வடக்கு மாகாணத்திற்கு தடுப்பூசிகள் வழங்க ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் கொரோனா நிலைமைகளில் கட்டுப்பாட்டை ஏற்படு்த்த உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை விரைவு படுத்த ஆளுநர் நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாகாண சுகாதார அமைச்சுக்கு வளங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் வடக்கு ஆளுநர் நிர்வாகத்தின் கவனத்திற்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

1) பி சி ஆர் இயந்திரங்கள்
2) தடுப்பூசி மருந்துகள்

போன்றன மிக பிரதானமானவையாகவும் அடுத்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சரியான முறையில் அவர்கள் ஓரளவு திருத்திப்படும் வகையிலான அடிப்படை வசதிகளை பேணுதல்.

பி சி ஆர் இயந்திரங்கள் பற்றாக்குறை வடக்கு மாகாணத்தில் தொற்றாளர் பாரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட இயந்திரத்திற்கு இராசயன மருந்து முடிவடைந்தமையால் பரிசோதனை தடைப்பட்டுள்ளது. வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் இயந்திரங்கள் பற்றாக்குறை ஆரோக்கியமானதாக இல்லை.

வடக்கு மாகாணத்திற்கு ஓரளவு முதல் கட்டமாக சமூக தொடர்பாடல்களுடன் உள்ள 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் அதனை விரைவு படுத்த வேண்டும்.

தற்போது வடக்கு மாகாண நிர்வாகம் ஆளுநரின் பொறுப்பில் இருப்பதன் காரணமாக விரைந்து நடவடிக்கைகளை ஆளுநர் நிர்வாகமே எடுக்க வேண்டும்.

உரிய செயற்பாட்டை வடக்குமாகாண மக்கள் ஏதிர்பார்க்கின்றனர்.

சபா குகதாஸ்
முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினர்.

ரெலோ இளைஞர் அணித் தலைவர்.

Posted in Uncategorized

‘பரிசோதனை உபகரணங்கள்’ வழங்குமாறு இந்திய, பிரித்தானியவிடம் ரெலோ தலைவர் செல்வம் எம்பி கோரிக்கை

வன்னி மாவட்ட வைத்தியசாலைகளிற்கான பரிசோதனை உபகரணங்கள் வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்னிமாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தினால் உடனடியாக தொற்றாளர்களை அடையாளம் காண முடியாமல் இருக்கின்றது.

குறிப்பிட்ட அளவான பரிசோதனைகளை செய்வதற்கே வசதி இருப்பதால் அதன் முடிவுகள் வருவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுப்பதனால் தொற்றுக்கள் அதிகமாக பரவுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது.

இந்த தொற்று பரிசோதனைக்கான உபகரணங்கள் இல்லாமையும் அவற்றிற்கான பற்றாக்குறையும் இருப்பதனாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்யவேண்டும.

எனவே காலம் தாழ்த்தாமல் தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்கும் உடனடியாக முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கும் வன்னி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை தந்துதவுமாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமும் உடனடியாக இந்த பரிசோதனை உபகரணங்கள் வன்னி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சிறப்புரிமையடிப்படையில் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் அபாய நிலை வருவதற்கு முன்னதாக இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் வன்னி மக்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்று தனது கோரிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது: பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவுகின்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விசேட ஊடக அறிக்கை ஒன்றினூடாக பாதுகாப்பு செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர்களூடாக நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் பாதுகாப்பு தொடர்பில் நான்காம் நிலை தரத்தின் கீழ் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

ராஜகிரிய – களனி புதிய பாலத்திற்கான நெடுஞ்சாலை ஒப்பந்தம் சீனாவுக்கு

அத்துருகிரிய வெளிச்சுற்று அதிவேக பாதையை இணைக்கும் வகையில் ராஜகிரிய ஊடாக களனி புதிய பாலத்திற்கான நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்குரிய ஒப்பந்தத்தை சைனா ஹாபர் என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மூன்று வருடங்களுக்குள் இந்த செயல் திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று 25 இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இந்த பாதையை மேலும் 15 வருடங்களுக்கு இயக்கி லாபம் ஈட்ட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 18 வருடங்களின் பின்னர் இந்த நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் குறிப்பிட்ட நெடுஞ்சாலையை ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு;

05. அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிப் பாலத்தையும் தொடர்புபடுத்தி தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலைக் கட்டுமானம்

அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிப் பாலத்தையும் தொடர்புபடுத்தி தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலையை, நிர்மாணித்து பராமரித்து ஒப்படைத்தல் (BOT) முறைமையின் அடிப்படையில் மேற்கொள்வதற்காக 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலீட்டுக் கருத்திட்டத்திற்காக குறித்த முதலீட்டாளர்களின் தொழிநுட்ப மற்றும் நிதி யோசனைகள் அடங்கிய போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சைனா ஹாபர் இன்ஜினியரிங்க் கோபரேஷன் கம்பனிக்கு வழங்குவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Posted in Uncategorized

சபாநாயகர் கைச்சாத்து: கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் இன்றிலிருந்து அமுலுக்கு வந்தது

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (27.05.2021) காலை கையொப்பமிட்டுள்ளார்.

இம்மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

உயர் நீதிமன்ற பரிந்துரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக சட்டமூலம் சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.

இதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபைப்படுத்தியதில் இருந்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான கடுமையான விமர்சனங்களும், மாற்றும் கருத்துகளும் எதிர்க்கட்சியினராலும், ஆளும் தரப்பினராலும், நிபுணர்கள், கல்விமான்கள், தேரர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில்,பாராளுமன்றத்தில் கடந்த மே 20ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திருகோணமலையில் 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள் பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கொரோனாவால் ஏழு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இன்று (26)வரை 69 பேர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (26) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், கந்தளாய், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் உயிரிழந்துள்ளதாகவும், இன்றுவரை மொத்தமாக 69 பேர் திருகோணமலை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை மாவட்டத்தில் 63 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்றுவரை 1403 பேரும், 2020 டிசம்பர் மாதம் முதல் இன்று வரை 2 ஆயிரத்து 844 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிக அளவில் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும், குச்சவெளியில் 9 பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேரும் கந்தளாயில் ஏழு பேரும்,கிண்ணியாவில் 6 பேரும், மூதூர் மற்றும் உப்புவெளியில் தலா 4 பேர் வீதமும், தம்பலகாமம் மற்றும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இருவர் வீதமும், சேறுவில பகுதியில் ஒருவரும் கோவிட்-19 தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

ஜூன் முதலாம் திகதி முதல் வௌிநாட்டு பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான தடை நீக்கம்

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் பயணிகள் விமான சேவை மீள ஆரம்பமாகவுள்ளது.

எனினும், ஒரு விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் பயணிகளுக்கு தொடர்ந்தும் பயணத்தடை அமுல்படுத்தப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கடவுச் சீட்டினை கொண்டுள்ளவர்களும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களும் தாயகம் திரும்புவதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு வருகை தரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும் என அதிகார சபை கூறியுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் – அமெரிக்கா திடீர் எச்சரிக்கை

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதால் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற இலங்கையில் எதிர்வரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ளது.

இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவித்தலிலேயே இந்த எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கைக்குச் செல்வதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ளும்படி அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை நேற்று இலங்கைக்கான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

அதில் நாட்டில் தொடரும் கொரோனா தீரவ நிலைமைகள் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தமது குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இலங்கைக்கான நான்காம் நிலை பயண சுகாதார அறிவிப்பை தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றது.

இதேவேளை, அமெரிக்காவினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தலில், இலங்கையில் கொரோனா நெருக்கடியிடையே தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஹோட்டல்கள், போக்குவரத்து நிலையங்கள், சுற்றுலாப் பயணிகள் ஒன்றுதிரளும் இடங்கள், பல்பொருள் சந்தைகள், விமான நிலையங்கள், கலாசார உற்வச நிகழ்வுகள், கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களை இலக்குவைத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அந்த எச்சரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் தூர இடங்களில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள், பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, கலிபோர்னியாவில் உள்ள விகாரையொன்றின் விகாராதிபதி சாந்த சோபன தேரர் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் காணொளித் தகவல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இலங்கையில் தீவிரவாத தாக்குதலொன்று நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பௌத்த மக்களின் வெஷாக் பண்டிகை இன்றும், நாளையும் நடைபெறவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என ஒன்றுகூடுகின்ற இடங்களில் மக்கள் அவதானமாக இருக்கும்படியும் சாந்த சோபன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய சட்ட மா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் பதவியேற்றார்

சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் இன்று (26.05.2021) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகம், சஞ்ஜய் ராஜரத்னத்தின் பெயரை, பாராளுமன்ற பேரவைக்கு புதிய சட்ட மா அதிபராக பரிந்துரைத்து அனுப்பி வைத்த நிலையில், பாராளுமன்ற பேரவை அதனை அங்கீகரித்தது.

இதனையடுத்தே அவர் இன்று 48 ஆவது சட்ட மா அதிபராக பதவிபேற்றார்.

வடக்குக்கு 4 இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் தேவை;சுகாதார சேவைகள் திணைக்களம் கோரிக்கை!

வடக்கு மாகாணத்தில் 4 இலட்சம் பேருக்குக் கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் அவை இரண்டு வாரங்களுக்குள் வடக்கு மக்களுக்குச் செலுத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதலாவது டோஸ் கடந்த ஜனவரி மாத இறுதியில் ஏற்றப்பட்டது. அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி தற்போது ஏற்றப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தில் முதலாவது டோஸைப் பெற்ற 500 பேர் வரையில் இரண்டாவது டோஸைப் பெறவில்லை. அவர்களில் பலர் தமக்கு தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்து வருவதால், அவர்களிடம் விளக்கம் கோருவதற்கும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி எதிர்வரும் 14ஆம் திகதியுடன் காலாவதியாவதால் அதனைத் திருப்பி கொழும்புக்கு அனுப்ப வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அதன் காரணமாகவே முதலாவது டோஸ் பெற்று இரண்டாவது டோஸை இதுவரை பெறாதவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.