புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா

இதுவரை காலமும் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக செயற்பட்டு வந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் புதிய பிரதம அதிகாரியாக எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பதவியேற்கவுள்ளார்.

அத்துடன் ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 31ஆம் திகதி தமது பொறுப்பிலிருந்து விலகவுள்ளார்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் தற்போதைய பிரதம அதிகாரியான ஜெனரல் விக்கும் லியனகே, ஜூன் 01ஆம் திகதி முதல் 24ஆவது இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு – பிரதமர் அலுவலகம் மறுப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ள நிவாரணம் சார்ந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததது.

இந்நிலையில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்து அந்த அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Posted in Uncategorized

21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், 21ஆவது திருத்த சட்டமூலத்திற்கு தேவையான யோசனைகளையும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தேச வரைவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை 21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசேட கலந்துரையாடல் டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குறித்து பாரிஸ் கிளப்புடன் பிரிட்டன் பேச்சுவார்த்தை

கடன் வழங்கும் முக்கிய நாடுகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய பாரிஸ் கிளப் உடன் இலங்கை குறித்து பிரிட்டன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என வெளிநாடு பொதுநலவாயம் பாராளுமன்ற விவகாரங்களிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு வாழ்வாதாரம் உட்பட இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அமைதியான ஜனநாயக அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை பின்பற்றவேண்டும் என அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் மாதம் உலக வங்கி 600மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அறிகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகவங்கிக்கு நிதி வழங்கும் முக்கிய நாடு பிரிட்டன் என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் நிதி நிலைமை குறித்து பிரிட்டன் சர்வதேச நிதி அமைப்புகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை பேண்தகுநிலைக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச நாணயநிதியத்துடன் ஆழமானபேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் ஆறு மாதங்கள் நீடிக்கலாம்,இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெற்றுள்ளது இலங்கையின் யோசனைகள் எவையும் இதுவரை உறுப்புநாடுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை அவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட்டவுடன் நாங்கள் அவற்றை ஆராய்வோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான நிதி உதவி குறித்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன -இலங்iயின் கடன் குறித்து பாரிஸ் கிளப்புடன் பிரிட்டன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

TL

 

Posted in Uncategorized

’யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர்’

வணக்கம் என்று சொல்லி தனது உரையை தொடங்கினார் மோதி.

மீண்டும் தமிழ் நாட்டிற்கு வருவது என்பது எப்போதுமே அருமையாக இருக்கும் ஒன்று. இது மிகவும் சிறப்பான ஒரு பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி என அனைத்தும் சிறப்பானவை.

பாரதியார் அவர்கள் செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என மிக அழகாக பாடியுள்ளார்.

நண்பர்களே ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்து விளங்குகிறார்.

அண்மையில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பரந்துள்ளது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான அத்தியாயத்தை கொண்டாட நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று தொடங்கி வைக்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.

ஐந்து ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும் மேம்பாடும் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் இது உள்ளூர் கலை, கலாசாரத்துக்கு ஏற்படையதாகவும் இருக்கும்.

மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

திருவள்ளூர் முதல் பெங்களூர் வரை, எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையுமான இயற்கை எரிவாயு குழாய் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநில மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக்கும் தொலைநோக்கு பார்வையோடும், சென்னையில் ஒரு பல்நோக்கு ஏற்பாட்டியல் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டிருக்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது.

தலைசிறந்த தரமும் நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நான் உள்கட்டமைப்பு பற்றி பேசும்போது சமூக மற்றும் புற கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகின்றேன்.

தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.

பனாரஸ் பல்கலைக்கழத்தில் தமிழ் படிப்பிற்காக சுப்ரமணிய பாரதி பெயரில் ஒரு இருக்கை அண்மையில் அறிவிக்கப்பட்டது என மோதி உரையாற்றினார்.

மேலும் அவர் தனது உரையில் இலங்கை குறித்தும் குறிப்பிட்டார்.

“இலங்கை குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும். நட்பு ரீதியாகவும், அண்டை நாடு என்ற காரணத்தினாலும் இந்தியா, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறது.” என்று தெரிவித்தார் மோதி.

இலங்கை சிரமான சூழ்நிலையை கடந்துகொண்டு இருக்கிறது எனவும் ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அண்டை நாடு என்ற ரீதியிலும் இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கிவருகிறது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெற்ற வைபவத்தில் மேலும் உரையாற்றுகையில்,

உணவு, எரிபொருள், மருந்து ஏனைய அத்தியாவசிய பொருட்கள் போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல இந்திய அமைப்புகளும் தனி நபர்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்காக உதவிகளை வழங்கியுள்ளனர்.

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதில் சர்வதேச அமைப்புகள் மத்தியில் இந்தியா உரக்க பேசியுள்ளது. ஜனநாயம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்காக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். யாழ்ப்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்குமுன் சென்றதை என்னால் மறக்கமுடியாது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமரும் நானே என்று தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம்: தமிழக முதல்வர் தெரிவிப்பு

தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இன்று கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தினை வௌியிட்டார்.

தமிழகம் பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகைகளில் தமிழ்நாடு மகத்தான வளர்ச்சியை அளித்து வருகிறது.

மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது.

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு முக்கிய பங்களிப்பை தருகிறது என இந்திய பிரதமருக்கு தெரியும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு.

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 விழுக்காடு. ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு.

ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்

தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

15.5.2022 தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை 16 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும்

பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகரான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைசட்ட திருத்தம் நீக்கப்படாது விடின் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்து-அருட்தந்தை மா.சத்திவேல்

“21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற போது பயங்கரவாத தடை சட்ட திருத்தம் நீக்கம் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது“ என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று 25.05.2022 விடுதலை செய்யப்பட்டுள்ளார். சித்திரவதையை தொடர்ந்து புரியாத மொழியில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே 21 வயதே நிரம்பிய சுந்தரலிங்கத்தின் 13 வருடங்களை சிறையில் கழிக்க வைத்துள்ளது. இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எத்தகைய வாழ்வு கொடுமைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதற்கு கேதீஸ்வரனின் வழக்கு தீர்ப்பு இன்னும் ஒரு உதாரணமாகும்.

இனவாத மற்றும் மத வாதமுகம் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டு பிணை இன்றி சிறையில் வாடும் இளைஞர்களின் இளமை, குடும்ப வாழ்வு, எதிர்காலம், சமூகப் பொறுப்பு அனைத்தும் பறிக்கப்பட்டு சிறையில் வாடுகின்றார்கள் என்பதைவிட உயிரோடு கொலை செய்யப்படுகிறார்கள் என்றே கூற வேண்டும். இத்தகைய சட்டத்தை உருவாக்கி கடந்த 43 ஆண்டு காலமாக பாதுகாத்து வரும் பேரினவாத ஆட்சியாளர்களே பயங்கரவாதிகள், ஜனநாயக கொலையாளிகள்.ஏனெனில் தமிழர்களின் ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டத்தை அளிக்கவே இச் சட்டத்தை அன்று கொண்டுவந்தனர்.

2019 ஆண்டு உயிர்ப்பு தின குண்டுத்தாக்குதல் கொலைக்கு காரணமானவர்கள் என மக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் சுதந்திரமாக சுகபோகம் அனுபவிக்க அப்பாவி முஸ்லிம்கள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். செல்வாக்கு உள்ளவர்கள் வெளியில் வந்துள்ளனர்.

அதுமட்டுமல்ல காலிமுகத்திடலில் தற்போது நடைபெற்றுவரும் ஜனநாயக ரீதியிலான இளைஞர்களின் போராட்டத்தை அழித்தொழிக்கவும் வன்முறையை கட்டவிழ்த்துவிடவும் மூல காரணமானவர்கள் இந்நாள் வரையில் கைது செய்யப்படாமல் உள்ளனர். இது தொடர்பில் விசாரணையை முன்னெக்க குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்தராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம ஆகியோரின் கடவுச்சீட்டுகளில் நீதிமன்றத்தில் ஒப்ப டைக்க வேண்டும் என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தப் போதும் இன்று வரையில் அதனை கையளிக்காது சட்டத்தை அவமதிக்கும் இவர்களுக்கு எதிராகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படல் வேண்டும். இது சாத்தியமா?

அரசியல் யாப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற இக் காலகட்டத்தில் பயங்கரவாத தடை சட்டம் திருத்த நீக்கம் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் தற்போதைய அரசியல் பொருளாதார கொந்தளிப்பான சூழ்நிலையில் கேதீஸ்வரன் போன்ற இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது” என்றார்.

நெருக்கடிகளுக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரிக்க கோப் குழு பரிந்துரை!

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்காக விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

2018-2019 நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் இலங்கை வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கோப் குழு நேற்று கூடியது.

இதன்போதே, இவ்வாறு தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், வரையறுக்கப்பட்ட டப்ளியு.எம்.மெண்டிஸ் நிறுவனம் ஒரே சொத்தினை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் அடமானம் வைத்துள்ளதா? என்பது குறித்து கோப் குழு ஆராய்ந்து வருகிறது.

கடந்த ஐந்து வருடங்களாக அதிகளவு செலுத்தப்படாத கடன் நிலுவைகளைக் கொண்ட சில நிறுவனங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, ​​டபிள்யூ.எம்.மென்டிஸ் லிமிடெட் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் ஒரே மாதிரியான சொத்துக்களை அடகு வைத்து கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கை வங்கி அதிகாரிகளும், மக்கள் வங்கி அதிகாரிகளும் சந்தித்துக் கொண்ட போது, ​​அந்த நிறுவனம் இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிறுவனம் இந்த சொத்தை சுமார் 7 பில்லியன் ரூபாவுக்கு அடமானம் வைத்து கடனாக பெற்றுள்ளது.

கோப் குழு உறுப்பினர்களின் கூற்றுப்படி, சம்பவம் குறித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் யோசனை!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்த சம்பள உயர்வை மேற்கொள்ள பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும்  வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுத்துறையினருக்கான சம்பளம் கட்டம் கட்டமாக 20,000 ரூபாவால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் நாட்டின் பொருளாதார நிலைகள் குறித்து பிரதமர் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

பதவி விலகுகிறார் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா!

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 31 ஆம் திகதியுடன் அவர் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து ஜுன் முதலாம் திகதி அவர் கூட்டுப்படைகளின் பிரதானியாக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தற்போதைய கூட்டுப்படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் விகும் லியனகே, ஜுன் முதலாம் திகதி புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.