ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை கண்டனத்துக்குரியது வேலிக் கட்டைக்கு ஓணான் சாட்சியா? ரெலோ கேள்வி

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க தேவையில்லை. சில சரத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்வதன் மூலம் சட்டத்தை திருத்தி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நாம் நிராகரிக்கிறோம் என ரெலோ கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவிக்கையில்,

“சட்டவல்லுனர்கள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் ஏன் சர்வதேச நாடுகள் உட்பட பலதரப்புடக்கள் இந்த சட்டத்தினால் ஏற்பட்ட கடும் மக்கள் விரோத போக்கினை கண்டித்து இதை நீக்குமாறு வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே வீழ்ந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என புதிய நிதி அமைச்சர் நாட்டுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
இந்த சட்டத்தை நீக்காது விட்டால் ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகை வழங்க பட மாட்டாது. எமது ஏற்றுமதியும் அந்நிய செலாவணியும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அப்படியான அபாய நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும் பரிந்துரையை ஜனாதிபதி ஆணைக்குழு வழங்குவது எதற்காக?

ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கத் தேவையில்லை என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது வேலிக் கட்டைக்கு ஓணான் சாட்சி யாக அமைவது போல் இருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான். இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தினால் எமது தமிழினம் சொல்லொணாத கஷ்டங்களை அனுபவித்து வந்திருக்கிறது. இன்றும் பல தசாப்தங்களாக விசாரணையோ, வழக்குகளோ, பிணையோ இன்றி பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலம்மிக்க இளைய சமுதாயம் இந்த நாட்டை விட்டு குடி பெயர்வதற்கும் இன குடிப்பரம்பலில் சிதைவை ஏற்படுத்துவதற்கும் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

சட்டவிரோதமான கைதுகள், காலவரையறை அற்ற தடுப்பு, பிணை வழங்காமை, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை என்று அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவே அமைந்திருக்கிறது. நியாயமான எமது போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து எமது இளம் சமுதாயத்தை வகை தொகையின்றி கைது செய்ததோடு சித்திரவதைக்கும் உள்ளாக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக எம்முடைய போராட்டத்தை தடுக்கவோ நிறுத்தவோ முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று தமது தோல்விகளை மறைப்பதற்கும் தமக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை நடத்த முற்படுபவர்களை கைது செய்வதற்கும் அரசியல் பழிவாங்கல்களை அரங்கேற்றுவதற்குமே இந்த சட்டம் பயன்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள்.

ஜனநாயக விழுமியங்களை மதிக்கப்படாத போற்றப்படாத இந்த அரசாங்கத்தில், இந்த சட்டத்தில் சிறிய மாற்றங்களின் மூலம் ஜனநாயகத்தை பேணிவிடலாம் என்று ஜனாதிபதி ஆணைக்குழு சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அப்பாவி மக்களை படுகொலை செய்து நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள். அதேவேளை தம்முடைய இனத்திற்காகவும் மக்களுக்காகவும் நியாயமாக குரல் கொடுப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதற்கு வழிவகுக்கும் அரசாங்கத்திற்கு பயங்கர வாத தடுப்பு சட்டத்துக்கு பரிந்துரைக்கும் மாற்றங்கள் எந்த விதத்தில் மக்களுக்கு நியாயத்தை பெற்றுத்தரும் ?

இதே அரசாங்கத்தில் பதவி வகித்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் கடந்த காலங்களில் அதே சட்டத்தின் கீழ் ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டதை அல்லது தடுத்து வைக்கப்பட்டு வருவதை இந்த நாடு நன்கு அறியும்.

தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிலும் அராஜகத்தைத்தையும் சர்வாதிகாரத்தையும் நிலை நிறுத்த பயன்படும் இந்த சட்டத்தில், எந்த மாற்றங்களும் இதன் அடிப்படை நோக்கத்தை சீர்செய்து விடப்போவதில்லை. ஆகவே முற்றாக இந்த சட்டமூலம் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

அனைத்து தரப்பினரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒழிப்பதற்கு ஒருமித்து செயலாற்ற கோருகிறோம். அதிகாரங்களுக்கும் அற்ப சலுகைகளுக்காகவும் இந்த சட்டத்திற்கு நொடர்ந்தும் ஆதரவு வழங்குபவர்கள் அறிந்தோ அறியாமலோ உங்களுக்கும் உங்கள் எதிர்கால சந்ததிக்கும் சிதை மூட்டுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

யாழிற்கு புதிய இந்தியத் துணைத் தூதுவர் நியமனம்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்தியத் துணைத் தூதுவராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் கண்டியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தற்போது கடமையாற்றி வரும் நிலையில் விரைவில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இதேவேளை, இதுவரைகாலமும் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவராக ஆர். பாலச்சந்திரன் சிறப்பாக கடமையாற்றி வந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்க குழு நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபரினால் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் இன்று (22) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைத்து கலந்துரையாடி இருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பிலான நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பதற்காக பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

நேற்றைய தினம் (21) நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, 25 ஆண்களும் மற்றும் 17 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,959 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 290,705 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 264,755 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

’பாலம் புனரமைக்கப்பட்டால் வெளிச்சம் ஏற்படுத்தப்படும்’ ரெலோ விஜிந்தன்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்படாமல், மின்சாரம் மூலமோ அல்லது சூரிய மின்கலம் மூலமோ வெளிச்சம் ஏற்படுத்துவது சாத்தியமானது அல்ல என, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வட்டுவாகல் பாலத்தில் வெளிச்சம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ள போதிலும், கடந்த பத்து ஆண்டுகளாக பாலம் புனரமைப்பதற்கான திட்டமிடல்கள், முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் ஆனால் புனரமைப்பு முயற்சிகள் இதுவரை தொடங்கப்படவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில், பிரதேச சபை வட்டுவாகல் பாலத்துக்கு வெளிச்சம் பொருத்த வேண்டும் என்ற செயற்பாடு முன்னெடுக்க முடியாது உள்ளதாகத் தெரிவித்த அவர், காரணம், வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்பட்டாலே வெளிச்சம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியுமென்றும் கூறினார்.

Posted in Uncategorized

ஹக்கீம் – ரிசாத் தவிர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘ஆளுங்கட்சி’

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று (20) தோற்கடிக்கப்பட்டது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்ததுடன், சிலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரேரணைக்கு ஆதரவாக தமது வாக்கினை பதிவு செய்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு எடுத்திருந்த உத்தியோகபூர்வ தீர்மானத்திற்கு அமையவே தலைவர் ஆதரவாக வாக்களித்ததாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

எனினும், ஏனைய 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று பாராளுமன்றத்தில் பிரசன்னமாகாமல் இருந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளவில்லை.

எனினும், அவரது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

கட்சியின் தலைவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக உத்தியோகபூர்வமாக இந்த பிரேரணை குறித்து ஆராயப்படவில்லை என்ற போதிலும், குறித்து உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியிலேயே பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவர் சட்டத்தரணி என்.எம். சஹீட் தெரிவித்தார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரட்டை பிரஜாவுரிமை சரத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முஷாரப் முதுநபீனும் நேற்றைய வாக்களிப்பின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அரசுடனேயே பேசித்தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தாம் இந்த தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் கூறினார்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் எந்தவித விடயமும் பேசப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் -ரெலோ தலைவர் செல்வம் எம்பி வலியுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) வீட்டில் வேலை செய்து வந்த 16 வயது ஹிசாலினி எனும் மலையகத்தை சேர்ந்த சிறுமி அண்மையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மரணம் அடைந்திருந்தார்.

அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள். அதே வேளை இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் செல்வதாக பொது மக்கள் குற்றம் சுற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,

“மலையகத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி ஹிசாலினியின் மரணத்தில் பலவாறான நெஞ்சை உலுக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பெண்கள் அமைப்புகள் பொது அமைப்புகள் என்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் இந்த நேரத்தில், அரசாங்கம் இனியும் மௌனம் காக்கக் கூடாது.

குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டு வேலையில் இருந்த சிறுமியின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அதே நேரம் இந்த மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்தவர்கள் எந்த உயர்ந்த நிலைகளில் இருந்தாலும் அவர்கள் உரிய முறையில் விசாரிக்கப் பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் இந்த நாட்டில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற குற்றச் செயல்களை தடுக்க முடியும்” என்றார்.

ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 27ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிரேஸ்ட தலைவர்கள் சிலர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொள்ளவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணக்கட்டுப்பாடு விவகாரம் ; இராணுவ தளபதியின் அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் ஜூன் 10 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டார்.

பின்னர், ஜூலை 14 முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி அத்தியாவசிய கடமைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ் மற்றும் ரயில்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், இந்த முடிவு எடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் ஓகஸ்ட் முதலாம் திகதிவரை வரை நிறுத்தப்பட்டன.

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகள் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் இயங்கும் என்றாலும், மறு அறிவிப்பு வரும் வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஹிருணிகா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கடந்த மாதம் பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருந்தார்.

இந் நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வியான ஹிருணிகா பிரேமச்சந்திர, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

துமிந்தா சில்வாவுக்னா பொது மன்னிப்பு முடிவு நியாயமற்றது மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2016 செப்டெம்பர் மாதம் மரண தண்டனை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.