கச்சதீவு விவகாரம் ஏற்கனவே முடிந்து போன விடயம் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

கச்சதீவு சம்பந்தமாக பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்ற நிலையில், அந்த விவகாரம் இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவடைந்த கச்சதீவு விடயம் சம்பந்தமாக தற்போது எவ்விதமான உரையாடல்களும் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்குச் சொந்தமாக கச்சதீவு தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த கச்சதீவானது 1974இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகும்.

இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி கச்சதீவு மீட்புக் கோசத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அத்துடன், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்ற கழகமும் தான் கச்சதீவினை இலங்கைக்கு தாரைவார்த்தது என்பதையும் வெளிப்படுத்தி வருகிறது.

இவ்வாறான நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்நாட்டில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இத்தகையதொரு சூழல் தான் கச்சதீவு விடயம் இந்திய அரசியல் கட்சிகளால் சீர்தூக்கப்பட்டுள்ளது. ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் இந்தியா இந்த விடயம் சம்பந்தமாக எம்முடன் உத்தியோகபூர்வமாக இன்னமும் உரையாடவில்லை. எனினும், அயல்நாடு என்ற வகையில் நாம் குறித்த விடயம் சம்பந்தமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம்.

உண்மையில் கச்சதீவு 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலமாகும். ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகிவிட்டது. இவ்வாறான நிலையில், தற்போது அதனைப் மீளப்பெறுமாறு வலியுறுத்துவதானது யதார்த்ததுக்கு புறம்பானதாகும். அதுமட்டுமன்றி, தமிழகத்தில் காணப்படுகின்ற உள்ளக அரசியல் நிலைமைகளே இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுவதற்கு காரணமாகின்றது.

எனவே, பிறிதொரு நாட்டின் உள்ளக அரசியல் விடயங்கள் சம்பந்தமாக தலையீடு செய்ய முடியாது. அதுவொரு முடிந்துபோன விடயமாகும் என்றார்.

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்கவேண்டாம் என கோரிக்கை!

கச்சதீவு திருவிழாவில் இம்முறை இந்தியாவில் இருந்து பக்தர்கள் எவரும் பங்கேற்க வேண்டாம் என கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை இந்திய பக்தர்களின் உறவு பாலமாக உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா இந்த ஆண்டு 23 மற்றும் 24 திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சிறையில் உள்ள நான்கு இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

அதனடிப்படையில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படகுகள் இயக்கப்படாததால் இந்த ஆண்டு திருப்பயணத்தை ரத்து செய்வதாக கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அந்த செய்தியில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய திருப்பயணிகள் தயவு செய்து கச்சதீவுக்கு பயணிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கொடுத்த பணத்தை விரைவில் திருப்பிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தெரிவித்தார் – எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சதீவை மீட்டெடுப்பதே முதன்மையான செயல்திட்டம் – தமிழக அரசு

கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல் என தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவை மீட்பதும், பாரம்பரிய கடற்றொழிலை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டமாக இருக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடக்கிறார்கள் என்று காரணத்தைக் காட்டி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளது. இது தமிழக கடற்றொழிலாளர் சமூகத்தினரிடையே கவலை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்பப் பெறுவதும், பாக்கு நீரினை பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டத்தில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

கச்சதீவில் அமைக்கப்பட்ட அரச மரத்துடன் கூடிய பாரிய பெளத்த விகாரை

கச்சதீவில் மர்மமான முறையில் கடற் படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படும் நிலையில், தங்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பொளத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் சிறிலங்கா படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில், இது வரை காலமும் இந்திய இலங்கை பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் புதிதாக பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் கச்சதீவிற்கு சென்றிருந்தைமையும் தற்போது, பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கச்சதீவில் 5 முதல் 10 கடற்படையினரே கடமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பிரமாண்டமாக புத்தர் சிலை கட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதனைத் தவிர நிரந்தரமான கட்டடங்கள் எவையும் அமைக்க கூடாது எனவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், அங்கு கடற்படையினருக்கான இருப்பிடம் கூட நிலையானதாக அமைக்க பட்டிருக்கிறது . ஒப்பந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது நிரந்தரமான பௌத்தமயமாக்கலுக்கான ஒரு திட்டமாக பாரியளவில் புத்தர் சிலை ஒன்று இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகள் பாவித்தும் பனை ஓலை வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தள்ளன.

அண்மையில் நடைபெற்ற திருவிழாவின் போதும் அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுருமாரையோ, பக்தர்களையோ மற்றும் ஊடகவியலாளர்களையோ குறித்த இடத்திற்கு அருகில் கூட செல்ல கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை. இதேவேளை, கச்சதீவு பகுதியில், கடற்கரையை சூழவும் காட்டு மரங்களே வளர்ந்திருந்தன. ஆனால் தற்போது, கடற்படையினர் அரச மரங்களை கொண்டுவந்து குறித்த பகுதியில் வைத்துள்ளனர் என்பதும் அப்பட்டமாகத் தெரிவிகின்ற ஒரு விடயம்.

“கச்சத்தீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கியது.

இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதும், இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

ஆகவே இவ்வாறான சிறுமைத்தனமான செயற்பாடுகள் இலங்கை இந்திய நல்லுறவில் பாரிய விரிசலாக உருவெடுக்கும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருவதைப் அபோன்று கச்சதீவிலும் தற்போது பௌத்த சின்னத்தை நிறுவியுள்ளனர்.

கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே தற்போது இருக்கின்றது. ஆனால் கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று இனி வரும் காலங்களில் பதில் வரலாம்.

எவ்வாறு இருப்பினும் அங்கு அமைக்கப்பட்ட பிரமாண்டமான புத்தர் சிலை எவ்வாறு கட்டப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து அதனை நிறுவியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் மத தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.