“சமூக ஊடகங்களை முடக்க அரசு முயற்சி” -இலங்கை எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைதள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘கோட்டா கோ ஹோம்’ உள்ளிட்டவற்றின் குரலை முடக்கியதைப் போன்று சமூக வலைதளங்களின் குரல்களையும் முடக்குவதற்கான நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது” என  அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க முன்னுரிமை வழங்க வேண்டும்-பிரதமரிடம் முன்னாள் சபாநாயகர் கோரிக்கை

நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ள 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதையடுத்து ஊடகங்களிடம் பேசிய கரு ஜயசூரிய, “பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதான கடமையாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க முன்னுரிமை வழங்க வேண்டும். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார அரசியல் பிரச்னைகளுக்கு 20 ஆவது திருத்தமே காரணமாகும். அதனால் 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும்-ரெலோ தலைவர் செல்வம் எம்பி

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரவித்தார்.

இன்று (06) வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

21 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தேசியத்தின்பால் செயற்படுகின்ற கட்சிகளின் தலைவர்களை கூட்டி இரண்டு மூன்று தினங்களாக விவாதித்து வருகின்றோம். இதில் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை கூறிவருகின்றார்கள். பாராளுமன்றம் கூடியதும் தமிழ் பேசும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இவ் விடயம் தொடர்பில் ஆராயலாம் என எண்ணுகின்றோம். கஜேந்நிரகுமார் பென்னம்பலத்துடனும் பேச இருக்கின்றோம்.

ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுடைய குரலாக 21 வது திருத்த சட்டத்தில் எமது மக்களின் கோரக்கைகளை எவ்வாறு உள்ளடக்குவது என்பதுடன் இத் திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்பது இதில் காணப்படுகின்றது.

தற்போது மக்களுடைய கோரிக்கை ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல வேண்டும், ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் இந்த விடயத்தில் 19வது திருத்தச்சட்டத்தை கூடுதலாக பார்க்கலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது.

21 வது திருத்தச்சட்டம் தொடர்பாக ஒட்டுமொத்த குரலாக செயற்பட வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்கின்றது. அந்த ஒட்டுமொத்த குரலுக்குள் எங்களுடைய மக்களுடைய பிரச்சனைகள், எங்களுடைய தேசத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து ஒரே குரலாக தெரிவிக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது.

குறிப்பாக தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குரலாக இணைந்து எங்களுடைய பிரச்சனைகளை உள்ளடக்கின்ற வாய்ப்புக்கள் இருக்கும் என நம்புகின்றேன்.

21வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் வருவதற்கு முன்னராக அமைச்சரவையிலே சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவதாத்திற்கு வருவதற்கு முன்னர் எங்களுடைய ஒருமித்த கருத்தினை சொல்கின்ற வாய்ப்பபை உருவாக்க வேண்டும்.

“ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆகியவுடன் புலம்பெயர் தமிழர்களுடைய உதவியை கோரி இருந்தார். தற்போது சில புலம்பெயர் அமைப்புக்களும் நிபந்தனையுடன் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?“ என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது,

இன்றைய சூழலிலே புலம்பெயர் உறவுகளிடம் பணம் கோருவது என்பது சந்தர்ப்பத்திற்காக அவர்களினை பயன்படுத்துவது போன்று தெரிகின்றது.

மேலும் இலங்கை அரசினால் புலம்பெயர் நாடுகளில் உள்ள எங்களுடைய அமைப்புக்கள் மீது ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது இலங்கை அரசினால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை வழங்குவதுடன் அதற்குரிய நிதியதிகாரத்தினை குறிப்பாக மாகாண முதலமைச்சர் நிதியினை கையாளக்கூடிய வசதியினை பிரதமர் செய்வதன் மூலமாக இந்நாட்டினுடைய பிரச்சனையை தீர்க்க முடியும்.

ஆகவே பிரதமர் இவ்விடயங்களை கவனம் செலுத்த வேண்டும். இவ்விடயங்களில் கவனம் செலுத்தாத வரை புலம்பெயர்ந்த உறவுகள் முதலீடுகளை செய்வதற்கு நிச்சயமாக வரமாட்டார்கள்.

அத்துடன் தற்போதும் பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகின்றது. இச்சட்டம் நீக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலையில் புலம்பெயர் உறவுகள் தங்களுடைய முதலீடுகளை செய்த பின்னர் அரசாங்கம் திட்டமிட்டு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து அவர்களுடைய முதலீடுகளை முடக்குகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை நங்கள் காணலாம்.

ஆகவே மாகாண சபைகள் நிதியினை கையாள்வதற்கான வாய்ப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் தடைகளை நீக்குதல் தொடர்பான விடயங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக எங்களுடைய மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாணசபைகளும் இவ்விடயங்களை நேர்த்தியான முறையிலே கையாண்டு மக்களுடைய பஞ்சம் மற்றும் பொருளாதார நிலைமைகளில் இருந்து மீள் எழுவதற்கான வாய்ப்பினை முன்னெடுக்க முடியும்.

தற்போது பரவலாக துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன. மேலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் விடுதலைப்புலிகளின் அதிகாரங்களை மிகவும் சமாளிக்க முடியாது என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார். எவ்வாறு உயிர்த்த ஞாயிறு படுகொலை செய்யப்பட்டதை போன்று விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் என்ற ரீதியிலே இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்களை இணைத்துக்கொண்டு காலி முகத்திடலிலே இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டத்தினை கலைக்கின்ற நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த மீள் உருவாக்கம் என்ற சதித்திட்டத்தை தீட்டுகின்றதா என்ற சந்தேகம் எங்களிற்கு உருவாகின்றது.

அந்த வகையிலே துப்பாக்கி சூடு செய்பவர்கள் கைது செய்யப்படுவதில்லை என்பதுடன் அவர்கள் எங்கு போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் என்ற சதித்திட்டத்தினை அரசாங்கம் செய்கின்றது. எனவே நாங்கள் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும். தமிழர்களின் கையிலே பிரச்சனையை திணித்து தமிழர்கள்தான் இதற்கு காரணம் என்ற சந்தர்ப்பத்தை செய்யக்கூடியவர்கள் தான் இன்று ஆட்சியில் இருக்கிறவர்கள். ஆகவே அவர்கள் இவ்விடயங்களை மிக சாதுர்யமாக கையாளக்கூடும் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை பௌத்த பீடாதிபதிகள் இந்தியாவிற்கு நன்றி

புத்தர் பிறந்த பூமியை இந்தியாவில் புத்த பூர்ணிமா என்று பிரபலமாக அறியப்படும் வெசாக் போயா தினம், புத்தரின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தொடர்புடைய மூன்று புனித ஸ்தலங்களில் பிரமாண்டமாகவும் அமைதியாகவும் கொண்டாடப்பட்டது.

லும்பினி, பௌத்கயா மற்றும் புது டெல்லி ஆகிய இடங்களில் சர்வதேச பௌத்த கூட்டமைப்பின் அனுசரணையுடன் இந்திய மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதமர் நரேந்திர மோடியின் பங்கேற்பு சிறப்பானதொரு விடயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புத்தரின் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினியில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு இடம்பெற்ற நிகழ்ச்சிகளில், துறவிகள், உயரதிகாரிகள் மற்றும் பௌத்த உலகத்துடன் தொடர்புடைய ஏராளமானோர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டங்கள் பொதுவாக புத்தரின் வாழ்க்கை, பிறப்பு, ஞானம் மற்றும் போதனைகளைச் சுற்றி உருவானது, உரைகள் இன்றைய உலகத்தின் நிலை மற்றும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் அமைதியை அடைய புத்தர் போதித்த எட்டு வழிகளை உலகம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதிபளிக்கும் வகையில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

புதுடில்லியில் உள்ள சர்வதேச பௌத்த கூட்டமைப்புக்கு சொந்தமான லும்பினியில் உள்ள இந்திய சர்வதேச புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தை நிர்மாணிப்பதற்கான ‘ஷிலான்யாஸ்’ விழாவில் பிரதமர் மோடி மற்றும் பிரதமர் டியூபாவுடன் கலந்து கொண்டனர்.

இதே வேளை நான்கு நிகாயாக்களின் பிரதம பீடாதிபதிகளான ஸ்ரீ அமரபுர மகா நிகாயா அதி வணக்கத்திற்குரிய அக் மகா பண்டித கலாநிதி தொடம்பஹல சந்திரசிறி மகா தேரர், சியாம் மஹா நிகாயாவின் மல்வத்தை பிரிவின் பிரதி பீடாதிபதி வணக்கத்துக்குரிய திம்புல்குபுரே விமலதர்ம மகா தேரர்.

அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி வெண்டுருவே உபாலி அனுநாயக்க தேரர் மற்றும் ஸ்ரீ ராமஞ்ஞ மகா நிகாயாவின் வணக்கத்திற்குரிய அக்க மஹா பண்டித மகுலேவே விமல மகாநாயக்க தேரர் ஆகியோர் விடுத்துள்ள செய்தியில், நெருக்கடி மிக்க சூழலில் உலகம் முழுவதும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்பிற்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்துள்ளனர்.

கொந்தளிப்பு மற்றும் விரோதம். புத்த பூர்ணிமா தினத்தை நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசிற்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் மகத்தான மற்றும் சரியான நேரத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

இலங்கையர்கள் தங்கள் மதம், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை இந்தியாவிடமிருந்து பெற்றவர்கள் என்றும், இந்த உறவும் சகோதரத்துவமும் வலுவிலிருந்து வலுவாக வளர வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டனர்.

பௌத்த தத்துவக் கருத்துக்கள் முழு உலகத்திற்கும் எல்லா நேரங்களிலும் சரியானவை மற்றும் மிகவும் பொருத்தமானவை என்றும், பௌத்தத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் குறித்து மகா சங்கத்தினர் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் அவர்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

பொலிஸ்மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை மீளாய்வு செய்ய தீர்மானம் – அரசாங்க சேவை ஆணைக்குழு

பொலிஸ்மா அதிபரினால் தமது ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட இரு அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(07) கூடவுள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் இந்த இரு அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அரசியல் தலையீட்டுடன் 182 பொலிஸ் நிலையங்களுக்கான பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டமை அரச சேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கவனத்திற்கொள்ளப்பட்ட முதலாவது விடயமாகும்.

அரச சேவை ஆணைக்குழுவின் அறிவித்தலைத் தொடர்ந்து, 7 நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை பொலிஸ்மா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் கூற்றின் பிரகாரம், அரசியல்வாதிகளின் சிபாரிசுக்கு அமைவாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தால், பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தமது ஆணைக்குழு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கருத்திற்கொள்ளப்படுமென அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 03 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு திடீரென இடமாற்றம் வழங்கப்பட்டமை, அரச சேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இரண்டாவதாக கவனம் செலுத்தப்பட்ட விடயமாக அமைந்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களை நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் தமக்கு அதிகாரம் காணப்படும் நிலையில் எவ்வித அறிவித்தல்களும் இன்றி அண்மையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விரு சம்பவங்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டுள்ளதாகவே கருதப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட இரு அறிக்கைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(07) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ரஷ்ய விமான விவகாரத்தில் அரசாங்கம் தலையிட முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை குறித்து ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்ய Aeroflot விமான நிறுவனத்துடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ரஷ்ய Aeroflot எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கும் மற்றுமொரு நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக அமைச்சர் கூறினார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கையில் அரசாங்கம் தலையிட முடியாது என தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போதைய நிலைமை குறித்து ரஷ்ய தூதரகம் தௌிவடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் நாளை(06) நீதிமன்றத்தில் அறிக்கையிட்டு விமானத்தை விடுவிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ரஷ்ய Aeroflot எயார்லைன்ஸ் நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்காக குறித்த விமானத்தின் பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு அமைச்சர் தமது கவலையை வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இராஜதந்திர மட்டத்தில் செயற்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷ்ய Aeroflot விமான நிறுவனம், கொழும்புக்கான தனது வணிக விமானங்களை நிறுத்தியது.

இலங்கையில் தமது விமானம் தடையின்றி பறக்க முடியும் என்பதை உறுதி செய்வதில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பை நோக்கி பயணிக்கும் விமானங்களுக்கான விமானச்சீட்டு விற்பனையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக Aeroflot நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், Aeroflot விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், ரஷ்யா நேற்று(04) தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இரண்டு வேளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூற ஒரு பிரதமர் தேவையா? – அனுர கேள்வி

மக்களிடம் இரண்டுவேளை மட்டும் சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த நெருக்கடியை உருவாக்கியவர் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த மாட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நெருக்கடியை உருவாக்கியவர்களை ரணில் விக்ரமசிங்க மறைத்து வருவதாகவும் இரண்டு வேளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூற ஒரு பிரதமர் தேவையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அநுர திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், ‘இளைஞர்கள் ராஜபக்ஷக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். மஹிந்த ஒரு திருடன், தங்கள் எதிர்காலம் பாழானது, எனவே, மஹிந்தவை வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறினார்கள்.

இவ்வாறு ராஜபக்ஷக்கள் சிக்கிய பின்னர் ரணில் ராஜபக்ஷக்களை காப்பாற்ற பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். பிரதமர் பதவிக்கு துரோகம் செய்து மறைந்திருந்த ராஜபக்ஷக்களை வெளியில் வர ரணில் அனுமதித்தார்.

இப்போது பழைய தோல்வியடைந்த அரசியல்-பொருளாதாரப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பயணம் மிகக் குறுகியதாக இருக்க வேண்டும். ரணில் இன்றைக்கு நெருக்கடி நிலையின் பேச்சாளராக மாறி, இனிமேல் ஒரு நேரம்தான் சாப்பிட வேண்டும் என்கிறார். இன்னும் ஒரு வாரத்திற்குதான் எண்ணெய் இருக்கிறது என்கிறார்.

எரிவாயு மற்றும் எண்ணெய்க்காக மக்கள் வரிசையில் நிற்கின்றனர். பெற்றோர்கள் வரிசையில் நின்று இறக்கின்றனர். சாலைகளில் வாகனங்கள் இல்லை. நெல் வயலை உழுவதற்கு எண்ணெய் இல்லை. மக்களை அழித்த பிறகு இரண்டு வேளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் என்கிறார் ரணில். அதைச் சொல்ல ஒரு பிரதமர் தேவையா?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Posted in Uncategorized

வரிகள் மூலம் சமூக வலைத்தள குரல்களை முடக்க முயற்சி – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

வரி அறவீடுகள் மூலம் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன் ஊடாக சமூக வலைத்தள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

போராட்டங்களின் குரலை முடக்கியதைப் போன்று சமூக வலைத்தளங்களின் குரல்களையும் முடக்கும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

தற்போது சில வைத்தியசாலைகளில் உணவு பொருட்களுக்கும் மருந்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதாக தெரிவித்து பொறுப்பேற்றவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

Posted in Uncategorized

21 ஆவது திருத்தம் குறித்து ஒருமித்த முடிவை எட்டுவதற்காக ஒன்றிணைகின்றன தமிழ் கட்சிகள்

21வது திருத்த சட்ட விடயத்தில் தமிழ் பேசும் தரப்புக்கள் எப்படியான அணுகுமுறையை கையாள்வது என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியுமா, அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் எவ்வாறான நகர்வை மேற்கொள்வது என்பதில் இறுதி தீர்மானம் எடுக்க தமிழ் பேசும் கட்சிகள் இன்று(6)தமது மூன்றாவது சுற்று கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளே இன்று சந்தித்து பேசவுள்ளனர்.

இணையவழி கலந்துரையாடலாக இன்றைய கலந்துரையாடல் அமையும்.

இந்த விவகாரம் குறித்து மேற்படி தரப்புக்கள் ஏற்கனவே இரண்டு முறை கலந்துரையாடினர்.

கடந்த மே 30, ஜூன் 1 ஆகிய திகதிகளில் அந்த கலந்துரையாடல் நடந்தது.

செல்வம் அடைக்கலநாதன்,மாவை சேனாதிராசா,த.சித்தார்த்தன், மனோ கணேசன்,க.வி.விக்னேஸ்வரன்,ஜீவன் தொண்டமான்,செந்தில் தொண்டமான், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா,கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம்,எம்.ஏ.சுமந்திரன்,சி.சிறிதரன்,ரெலோ ஊடக பேச்சாளர் சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய கலந்துரையாடலிலும் இவர்கள் கலந்து கொள்வார்கள்.

21வது திருத்த சட்ட விவகாரத்தில் தமிழ் தரப்புக்கள் எவ்வாறான அணுகுமுறை மேற்கொள்வது, திருத்த யோசனைகள் ஏதும் சமர்ப்பிக்க வேண்டுமா?, அதை ஒன்றாக சமர்ப்பிக்க முடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடி இன்று இறுதி முடிவிற்கு வருவார்கள்.

வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி ஆரம்பம்

2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாவிடத்து தாங்கள் வசிக்கும் பிரதேச கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்களை தெளிவூட்டும் வகையில் நாளைய கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்புப் பணிகள் பற்றியும் இதன் போது ஆராயப்படவுள்ளன. வதிவிடங்களை மாற்றியவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் இடாப்பில் உள்ளீர்ப்பது சம்பந்தமாக இதன் போது கவனம் செலுத்தப்படும். தேர்தல்கள் சட்டதிட்டங்களில் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் திருத்தங்கள் பற்றியும் ஆராயப்படும்.