மனித உரிமைகளை உறுதி செய்வதை முன்னிறுத்தி செயற்பட்டால் ஆதரவை வழங்கத்தயார் – பிரித்தானியா

இலங்கையில் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதி செய்வதை முன்னிறுத்தி செயற்பட்டால் தாம் ஆதரவை வழங்கத்தயார் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மேலும் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் சமாதானத்தையும் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்கான ஜெனீவாவின் நடவடிக்கையை உறுதிப்படுத்துமாறு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம், முதலீடு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய – பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் குறித்து பிரித்தானியா விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக பிரித்தானியா, பொருளாதார ரீதியான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட வலையமைப்பை கட்டியெழுப்பி வருவதாகவும் இவ்விடயத்தில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காலநிலைமாற்ற சவால்களைக் குறைப்பதற்கும் சூழலைப் பாதுகாப்பதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் தாம் தயார் என்றும் பிரித்தானியா அறிவித்துள்ளது.

புதியதொரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கவும் நிதிச்சேவை வழங்கல் துறையை அபிவிருத்தி செய்யவும் வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை விரிவுபடுத்தவும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

”13 ஆவது திருத்தம் தொடர்பில் எங்களுடனேயே பேச வேண்டும்”: அரசாங்கம்!

13 ஆவது திருத்தம் தொடர்பில் பிரச்சனைகள் இருந்தால் இந்தியாவுடன் பேசாது இலங்கையுடனேயே பேச வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பிலவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை என்பது இந்தியாவின் காலனித்துவ நாடு அல்ல. இதனால் பிரச்சனைகள் இருந்தால் இங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்துடனேயே பேச வேண்டும். இதனை விடுத்து இந்தியாவுடன் பேச வேண்டிய அவசியமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டன் அமைச்சர் தரிக் அஹமட் – பிரதமர் மகிந்த சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையுடன் தற்போது காணப்படும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் அவர்கள் மூன்று தினங்களுக்கு நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.

உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

சுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு நல்குதல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி துறையின் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த சந்திப்பின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

பிரித்தானிய அமைச்சரும் உயர்ஸ்தானிகரும் யாழ்ப்பாணம் விஜயம்

பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் லார்ட் தாரிக் அஹமட் இன்று காலை யாழ். வலி வடக்கு மயிலிட்டித்துறை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton கலந்து கொண்டிருந்தார்.

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட குறித்த பகுதிக்கு பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார்.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட இளைஞர் ஒருவருக்கு தச்சு வேலைக்கான இயந்திரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் லார்ட் தாரிக் அஹமட் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது முதலீடு, புலம்பெயர் மக்கள், கல்வி உள்ளிட் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையைத் தரமிறக்கியமை தொடர்பில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் மீண்டும் விளக்கம்

சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் குறிகாட்டியைப் பொறுத்தமட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழல் கட்டுப்பாடு ஆகியவற்றில் இலங்கை 5 புள்ளிகளைப் பெற்றிருப்பதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குறிகாட்டியில் இலங்கை ஐம்பதை விடவும் குறைவான நிலையிலிருப்பது நாட்டின் கடன் நிலைவரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இம்மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடையும் பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை 19 ஆம் திகதி புதன்கிழமை செலுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் இயங்கும் மூன்று முக்கிய கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ஃபிட்ச் ரேட்டிங்’ தரப்படுத்தல் முகவர் நிறுவனம் இலங்கையை ‘சிசிசி’ நிலையிலிருந்து ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்குவதாகக் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அறிவித்தது.

நாட்டின் கையிருப்பில் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளடங்கலாகப் பல்வேறு காரணங்களால் இலங்கையை ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்குவதாக ஃபிட்ச் ரேட்டிங் விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனமானது இலங்கை தொடர்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புடன் மேலும் சில காரணிகளை இணைத்து, திருத்தப்பட்ட புதிய அறிவிப்பை நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிட்டிருக்கின்றது.

அதேவேளை சர்வதேச பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை நேற்றைய தினத்திற்குள் (18 ஆம் திகதி) செலுத்தவேண்டியிருந்த நிலையில், அக்கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அப்பதிவில் ஆளுநர் இலங்கையைத் தரமிறக்கம் செய்திருக்கக்கூடிய மூன்று முக்கிய சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், மூடியின் முதலீட்டாளர் சேவை மற்றும் ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ் ஆகிய நிறுவனங்களின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குகளையும் இணைத்திருக்கின்றார்.

எனினும் வெளிநாட்டுக்கையிருப்பின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாடு பாரிய டொலர் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப்பொருட்களைக்கூட இறக்குமதி செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

எனவே மத்திய வங்கியினால் கடந்த 2021 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் கையிருப்பில் உள்ள 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதிக்காகப் பயன்படுத்துமாறும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துவதற்கு அதனைப் பயன்படுத்தவேண்டாம் என்றும் பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள்!

அரசியல் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக ஒருபுறம் வைத்து உங்கள் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் உங்களது ஆதரவினை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, வடக்கு – கிழக்கு மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை நேற்று ஆரம்பித்து வைத்து அரச கொள்கை விளக்க உரையை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

அதன்போது ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தத்தினால் காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பொதுவானதல்ல. அனைவருக்கும் எம்மால் முடிந்தளவில் நீதி, நியாயம் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர் சிலருக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய நான் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுத்திருந்தேன். அதேபோன்று 1978ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில் அதற்கான திருத்தங்களை கொண்டு வர நாங்கள் தயாராகவிருக்கின்றோம்.

யுத்தத்தினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பே முக்கிய தேவையாகவுள்ளது. சிறுவர்களுக்கு சிறந்த கல்வி, இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள், சுய தொழில்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்புக்கள், மக்களுக்கு சுத்தமான குடிநீர், விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசன வசதிகள், வாழ்வதற்குத் தேவையான வீடுகள், வைத்தியசாலைகள், நெடுஞ்சாலைகள் உட்பட மேலும் பல அடிப்படை வசதிகள் அவர்களுக்குத் தேவையாகவிருந்தது. அனைத்து சமூகத்தினருக்கும் எத்தகைய பராபட்சமுமின்றி தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவது நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக அமையும் என்பது அரசின் கொள்கையாகும்.

இதனால் இந்தப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளிடம் நான் ஓர் வேண்டுகோளை விடுகின்றேன். பல்வேறுபட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக ஒருபுறம் வைத்து உங்கள் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் உங்களது ஆதரவினை வழங்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் உரை வெறும் குப்பை ; கடும் சீற்றத்தை வெளிப்படுத்திய சம்பந்தன்

இன நெருக்கஎக்கான அரசியல் தீர்வு குறித்தோ அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தனது உரையில் எதுவும் தெரிவிக்காமையால் சீற்றமடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பஸில் ராஜபக்ஷவிடம் தமது கடுமையான ஆட்சேபனைனையை பாராளுமன்றத்தில் வைத்தே தெரியப்படுத்தினார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வழங்கிய தேநீர் விருந்துபசாரத்தையும் கூட்டமைப்பு பகிஷ்கரித்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்’என ஜனாதிபதியின் சகோதரரும் நிதிஅமைச்சருமான பஸில் ராஜபக்ஷவிடம் நேரில் கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

ஜனாதிபதியின் பேச்சை செவிமடுத்த கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கடும் சீற்றமடைந்தார். உரை முடிந்த கையோடு எழுந்து பகிரங்கமாகத் தம் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் விரும்பினார். எனினும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி கருத்து தெரிவிப்பதைத்தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நாடாளுமன்றை விட்டு வெளியே வரும்போது முன்னால் எதிர்ப்பட்ட நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் தமது கோபத்தை அவர் காட்டினார். ‘இந்தப் பேச்சு வெறும் குப்பை. உருப்படியாக இதில் எதுவும் இல்லை. இதைப்போய் அவரிடம் சொல்லுங்கள். நான் தேநீர் உபசாரத்திற்கு வரவில்லை. வந்தால் இதை நானே அவருக்கு நேரடியாகக் கூற வேண்டியிருக்கும்.

அப்படிவேண்டாம் என்பதற்காகத்தான் தேநீர் உபசாரத்தையே தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். எங்களுடைய நாட்டின் தேசிய பிரச்சினை குறித்து ஏதும் இந்தப் பேச்சில் சொல்லப்படவில்லை. இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உருப்படவே மாட்டீர்கள் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள்என்று சம்பந்தன் சீற்றத்துடன் கூறினார் என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது

“அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக ஒருசில ஆங்கில, தமிழ், சிங்கள ஊடகங்களிலும், ஒருசில தமிழ் அரசியல் தரப்புகளாலும் வெளியிடப்பட்ட ஊகங்கள்  பொய்த்தன.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசாங்கத்தின் கொள்கை நோக்கை விளக்கி பாராளுமன்றத்தில் ஆற்றிய நீண்ட உரையில், தேசிய இனப்பிரச்சினையை, பொருளாதார பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் தனது கொள்கை மாறவில்லை என்பதை தெளிவாக கோடிட்டு காட்டினார்.

ஜனாதிபதியின் உரை நிறைவு பெற்ற பின், முன்னாள் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் எம்பி மிகவும் சலிப்புடனும், ஏமாற்றத்துடனும் இருந்ததை, அவருக்கு சமீபத்தில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன். அது எனக்கு மிகுந்த மனக்கவலையை தந்தது.

“ஜனாதிபதி இனப்பிரச்சினையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்க திட்டமிடும் டிஜிடல் தொழில்நுட்ப கேபிள்களை பற்றி அதிகம் பேசினார். உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” என அவ்வேளை என்னுடன் உரையாடிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேலியாக தெரிவித்தார், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையை அடுத்து கருத்து கூறிய  மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

“அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட ஊகங்கள் பொய்த்தன. கொழும்பின் ராஜதந்திர சமூகம் தவறாமல் வாசிக்கும் பிரபல வார இறுதி ஆங்கில பத்திரிக்கையின் அரசியல் ஆரூடம் பொய்த்தது.

அப்பத்திரிக்கை தனது ஏற்புடைமையை இழந்தது என்றும், அதை நம்பிய ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும் ஏமாந்தனர் என்றும், சற்று முன் என்னுடன் உரையாடிய பிரபல மேற்கு நாட்டு ராஜதந்திரி சொன்னார்.

“தேசிய இனப்பிரச்சினை” இருப்பதாக ஏற்க ஜனாதிபதி தன் உரையில் தெளிவாக மறுக்கிறார். இந்நாட்டில் நிலவும் பிரச்சினைகளை “பொருளாதார” பிரச்சினையாக மட்டுமே அவர் இருக்கமாக பார்க்கிறார். மக்களுக்கு குடிநீர், நீர்பாசனம், வீடுகள், நெடுஞ்சாலைகள் ஆகிய வசதிகளை வழங்குவதே, நல்லிணக்கத்துக்கு அடிப்படை என்பதுவே தனது அரசாங்கத்தின் நல்லிணக்க கொள்கை  என ஜனாதிபதி கூறி முடித்தார்.

மலையக தமிழர்கள், முஸ்லிம் ஆகிய இலங்கையின் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் விசேட பிரச்சினைகள் பற்றிய தீர்வுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அடுத்த மூன்றாண்டுக்கான கொள்கை உரையில் எதுவும் கூறப்படவில்லை.

அதிகார பரவலாக்கல், 13ம் திருத்தம் ஆகிய விவகாரங்கள் பற்றி ஜனாதிபதி ஒரு வார்த்தையும் கூறாமல் இந்நாட்டு தமிழ் பேசும் மக்களை ஏமாற்றி உள்ளார் என நான் நினைக்கிறேன்.  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தனது அரசினால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு வடகிழக்கு பிரதேசங்களில் இருந்து  மக்களால் தெரிவு செய்யப்பட்ட  எம்பீக்கள் “ஒத்துழைப்பு” வழங்க வேண்டும் என்பதுவே அவரது அதிகபட்ச கோரிக்கையாக இருந்தது.

ஜனாதிபதியின் உரை நிறைவு பெற்ற பின், முன்னாள் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் எம்பி மிகவும் சலிப்புடனும், ஏமாற்றத்துடனும் இருந்ததை, அவருக்கு சமீபத்தில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன். அது எனக்கு மிகுந்த மனக்கவலையை தந்தது.

“ஜனாதிபதி இனப்பிரச்சினையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்க திட்டமிடும் டிஜிடல் தொழில்நுட்ப கேபிள்களை பற்றி அதிகம் பேசினார். உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” என அவ்வேளை என்னுடன் உரையாடிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேலியாக தெரிவித்தார்.

அதேவேளை தான் நியமித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத குழுவினால் எழுதப்படும் புதிய அரசியலமைப்பிற்கான வரைபை தனது அமைச்சரவையில் சமர்பித்து, அதன்பின் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கூறினார். இந்த புதிய  அரசியலமைப்பு வரைபில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது கானல் நீராகவே இருக்கும் என்பதை ஜனாதிபதியின் உரை கோடிட்டு காட்டுவதாகவே நான் நினைக்கிறன். ” என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கோட்டாவின் உரையில் ஏமாற்றம் : தேநீர் விருந்துபசார நிகழ்வினை புறக்கணித்த கூட்டமைப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நேற்று வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசார நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சனை, தீர்வு விடயம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அத்தோடு தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து எவ்வித அறிவிப்பையும் ஜனாதிபதி வழங்கவில்லை.

இந்நிலையில் குறித்த தேநீர் விருந்துபசார நிகழ்வினை கூட்டமைப்பு புறக்கணித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

வெள்ளியன்றும் விவாதம் இடம்பெறும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனம் தொடர்பிலான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தினை வெள்ளிக்கிழமையும் நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தலைமையில் இன்று (18) முற்பகல் ஆரம்பமாகியது.

ஜனாதிபதியால் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  2022ஆம் ஆண்டின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட்டம் பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற குழு அறை 01இல் இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனம் தொடர்பிலான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தினை ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்கள் நடத்துவதற்குசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலர் விவாதத்தின் போது கருத்து தெரிவிக்க தயாராகவிருப்பதால் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமையையும் விவாதத்திற்காக ஒதுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்கள் இதன்போதுபிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய சபாநாயகருக்கு எடுத்துரைத்து 21ஆம் திகதி வெள்ளிக்கிழமையையும் விவாதத்திற்காக ஒதுக்கிக் கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

‘எண்ணெய் தாங்கிகள் மீண்டும் நாட்டிற்கு’ எனும் தொனிப்பொருளில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெளிவுபடுத்தினார்.

குறித்த கூட்டத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பசில் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால த சில்வா, விமல் வீரவங்ச, மஹிந்த அமரவீர உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் ஷானிகா கொபல்லவ, பிரதமரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.