முன்மொழிவுகளை பரிசீலித்து மூன்றாம் வாரத்தில் எல்லை நிர்ணயம் குறித்து இறுதி அறிக்கை

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து வருவதாகவும், விரைவில் அவை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து, தமது முன்மொழிவுகளைச் சமர்பிப்பதற்கு காலவகாசமும் வழங்கப்பட்டது.

குறித்த முன்மொழிவுகளை தேசிய எல்லை நிர்ணயக் குழு பரிசீலித்து குழுவின் இறுதி அறிக்கை இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் என தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 4,000 ஆகக் குறைக்கும் நோக்கத்துடன் 2020 இல் தேசிய எல்லை நிர்ணயக் குழு உருவாக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை நிர்வாகத்தை நெறிப்படுத்தவும், உள்ளூர் அளவில் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது

Posted in Uncategorized

வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் கடமையில் இணைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்கள் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த தொகுதியில் இல்லாமல் வேறு தொகுதியில் பணியாற்ற முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கையை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்ப இராஜாங்க அமைச்சரின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க திறைசேரி தவறியதால், உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான திகதி நிச்சயமற்ற நிலையில் இருக்கும் அதேவேளை தம்மால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நேற்று தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேர்தலை நடத்துவது குறித்த எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாது என இரண்டாவது தடவையாக உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடுகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட மாட்டாது

ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இப்போது பேச யாரும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அச்சடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், திறைசேரியினால் அதற்கான பணம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக 200 இற்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இது தொடர்பில் திறைசேரிக்கு மீண்டும் நினைவூட்டல் விடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நிதி விடுவிப்பினை உறுதிப்படுத்தினால் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல்

நிதி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதி விடுவிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தியதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைக்கப் பெற்றால் அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஓரிரு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியாது என்பது நாட்டில் வழக்கமாகிவிட்டால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடையும். நிதி இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் அது தவறானதொரு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் 25ல் தேர்தல் இல்லை – உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தற்போதைய நிலவரப்படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது.

அத்தோடு எதிர்காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் திறைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும்

உள்ளூராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையை கையளித்ததன் பின்னர், மக்களுக்கு அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை

தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

உள்ளூராட்சி சபைகளை கண்காணிக்கும் குழு பிரதமர் இடையே சந்திப்பு

உள்ளூராட்சி சபைகள் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு பிரதமர் தலைமையில் நேற்று கூடியது.

மேற்படி குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களும் நேற்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டை நிர்வகிப்பது இந்தக் குழுவின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகளை ஆளுநர்களும் மாவட்டச் செயலர்களும் கண்காணித்து முன்பைப் போன்று மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த நிறுவனங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.