம் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கம் போன்ற சர்வதேச அமைப்புக்களிலான மேம்பட்ட ஒத்துழைப்பு ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

உலகம் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது – உலக வங்கி

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் வேலையில்லா பிரச்சனை என்பன உலகின் பொருளாதாரத்தை பெரும் வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்வதாக கடந்த செவ்வாய்க்கிழமை (7) உலக வங்கி வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அற்ற தன்மைகள் என்பன உலகை மிகவும் ஒரு நெருக்கடியான நிலையை நோக்கி தள்ளியுள்ளது. மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகம் தப்பித்தாலும் பணவீக்கமும், வேலையில்லா பிரச்சனையும் நீண்ட காலம் நிலைக்கும் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் உலக பொருளாதார வளர்ச்சி 5.7 விகிதமாக இருந்தது. இந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி 4.1 விகிதம் என கடந்த ஜனவரி மாதம் கணிக்கப்பட்டபோதும் அது தற்போது 2.9 விகிதமாக பின்னடைவைச் சந்தித்துள்ளது.

Posted in Uncategorized

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய யோசனை!

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் எதிர்காலத்தில் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தம்மிக பெரேராவின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவர் பஸில் ராஜபக்‌ஷவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இவர் வரிகளை முறையாக செலுத்தாதவர் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதனால் செலுத்தாது இருக்கும் வரிகளை செலுத்துமாறும், பாராளுமன்றத்திற்கு வந்து ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுக்காதே என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Posted in Uncategorized

மன்னார் காற்றாலை விவகாரம்: குற்றச்சாட்டை மறுத்த ஜனாதிபதி – மன்னிப்புக் கோரிய மின்சார சபைத் தலைவர்!

கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் கோப் குழுவில் ஆஜராகியிருந்த மின்சார சபைத் தலைவர், கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி தன்னை அழைத்து இந்த செயற்றிட்டத்தை அதானி நிறுவனத்திடம் வழங்குமாறு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டீரந்தார்.

பாரத பிரதமர் மோடி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் விடுத்ததாகவும் அவர் விசாரணையின் போது கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், காற்றாலை திட்டம் தொடர்பான மின்சார சபை தலைவரின் கூற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.
இதேவேளை, கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோப் குழுவிற்கு நான் அளித்த விளக்கத்தில் அழுத்தம் மற்றும் உணர்ச்சிபூர்வமானதன் காரணமாக இந்தியப் பிரதமர் என்ற வார்த்தையை உச்சரிக்க நேர்ந்ததாகவும், எனவே அந்த கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கோப் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் பிக்குகளின் பங்கேற்புடன் குருந்தூர்மலையில் நாளை புத்தர் சிலை பிரதிஷ்டை : எதிர்ப்பு போராட்டத்துக்கு தயாராகும் தமிழர்கள்

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் நாளை (12)காலை ஒன்பது மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் பொலிஸ் ,விமானப்படை ,கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி மிக பெருமெடுப்பில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை காலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.

நாளையை நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் குருந்தூர் மலைக்கு சென்றுவருவதாகவும் குமுளமுனை தண்ணிமுறிப்பு வீதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைய இந்த நிகழ்வில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் பௌத்த பிக்குகள் , தென்பகுதி மக்கள் இராணுவம் பொலிஸ் விமானப்படை கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகிறது .

மத்தள விமான நிலையத்தின் ஊடான மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா

மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டார்.

இந்நிலையில் மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, ​​விமான நிலையத்தில் ஏற்படும் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் தினமும் குவியும் மக்கள்-கட்டுப்படுத்த முடியாது அதிகாரிகள் அவதி

இலங்கையில் கடவுச்சீட்டுகளின் தேவை பாரியளவு அதிகரித்து, பிராந்திய அலுவலகங்களில் நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச் சீட்டுகளின் சராசரி எண்ணிக்கை 2500 ஆகும். எனினும் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து நிலவும் அசாதாரண தேவையினால் இந்த சேவையை வழங்க முடியாதுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குவதற்காக திணைக்களம் தனது சேவைகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சேவை காலத்தை அதிகரித்த போதிலும் பிராந்திய அலுவலகங்களில் நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெளிநாட்டு பயணச் சேவைகளுடன் தொடர்புடைய புகைப்படக் கலைஞர்களும் வழக்கத்திற்கு மாறான தேவை மற்றும் தொழில்நுட்ப பலவீனங்கள் காரணமாக சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized