கஜேந்திரகுமார் எம்.பி இன்று காலை கொழும்பில் அவரது வீட்டில் கைது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை 5 மணியளவில் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மருதங்கேணியில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடமையில் இருந்த பொலிஸாரைத் தாக்கி, அவர்களைக் கடமையைச் செய்யவிடாது நடந்துகொண்டார் என்பதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று அவரது வீட்டிற்குச் சென்ற பொலிஸார், மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கும் வரையில் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வாசித்துக் காட்டியிருந்தனர். அதன் பின்னர் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு முன்பாக சபாநாயகரின் அனுமதி பொலிஸாரினால் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நகைச்சுவைக்கு கைதட்டி சிரித்தவர்களை கைது செய்யவுள்ள இலங்கை பொலிஸார் !

நகைச்சுவை கலைஞர் நடாஷா எதிரிசூரிய வெளியிட்ட அவதூறான கருத்துக்களைப் பாராட்டிய நபர்களை அடையாளம் காண இலங்கை காவல்துறைவிசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின செய்தித்தாள் கூறுகிறது.

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக நடாஷா எதிரிசூரிய நேற்று கைது செய்யப்பட்டு ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

31 வயதான நடாஷா, கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரதான கத்தோலிக்க பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

பௌத்த பெண்கள் பாடசாலைகளையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

திவயின அறிக்கையின்படி, அவரது அறிக்கைகளுக்கு கைதட்டி சிரித்தவர்களை கைது செய்ய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வெறுப்பு பேச்சு வேண்டுமென்றே செய்யப்பட்டவை என்று சுட்டிக்காட்டிய காவல்துறை, இந்த விஷயத்தில் நகைச்சுவை நடிகருக்கு அறிவுரை வழங்கிய நபரை அடையாளம் காண்பது குறித்தும் விசாரணை கவனம் செலுத்தும் என்று கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் கைதுகள் இடம்பெறலாம் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

நிகழ்ச்சியின் போது சிரித்து பேசியவர்களை எந்த சட்டத்தின் கீழ் போலீசார் விசாரிக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்படக்கூடியவர்கள் தொடர்பான திவயின செய்தியை பொலிசார் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Posted in Uncategorized

மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பம்

புத்தசாசன அமைச்சு தூங்கிக்கொண்டு இருப்பதாக குற்றம் சுமத்தப்படுவதாகவும் ஆனால் புத்தசாசன அமைச்சு விழிப்புடனே செயற்பட்டு வருவதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் மத உண்மைகளை திரிபுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதாற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதாகவும் அந்த நடவடிக்கை புத்தசாசன அமைச்சின் நேரடி தலையீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயல்களைத் தடுப்பதற்கு காவல்துறையில் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

புத்த சாசன அமைச்சு தூங்குகிறது என்று குறிப்பிட்டிருந்ததையும் அவதானித்துள்ளேன்.புத்த சாசன அமைச்சு 24 மணிநேரமும் விழித்திருக்கிறது. அதனால்தான் இதுபோன்ற விஷயங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டவுடன், புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் கைது

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இம்மானுவேல் ஆர்னோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவரென தெரிய வருகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி நாணய பொறுப்பு சபையின் 15 அதிகாரிகளிடம் வாக்குமூலம்

இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் நாணய பொறுப்பு சபையின் 15 அதிகாரிகளிடம் கோட்டை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.

இந்த 50 இலட்சம் ரூபாவினை யாராவது திருடினார்களா அவ்வாறு இல்லை எனின் நிதி கணக்கீட்டின் போது ஏதேனும் தவறு இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பணம் வைக்கப்பட்டிருந்த மத்திய வங்கியின் மூன்றாவது மாடியானது அதி உயர் பாதுகாப்பு கட்டமைப்புடன் அமைக்கப்பட்டிருந்ததாக அறியக்கிடைத்துள்ளது.

உண்டியல் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 8.2 மில்லியன் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும், கொழும்பு 12, கெசல்வத்தை, டாம் வீதியில் வைத்து இரண்டு நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய பிரதான சந்தேகநபர் மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கெசல்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெடுக்குநாறிமலை விக்கிரகங்களை மீண்டும் பிரதிஷ்டை செய்ய தொல்லியல் திணைக்களம் தடை

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய புனராவர்த்தன புனர் கும்பாபிஷேகம் நாளை அதிகாலை வைக்க முற்பட்ட சமயம் இன்று மாலை தொல்லியல் திணைக்களம் தடைபோட்டு நிற்கின்றது.

நெடுங்கேணியில் சேதமாக்கிய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் நாளை அதிகாலை அதே இடத்தில் பிரதிஸ்டை செய்ய ஆலய நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு புதிய சிவன் சிலை எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட சிவலிங்கம் வெடுக்குநாறி மலையில் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த சிவன், அம்மன், பிள்ளையார் மற்றும் வயிரவர் வழிபட்ட இடத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதன்போது முன்பு சிவலிங்கம் இருந்து உடைக்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட சீமேந்து துகளை அகற்றி மீண்டும் வைக்கப்படும் லிங்கத்திற்கு இடம் சீர்செய்ய முற்பட்ட சமயம் நெடுங்கேணிப் பொலிசார் அந்த இடத்திற்கு சென்று இதற்கு தொல்லியல்த் திணைக்களம் அனுமதிக்காமல் மேற்கொள்ள முடியாது எனத் தடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வவுனியா நெடுங்கேணி பொலிஸாரால் விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்ய சென்ற இரண்டு மேசன் மற்றும் கூலியாள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக தற்போது தொல்லியல் திணைக்களத்தினருடன் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன. இதனால் அதிகாலை 12 மணி முதல் 3 மணிவரை உள்ள புண்ணிய காலத்தில் விசேச பூசை வழிபாடுகள் மேற்கொண்டு அதே இடத்தில் மீண்டும் சிவன் பிரதிஸ்டை மேற்கொள்ளப்படுமா என்பது தற்போது கேள்விக் குறியாகியுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

சாலியபீரிசிற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சாலியபீரிஸ் தனது கட்சிக்காரர் ஒருவர் தொடர்பில் தனது தொழில்சார் கடமையை செய்த விதம் குறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஆர்ப்பாட்;டம் சாலியபீரிசிற்கு அவரது கட்சிக்காரருக்காக ஆஜராவதற்கான உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என நாங்கள் கருதுகின்றோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தரணி என்ற அடிப்படையில் அவரின் கடமைகளிற்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை நீடிப்பு

பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறுத்தி வைப்பதற்கான இடைக்கால உத்தரவை மார்ச் 28 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மேலும் நீடித்தது.

தமக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணை விடுக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவிற்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் எம்.ஏ.ஆர்.மரிக்கார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் பிரகாரம், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனை கூண்டில் நிற்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதில் இருந்து நீதவான் தடுக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 9 ஆம் தேதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்களால் 17.8 மில்லியன் மீட்கப்பட்ட விவகாரத்தில், தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1) (அ) பிரிவின் விதிகளின்படி செயற்பாட்டாளர் மஹிந்த ஜயசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

யுத்தகாலத்தில் நடத்தப்பட்ட இரசாயன ஆயுததாக்குதல்களையும் ஜேவிபி கண்டிக்க வேண்டும்

தற்போது போராட்டங்களின் மீது இரசாயன குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஜேவிபி குற்றம் சாட்டுகிறது. இதேபோல, யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இரசாயன குண்டு தாக்குதல்களையும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையிலே தற்பொழுது பாரிய அளிவிலான ஜனநாயக புாராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. முக்கியமாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடார்த்தும்படியும், தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு மற்றும் சம்பள நெருக்கடி உள்ளிட்டவற்றை முன்வைத்து தொடர்ச்சியாக ஜனநாய போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்கள், அனைத்து தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி அந்த போராட்டங்களை நசுக்குவதற்காக கண்ணீர் புகை பாவிப்பது நீர்த்தாகை பாவிப்பது உட்பட பல அடக்குமுறை தற்சமயம் நடந்துகொண்டிருக்கின்றன.

குறித்த கண்ணீர்புகையானது காலாவதியான கண்ணீர்ப்புகை எனவும், இரசாயனம் கலக்கப்பட்ட கண்ணீர் புகை எனவும் குறிப்பிட்டதுடன், அதனால்தான் தங்களுடைய கட்சியினுடைய ஒரு உறுப்பினர் இறந்திருக்கின்றார் எனவும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியரும் இறந்திருக்கிறார் எனவும் அண்மையில் ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

இந்த காலாவதியான கண்ணீர் புகை அல்லது ரசாயனம் கந்த கண்ணீர்ப்புகையானது பொதுமக்களிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே இதை விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டிருக்கின்றார்.

சாதாரணமாக ஜனநாயக ரீதியில் நடக்கின்ற இந்த போராட்டத்திற்கு இப்படியான கண்ணீர்ப்புகையானது பொது மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற இரசாயனம் கலந்த புகைக்குண்டுகளை பாவிக்கின்றார்கள். என்று சொன்னால், இதுவரை காலமும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்திலே அப்பாவி பொதுமக்களிற்கு மேலே இந்த அரசாங்கத்தால் பாவிக்கப்பட்ட இரசாயன குண்டுகளை அதிலும் குறிப்பாக ஒரு யுத்தத்திலே பாவிக்க முடியாத சகல இரசாயன ஆயுதங்களையும் குண்டுகளையும் பாவித்து பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் இறப்பதற்கு மிக முக்கியமான காணமாக இருந்திருக்கின்றது.

ஆகவே, தற்சமயம் இந்த ஜனநாயக போராட்டங்களிற்கு பாவிக்கின்ற இந்த கண்ணீர்ப்புகை உயிர் ஆபத்தினை ஏற்படுத்திகின்றது என்று கண்டிக்கின்ற ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூறும் விடயம் தொடர்பில் நாங்களும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதேமாதிரி இந்த யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இந்த இரசாயன குண்டுகள், இதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவுகளிற்கும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பிலும் சரியான விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு இந்த அறகள போராட்டத்தின் மூலமாகதான் ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். அந்த போராட்டக்காரர்களிற்கு சகலவிதமான பாதுகாப்புக்களை பெற்றுத்தருவதாக சொன்ன ரணில் விக்ரமசிங்க இன்று ஜனநாயக ரீதியான போராட்டத்தை வன்முறைகொ்டு தடுக்க முற்படுவதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவற்றுக்கப்பால், பாராளுமன்ற உறுப்பினர்களிற்குள்ள சிறப்புரிமையை பாவித்து இந்த அரசாங்கத்தினுடைய கெடுபிடிகள், உள்ளுராட்சி மன்ற தேர்தலை வைக்க வேண்டும் உள்ளிட்ட விடயங்களிற்காக குரல் கொடுக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களையும்கூட அதிகார தோரணையில் ரணில் விக்ரமசிங்க அடக்குகின்றார்.

அவர்களை வாயை பொத்தவேண்டும் எனவும், அமரவேண்டும் என்றும் சொல்லி இந்த நாட்டில் இருக்கக்கூடிய சிரேஸ்ட அரசியல் தலைவரும் ராஜதந்திரியும் என்று சொல்லக்கூடிய ரணில்விக்ரமசிங்கவின் வாயிலிருந்து இவ்வாறான வார்த்தைகள் வருவதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆகவே இந்த பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களுமடைய தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்படாத வரைக்கும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட முடியாது. அப்படி காணுவதாக இருந்தால் அது தற்காலிகமான தீர்வாகதான் இருக்கும்.

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்களிற்கு, நிரந்தரமான பொருளாதார திட்டம் இல்லை. பொருளாதார கொள்கை இல்லை. வெளிவிவகார கொள்கைகூட இவர்களிற்கு இல்லை. இன்று சீனாவிற்கு ஒரு முகத்தையு்ம, இந்தியாவிற்கு ஒரு முகத்தையும், அமெரிக்காவிற்கு ஒரு முகத்தையும்தான் இவர்கள் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த ஒருவருட காலத்தில் இந்திய அரசாங்கம் செய்த உதவித்திட்டங்கள் இல்லையென்றால், இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் பட்டினி சாவை சந்திக்கக்கூடிய ஒரு நிலைதான் ஏற்பட்டிருக்கும்.

இந்திய அரசாங்கத்திடம் பெருந்தொகையான உதவிகளை பெற்றுக்கொண்டு, இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக சீனாசார்பு நிலைப்பாட்டைதான் கொண்டுள்ளார்கள். ராஜபக்சாக்களானாலும், ரணில் விக்ரமசிங்கவானாலும் குறைந்த பட்சம் இந்திய உதவியை பெற்றிருக்கின்றவர்கள் அவர்களிற்கு விசுவாசம் இல்லாதவர்களாகதான் நடந்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இந்தியாவானாலும், ஏனைய நாடுகளானாலும் இலங்கைக்கு நிதி உதவி செய்கின்றவர்கள், நீண்டகாலமாக தீர்க்கப்படாமலிருக்கின்ற தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் இந்த அரசாங்கத்திற்கு உதவித்திட்டங்களை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான கொரவமான தீர்வு காணப்படாதவரைக்கும் இந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என தெரிவித்தார்.