மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நடவடிக்கையை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனால் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்த புதிய சட்டமூலம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த சட்டமூலத்திற்கு அமைய 70 வீதமானோர் தொகுதி வாரியான முறைமைக்கும் 30 வீதமானோர் விகிதாசார முறைமையின் கீழும் உறுப்பினர்களை தெரிவுச் செய்வதற்கு அமைச்சரவையில் தமது இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தனர்.

ஆனால், தொகுதிவாரி முறைமையின் கீழ் ஒரே கட்சியைச் சேர்ந்த மூவர் தெரிவுச் செய்யப்படுவதற்கு அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனவே, குறித்த யோசனை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதுவரை குறித்த அமைச்சரவை பத்திரத்தை கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவு வழங்கும் சீனா!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று (29) மாலை ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளனர்.

இதன்போது அனைத்து துறைகளிலும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தாம் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், பலதரப்பு அரங்கில் எதிர்கொள்ளும் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கைக்கு உறுதுணையாக நிற்பதாகவும் சீன ஜனாதிபதி இதன்போது வாக்குறுதியளித்துள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் முடிவடைந்த 46 ஆவது அமர்வில் இலங்கைக்கு சிறப்பான ஆதரவளித்ததற்காக ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அதேநேரம் 600,000 சீன கொவிட் தடுப்பூசி டோஸ்களை வழங்கியமைக்காவும் நன்றி தெரிவித்தார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த உரையாடலில் இணைந்த சீனத் தலைவர், கொவிட் -19 தொற்றுநோய் ஒரு சக்திவாய்ந்த சவாலாக இருந்தது, இது சீனா-இலங்கை உறவுகளை புதிய நிலைக்கு உயர்த்த உதவியது என்று கூறினார்.

இலங்கை ஜனாதிபதியுடனான தொலைபேசி அழைப்பின் போது, ஜனாதிபதி ஜி, இலங்கைக்கு சீனா தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்கும், விமான போக்குவரத்து மற்றும் கல்வி உள்ளிட்ட பகுதிகளில் ஒத்துழைப்பை நடத்துகிறது மற்றும் பிற ஒத்துழைப்பு பகுதிகளை ஆராயும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பட்டுச் சாலை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் சீனா இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜி குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பிற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் திருப்திகரமாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, இந்தத் திட்டத்தின் மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்குமாறு சீன அரசிடம் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தின் மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் இலங்கையின் செழிப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையானதைச் செய்ய விரும்புவதாகக் கூறினார்.

“வறுமை ஒழிப்பு எங்கள் முதன்மை நோக்கம். அதற்காக, சீனாவின் முன்மாதிரியை நாம் பின்பற்றலாம் ”என்றார்.

கடந்த சில ஆண்டுகளில், தனது நாட்டில் 9 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்டதாக தெரிவித்த சீனத் தலைவர் இலங்கையில் வறுமையை ஒழிக்க உதவ விருப்பம் தெரிவித்தார்.

ஐ.நாவில் சீனாவின் சட்டபூர்வமான இடத்தை மீட்டெடுப்பதற்கு இலங்கை அளித்த ஆதரவை சீனா ஒருபோதும் மறக்காது என்றும், பரஸ்பர அக்கறை தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும், ஒருவருக்கொருவர் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய நீதியை ஊக்குவிப்பதற்கும், இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ஜி கூறினார்.

2014 இல் இலங்கைக்கு விஜயம் செய்ததை நினைவு கூர்ந்த ஜி ஜின்பிங், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சீனாவுக்கு விரைவில் விஜயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கை மத்திய வங்கிக்கு சீன மக்கள் வங்கி வழங்கிய நாணய இடமாற்று வசதியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாராட்டியதோடு, இது நிச்சயமாக இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உதவும் என்றும் கூறினார்.

இலங்கை-சீனா நட்பின் அடையாளமாக ஹம்பாந்தோட்டையில் ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை நாடிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஸ்தாபக ஆண்டு விழாவிற்கு சீனாவை வாழ்த்தினார்.

Posted in Uncategorized

நிலாவரையில் தொல்லியல் திணைக்கள பணிகளை இளைஞர்களைத் திரட்டிவந்து ரெலோ தவிசாளர் தடுத்தார். – பொலிசார் விசாரணை

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத் திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தீவிர விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நிலாவரை பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்க தடை ஏற்படுத்தினார் என தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பேசவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டார்.

அங்கு மல்லாகம் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் சுப்பிரின்டன் என.;டபிள்யூ.ஜே.சி. ஜெயக்கொடி தலைமையில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமுது பிரசன்ன, தொல்லியல் திணைக்களத்தின் யாழ் – கிளிநொச்சிக்குப் பொறுப்பான பணிப்பாளர் நளின் வீரதுங்க ஆகியோர் இருந்தனர்.

தவிசாளர் பெருமளவானவர்களைத்திரட்டி வந்து தொல்லியல் திணைக்களத்தின் பணிகளை தடைசெய்துள்ளார் என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதனால் அது பற்றி பேசவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர், தொல்லியல் திணைக்களம் எற்கனவே குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்யப்போவதாக கூறியிருந்தது. ஆனால் அவர்கள் கட்டிட அத்திவாரம் வெட்டுவது போன்று ஆழமாக கிடங்கினை வெட்டினர். ஆந்த இடத்தில் கட்டிடங்கள் ஏதாவது அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச சபைக்குரிய பொறுப்புணர்வு பார்வையிட நான் சென்றேன். அப்போது என்னை இராணுவத்தினர் விசாரணை செய்தார்கள்.

இதனால் அங்கே சுமூகமற்ற நிலைமை ஏற்பட்டது. மக்கள் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளில் சந்தேகம் கொள்வதனால் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறப்பட்டே செயற்பட வேண்டும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தினேன்.

அதற்கு பொலிஸ் தரப்பில் இருந்தும் தொல்லியல் திணைக்கள தரப்பிடம் இருந்தும் தொல்லியல் திணைக்கள சட்டத்தின் பிரகாரம் யாரிடமும் அனுமதிபெறவேண்டியதில்லை. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை எனவே இதில் தவிசாளர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர் நிலாவரை விடயத்தில் பிரதேச சபை பகிரங்க கேள்விக்கோரலில் கடந்த பலவருடமாக குத்தகைக்கு வழங்கி வருகின்றது. எனவே எமக்கும் அப் பிரதேசத்தில் நிர்வாக ரீதியிலான அதிகாரம் உள்ளது. என தவிசாளர் தெரிவித்தபோது தாம் எமக்கு அதிகாரம் கிடையாது என கடிதம் அனுப்பியுள்ளதாக தொல்லியல் திணைக்கள அதிகாரியிலானால் கூறப்பட்டது. அதற்குத் தவிசாளர் தனிச்சிங்களத்தில் ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றது.

நான் அதனை அரச கருமமொழிகள் திணைக்களத்திற்கு முறைப்பாடாக அனுப்பியுள்ளேன். வடக்குக் கிழக்கில் அரச கருமமொழி தமிழ் என்பதையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற போது தொலலியல் திணைக்கள அதிகாரி தாம் அரச அதிபருக்கே சிங்களத்தில் தான் கடிதம் அனுப்புவதாகவும் பெறுபவர்கள் அதனை மொழிபெயர்த்து புரிந்து கொள்வதாகவும் அலட்சியமாக தெரிவித்தார்.

தாம் யாழ் மாவட்டத்தில் சகல இடங்களிலும் பணிகளை செய்கின்றோம் அங்கு எல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்குதான் பிரச்சினை என தொல்லியல் திணைக்களத்தினால் அதிர்ப்தி தெரிவிக்கப்பட்டது.

மக்களிடத்தில் தங்கள் திணைக்களத்தின் பணிகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதனால் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் கட்டிடங்கள் திருத்தம், புதிதாக அமைத்தல் விடயத்தில் சபை அனுமதி பெறப்படவேண்டியது சட்டமாகும் எனவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸ் தரப்பும் தொல்லியல் திணைக்களத்தரப்பும் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்குள் எவரும் தலையிடக்கூடாது எனவும் தவிசாளர் தான் மக்களை அழைத்து வந்து குழப்புகின்றார் என்றனர். தவிசாளர் ஒதுங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அதற்கு தவிசாளர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் நீதிமன்றத்திற்கு விடயம்பாரப்படுத்தப்படுவதாக பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பொலிஸ் தரப்பினால் தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டிற்கான பதில் அறிக்கை தவிசாளரிடம் பெறப்பட்டது. அதன்போது தவிசாளர் யார் கூறி நிலாவரைக்கு வந்தார். நிலவரையில் நின்ற வண்ணம் யார் யாருடன் தொலைபேசியில் பேசினார், என்ன பேசினார் என தனிமனித சுதந்திரத்திற்குப் புறம்பான விசாராணைகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

‘ஐ.நாவில் தமிழில் பேசியது ஒரு மகிழ்ச்சியான தருணம்’ – நரேந்திர மோதி

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி வந்துள்ளார்.

இன்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த நரேந்திர மோதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் பரப்புரை செய்தார்.

அடுத்ததாக , திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகனுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்கிறார் நரேந்திர மோதி.

நரேந்திர மோதி தமது பிரசார உரையைத் தொடங்கும் முன் எல். முருகன் அவருக்கு வேல் ஒன்றை வழங்கினார். ‘வெற்றி வேல், வீர வேல்’ என்று கூறி தமது பரப்புரையைத் தொடங்கினார் நரேந்திர மோதி.

தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான தாராபுரம் வந்தது தமக்கு மகிழ்ச்சி என்று மோதி குறிப்பிட்டார்.

உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேச தமக்கு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம், என நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான திமுகவின் திண்டுக்கல் ஐ. லியோனி, ஆ. ராசா ஆகியோரின் பேச்சுகளையும் மோதி தமது உரையில் விமர்சித்தார்.

ஆண்டாள், ஒளவையார் ஆகியோரது கருத்துகளால் ஊக்கம் பெற்ற தாங்கள் மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றும் மோதி கூறினார்.

கொங்கு பகுதியில் உள்ள மக்கள் தொழில் செய்வதற்கு பெயர் பெற்றவர்கள்; அதேபோல இரக்க குணத்துக்கும் பெயர் பெற்றவர்கள். கடந்த ஆண்டு கொங்கு மண்டலத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்கள் தங்கள் சக்திக்கு மீறி நாட்டுக்கு பங்காற்றின. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுவோம் என்று நரேந்திர மோதி தெரிவித்தார்.

நரேந்திர மோதியின் ஆங்கில உரையை கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்தார்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எனது பெயரா?

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் லுக்மன் தலிப்பே இதனை தெரிவித்துள்ளார்.

அவரின் சார்பில் பிரிட்டனை சேர்ந்த பரப்புரை அமைப்பொன்று அறிக்கையொன்றை இலங்கையின் நாளேடுகளிற்கு அனுப்பிவைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது எதிர்பாராத வகையில் எனது பெயருக்கு களங்கமேற்படுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் என்னை தொடர்புகொள்ளவில்லை,எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் என்னை விசாரிக்கவில்லை எனவும் அவுஸ்திரேலிய பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மாறாக பத்திரிகைகள் மூலம் நான் இதனை அறிந்தேன் என தெரிவித்துள்ள அவர் இது எனக்கான உரிய நடைமுறைகளை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது எனக்கு முற்றிலும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள பேராசிரியர் நான் எனது வாழ்நாளின் பெரும்பகுதியை பொதுசுகாதாரம் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக செலவிட்டுள்ளேன் பொதுமக்களின் உயிர்களின் பாதுகாப்பிற்காக செலவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அவதூறு குற்றச்சாட்டுகளிற்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்குமாறு நான் எனது சட்டத்தரணிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள பேராசிரியர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கையில் உள்ள எனது உறவினர்கள் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கம் இவ்வாறான முக்கிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான நம்பகதன்மையும் பக்கசார்பின்மையும் தன்னிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பாக அது யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நான் கட்டார் பல்கலைகழகத்தில் சிரேஸ் பேராசிரியர் என்ற நிலையிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் நான் ஆறுமாத சித்திரவதையை எதிர்கொண்டுள்ளேன் இது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனது துயரங்களிற்கு நான் பிறந்த நாடே காரணம் என்பது தெளிவாகின்றது அவர்கள் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

எந்த வகையிலாவது மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறும். அது எந்த முறையாக இருந்தாலும் தேர்தலை சந்திக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர் கஞ்சன ஜயரத்ன தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு தற்போது 4 ஆண்டுகளாகிறது. சகல மாகாண சபைகளின் உறுப்பினர்களது பதவிக்காலம் முடிவடைந்துள்ளதுடன், மக்கள் பிரதிநிதிகள் இல்லாது இயங்கி வருகிறது. இது இலங்கை அரசியல் வரலாற்றில் ஓர் கறையாகும்.

ஜனாதிபதி, பிரதமர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அமைப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய பசில் ராஜபக்ஷ முவருமே மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு கூறியிருந்தனர்.

மாகாண சபை தேர்தலை இரண்டு வழிமுறைகளை கீழ் நடத்துவது குறித்து அமைச்சரவை பத்திரமொன்றை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த பத்திரத்தை ஆராய வேண்டுமென கோரி ஒரு வார கால அவகாசம் கேட்டிருந்தனர். எனினும், தற்போது பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதற்கான முடிவு இதுவரையிலும் எடுக்கப்படவில்லை.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான வாத விவாதங்கள் நடத்தாது, அதனை அங்கீகரிக்கப்படாது இந்த அமைச்சரவை பத்திரத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

ஆகவே, கடந்த முறை அமைச்சரவை பத்திரத்துக்கு நடந்தது போன்று இம்முறையும் நடத்த வேண்டாமென, சகோதர கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணாயக்கார ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

எந்த வகையிலாவது மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துங்கள். அது எந்த முறையாக இருந்தாலும் பிரச்சினையில்லை. தேர்தலை சந்திக்க நாம் தயாராகவே இருக்கிறோம். ஆகவே ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்துமாறு நாம் சகல தரப்பினரிடமும் கேட்டுகொள்கிறோம்” என்றார்.

Posted in Uncategorized

இந்திய சிறைகளில் உள்ள தமிழ் மீனவர்கள் விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை அரசினால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது போல் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மீனவர்களையும் உடன் விடுதலை செய்ய இலங்கை,இந்திய அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (29) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் இரண்டு தினங்களில் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களின் விடுதலைக்காக இந்திய தூதரகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த மீனவர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்தமை பாராட்டத்தக்கது.

ஆனால் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி குற்றச்சாட்டில் பிடி பட்டு இந்திய சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரும்பான்மை இன மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுதலை செய்வதற்காக இலங்கை அரசாங்கமும், இந்தியாவில் இருக்கின்ற இலங்கை தூதரகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை விடுதலை செய்கின்றனர்.

ஆனால் தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களையும், அவர்களின் மீன் பிடி உடமைகளையும் இன்று வரை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இலங்கை அரசாங்கம் தமிழர்களின் விடையம் என்ற வகையில் அசமந்த போக்கை கடைப்பிடிக்க கூடாது. அவர்களும் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் விடுதலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் தொடர்ந்தும் சிறையில் வாட அனுமதிக்கக் கூடாது.எனவே தமிழராக உள்ள மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் இருக்கின்ற இலங்கை தூதரகமும் இலங்கை அரசாங்கமும் தமிழ் மீனவர்களை விடுதலை செய்வதற்கான ஒரு முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

எங்கு பார்த்தாலும் இன ரீதியான ஒடுக்கு முறையை இலங்கை அரசாங்கம் செய்து வருகின்றது. குறிப்பாக எல்லை தாண்டி போகின்ற எமது மீனவர்கள் இன்றைக்கும் சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.அவர்கள் வேண்டும் என்று எல்லை தாண்டிச் செல்வதில்லை.

எனவே அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை யாரும் செய்யவில்லை. நாங்களும், அமைப்புக்களும் மீனவர்களை விடுதலை செய்ய குரல் கொடுக்கின்றோம்.

ஆனால் அரசாங்கம் இவ்விடையத்தில் அக்கறை செலுத்தவில்லை.எனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Posted in Uncategorized

ரெலோ செயலதிபர் தளபதி குட்டிமணியின் தீர்க்கதரிசனமும் ஐ.நா ஞானமும்

இன்றைக்கு 38ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலை மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும் கறைபடிந்த வரலாற்று நிகழ்வுகளும் பலருக்கும் இன்னும் ஞாபகத்தில் இருக்கும். அதனால்தான், ‘கறுப்பு ஜூலை’ என அடையாளப்படுத்தப்பட்டது.

தமிழர்களுக்கு எதிராக, தலைநகரிலும் மலையகத்திலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையின் ஓர் அங்கமாகவே, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிந்த தமிழ்க் கைதிகளில் 51 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதில்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)செயலதிபர் தளபதி குட்டிமணி என்றழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரனின்,ரெலோ ஸ்தாபகர் நடராஜா தங்கத்துரை ஆகியோரின் இறப்பு, இன்னும் பேசும்பொருளாகவே இருக்கிறது.

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தாமல், எந்தவோர் அரசாங்கமும் இலங்கையில் ஆட்சி நடத்தியதில்லை. 1942 முதல் 2018 வரையிலும் 76 வருடகாலத்தில் இலங்கை மக்கள், அவசரகால, பயங்கரவாத சட்டங்களின் கீழ்தான் அடக்கியாளப்பட்டார்கள்; அழிக்கப்பட்டார்கள். 83இலும் அவசரகாலச் சட்டமே மறைமுகமாக ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், இலங்கைக்கான புதிய பிரேரணையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவசரகால, பயங்கரவாத சட்டங்கள் தொடர்பில் ஜெனீவாவில் பல தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டன. அதனடிப்படையிலேயே அவசரகால சட்டம் 2011 நீக்கப்பட்டது. எனினும், அதிலிருந்த அதிகாரங்கள் பல, ஜனாதிபதிக்கு கைமாறின. 2018 மார்ச் 6, கண்டி- திகன சம்பவத்துக்குப் பின்னர், சில நாள்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச்சட்டம், 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின், மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.

அவசரகால, பயங்கரவாத தடைச்சட்டங்களிலான வலிகள், வேதனைகளை நன்கு அனுபவித்தவர்கள் தமிழர்கள். 1983 ஜூலைக் கலவரம், அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோதுதான் மிகக் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டது. 2009 இறுதி யுத்தத்தின்போதும் இச்சட்டம் அமுலிலிருந்தது. அவசரகாலச் சட்டத்தின் வலிகளை, சகல இனத்தினரும் அனுபவிக்கின்றனர். இவ்விரு சட்டங்கள் தொடர்பிலும், நீதிமன்றத்தில் வைத்து குட்டிமணி, அன்று கூறியவை, தீர்க்கதரிசனமாக இன்றிருக்கிறது.

“நாங்கள், சிங்களவர்களின் உரிமைகளைப் பறிக்கவந்தவர்கள் அல்லர். எங்களுடைய போராட்டத்துக்கு உங்களுடைய ஆதரவை நாடிநிற்கின்றோம். இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள கதி, நாளை உங்களுக்கு ஏற்படக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை, இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டதல்ல; இந்த ஆட்சியில் மீறப்பட்ட மனித உரிமைகள், பொறுப்புகூறல், உள்ளிட்டவையும் உள்ளடங்குகின்றன என எதிரணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் மீளாய்வு செய்யுமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளமை ரெலோ செயலதிபர் தளபதிகுட்டிமணியின் தீர்க்கதரிசனத்துக்கான காலந்தாழ்த்திய ஞானமாகும் என்பதே எமது அவதானிப்பாகும்.

நிலாவரை தொல்லியல் அகழ்வு தடுக்கப்பட்டமை தொடர்பில் ரெலோ தவிசாளருக்கு காவல்துறையினர் அழைப்பு

நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைககளம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இன்று மதியம் 2 மணிக்கு அச்சுவேலி காவல் நிலையம் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தை மாத இறுயிலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் நிலாவரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இராணுவத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளில் ஈடுபடமுயற்சித்தனர். இம் முயற்சிகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளார் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி காவல் நிலையத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சுவேலி காவல் நிலையத்தில் இருந்து தொடர்நடவடிக்கைகளுக்காக இன்று மாலை 2 மணிக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அச்சுவேலி காவல் நிலையத்திற்கு காவல் மேலதிகாரிகளும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்து மதத்தின் தொன்மையை மாற்றியமைப்தே தொல்லியல் திணைக்களத்தின் இலக்கு-ரெலோ இளைஞர் அணி தலைவர் – சபா குகதாஸ்

இலங்கையில் ஆதி தொன்மைகள் கொண்ட மதமாக விளங்குவது இந்து மதம் என்பதை வரலாற்று ரீதியாக யாரும் இல்லை என்று கூறமுடியாது எனத் தெரிவித்துள்ள ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ், காரணம் தொன்மையான நூல்கள், கல்வெட்டு ஆதாரங்கள் அதனை நிறுவுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் ஆய்வு என்ற பெயரில், தமிழர் தாயகப் பிரதேசத்தில் சைவ ஆலயங்கள் மற்றும் தமிழர்களின் வரலாற்றோடு தொடர்புடைய இடங்களில் தொல்லியல் துறையினர் பௌத்த துரவிகள், இராணுவத்தினரின் துணையுடன் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு தமிழ் அரசியல் தலைவர்கள், பொது மக்கள் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ள சபா குகதாஸ்,
“இலங்கையில் உள்ள ஏனைய மதங்கள் கொண்டுவரப்பட்டமைக்கான முழுமையான வரலாறுகள் காலங்களையும் ஆட்சியாளர்களின் ஆதரிப்பையும் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றன. அந்த வகையில் இலங்கையை திருமந்திரத்தை அருளிய திருமூலர் சிவபூமி என்றே குறிப்பிட்டுள்ளார் அத்துடன் இராவணன் என்ற சிவ பக்தனின் வரலாறு மேலும் பல ஆதாரங்களை உறுதி செய்துள்ளது.

இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்கள் சிவலிங்க வழிபாட்டின் தொன்மைகளை கூறுவதுடன் அவற்றுள் இரண்டு ஈச்சரங்கள் இயற்கையாக தோன்றிய சிவலிங்கங்களை கொண்ட தான்தோன்றீஸ்வரங்களாக காணப்படுகின்றன.
இலங்கைத் தீவின் அனைத்துப் பாகங்களிலும் இந்து மதத்தின் தொன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் தென்னிலங்கையில் அவற்றின் தொன்மைகள் மாற்றியமைக்கப்பட்டு பௌத்தத்தின் சிறப்புக்களே முதன்மை பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சி நிரலே வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழர் பிரதேசங்களிலும் தொல்லியல் திணைக்களத்தின் மூலமாக இந்து மதத்தின் தொன்மைகளை மாற்றி அமைத்து பௌத்த மத விடையங்களை முதன்மைப் படுத்தி இலங்கைத் தீவு முழுவதும் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிறுவ திட்டமிட்ட அதிகார சக்தியின் துணையுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

தென்னிலங்கையில் கதிர்காமம் முருகன் ஆலயம் இன்று பௌத்த விகாரைகளால் சூழப்பட்டிருப்பது , சிவனுடைய பாதம் பதிந்த சிவனெளிபாதமலையின் பெயர் மாற்றப்பட்டமை ,சிவகிரி என அழைக்கப்பட்ட குன்று சிகிரியா பெயர் மாற்றப்பட்டமை அனுராதபுர ,பொலநறுவைக்கால சிவ ஆலயங்கள் சிதைக்கப்பட்டமை அவற்றின் தொன்மையான வரலாறுகள் அழிக்கப்பட்டமை திருக்கோணேஸ்வரர் ஆலய முன் பகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டமை கன்னியாவில் விகாரை அமைத்தமை போன்ற பல உதாரணங்கள் உள்ளன இவ்வாறான திட்டமிட்ட ஒரு இனத்தின் கலாசார அழிப்பு அரச நிகழ்ச்சி நிரலாக தமிழர் தாயகத்தை குறிவைத்து அரங்கேற்றப்படுகிறது.இதற்கு இலங்கை அரசாங்கம் வைத்த பெயர்தான் தொல்லியலை பாதுகாத்தல்” என்றார்.

Posted in Uncategorized