ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 16 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில், பிரதான வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

சில பொலிஸ் குழுக்களை நியமித்து, அவ்வாறு செயற்பட வேண்டாம் என அறிவுறுத்திய போதிலும், அறிவுறுத்தல்களை பின்பற்றாது ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களின் 10 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிரதான வீதிக்கு சேதம் ஏற்படுத்தியமை, பெருமளவான மக்களை ஒன்றுகூட்டியமை, பெருந்தெருக்கள் சட்டத்தின் கீழ் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொது அமைதி என்ற பெயரில் ஐனநாயகப் போராட்டங்களுக்கு அடக்குமுறையா? ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

வடக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ்,நாட்டில் பொது அமைதியைப் பேணுவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டம் 12 இல் தனக்குள்ள அதிகாரத்தை கொண்டு இராணுவத்தை களம் இறக்குமாறு ஐனாதிபதி கோட்டாபய கூறியதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதியின் அறிவிப்பு பொது அமைதி என்ற பெயரில் நாட்டில் நடைபெறுகின்ற பொது மக்களின் ஐனநாயக போராட்டங்களை இராணுவத்தின் இரும்புக்கரத்தின் மூலம் அடக்குமுறைக்குள் கொண்டுவருவதற்கான செயற்பாடா என்ற சந்தேகம் நியாயம் கேட்டு போராடும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மக்களின் ஐனநாயகப் போராட்டங்களுள் விசமிகள் ஊடுறுவி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள் அவதானமாக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இராணுவத்தை வீதிக்கு இறக்குவது கோட்டாபய ஆட்சியில் ஒரு புதிய விடையம் இல்லை காரணம் ஏற்கனவே நாட்டில் வீதி எங்கு பார்த்தாலும் சீருடை, ஆயுதம் தரித்த இராணுவம் தான் வீதித் தடைகளை போட்டு நிற்கின்றார்கள். அவ்வாறான நிலையில் மேலதிகமான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்படுகிறது என்றால் அது தமக்கு வாக்களித்த மக்களின் ஐனநாயகப் போராட்டங்களை ஆயுத முனையில் அடக்குவதே ஆகும்.

ஆனால் ஐனாதிபதியின் அறிவிப்பு நியாயம் கேட்டு ஐனநாயக வழியில் வீதியில் போராடும் மக்களை அடக்கி அவர்களது குரல் வளையை நசுக்குவதே ஆகும்.

வடக்கில் விவசாயப் பண்ணைகள் படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார்.

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

மேலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமெனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை- மத்திய அரசிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், தமிழக மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1ம் திகதி கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்திருந்தார். இது முதல் முறையல்ல. தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதோடு, கைது செய்வது படகுகளை சேதப்படுததுவது எனத் தொடர்ந்து னொண்டுதான் இருக்கின்றது.

இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம்,

கடந்த ஓகஸ்ட் 1-ம் நாள் அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒன்பது மீனவர்களும் இந்தத் தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாகத் தப்பியுள்ளனர்.

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்.

இந்தச் சம்பவம், தமிழ்நாட்டில் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்ய வேண்டியது நமது கடமையாகும்.

எனவே, இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

கொதித்தெழுந்த ஜீவன் ரிஷாட்டுக்கு எதிராக கையை நீட்டினார்

ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் கேவலமான அரசியலை செய்து வருகிறார்கள். 18 வயதோ, 14 வயதோ 40 வயதோ யாருக்கு தவறு நடந்தாலும், தவறு தவறுதான் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (04) நடைபெற்ற மூன்று சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் இன்று (04) தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) , வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) , இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது.

8 வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் ரிஷாட் வீட்டில் நடந்துள்ளதாக வாக்குமூலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரிஷாட்தான் இதற்கு காரணமென நான் கூறவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவிட்டமைக்கு அவரும் ஒரு காரணம் என்றார்.

பாதிக்கப்பட்ட சிறுமி ரிஷாட் வீட்டில் எழுதியதாகக் கூறுகிறார்கள். இதெல்லாம் பொய்யென தெரிவித்த ஜீவன் தொண்டமான், இதுபோன்ற விடயங்களை சும்மா வேடிக்கைப் பார்க்கப்போவதில்லை என்றார்.

இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கடுமையான தண்டனை வழங்குவதன் ஊடாகவே, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தவிர்க்க முடியும். மேலும் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையும் தண்டிக்க வேண்டும் என்றார்.

18 வயது வரையில் இலவசக் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமெனவும் இதன்போது கல்வி அமைச்சரிடம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை ஒன்றையும் விடுத்தார்.

Posted in Uncategorized

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவு

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல போவதில்லை என சட்டமா அதிபர், கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

கொழும்பில் வசித்த 11 இளைஞர்களை கடத்தி காணாமலாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கின் 14 ஆவது பிரதிவாதியாக கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதி தமது திணைக்களம் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார மன்றுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அன்றைய தினத்தில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார தெரிவித்துள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாம், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கும் உத்தரவை, எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி, வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும் சந்தர்ப்பத்திலேயே மன்றுக்கு அறிவிக்குமாறு அரச சிரேஷ்ட சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பதிவு தொடர்பான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் வாக்காளர்கள் தமது பெயர்களை பதிவு செய்வதற்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் http://www.elections.gov.lk என்ற இணைய தளத்தில் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் 18 வயதை பூர்த்திசெய்தவர்கள்; தகுதியான இலங்கை பிரஜைகள் வாக்காளர் இடாப்பில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

வாக்காளர பட்டியலில், பெயர் பதிவுகளில் உள்ள குறைபாடுகள் அல்லது அச்சுப் பிழைகளை திருத்தல். 2020 ஆம் ஆண்டு தேர்தல் பட்டியலில் பதிவு செய்யாத வாக்காளர்களை பதிவு செய்தல் போன்றவற்றை இதன் கீழ் மேற்கொள்ள முடியும்..

eservicesShelection.gov.lk என்ற மின் அஞ்சல் முகவரி ஊடாக இது தொடர்பான பிரச்சினைகளை முன்வைக்க முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு

ரிஷாட் பதியுதீனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆளும்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் ரிஷாட்பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமி தொடர்பான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

கொத்தலாவல சட்டமூலம்: ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள திருத்தங்கள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழு தமது நிலைப்பாட்டை கடிதமொன்றின் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

அந்த சட்டமூலத்தில் நான்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாகும்.

அந்த திருத்தங்களாவன…

1. கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வாகத்திலிருந்து விடுபடக்கூடாது

2. பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் அல்லாத பட்டத்திற்கான விண்ணப்பதாரர்களை இணைத்துக்கொள்ளும் போது வௌிப்படைத்தன்மையுடனான Z புள்ளியை அடிப்படையாகக் கொண்ட நீதியான முறைமை தொடர்பில் சட்டமூலத்தில் தௌிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்

3. தொழில் மேற்கொண்டு ஈட்டும் வருமானத்தில், மீள செலுத்துவதை அடிப்படையாகக் கொண்ட கடன் வழங்கப்படல் வேண்டும்

4. நிர்வாக சபையில் சிவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாகக் காணப்படல் வேண்டும்

நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா கொடிசீலை வடிவமைப்பாளர்களிடம் காமாட்சி கையளிப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03.08.2021) காலை இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.