வங்கிகளினூடாக அனுப்பப்படும் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவிகள் குறைவடையும் வாய்ப்பு – சுரேந்திரன்

புலம்பெயர் உறவுகளால் தன்னார்வமாக அனுப்பப்படும் நிதி இனி வங்கிகளினூடாக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும் என பொருளியல் ஆய்வாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளருமான கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,“புலம்பெயர் உறவுகளால் தன்னார்வமாக அனுப்பப்படும் நிதி இனி வங்கிகளினூடாக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும். எனவே அவர்கள் நேரடியாக உண்டியல் முறையூடாகவோ அல்லது உறவுகளின் ஊடாகவோ தான் இனி இந்த பண பரிமாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியம் புலப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் டொலர் பெறுமதி குறையும் போது பல புலம்பெயர் உறவுகள் அது தொடர்பான கவலையை தெரிவித்திருந்தனர். இருப்பினும் டொலரின் பெறுமதி குறைவது இலங்கையில் இருப்பவர்களுக்கு நல்ல விடயம் என நாம் கூறினோம்.

ஏனென்றால் எமது நுகர்வு பொருட்களுக்கான விலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் நிதி அனுப்புபவர்களின் நிலைப்பாடு அப்படி இருக்கவில்லை.

இதனால் நிதி பரிமாற்றம் என்பது வங்கிகளினூடாக அல்லாமல் உத்தியோகப்பூர்வமற்ற பண பரிமாற்றமாக மாறுவதற்கு தான் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது.”என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்தது – மத்திய வங்கி ஆளுநர்

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை தொடர்ந்து, “டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது” என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாளை (திங்கட்கிழமை) ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியை தொடர்ந்து, “தேவையான துறைகளுக்குச் சேவை செய்ய எங்களிடம் போதுமான அந்நியச் செலாவணி உள்ளது, முதலீட்டாளர்களின் உணர்வை மேம்படுத்தி, அதிக நிதி மற்றும் முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும்“ என தெரிவித்தார்.

இலங்கைக்கான கடனுக்கான முதல் தவணையான 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செவ்வாய்கிழமை வழங்கப்படவுள்ள நிலையில், கடனுக்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் அதனை முறையாக அங்கீகரிப்பதற்காக நாணயநிதிய சபை நாளை கூடுகிறது.

முதன்முறையாக, இந்த கடனில் அரசாங்கத்திற்கான பட்ஜெட் ஆதரவு அடங்கும், இது IMF கடனில் முற்றிலும் புதிய அங்கமாகும்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்திற்குள் கடனுக்கான முதல் மறுஆய்வு நடைபெறும் போது முடிக்கப்பட வேண்டும்.

உள்ளூர் வங்கிகள் உள்நாட்டு மறுசீரமைப்பை எதிர்க்கின்றன மற்றும் IMF உடனான பேச்சுவார்த்தைகளுக்கு வெளியில் உள்ள ஆலோசகர்களை நியமித்துள்ளன.

IMF வசதி நடைமுறைக்கு வந்ததும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவை பட்ஜெட் ஆதரவிற்காக வரும் புதிய நிதியில் $4.5 பில்லியன் கொள்கை அடிப்படையிலான கடன்கள் மூலம் தங்கள் உறுதிப்பாட்டை மேம்படுத்தும் என்று ஆளுநர் கூறினார்.

2024 ஆம் ஆண்டில் நேர்மறையான வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதார மீட்சி தொடங்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

ஐஎம்எஃப் இரவு 10.30 மணிக்கு ஒரு செய்தி மாநாட்டை திட்டமிட்டுள்ளது. நாளை இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றி பேசுபவர்கள், இலங்கைக்கான மூத்த தூது தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் IMF இல் இலங்கைக்கான தூது தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் பேசுவார்கள்.

இலங்கையின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது ஜனவரி 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு மதிப்பு 2,121 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 4.5% அதிகரிப்பைக் குறிக்கிறது.

இருப்பினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மக்கள் வங்கியின் நாணய பரிமாற்ற சலுகையும் அடங்கும் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் டொலருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தம்

வெளிநாடுகளில் பணிபுரிபவர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் 2 ரூபாய் ஊக்கத் தொகையை இலங்கையின் மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல்; இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோதமான ஹவாலா அல்லது உண்டியல் முறைகள் மூலம் பணம் அனுப்பியதை அடுத்தே இந்த முறை அறிமுகப்படுத்தபட்டது.

எனினும் எதிர்பார்த்தபடி வெளிநாடுகளின் தொழிலாளர்கள் பணத்தை வங்கிகளின் ஊடாக அனுப்பப்படவில்லை.

இதனையடுத்தே இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அமெரிக்க டொலர் அனுப்புதலுக்கும் வழங்கப்படும் 2 ரூபாய் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு வங்கிகளை மத்திய வங்கி கேட்டுக் கொண்டதாக வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊக்கத்தொகையை நிறுத்துவது தொடர்பான மத்திய வங்கியின் உத்தரவு டிசம்பர் 30ஆம் திகதி கிடைத்துள்ளதாகவும், தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

700 ரூபாவாக உயரவுள்ள டொலர் : யாழ். பல்கலை. பொருளியல் துறை தலைவர்

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை தீர்மானிக்கும் அனுமதியை ஐஎம்எப் இடம் வழங்கினால் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதோடு ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிடம் கருத்து பகிர்ந்து கொள்ளும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பிரதானமான நிபந்தனை என்னவென்றால் இலங்கையினுடைய நாணய மாற்று விகிதத்தினை அரசாங்கம் நிர்ணயிப்பதை விட சுதந்திரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான். சந்தை சக்திகளின் ஊடாக சுதந்திரமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அதில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்றும், மத்திய வங்கி தலையிடக் கூடாது என்றும் கூறப்பட்டது.

இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுமாக இருந்தால் இப்போது இருக்கின்ற தற்பொழுது இருக்கின்ற நாணய மாற்று விகிதம் இன்னும் தேய்வடைந்து செல்லக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. அவ்வாறு தேய்வடைந்து சென்றால் இலங்கையில் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகள் இன்னும் அதிகரிக்கும்.

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இறக்குமதி நுகர்வில் தான் தங்கியிருக்கின்றார்கள். அரிசி கூட சில நேரங்களில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உண்டு. அரிசிக்கு பதிலீடாக பயன்படுத்துகின்ற கோதுமை, தானியங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றோம். எனவே இந்த பொருட்களின் விலைகள் மேலும் உயரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

தற்போது டொலர் ஒன்று 370 ரூபா என்ற நிலையில் உள்ளது. சுதந்திரமாக சந்தையில் நிர்ணயிக்க விடுகின்ற போது டொலரின் பெறுமதி 450, 500, 600, 700 என்ற அளவில் போகும். அப்படிப் போகின்ற போது இறக்குமதி செய்கின்ற பொருட்களின் விலைகள், குறிப்பாக கோதுமையின் விலை கடுமையாக அதிகரிக்கும். இதன் விளைவினால், போஷாக்கின்மை, பட்டினி, நோய்வாய்ப்படுதல் போன்ற பல பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இதனை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டுமாக இருந்தால் உள்நாட்டு பொருளாதாரத்தை முதலில் கட்டியெழுப்ப வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற, அரிசி, சிறுதானியங்கள், மரக்கறிகள் மற்றும் பழங்கள், விலங்கு வேலாண்மை போன்ற உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அதற்கு ஈடாக நாங்கள் செயலாற்றும் பட்சத்தில் இது பாரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.

இலங்கையின் திரவ கையிருப்பு வீழ்ச்சியில் : மத்திய வங்கி அறிவிப்பு

22 செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கையின் திரவ கையிருப்பு தொடர்ந்து கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளது.

வங்கித் துறையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு மற்றும் மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் அடங்கிய மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் செப்டம்பர் 2022 இன் இறுதியில் 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தன.

2022 செப்டெம்பர் இறுதியில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதில் சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான இடமாற்று வசதியும் அடங்கும், அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக மத்திய வங்கி அந்நிய செலாவணியை தொடர்ந்தும் வழங்கி வந்தது.

இதன் விளைவாக, திரவ இருப்பு அளவு செப்டம்பர் 2022 இறுதிக்குள் குறிப்பிடத்தக்க குறைந்த மட்டத்தில் இருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 44.9 வீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

இதற்கிடையில், 2022 நவம்பர் 04 வரையிலான காலப்பகுதியில் யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானிய யென், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் இந்திய ரூபா ஆகியவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது.