கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.

 

இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.

அதற்கமைய முதலாவது மனிதஎச்சத்தின் பச்சைநிற நீளக் காட்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம்அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது

அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடையவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமகியிருந்தனர்.

குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடையப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான தினமான இன்று புதன்கிழமை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்துக்கான பிரதான நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று, மட்டக்களப்பு காந்தி பூங்காவை அடைந்தது.

இந்நிகழ்வில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமக்குரிய தீர்வுகளை விரைவில் தர வேண்டும் எனக் கூறியும், காலம் கடந்தும் எமக்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லை என தெரிவித்தும் ‘எங்கே எங்கே… காணாமல் போன உறவுகள் எங்கே’ என கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

‘எமது உறவுகள் எமக்கு வேண்டும்’, ‘மதவாதம் வேண்டாம்’ என கோஷங்களை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி, பொதுமக்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.

செஞ்சோலை வளாகம்

செஞ்சோலையில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் இன்று (14) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையிலான இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தோடு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம்

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலின்போது படுகொலை செய்யப்பட்ட மூன்று சகோதரிகளின் தாயொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

 

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (14) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் /- வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுச்சுடர் ஏற்றி, உயிரிழந்த மாணவிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

முல்லைத்தீவு – வள்ளிபுனம், செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் 2006 ஆம் ஆண்டு இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று(14) மதியம் 12 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

 

வீரமுனை படுகொலையின் 33 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து வீரமுனையில் ஆலய பூசையுடன்  நேற்று(12) அங்கு அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த யுத்த சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

வீரமுனை மற்றும் அதனை சூழவுள்ள வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை ஆகிய கிராமங்களில் சுமார் 400இற்கும் அதிகமானவர்கள் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் தாக்கப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400இற்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலங்காலமாக கடந்துபோக முடியாத வடுக்களான காணப்படும் பல படுகொலைகளோடு வீரமுனை படுகொலையும் 33 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட ஒரு சம்பவமாகவே பதிவாகி நிற்கின்றது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு நிதி வழங்க அரசாங்கம் ஒப்புதல்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ”அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று களஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ”கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதியின் பிரிவில் இருந்து நிதி கிடைக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது” என்றார்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என இந்திய உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையில் தொடக்க நிகழ்வு கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது எனவும் தமிழக கடற்றொழிலாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் என அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூதூர் தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டமையின் 17 ஆம் அண்டு நினைவு தினம்

மூதூரில் அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04.08.2023) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 17 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இப்­ப­டு­கொ­லையில் முத்­து­லிங்கம் நர்மதன், சக்­திவேல் கோணேஸ்­வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்­க­ராஜா பிறீமஸ், ஆனந்­த­ராஜா மோகனதாஸ் ரவிச்­சந்­திரன், ரிஷி­கேசன், கன­க­ரத்­தினம் கோவர்த்­தனி, கணேஷ் கவிதா, செல்­லையா கணேஷ் சிவப்­பி­ர­காசம் ரொமிலா, வயி­ர­முத்து கோகி­ல­வ­தனி, அம்­பி­கா­வதி ஜெய­சீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரை­ராஜா கேதீஸ்­வரன், யோக­ராஜா கோடீஸ்­வரன், முர­ளீ­தரன் தர்­ம­ரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா, ஆகியோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த அக்ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த மேற்­படி 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்­காரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து நிலத்தில் குப்­பு­றப்­ப­டுக்கப் பண்ணி பின்­பக்­க­மாக தலை­யில் சுட்டு படு­கொ­லை­ ப­டுத்­தி­ய­தாக அன்­றைய செய்­திகள் தெரி­வித்­தன.

வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அதே வேளையிலே சர்வதேச விசாரணையை கோரியே தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் இலங்கை அரசானது தொடர்ச்சியாக தங்களுக்கு தீர்வை வழங்காத நிலையில் தமக்கு சர்வதேச விசாரணை கோரி போராடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவண செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்

கனேடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
இலங்கை அரசாங்கம் மனிதவுரிமை மீறல்கள் அட்டூழியங்கள் போன்றவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளதுடன் கறுப்பு யூலை படுகொலைகள் அரசியல் பேராசை காரணமாக மிகப் பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கியது எனவும் இவ்வாறான மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டு்ம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அன்று கறுப்பு யூலைப் படுகொலையை அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இந்தியப் பாராளுமன்றத்தில் 1983 இல் இனப்படுகொல என அறிவித்தது போன்று கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அந்த நாளை தமிழினப் படுகொலை நாள் என கனேடியப் பாராளுமன்றத்தில் ஏக மனதாக பிரகடனப் படுத்தினார் பிரதமர் ட்ரூடோ இதனை தமிழ் மக்களின் நீதிக்கான கதவு திறப்பிற்கான ஆரம்பமாக தமிழர்கள் பார்க்கின்றனர்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நியாயமான நீதிக்கு குரல் கொடுக்கும் கனேடிய பிரதமரின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதலை வழங்கியுள்ளது.

இலங்கையில் சிங்கள இன வாதிகளின் கனேடிய அரசாங்கம் தொடர்பான அநாகரிகமான விமர்சனங்கள் வருவதை பொருட்டாக கொள்ளாது மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை வலியுறுத்தி உள்ளமையை வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்

பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது யுத்தத்தில் உயர்நீத்த மக்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அங்கு தெரிவு செய்யப்பட்ட ஊனமுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்

தொடர்ந்து முல்லை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் மோட்டார் வாகன வரவேற்பு இவருக்கு அளிக்கப்பட்டது.

வட்டுவாகல் பாலம் தொடக்கம் முல்லைப்பட்டிணம் சுற்றுவளைவு வரை இந்த விசேட வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுனாமி நினைவாலய தரிசிப்பிலும் புனித இராயப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற நற்கருணை ஆசீர்வாதத்திலும் ஈடுபட்டிருந்தார்.