29ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம்?

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச அதிகாரிகளைப் புறக்கணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரச அதிகாரிகளின் தொழிற்சங்க ஒன்றியங்களின் கூட்டமைப்பு தெரிவித்தள்ளது.

அரச அதிகாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் முன்வைக்கப்பட்ட எழுத்து மூல கோரிக்கைக்கு இது வரையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அதன் காரணமாக எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் எங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் நாடு தழுவி ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

Posted in Uncategorized

சட்டத்தை மீறாது நினைவேந்துவதற்கு எமக்கு உரிமையுண்டு – ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் நிரோஷ்

சட்டம் ஒழுங்கை மீறாத வகையில் நினைவேந்துவதற்கு மக்கள் அச்சப்படத்தேவையில்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான   தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின் பின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் பிரதிநிதிகளான எமக்கு எதிராக பொலிஸ் நிலையங்களால் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ் வழக்குகளில் மதகுருக்கள், சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் பொலிசார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அச்சுவேலி பொலிசாரினால் எனக்கும் உப தவிசாளருக்கும் எதிராகவும் வழக்கு இல (AR 1577/21) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ் வழக்கில், குற்றவியல் சட்டக்கோவை 106 இன் கீழும் பயங்கரவாதத் தடைச்சட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் மீறுகின்றோம். தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளை நினைவு கூறவுள்ளோம் எனவும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

இதனை சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, திருக்குமரன், மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரனிகள் குழாம் மறுத்திருந்ததுடன் அரசியலமைப்பின் பிரகாரமாக நினைவேந்தல் உரிமையினை மறுக்கக் கூடாது எனவும் மன்றில் கேட்டுக்கொண்டது. அதேவேளை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் இவ்விடயத்தினை அணுகமுடியாது எனவும் தெரிவித்தது.

இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய கௌரவ நீதிமன்றம், குற்றவியல் சட்டக்கோவையின் மேற்படி சரத்தின் பிரகாரம் குற்றம் இழைக்கப்பட்டதற்கான வலுவான சாட்சியங்கள் இணைக்கப்படவில்லை என்றும் அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவு கூர்வதற்கான உரிமையினை மறுக்க முடியாது என்றும் ஏற்கனவே வலுவில் உள்ள சட்ட ஏற்பாடுகளையும் வர்த்தமானி அறிவித்தல்களையும் சகலரும் கடைப்பிடிக்கவேண்டியவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டத்தினை மீறினால் பொலிசார் கைது செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்கத்தின் கீழ் நினைவேந்துவது தடைசெய்யப்படவில்லை.

எனவே சட்டத்தை மீறாத வகையில் நாம் நினைவேந்தலைச் செய்ய முடியும். எமது மக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மீறிவிட வேண்டும் என்று செயற்படுபவர்கள் நினைவு கூறும் சுதந்திரத்தினைக் கூட அடக்கியாள வேண்டும் எனச் செயற்படுகின்றனர். அவற்றுக்கு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை போன்ற சிறிய நாட்டில் வருமானத்தை மீறிய மிகவும் பெரிய தொகையை, ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் பாதுகாப்புக்காக ஒதுக்குகின்றது. இதுவே இலங்கை தொடர்ச்சியாக பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகுவதற்கு முக்கிய காரணமாகும்.

இதேவேளை அரச சேவையாளர்கள் நாட்டிற்கு சுமை  என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையாக படைத் தரப்பே சுமையாகும்.

ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சி செய்வதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்புக்கும் இராணுவத்தின் வாக்கு வங்கிக்காகவும்தான் நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள்.

மேலும், அரச சேவையாளர்களில் நிபுணத்துவம் கொண்டவர்களை தவிர்த்து ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகளை அமைச்சின் செயலாளர்களாகவும் பணிப்பாளர்களாகவும் நியமித்து, நிபுணத்துவ அரச சேவையாளர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றமையினால், இன்று பல அமைச்சுக்களில் இருந்து நிபுணர்கள் பலர் தாமாக பதவி விலகியுள்ளார்கள்.

இதேவேளை நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு தடுக்கின்றது.

குறிப்பாக உலக பரப்பிலுள்ள இலங்கை தமிழர்கள், சொந்த மண்ணின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் முதலீடு செய்வதற்கு முன்வந்தால், அவர்களை அச்சுறுத்துகின்றனர். இதனால் அவர்களின் முதலீடுகள் தடுக்கப்படுகின்றது.

மேலும் சுற்றுலாப்பிரயாணிகளாக அதிகளவு நாட்டுக்கு வருகை தருகின்றவர்கள் புலம்பெயர் தமிழர்களாவர். பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள அவர்களினால்தான் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வெளிநாட்டு அமைச்சின். கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன

சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.

அவ் விடயம் குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவில் செயற்படுத்தப்படுகின்ற மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (ஈ-டாஸ்) ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக, கடந்த வாரத்தில் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டு, சேவைகளை வழங்குவதில் நீண்ட காலத் தாமதம் ஏற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் உள்ள கிளை சான்றளிப்பு முறைமையும் பாதிக்கப்பட்டு ள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்தப் பிரச்னைகளை சீர் செய்யும் முகமாக அமைச்சின் தொழில்நுட்பக் குழு செயற்பட்டு வருகின்றது. எனவே இந்த சூழ்நிலையில்,  திங்கட்கிழமை (22.11.2021) முதல் தினசரி வருகை தரும் 150 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் சேவைகளை வழங்க முடியும்.

இந்தப் பிரச்னைகள் சீர் செய்யப்பட்டவுடன் சான்றிதழ்கள் / ஆவணங்களின் சான்றளிப்புக்கான சாதாரண சேவைகள் வழங்கப்படும். கணினிப் பராமரிப்பு சார்ந்த பணிகள் நிறைவடைந்தவுடன், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

மேலதிக தகவல்களுக்காக 011- 2338812 அல்லது dgcons@mfa.gov.lk மூலம் கொன்சியூலர் விவகாரப் பிரிவை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Uncategorized

டிசம்பர் 01ம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி

கொவிட் தடுப்புசிகளின் இரண்டு டோஸ்களையும் எடுத்துள்ள, விசா வைத்திருப்பவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள், விசா வைத்திருப்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் எல்லை, கடந்த ஆண்டு மே மாதம் மூடப்பட்டது, ஆனால் நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான குழுவினருக்கு மட்டுமே அந்நாட்டினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Posted in Uncategorized

தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களத்தின் கொள்கை – ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் 

தன் இனத்தைச் சேர்ந்த போராளிகள் தியாகிகள், தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களப் பெரும்பான்மையின் கொள்கை. இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு அடிக்கடி மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தடையுத்தரவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

தடைசெய்யப்பட்ட இயக்கமாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மரணித்தமை சம்மந்தாகவும், மற்றும் இயக்க உறுப்பினர்கள் மரணித்தமை சம்மந்தமாக மாவீரர் நினைவேந்தல் நடத்த இருப்பதாகவும் 2021.11.21ம் திகதி தொடக்கம் 201.11.27ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடாத்துவதாகவும், வருகின்ற 26ம் திகதி ஞாபகார்த்த தினம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், குறித்த திகதியையொட்டி முதியோர் சிறுவர் இல்லங்களுக்குச் சென்று இந்தப் பெயரை வைத்து உதவி செய்ய உள்ளதாகத் தகவல்கள் உள்ளதாகவும், அவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றால் அதற்கு எதிரானவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையாலும் இந்த நிகழ்வைத் தடுக்கும் முகமான தடையுத்தரவு பிறப்பிக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் மன்றுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள் உட்பட்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரதேசத்தில் வசிக்கும் நான் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஐவருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்களிடம் நியாயத்தை நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். தங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் அரசுக்கெதிராகப் போராடி எத்தனையோ அழிப்புகளை மேற்கொண்டார்கள் ஆனால் அவர்கள் இன்று தியாகிகள் என்ற பெயரில் நினைவேந்தல்கள் நடத்த முடியும். ஆனால் தமிழ் மக்களின் அடக்குமுறைக்கு எதிராக நீதியான முறையில் போராடிய எமது உறவுகளை நாம் நினைவு கூர முடியாது.

மாவீரர் தினமென்பது 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலின் பின்னர் அனுஷ்டிக்கப்படுகின்ற விடயம் அல்ல போராட்ட ஆரம்ப காலத்தில் 1989களில் இருந்தே உயிர்நீத்த உறவுகளை, பிள்ளைகளை எண்ணி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற விடயம். இதற்கான தடை என்பது தமிழ் மக்களுக்கு எதிரான தடையாகவே பார்க்கப்படும்.

தன் இனத்தைச் சேர்ந்த போராளிகள் தியாகிகள், தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களப் பெரும்பான்மையின் கொள்கை. இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு அடிக்கடி மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது. இதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எமது மக்களின் இவ்வாற விடயங்களைத் தட்டிக் கேட்பதற்கு அரசோடு ஒட்டிக்கொண்டு அபிவிருத்தி அரிச்சுவடி பேசும் அரசியல்வாதிகளுக்கு வக்கில்லை. வெறுமனே கட்டிடங்களும், வீதிகளும் எமது உணர்வுகளைத் தீர்மானதித்து விடும் என்று நினைத்து விட்டார்கள். இதற்கெல்லாம் எமது மக்களே காரணம். நாம் எமது நிலைமைகளில் இருந்து விலகியமையே இவற்றுக்குக் காரணம்.

எமது நாட்டில் மாத்திரம் விசித்திரமான கொரோனா தொற்று இருக்கின்றது. அமைச்சர்கள் பெருமளவான மக்களைத் திரட்டி நடாத்தும் நிகழ்வுகளில் எவ்வித பரவலும் ஏற்படாது. அதற்கு பொலிஸார் பாதுகாப்பும் வழங்குவார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்டவர்கள் சேர்ந்து நடத்தும் நினைவேந்தல்களின் போது மாத்திரம் கொரோனா பரவும். கொரோனா தொடக்கம் மக்களின் வாழ்வாதாரம் வரை இந்த அரசாங்கம் அனைத்திலும் அரசியலைக் கலந்து நாட்டை நாசமாக்குகின்றது என்று தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வர்த்தமானி வெளியீடு!

நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியை பேண அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

ஒரு மாத காலத்துக்கு அமுலாகும் வகையில் ஒவ்வொரு மாதமும் 22ஆம் திகதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தன்மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் பூஜித் ஜயசுந்தர

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையைத் செய்யத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை பிரதிவாதி முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாக பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வழக்கின் ஆரம்ப சமர்ப்பணங்களை முன்வைக்க முறைப்பாடு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் ்திகதி உயிர்த்த ஞாயிறு சஹ்ரான் ஹசீமின் தலைமைத்துவத்திலான தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பினால் நாட்டில் 08 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றிருந்த போதும் இலங்கைக் குடியரசின் பொலிஸ் மா அதிபராகச் செயற்பட்டு அதனைத் தடுக்கும் கடமையை அலட்சியமாகப் புறக்கணித்ததன் மூலம் இலங்கை தண்டனைச் சட்டத்தின் 102ஆவது பிரிவின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்..

பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக 2019 ஆம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறையான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களும், 1,215 சாட்சிகள் முன்னிலையாகியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

பின்னர் மேலதிக விசாரணைக்காக வழக்கு நாளை தினம் (23) வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 12 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று வரையில் 7 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

அதன்படி, இன்று சற்று முன்னர் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

அதனடிப்படையில் வரவு செலவு திட்ட ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது.

வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

மாகாண சபைகளை எலும்புக்கூடுகளாக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. 13 ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அதிகாரங்களுடன் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை(19) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்தியாவுடன் இலங்கையின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதனை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இங்கு அழகாக தெளிவு படுத்தினார்.

எனவே அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தினால் இந்தியாவுடனான நட்புறவை மேலும் நெருக்கமாக்க முடியும். இந்தியாவின் முழுமையான ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும்.

எனவே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி அரசாங்கத்தை கோருகின்றோம். அதேவேளை 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

மாகாணசபையை எலும்புக்கூடுகளாக நாம் ஒரு போதும் ஏற்க மாட்டோம். 13 ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அதிகாரங்களுடன் மட்டுமே மாகாணசபையை நாம் ஏற்போம்.

மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை அரசாங்கம் மீளப்பெற்றுவிட்டது.

எனவே அந்த அதிகாரங்களை அரசாங்கம் மீளவும் மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும். அதனடிப்படையிலேயே தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்றார்.