பௌத்த தேசம்; கொழும்பில் பிக்குகள் களமிறக்கம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் மோதுவதற்கு இன்று (12) ராஜபக்ச ஆதரவு பிக்குகள் குழுவொன்று தயாராகி வருகிறது.

கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பட்ட குழு ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைத் துணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வண.வட்டினாபஹ சோமானந்த தேரரிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று தீவிரவாத இனவாதிகள் குழுவுடன் இணைந்து மக்கள் போராட்ட பூமியை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Update: A pro-government protest march was held at Viharamahadevi Park. pic.twitter.com/3zcFQcDF6s

— DailyMirror (@Dailymirror_SL) April 12, 2022

‘சிங்கள பௌத்த ஆணைக்கு கை வைக்கும் பொய்யான போராட்டங்களுக்கு ஏமாறாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுவேளை, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் காலிமுகத்திடல் பகுதியில் பல உளவாளிகள் இறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவாக இலட்சக்கணக்கான மக்கள் தற்போது போராட்டக்களத்தில் திரண்டு வருகின்றனர்.

அரசாங்கம் எவ்வளவு ஆத்திரமூட்டல் செய்தாலும், அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் போர்க்களத்தில் உள்ள அமைப்பாளர்கள், வலியுறுத்துகின்றனர்.

அரசாங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்க போவதாக கூறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையிலான இந்த சதி குறித்து ஏற்கனவே இலங்கை தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு மோதல் வலயத்தில் உள்ள இளம் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது இறுதி முயற்சி – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது. இறுதி முயற்சியே நேற்றைய பிரதமரின் உரை. உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள், சர்வாதிகார ஆட்சி மாற்றங்கள் அனைத்திற்குமான காரணிகள்  நம்நாட்டில் நிரம்பியுள்ளன. என்ன செய்வது என நிங்கள் தீர்மானியுங்கள். இல்லையெனில் மக்கள் தீர்மானம் உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு நேற்று பிரதமர் ஆற்றிய உரை தொடர்பாக என் மனதுக்குள் உடன் எழுந்த எண்ணங்களை என் தமிழ்த் தேசிய உணர்வுகளுடன் பகிர்கிறேன்.

அரசுத் தலைமை, அரசாங்கத் தலைமை மக்கள் முன் இன்னொரு தடவை உரையாற்ற முடியாத நிலையில் அரசாங்கப் பதவியணியில் தன் தம்பியைக் காப்பாற்ற பிரதமர் உரையாற்றியுள்ளார்.

இரண்டரை வருடங்களாக அரசுத் தலைவர், அரசாங்கத் தலைவர் எனும் வகையில் மேதகு அவர்கள் உரையாற்றுவார். இடையிடையே, பிரதமர் தன் தம்பிக்கு முட்டுக்கொடுப்பார்.
பேசும் போதெல்லாம் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சிறகடித்துப் பறக்கும். அவர்கள் உடல் மொழிகளோ வித்தியாசமாக இருக்கும்.

நேற்றைய பிரதமர் உரையில், சிங்களமும் இல்லை. பௌத்தமும் இல்லை. அவர்களது வழமையான கம்பீர உடல் மொழியும் இல்லை. வார்த்தைகளில் கூட சுரத்து இல்லை. இன்னமும் கூட தமிழ் மக்கள் தம் உரிமைகளுக்காக போராடிய 70 வருட வரலாறுகள் தம்மை தக்க வைக்கத் தேவைப்படுகிறது.

யுத்தம் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. யுத்தத்தின் காரணங்கள் மாறிமாறி வந்த அரசாங்கங்களால் உணரப்படவில்லை. ராஜபக்ச குடும்பம் ஒட்டு மொத்த நாட்டின் சீரழிவுக்குக் காரணம் என்று நாம் கூறவில்லை. உங்கள் அரசின் 11 பங்காளிக் கட்சிகளே கூறுகின்றன. மொட்டுக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூறுகின்றனர். அமைச்சர்கள் பலர் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் நீங்கள் இன்னமும் புலியை ஒழித்த பூனையைப் புடுங்கிய சிங்கங்கள் நாம் என்று புலம்புகிறீர்கள்.

மக்கள் எரிபொருளுக்கு கியூவில் நிற்கிறோம். எரிவாயுவுக்கு கியூவில் நிற்கிறோம். அத்தியாவசியப்  பொருளுக்காக அலைகிறோம். உரமின்றி வாடுகிறோம். உயிர்வாழ வழியின்றி இருக்கிறோம் என்று நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம். அதை உணர்கிறோம். அது உண்மை என்கிறோம். என்று கூறும் நீங்கள். உங்கள் அரச பதவிகளைத் துறவுங்கள். நீங்கள் அடித்த கமிசன்களை நாட்டின் திறைசேரிக்குத் தாருங்கள் என்பதனை  மட்டும் ஏற்க ஏன் தயங்குகிறீர்கள்.

உலகத்தில் எந்த ஒரு அரசுத் தலைவரும் உங்களைப் போல் புகழப்பட்டவர்களுமில்லை. உங்களைப் போல் இகழப்பட்டவருமில்லை. பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையால் வெற்றிக்களிப்பில் மமதை கொண்ட நீங்கள், அதே பேரும்பான்மை மக்களின் பெரும்பான்மையினரால் இன்று இகழப்படுகிறீர்கள். இத்தனைக்கும் எம் தமிழ் இளைஞர்கள் இன்னும் ஓரமிருந்து ஓரக்கணாணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரச ஊழியர்கள், நாளாந்த கூலித் தொழிலாளர்கள் வடக்கிலிரந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை யாவரும் உங்களுக்கு எதிராக கோசமிடுகிறார்கள். அதுவும் பெருமைமிகு உங்கள் குடும்பப் பெயரை சந்திக்கு இழுக்க வைக்க இன்னமும் விரும்புகிறார்கள்.

உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள், சர்வாதிகார ஆட்சி மாற்றங்கள் அனைத்திற்குமான காரணிகள்  நம்நாட்டில் நிரம்பியுள்ளன. என்ன செய்வது என நிங்கள் தீர்மானியுங்கள்.

இல்லையெனில் மக்கள் தீர்மானம் உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம். நேற்றைய உங்கள் உரை என் மனதில் தந்த உணர்வு இதுவே. அது தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது. இறுதி முயற்சி. என்பதுவே!

Posted in Uncategorized

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும்!

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை பொறுத்தமட்டில் நாங்கள் தனியாக முடிவு எடுப்பதை காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக முடிவு எடுக்கும்போது அது பலமாக இருக்கும். எந்தவிதமான பிரேரணை கொண்டு வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் மூன்று கட்சியும் இணைந்து தீர்மானம் எடுக்க முடியாவிட்டால் நாங்கள் தனியாக தீர்மானிக்க முடியும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கை மக்களை மிகப் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி பாதித்திருக்கின்றது. ஆகவே, பொருளாதார பின்னடைவு நிச்சயமாக நீண்ட காலமாக இருந்து வந்த ஒன்று. இந்த நாட்டிலே யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்ட பெருந்தொகையான பணங்கள் அதற்காக பட்ட கடன்கள் அதனால் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சேர்த்தே பொருளாதார பின்னடைவுக்கு ஆரம்பிக்க காரணமாக உள்ளது.

போராட்டத்துக்கு ஜனாதிபதி சரியான பதில் ஒன்றை வழங்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கூறியே மக்கள் போராடுகிறார்கள். அதனை ஜனாதிபதி செய்ய மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன். பொருளாதாரத்தை முன்னேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, இணுவில் பகுதியில் இடம்பெற்ற புளொட் மத்திய குழுக் கூட்டத்தில் அண்மையில் உயிரிழந்த கட்சியின் பொதுச் செயலாளருமான அமரர் சு. சதானந்தம் அவர்களின் வெற்றிடத்திற்கு தற்காலிகமாக ஒருவர் நியமிக்கப்பட்டார்.

மத்திய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான கஜதீபன், சிவநேசன் உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிபந்தனையின்றி ஆதரவளித்தால் வீதிகளில் இறங்குவோம் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே. சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ் தேசிய பிரதான மூன்று அணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரனை ஆட்சிமுறையை ஒழிப்பது சம்பந்தமாக கூட்ட அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் கொண்டு வந்து என்ன செய்யப் போகின்றோம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

எதுவும் மாறப்போவதில்லை. வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். சாதாரண பெரும்பான்மை மூலம் மாகாண சபை சட்டத்தின்படி அருகருகே இருக்கக்கூடிய இரண்டு மாகாணங்கள் இணைக்கப்பட முடியும் என்று கூறப்படுகின்றது.

பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மை மூலம் கூட இதனை நிறைவேற்ற முடியும். இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாமல் எந்தவித பொருளாதாரத்திற்கும் தீர்வும் கிடையாது.

அத்துடன் நிரந்தர சமாதானமும் நல்லிணக்கமோ கிடையாது என்பதை தெட்டத் தெளிவாக உணர வேண்டும். ஆறு கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலை தான்.

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என்றார்.

Posted in Uncategorized

அரசாங்கத்தை எதிர்க்கின்ற கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முக்கிய சந்திப்பு

அரசாங்கத்தை எதிர்க்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் குழுக்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமாரவெல்கம சம்பிக்க ரணவக்க , அனுரபிரியதர்சன யாப்பா எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட பலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தை எதிர்க்கும் கட்சிகள மத்தியில் ; முன்னோக்கி நகர்வது குறித்து மாற்றுக்கருத்துக்கள் உள்ளதால் முன்னுரிமையளி;க்கவேண்டிய விடயங்களை அடையாளம் காண்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனினும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள கட்சிகள் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு விரும்பவில்லை,ஜனாதிபதி பதவி விலகினால் அமைச்சரவை கலைக்கப்பட்டால் அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும் அவர்கள் மத்தியில் கருத்துடன்பாடு இல்லை.

இதன்காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை அமைப்பது என தீhமானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

4 வது நாளாகவும் தொடரும் போராட்டம்

கொழும்பு, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு (11) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததாக தெரியவருகிறது தெரியவருகிறது.

காலி முகத்திடலில் நேற்று இரவு கடும் மழை பெய்த போதிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ மெளனம் கலைந்தார் – காணொளி உரையின் 15 முக்கிய தகவல்கள்

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இரவு, பகலாக உழைத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மிகப்பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் ஆளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சவையில் இடம்பெற்றுள்ள அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இதுவரை பொதுவெளியில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்து வந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 11ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காணொளியை தமது ஃபேஸ்புக் சமூக ஊடக பக்கம் வாயிலாகவும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். அதன் சில முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்

1. யுத்தத்தை வெற்றி கொண்டு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற சந்தர்ப்பத்தில் மக்கள் மறந்த கதை தற்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. எதிர்காலத்தில் மின்சாரம் தடைபடாத நாடொன்றை நான் உருவாக்குவேன் என அன்று நான் கூறினேன். அதற்கான மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்கும் திட்டங்களை ஆரம்பித்திருந்தாலும், முந்தைய அரசாங்கம் எமது திட்டத்தை உரிய வகையில் முன்னோக்கி கொண்டு செல்லாததால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனது.

2. எரிபொருள் வாங்க மக்கள் நாட்கணக்கில் கஷ்டப்பட்ட துன்பத்தை எம்மால் உணர முடிகிறது. எரிவாயுவை வாங்க நின்ற பெண்களின் சிரமத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் நாட்டை ஒன்றிணைத்துக் கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். எனினும், அவர்கள் வரவில்லை.

3. தற்போது கட்சி தொடர்பில் சிந்திப்பதை விடவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப் பெற செய்வதே எம் அனைவரது பொறுப்பாகும். யார் பொறுப்பேற்கா விட்டாலும், அதிகாரத்திலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றோம். இந்த பிரச்னைகளுக்கு நாம் தீர்வை பெறுவோம்.

4. 30 வருட பயங்கரவாதத்தை தோற்கடித்து, இந்த நாட்டு மக்கள் மத்தியில் இருந்த மரண அச்சுறுத்தலை இல்லாது செய்தோம். இந்த நேரத்தில் மக்கள் கஷ்டப்பட நாம் வசதிகளை உருவாக்கவில்லை. அதிவேக வீதிகள், நவீன வீதிகள் நிர்மாணிக்கப்பட்டது, உங்களை அந்த வீதிகளில் வரிசைகளில் நிற்க வைப்பதற்காக அல்ல. நாம் துறைமுகங்களை நிர்மாணித்தது, எரிபொருள் கப்பல்களை பணம் செலுத்தி அதில் உள்ள பொருட்களை வாங்க முடியாமல் நிறுத்தி வைப்பதற்காக அல்ல.

5. மக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்துவதற்காகவும், துப்பாக்கி சூடுகளை நடத்துவதற்காகவும் நாம் ஆட்சி நடத்தவில்லை. இந்த நாட்டின் அனைத்து பிரச்னைகளின் போதும், மக்களை பாதுகாத்துக்கொள்ள முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட வரலாறு எமக்கு உள்ளது. மக்களுடன் தைரியமாக வேலை செய்து, இலங்கையை கடனற்ற நாடாக மாற்றுவதற்காகவே நாம் பாடுபடுகிறோம். மிகவும் சிரமமான காலத்தில் கூட வெளிநாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது, நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சித்தது.

6. இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்காத விதத்திலான தீர்மானமொன்றை எடுப்பது எமது பொறுப்பாகும். அந்த நோக்கத்திற்காக மாத்திரமே வேலை செய்தோம். ‘நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் வேண்டாம்’ என்ற போராட்டம் தற்போது எமக்கு கேட்கிறது. அதனூடாக இந்த ஜனநாயக முறைமையை நிராகரிப்பது என்றால், அந்த ஆபத்தின் எதிர்காலத்தை சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.

7. நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசி, முழு நாடாளுமன்றத்தையும் இல்லாது செய்வதன் ஊடாக ஏற்படும் அனர்த்தத்தை நாம் கண்டுள்ளோம். அன்று நாடாளுமன்ற ஜனநாயகம் நிராகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் ரத்தம் வீதிகளில் வழிந்தோடியதை கண்டோம். இந்த ஜனநாயகத்தை நிராகரிக்க வேண்டும் என்றால், அந்த அபாயத்தை கடந்த காலங்களை நினைத்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்,

8. ஆயிரக்கணக்கான இளைஞர்களை உயிரோடு எரித்தார்கள். 88, 89 ஆகிய இருள்ட யுகத்தில் 60 ஆயிரம் வரையான இளையோரின் உயிர்களை நாம் இழந்துள்ளோம். அன்று இளைஞர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு நாம் எடுத்த முயற்சி, முதியோரின் நினைவில் இருப்பதை நாம் நன்கறிவோம். தெற்கிலுள்ளவர்களை போன்று வடக்கில் உள்ளவர்களுக்கும் இதனை நினைவுப்படுத்த வேண்டும்.

9. அந்த இறந்த உறவுகளின் பெற்றோரிடம் கேட்டால், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றம் வேண்டாம், தேர்தல் வேண்டாம் என கூறியே, மக்கள் பிரதிநிதிகள் வீதிகளில் கொலை செய்யப்பட்டனர். அதனூடாகவே 70களில் வடக்கு இளைஞர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்த அரசியல் செயல்பாடு காரணமாக வடக்கில் மாத்திரமன்றி, தெற்கு மக்களும் துன்பங்களை அனுபவித்தனர்.

10. கண்ணி வெடிகளுக்கு, துப்பாக்கி சூடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். பாடசாலை மாணவர்களும் படிப்படியாக போராட்டத்திற்கு அழைத்த செல்லப்பட்டார்கள். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக யுத்தத்திற்கு அழைத்து சென்றனர்.

11. நாடாளுமன்றம் வேண்டாம் என்றே அன்றும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆபாயத்தை நாம் அறிந்தமையினால், உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் பிறந்த இந்த தாய் நாட்டை மீண்டும் அந்த இருள் சூழ்ந்த யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் இருப்பவர்கள், ஒவ்வொரு நொடியையும் கடக்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடியாது போனாலும், விரைவில் இந்த பிரச்னையைத் தீர்ப்போம்.

12. நீங்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு தருணத்திலும், எமது நாட்டிற்கு டொலர் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகிறது. பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னர், தேசத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையிலிருந்து மீண்டெழுவது எம் அனைவரது பொறுப்பாகும். அதற்காக சக்தி, தைரியம் உள்ள அனைவரையும் நாம் அழைத்திருக்கிறோம்.

13. உங்களின் பொறுமை இந்த நாட்டிற்கு தற்போது அவசியம். அன்புக்குரிய பிள்ளைகளே, நீங்கள் பிறந்த இந்த பூமியின் மீது அளப்பரிய அன்பை கொண்டுள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். அன்று வன்முறைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது, மிதிக்கப்பட்ட மணல் துகில்ககளை விடவும், எனக்கும், எனது குடும்பத்திற்கும் கூறியுள்ள நிந்தனைகள் மற்றும் அபகீர்த்திகள் அதிகம் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கூற வேண்டும்.

14. நாட்டிற்கான கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினர், போலீஸார் இடையூறு, அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம். இன்று சுதந்திரமாக வீதிகளில் நீங்கள் பயணிக்க, ஆர்ப்பாட்டங்களை நடத்த, ராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து, நாட்டை மீட்டெடுத்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

15. ஆர்ப்பாட்டம் நடத்தும் உங்களின் கைகளில் தேசிய கொடி இருக்கிறது. நாம் பிறந்த இந்த மண்ணில் எந்தவொரு இடத்திலும் தேசிய கொடியை ஏற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாட்டிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது நாம்தான். அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.

பிபிசி தமிழ்

Posted in Uncategorized

சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த மைத்திரி சார்பு விக்கெட்டை வீழ்த்தியது ஆளும் தரப்பு – இராஜாங்க அமைச்சர் பதவியையும் கொடுத்தது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்தது இருந்தது.

எனினும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பணடார இராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுஜன பெரமுனவில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இன்று(11) இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

அதற்கமைய சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார பதவியேற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்த பதவியை ஷஷீந்திர ராஜபக்ஸ வகித்திருந்தார்.

இதேவேளை, பியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாததால் அவர் தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் பதவியில் நீடிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பொதுஜன முன்னணியின் கூட்டணிக்கட்சிப் பிரதிநிகளைச் சந்தித்தார் சஜித்

அரசாங்கத்திற்கு எதிராக பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அறிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணிக்கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலான பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிதிகளான மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

இருப்பினும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற தொனியில் கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்ட நிலையில், சுமுகமான முடிவொன்று எட்டப்படாமல் இப்பேச்சுவார்த்தை நிறைவிற்கு வந்துள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (10) முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேனவுடன் பாராளுமன்றத்தில் சுயாதீனமானச் செயற்படப்போவதாக அறிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலரும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை சஜித் பிரேமதாஸவுடன் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்னவென்று அறிந்துகொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவைத் தொடர்புகொண்டு வினவியபோது, அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, மீண்டும் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவரல், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு கையாளுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.

இருப்பினும் அரசாங்கத்திற்கெதிராகப் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அறிவித்த உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்களா? இல்லையா? என்பதை அறிந்துகொள்வதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கம் என்று கட்சியின் உள்ளகத் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

ஆனால் இச்சந்திப்பில் கலந்துகொண்ட மைத்திரிபால சிறிசேன உள்ளடங்கலாகக் கூட்டணிக்கட்சிகளின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற தொனியில் கருத்து வெளியிட்ட நிலையில், சுமுகமானதொரு முடிவு எட்டப்படாமல் இந்தப் பேச்சுவார்த்தை நிறைவிற்கு வந்துள்ளது.

எது எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளும், சுயாதீனமாகச் செயற்படும் மேலும் சில சட்டத்தரணிகளும் இணைந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, அதற்குப் பதிலாக மாற்றுத் திருத்தமொன்றைக் கொண்டுவருவதற்கான வரைவைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க சுமார் இருவாரங்களுக்கு முன்னதாக (நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைவதற்கு முன்னர்) முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவைத் தொடர்புகொண்டு, இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கைவிடுத்திருக்கின்றார்.

இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், இடைக்கால அரசாங்கத்தில் இணைவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் ஊடாக ஆளுந்தரப்பினர் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதன்போதும் இடைக்கால அரசாங்கத்தில் இணைய விரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, இடைக்கால அரசாங்கத்தில் இணையும் பட்சத்தில் வெளிவிவகார அமைச்சு, நிதியமைச்சு, சுகாதார அமைச்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு உள்ளடங்கலாக 5 அமைச்சுப்பதவிகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குவதாகக்கூறிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கும் பிரதான எதிரணி உடன்படாததையடுத்து, ஹர்ஷ டி சில்வாவை நிதியமைச்சராக நியமிப்பதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவையனைத்திற்கும் உடன்படாத ஐக்கிய மக்கள் சக்தி, தற்போது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவருவதற்குத் தீர்மானித்திருப்பதுடன் அதற்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்க்கு விடியல்: தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு-“கோட்டாபய வீட்டுக்குப் போ” போராட்டத்திற்கு ஆதரவு

கடந்த 9ம் திகதி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ’ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற இனவழிப்புக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு ,பொருளியல் நெருக்கடியால் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ள சிங்களர்கள், ஈழத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், “கோட்டபய வீட்டுக்குப் போ” எனக் கிளர்ந்தெழுந்து நடத்திவரும் போராட்டத்திற்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ’ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாட்டிற்கு தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இனவழிப்புப் போரை நிறுத்த வலியுறுத்தி தன்னுயிரை ஈகம் செய்த ஈகியர்கள் முத்துக்குமார், முருகதாசுக்கு மலரஞ்சலி மூலம் வீரவணக்கம் செலுத்தப்பட்டு, மாநாட்டு உரைகள் தொடங்கின.

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு நோக்கவுரை ஆற்றினார். அதை தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் பாரி மைந்தன் மாநாட்டு தீர்மானங்களை வாசித்து அரங்கத்தில் உள்ளோரது ஏற்பைப் பெற்றார்.

பின்னர் தீர்மானங்களை அடியொற்றி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் அ.சா. உமர்பாரூக், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், பச்சைத் தமிழகத்தைச் சேர்ந்த அருள்தாஸ், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், பேராசிரியர் மணிவண்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக் குமரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திமுகவின் செய்தி தொடர்பாளர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர்.

மாநாட்டின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கீழே காண்க.

தீர்மானங்கள் :

1.ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்புக் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் செய்த கோடாபய ராசபக்சே, மகிந்த இராபக்சே உள்ளிட்ட சிங்கள ஆட்சித் தலைமைகள், சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா, கமல் குணரத்னா, ஜகத் ஜெயசூர்யா உள்ளிட்ட படைத் தலைமைகளை, 2002 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் நாளுக்கு முன்னர் புரிந்த குற்றங்களையும் உள்ளடக்கக் கூடியதான இலங்கை தொடர்பான அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று சிறப்பாக அமைக்கப்பட்டோ, அன்றேல் குறைந்தது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, கூண்டிலேற்ற வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

2.2014 ஆம் ஆண்டு வடமாகாணசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படியும், 2021 ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்த் தலைவர்களும் குடிமைச் சமூக பிரதிநிதிகளும் சேர்ந்து ஐ.நா. உறுப்பரசுகளுக்கு அனுப்பிய மடலின்படியும் 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தின்படியும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்யப்பட்ட மேற்சொன்ன பன்னாட்டு சட்டமீறல்கள் தொடர்பில் எவ்வித உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கும் சிறிலங்கா அரசு வழிசெய்யாத நிலையிலும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும் இனியும் காலந்தாழ்த்தாமல் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

3.இலங்கை அரசு ஐ. நா. பேரவையில் உறுப்பு வகிக்கத் தொடங்கிய 1955 ஆம் ஆண்டு திசம்பர் 14ஆம் நாளுக்கு முன்னதாகவே, இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான அனைத்துலக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. இதனால், இந்த ஒப்பந்தத்தின் சட்ட ஆளுகைக்கு அந்த நாடு 1951 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் தொடக்கம் உட்பட்டிருக்கிறது. அந்த நாளில் இருந்து இலங்கையின் ஆட்சி மற்றும் படைத் தலைமைகள் மட்டுமல்ல அந்த நாட்டிற்கு பொறுப்பான அரசும், ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிராகப் புரிந்த இன அழிப்புக் குற்றத்தை பன்னாட்டு நீதிப் புலனாய்வுக்கு தவறாது உட்படுத்திடவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

4.ஐரோப்பிய வல்லரசிய ஆளுகைக்கு முன்னிருந்தஇறைமையை மீட்டுக்கொள்ளும் உரிமையின் பாற்பட்டும், பெரும்பான்மைத் தமிழீழ மக்களின் மக்களாணை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பாற்பட்டும், அளப்பரிய ஈகங்களுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக மெய்ந்நிலை அரசொன்றை நடத்தியவர்கள் என்ற வகையிலான இறைமையின் பாற்பட்டும், இனவழிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதி என்ற பன்னாட்டு நடைமுறையின்பாற்பட்டும் இறைமையை மீட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும்வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தீவின் இனச்சிக்கலுக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

5.முள்ளிவாய்க்கால் படுகொலையோடு தமிழின அழிப்புக்கான தடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக தமிழீழத்தில் தொடர்ந்துநடைபெற்றுவரும் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை (Structural Genocide) தடுத்து நிறுத்துவதற்குப் பன்னாட்டுப் பாதுகாப்பு பொறியமைவு (International Protective Mechanism) ஒன்றை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்தில் ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

6.மாந்தவுரிமைகளுக்கான ஐநா. உயராணையர் மிசேல் பசலே 2021 சனவரியில் கொடுத்த பரிந்துரைகளான – போர்க் குற்றங்களுக்கான சான்றுகளைப் பாதுகாத்தல், சிறிலங்காவில் பன்னாட்டுக் குற்றங்கள் செய்தவர்கள் மீது ஐ.நா. உறுப்பரசுகள் எல்லைகடந்த மேலுரிமைக் கோட்பாடுகளின்படி (Universal Jurisdiction) அந்தந்த நாட்டு நீதிமன்றங்களிலும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தல், பயணத் தடை விதித்தல், சொத்துகளை முடக்குதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

7.தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் இலங்கையின் வடக்குகிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிங்களப் பெரும்படை உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

8.போரின் முடிவில் சிங்களப் படையினரிடம் கையளிக்கப்பட்டோர் உள்ளிட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட 19,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கு வழிசெய்ய பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறியமைவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

9.போர்க் கைதிகள் உள்ளிட்டதமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

10.தொல்லியல் பணிகள், மகாவலி வளர்ச்சித் திட்டம், வனத்துறை, வன விலங்குகள் துறை, சுற்றுலாத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதும் தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதற்கான சான்றுகளை அழிப்பதும் தமிழ்ச் சிற்றூர்களின் எல்லைகளை மாற்றியமைப்பதும் மக்களின இயைபை ( demographic composition) மாற்றிக் கொண்டிருப்பதும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

11.தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதை ஏற்று வடக்குகிழக்கு மாகாணங்களை இணைத்துகுடியியல் ஆட்சியை அங்கு நிறுவும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

12.இலங்கையின் வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழர்களினமரபுவழி தாயகம் என்பதை இந்திய அரசு திட்டவட்டமாக அறிந்தேற்க வேண்டும். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கைகளுக்கு முரணான தீர்வு எதையும் இந்திய அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழர்கள் மீது திணிக்கக் கூடாது என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

13.தமிழீழ மக்களின் அரசியல் வேணவாக்களைத் துச்சமாக மதித்தும் சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழின அழிப்பு என்ற கட்டத்தை அடைந்துவிட்டதை பொருட்படுத்தாமலும் இந்திய அரசு 13 ஆம் சட்டத்திருத்தத்தை ஓர் அரசியல் தீர்வென்று தமிழீழ மக்கள் மீது திணிப்பதற்கு செய்துவரும் முயற்சிகளை தமிழ்நாட்டு மக்கள் சார்பில் இம்மாநாடு உறுதியாக மறுதலிக்கிறது.

14.இந்திய அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில்ஐ.நா.உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் முயற்சிகள் எடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

15.தமிழ்நாடு அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை ஏற்கும்படி இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், உலக நாடுகளிடமும் ஐ.நா உறுப்பரசுகளிடமும் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டுவதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

16. தமிழீழத் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தமிழ் உலகத்திலும் தமிழ் மக்களும் அவர்தம் அமைப்புகளும் தலைமைகளும் மேற்சொன்ன கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றுபட்டுநின்று உறுதியோடு போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
சிறப்பு தீர்மானம்:

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியால் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ள சிங்களர்கள், ஈழத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், “கோட்டபய வீட்டுக்குப் போ” எனக் கிளர்ந்தெழுந்து நடத்திவரும் போராட்டத்தை இம்மாநாடு வாழ்த்துகிறது. அதேநேரத்தில் , இப்போராட்டம் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதாக முடிந்து போய்விடக் கூடாது. பொருளியல் நெருக்கடிக்கு வித்திட்ட சிங்கள பெளத்தப் பேரினவாத ஒடுக்குமுறை அரசியலுக்கு முடிவுகட்டி, தேசிய இன சிக்கலுக்கு குடியாட்சியத் தீர்வு காண்பதில்தான் இலங்கை தீவில் உள்ள மக்களினங்களின் இருப்பும் நல்வாழ்வும் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு அனைத்து தரப்பாரும் அதை நோக்கி பாடுபட வேண்டும் என இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

Posted in Uncategorized