வட பகுதி மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது

74 ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படும் நிலையில், சுதந்திரம் அற்றுப்போன பலரும் எம் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். வட பகுதி மீனவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கையின் கடல் வளத்தில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி வட பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். வத்திராயன் கடற்பரப்பில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தமைக்கும் இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ். சுப்பர்மடம் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது.

பொதுமக்களின் இயல்வு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அல்லது வீதியில் அசௌகரியங்களை உண்டு பண்ணும் வகையிலான அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நேற்றிரவு பருத்தித்துறை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, உயிரிழந்த சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனிடையே கிளிநொச்சி தேசிய மீனவர் ஒத்துழைப்பின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி – பூநகரி கடற்றொழில் கூட்டுறவு சங்க சமாசங்களுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கையின் கடல் வளத்தில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்ச்சியாக நடந்தேறி வருவதை நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருந்தது.

எமது கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீனவர்கள் கடந்த காலங்களில் எமது மீனவர்களின் வலைகளை அறுத்ததுடன், கடல் வளத்தையும் நாசப்படுத்துகின்றனர்.

தற்காலிகமாக இவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுதலை செய்யப்படுவதும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

Posted in Uncategorized

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுதந்திர தினத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் சுதந்திர தினமான இன்று (04) தமது உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது, யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் சுடர் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து செல்வபுரம் வரை பேரணியாகச் சென்று அங்கும் கவனயீர்ப்பில் ஈடுப்பட்னர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், பேரணியாக முனீஸ்வரன் வீதியூடாக முனியப்பர் ஆலய முன்றலை சென்றடைந்தது.

பின்னர் முனியப்பர் ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுப் பேச்சுவார்த்தைக்கு தயார்: சர்வதேச நாணய நிதியம்

டொலர் பற்றாக்குறையினாலேயே எண்ணெய்க்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடன் பிரச்சினைகளால் டொலர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கம் நிதி உதவி கோரினால், இலங்கையுடன் மாற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்  (IMF) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் இதுவரை நிதியுதவி கோரவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி, AFP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனை பெற இலங்கை தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த விடயம் குறித்து வேறு விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சின் புதிய பொருளாதாரப் பிரிவின் பொருளாதார திறனைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கும் பொதுவான செயற்பாடு அதுவென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Posted in Uncategorized

ஹபாயா’ சர்ச்சை: இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது – சம்பந்தன் வலியுறுத்து

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, ஒவ்வொரு இனத்தினுடைய உரிமைகளையும் மற்றைய இனம் மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

‘ஹபாயா’ அணிந்து வந்திருந்த குறித்த முஸ்லிம் பெண் ஆசிரியர் உண்மையில் அதிபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது தவறான விடயம் எனவும், இந்தக் கருமத்தை நாம் சமாதானமாகத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒருவரையொருவர் மதித்து மற்றவர்களுடைய கருமத்துக்கு – சுயமரியாதைக்கு – இறைமைகளுக்குப் பாதகம் இல்லாமல் நாம் செயற்பட வேண்டும்.

அனைவரும் இந்தக் கடமையை ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் என நான் மிகத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். பிரச்சினையை நாம் வளர்க்கக்கூடாது. தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு – கிழக்கு என்பது எமது சரித்திர ரீதியான வதிவிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் இறைமையை நாம் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

மகாவம்சம் கூறும் தமிழரின் சுயநிர்ணயம் தெரியாதா வீரசேகரவுக்கு? – ரெலோவின் இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

தமிழர்கள் சுயநிர்ணயத்துடன் சுயாட்சி நடாத்தியதாக சிங்கள மக்கள் நம்பும் மகாவம்சத்தில் மகாநாம தேரர் குறிப்பிடப்பட்ட விடையம் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு இதுவரை தெரியாதா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வீரசேகரவின் ஊடக அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

சில தினங்களுக்கு முன்னதாக ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் புலிகள் கோரிய சுயநிர்ணய உரிமையை சுமந்திரனும் கோருகிறார் என குறிப்பிட்டிருந்தார். வாசிக்கும் போது வேடிக்கையாக இருந்தது.

முதலாவது சிங்கள குடியேற்றம் இலங்கையில் கி மு 6 நூற்றாண்டு விஐயன் தலைமையில் அரங்கேறும் போது தமிழர்கள் சுயநிர்ணயத்துடன் சுயாட்சி நடாத்தியதாக சிங்கள மக்கள் நம்பும் மகாவம்சத்தில் மகாநாம தேரர் குறிப்பிடப்பட்ட விடையம் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு இதுவரை தெரியாதா?

இலங்கைத் தீவுக்கு சொந்தமான தமிழர்கள் இறைமையுடன் ஆண்ட இனம் என்ற வரலாற்றை மறைத்து பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்பின் ஒரு வகை வெளிப்பாடே வீரசேகரவின் ஊடக அறிக்கை.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி ஐரோப்பியரின் இலங்கைமீதான ஆக்கிரமிப்புடன் பறிக்கப்பட்டது குறிப்பாக 1833 ஆண்டு கோல்புறுக் அரசியல் அமைப்பின் மூலம் ஒற்றையாட்சிக்குள் நாடு கொண்டுவரப்பட்டதால் தமிழர்கள் சுயாட்சியை இழந்தனர்.

பின்னர் 1948 ஆண்டு சுதந்திரம் என்ற பெயரில் சிங்களவர்களுக்கு உண்மையான சுதந்திரத்தையும் தமிழர்கள் உட்பட ஏனைய இனங்களுக்கு அவர்களின் இருப்பை ஆக்கிரமிக்கும் சிங்கள ஆட்சியாளர்களையும் கொடுத்துச் சென்றனர் பிரித்தானியர். அன்றில் இருந்து இன்று வரை தமிழ் மக்கள் மறுக்கப்பட்ட தங்களது சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

1952 இல் இருந்து 1972 வரை 90 சதவீத தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சித் தீர்வுக்காகவே ஐனநாயக முறையில் தேர்தல்களில் வாக்களித்தனர் பின்னர் 1977 தேர்தலில் ஒரு படி மேலே சென்று தனிநாட்டிற்கான கோரிக்கையை முன் வைத்து அதற்கான சர்வசன வாக்கெடுப்பு என்ற வகையில் வடகிழக்கில் 19 தொகுதிகளில் 18 தொகுதிகளை அன்றைய தமிழர் கூட்டணி வென்றது இது மிகப்பெரிய ஐனநாயக வெற்றி ஆனால் சிங்கள ஆட்சியாளர் தமிழர்களின் அபிலாசைகளை நியாய பூர்வமாக தீர்க்க முன் வரவில்லை இதனால் உருவாகியதே ஆயுதப் போராட்டம் இயக்கங்கள்.

ஆகவே விடுதலைப் புலிகள் தங்களது கோரிக்கையாக சுயநிர்ணய உரிமையை கோரவில்லை தமிழ் மக்களின் ஐனநாயக ரீதியாக தேர்தல் மூலம் கேட்கப்பட்ட சுயநிர்ணய உரிமையை பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர் அங்கிகரிக்க மறுத்தமையால் அதனைப் பெற்றுக் கொடுக்கவே ஆயுதப் போராட்டம் நடாத்தினர். எனவே யுத்தம் மௌனிக்கப்பட்டு 13 ஆண்டுகளாகியும் மீண்டும் தமிழ் மக்கள் பெரும்பாண்மையாக சுயநிர்ணய உரிமைக்காகவே பல அவலங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். எனவே தமிழர்கள் இந்த நாட்டின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இறைமையுள்ள இனம் என்பதை வரலாற்றில் இருந்து மறைக்க முடியாது.

Posted in Uncategorized

கறுப்புச் சந்தை மூலம் ஆயுதம் கொண்டு வந்ததை மறுக்காத பசில் : செய்தியாளர் சந்திப்பில் திக்குமுக்காடினார்

இலங்கையில் இறுதி யுத்தம் நடந்த போது கறுப்புச் சந்தையைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்து தற்போது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

சிக்கலான கேள்விகளை தவிர்ப்பது நல்லது என்று இதற்கு நிதியமைச்சர் பதிலளிக்க, நீங்கள் சொன்ன கருத்தினால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர் மீண்டும் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பசில் ராஜபக்ச, இதற்குப் பதிலளித்தால் இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும் என்று கூறி முடித்தார். ஆனால் இந்தக் கருத்தை விளக்கப்படுத்துவதற்கான நல்ல சந்தர்ப்பம் இது என்று ஊடகவியலாளர் மீண்டும் குறிப்பிட, அப்படியொன்று நடக்கவில்லை என்று சொன்னால் கதை முடிந்துவிடும் என்று நழுவல் போக்கில் பதிலளித்தார்.

கறுப்புச் சந்தையின் மூலம் டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்களைக் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சிங்கள நாளிதழுக்கு சொன்ன கருத்து சர்ச்சையாகியுள்ளது.

இந்தக் கருத்தை மறுக்காத பசில் ராஜபக்ச, ஊடகவிலாளரின் அந்தக் கேள்வியால் திக்குமுக்காடிப் போனார்.

அத்துடன், யுத்த காலத்தில் நடந்த ஏராளமான விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றும் அவற்றை பேசாமல் இருப்பது நல்லது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அதனை மூடிமறைக்க முயற்சித்தாலும், வடகொரியாவுடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டார் என்ற கருத்து தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், பணச் சலவையில் ஈடுபட்டதாக இதற்கு முன்னர் ராஜபக்ச குடும்பத்தில் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. பண்டோரா ஆவணங்களின் மூலம் இந்த தகவல்கள் வெளிவந்திருந்தன. இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதுகுறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்படுவதைக் காண முடியவில்லை என குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பணச் சலவை மற்றும் கறுப்புப் பயணத்தைப் பயன்படுத்தி, பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல்கள் அல்லது நடந்த சம்பவங்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் சர்ச்சைகள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக மேலும் புதிய பிரச்சினைகளை இந்த அரசாங்கம் உருவாக்கி வருவதாக பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized

அனைவரும் அரசியல் கடந்து அணிதிரள அழைப்பு!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் நாளை 4 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மாபெரும் போராட்டத்துக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

கரிநாள் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது எமக்கான சுதந்திர தினம் அல்ல எமக்கான நீதி கிடைக்கப் பெறாத இடத்தில் எவ்வாறு சுதந்திரம் கிடைக்கும். பொதுமக்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருக்காது ஒன்று கூடி இந்த கருப்பு நாளை அனுஸ்டிக்க வேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

சிறீலங்காவின் சுதந்திர தினம் என்பதை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டித்து வந்துள்ளனர். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு இன அழிப்பு நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலே எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி அரசியல் நோக்கங்கள் இல்லாமல் ஒன்றிணைய வேண்டும். எமது இயக்கமும் இதற்கு பூரண ஆதரவை வழங்குகிறது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்திருந்தார்.

ஒரே நாட்டிலேயே ஒருபுறம் ஆரவாரம் வெற்றிக்கொண்டாட்டம் மகிழ்ச்சி என்பன காணப்படும் போது இன்னொரு புறத்தில் கவலை வறுமை பொருளாதார பின்னடைவு போன்றன காணப்படுகின்றதெவும் இதனை நாங்கள் இரண்டு நாளாக அனுஸ்டிக்கிறோமென மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிகரன் அடிகளார் தெரிவித்தார்.

சிறீலங்கா அரசுக்கு தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக கொடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரமே சுதந்திர தினமாகும். 1956 சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய திருமலை நடராஜன் படுகொலையோடு உயிர்ப்பலி என்பது ஆரம்பித்துவிட்டது. தமிழ் இன ஒடுக்குமுறைக்கு நூறு வருடங்கள் கடந்துவிட்டது. சுதந்திரத்திற்கு முன்னர் அனுமதிப்பத்திரம் இல்லாமல் எம்மை ஒடுக்கினார்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் அனுமதிப் பத்திரத்துடன் நம்மை ஒடுக்குகிறார்கள் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்திருந்தார்;.

அரசியல் கைதிகள் பிரச்சினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அடுத்த வருடங்களில் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிக்க வேண்டிய தேவை இருக்காது. நாளைய தினத்தில் தனித்தனித் போராட்டங்களை முன்னெடுக்காமல் முள்ளிவாய்க்காலில் அணிதிரண்டு வலுச்சேர்க்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்திருந்தார்.

துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு உடையணிந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுடன் வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ் ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க யாழ் மாவட்ட தலைவி சிவபாதம் இளங்கோதை, உபதலைவி நிர்மலநாதன் மேரி ரஞ்சினி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள்,மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிகரன்,சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம்,

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ஆகியோர் பங்கேற்றனர்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்திடம் ஒத்துழைப்பு கோரும் அரசாங்கம்

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்று (02) தெரிவித்த கருத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று பதிலளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நேற்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இன்று காலை ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டிருந்தார்.

நிதி அமைச்சுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெறுவது வழமையான ஒன்றென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நிதி அமைச்சர் வௌியிட்ட கருத்து தொடர்பிலானது. இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதென்பது நிதி அமைச்சின் நிதி பிரிவின் மேம்பாட்டிற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வழமையான செயற்பாடாகும். அதனை விட வேறு ஒன்றும் இல்லை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கை சீமெந்து மற்றும் அரிசி கொள்வனவிற்காக பாகிஸ்தானிடம் கோரியுள்ள 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அந்நாட்டிற்கு IMF மூலம் கிடைக்கவுள்ள கடனிலிருந்து வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராகின்றது.

தேவையற்ற செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு பாகிஸ்தான் காட்டும் சிறந்த ஆர்வத்தை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு பாகிஸ்தானுக்கு இந்த கடனை வழங்க தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியம் ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்கிய பின்னர், இலங்கைக்கு சீமெந்து மற்றும் அரிசி கொள்வனவிற்கு தேவையான 200 மில்லியன் டொலரை வழங்குவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு!

சுதந்திர தின விழாவை நாளை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய கைக்குண்டு வழக்கு மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் உள்ள குறைபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு பேராயர் தொடர்பு பிரிவு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அவர், சுதந்திர தினத்தன்று வழமையாக மேற்கொள்ளும் சேவையை இரத்து செய்ய கர்தினால் ரஞ்சித் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆதாரம் இருந்தும், தேவாலயத்தின் பாதுகாவலர் ஏன் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து தாங்கள் கலக்கமடைந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவாலயத்தின் பராமரிப்பாளருக்காக எதிர்பார்க்கப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் அனைவரும் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை – மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து நிரந்தரத் தீர்வு காணுங்கள்: முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள், 2 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படவிருக்கும் சூழ்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 29-01-2022 அன்று மதியம் அமிர்தலிங்கத்திற்கு சொந்தமான விசைப்படகில் பன்னிரெண்டு பேர் மீன்பிடிக்கச் சென்றதாகவும், 31-01-2022 அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பன்னிரெண்டு தமிழக மீனவர்களையும், விசைப்படகையும் இலங்கை மீனவர்கள் சுற்றிவளைத்து தகராறு செய்ததாகவும், இதற்கிடையே அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 12 பேரையும், விசைப்படகையும் சிறைபிடித்து மயிலட்டி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதேபோன்று, புதுச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கோட்டுச்சேரி மேட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 31-01-2022 அன்று அதிகாலை ஒன்பது பேர் கோடியக்கரைக்கு தெற்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கும் ஏழுக்கு மேற்பட்ட இலங்கை மீனவர்கள் வந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை சுற்றி வளைத்த நிலையில் அங்கு வந்த இலங்கைப் படையினர் 9 இந்திய மீனவர்களையும் அவர்கள் வந்த விசைப்படகினையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இலங்கை கடற்படையினரின் மேற்படி செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது.

மேற்படி சம்பவங்களில் மட்டும் 21 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் இரண்டு விசைப் படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதையடுத்து, அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை வருகிற 7ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தாலும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு விடுமோ என்ற மிகப் பெரிய கவலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது என்பதோடு, மத்திய அரசின் உதவியோடு இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்து பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவ மக்களிடையே தற்போது நிலவுகிறது.

எனவே, முதல்வர் இது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, தேவையான அழுத்தத்தை அளித்து, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Posted in Uncategorized