ஆசிரியர்கள், மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரித்தமை தொடர்பில் பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

யாழ் தெல்லிப்பழை பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற இல்ல மெய்வன்மை போட்டியின் இல்ல அலங்காரங்கள் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி தொடர்பில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கான விசாரணைக்கு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாளைய தினம்(05) பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழ தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றில் ஒலித்த கண்டனக் குரல்கள்

தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமையைக் குற்றச்செயலாக்கும் சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய அரசை வலியுறுத்தும் மாநாடு நேற்று (28) புதன்கிழமை பிரித்தானிய நாடாளுமன்ற அரண்மனையில் சிறப்பாக இடம்பெற்றது.

தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils for Labour) அமைப்பின் உறுதுணையுடன், தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சிபோன் மக்டொனா அம்மையாரின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவைச் சேர்ந்த கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா தலைமை தாங்கினார்.

இம் மாநாட்டில் தொடக்க உரையை நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சிபோன் மக்டொனா அம்மையாரும், சிறப்புரையினை தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிழல் நிதித்துறை அமைச்சருமான மாண்புமிகு ஜோன் மக்டொனல் , ஆதரவு உரையை ஆளும் பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டீன் ரசெல் ஆற்றினார்கள்.

இம் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சிபோன் மக்டொனா அம்மையார் உரையாற்றுகையில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்துலக குற்றமீறல்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் கடப்பாடு பிரித்தானிய அரசுக்கு இருப்பதை சுட்டிக் காட்டியதோடு, தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கு இடையூறாக விளங்கும் ஆறாம் திருத்தம் நீக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதன்போது சிறப்புரை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜோன் மக்டொனல், ஆறாம் திருத்தம் நீக்கப்பட்டால் மட்டுமே தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழல் ஏற்பட்டுத் தமது தன்னாட்சி உரிமையைத் தமிழர்கள் நிலைநாட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு தமிழர்களின் தன்னாட்சி உரிமையை சிறிலங்கா அரசாங்கம் மறுப்பது உலக நியதிகளுக்கு விரோதமானது என்பதை சுட்டிக் காட்டிய மாண்புமிகு ஜோன் மக்டொனல், தமிழீழ தாயகத்தில் தமிழர்களின் வழிப்பாட்டுத் தலங்களை ஆக்கிரமித்தல், போதைப் பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை சிறிலங்கா படைகள் மேற்கொள்வதையும் வன்மையாகக் கண்டித்தார்.

இவ்விடத்தில் ஆளும் பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் ரசெல் அவர்கள் உரையாற்றுகையில், தமிழர்களின் உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் நசுக்குவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.

இம் மாநாட்டில் உரையாற்றிய பிரெஞ்சு விரிவுரையாளர் இனெஸ் ஹசன்-டக்லி, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் வேற்றுமை காட்டும் சிறிலங்கா ஒரு இனநாயக நாடு என்று அழைக்கப்படும் தகுதியை மட்டும் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இவ்விடத்தில் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த மருத்துவபீட மாணவி செல்வி மூவாம்பிகை சதீஸ் அவர்கள் உரையாற்றுகையில், பிரித்தானியாவில் தான் அனுபவிக்கும் உரிமைகளையும், தாயகத்தில் எமது மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதையும் ஒப்பிட்டதோடு, தமிழ் மக்களின் உரிமைகளை அமைதிவழியில் வென்றெடுப்பதற்குக் கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளைப் பிரித்தானிய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதன்போது உரையாற்றிய குர்திஷ் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான ஹொஷ்வான் சதீக், தமிழ் மக்களுக்கு என்றும் குர்திஷ் மக்கள் உறுதுணை நிற்பார்கள் என்று உறுதியளித்ததோடு, ஈராக்கில் சுயாட்சி கொண்ட மாநிலமாக விளங்கும் தென்குர்திஸ்தான் தமக்கென்று தனியானதொரு இராணுவத்தையும், வெளியுறவுக் கொள்கையையும் கொண்டிருப்பது போன்று தமிழீழ மக்களுக்கு அவர்களைப் பாதுகாக்கக் கூடிய தமிழ் இராணுவத்தைக் கொண்ட சுயாட்சி மாநில அரசைப் பெறுவதன் மூலமே குறைந்த பட்சம் தனிநாட்டுக்கு அடுத்த படியாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆலோசனை வழங்கினார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய தென்சூடான் அரசியல் ஆய்வாளர் ஜஸ்ரின் மோராற், உறுதியோடு போராடியதன் விளைவாகவே தென்சூடான் விடுதலை பெற்றதாகவும், அது போன்று அரசியல் வழியில் ஒன்றுதிரண்டு போராடுவதன் மூலம் என்றோ ஒரு நாள் தமிழர்களும் தமது விடுதலையை வென்றெடுக்க முடியும் என்றும், இரவுக்கு முடிவாக நிச்சயம் விடியல் ஏற்படும் என்று தமிழர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவைச் சேர்ந்த கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா உரையாற்றுகையில், அரசியல்-ஜனநாயக முறைகளைத் தழுவி அமைதிவழி நின்று தமிழீழ மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் வெளிப்பட்டிருப்பதாக குறிப்பிட்டதோடு, அரசியல் வழியில் தமது உரிமைகளைத் தமிழீழ மக்கள் வென்றெடுப்பதற்கான திண்ணியமான அரசியல் வேலைத்திட்டங்கள் அடுத்த கட்டமாகப் பிரித்தானியாவிலும், ஏனைய நாடுகளிலும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் தென்சூடான், சூடான் ஆகிய தேசங்களைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்களோடு, ஈரானில் அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் அரபு சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும், ஆங்கிலேய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களோடு இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாடபாவித சுலோச்சன என்ற சிங்கள சகோதரர் கருத்துக் கூறுகையில், உண்மை தெரியாததன் காரணமாகவே பெரும்பாலான சிங்களவர்கள் தவறான பாதையில் செல்வதாகவும், எனினும் தன் போன்ற உண்மை தெரிந்த சிங்களவர்கள் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பொதுமக்களோடு, பிரித்தானியாவின் ஆளும் கட்சிக்கு ஆதரவான தமிழ் அமைப்பு ஒன்றின் பிரமுகர் ஒருவரும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களும், தாயகத்தில் இயங்கும் அரசியல் கட்சியான ரெலோ இயக்கத்தின் பிரித்தானிய பொறுப்பாளரான சாம் சம்பந்தன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் துச்சக்கர வண்டி பயணம் கடந்த 19ஆம் திகதி பெல்ஜியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக ,பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதித் தீர்வு என்பதை வலியுறுத்தியும் மோசமான காலநிலையினையும் பெருமளவானோர் இப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் அரசியற் சந்திப்பும் நடைபெற்றது.

அச்சந்திப்பில் தாயகத்தில் தொடரும் இனவழிப்புஇஅடக்குமுறை மற்றும் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அனைத்துலக நீதி பற்றிய தேவையினையும் எடுத்துக்கூறப்பட்டதோடுஇ எமது நிலைப்பாடு சார்ந்த மனுவும் போராட்டகாரர்களால் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிதிநிகிகளிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து மக்கள் பங்களிப்போடு துச்சக்கர வண்டி பயணம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை – முல்லை. நீதிமன்றில் அறிக்கை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியின்போது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம்(22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றையதினம்(22) இடம்பெற்ற வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன்,

ஏற்கனவே, அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கை இன்று மன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் த.பிரதீபன் அவர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பகுப்பாய்வின் அடிப்படையில் இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது.

அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இருப்பினும், அதற்கான நிதி அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே மீண்டும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்பிற்கான காரணம் போன்றவை இன்னும் வெளிவராமல் நிலுவையில் இருக்கின்றது என மேலும் தெரிவித்தார் .

இலங்கை ஜனாதிபதியின் புதிய பொறுப்புக்கூறல் முயற்சி குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கவலை

இலங்கை அரசாங்கம் புதிய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு முன்னர் முன்னைய ஆணைக்குழுக்கள் தெரிவித்துள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாதஅளவிற்கு தாண்டியுள்ளது எனவும் ஐடிஜேபி தெரிவித்துள்ளது.

இருந்தும் பிறிதொரு ஆணைக்குழுவை அரசாங்கம் உருவாக்கவுள்ளது உண்மை மற்றும் ஐக்கியம் நல்லிணக்கம் ஆணைக்குழு எனப்படும் இந்த புதிய ஆணைக்குழு உண்மையை கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 36 ஆணைக்குழுக்களின் வரிசையில் இணைந்துகொண்டுள்ளது எனவும் உண்மை நீதிக்கான சர்வதேச திட்டம் தெரிவித்துள்ளது.

எனினும் நீதியும்பொறுப்புக்கூறலும் இன்னமும் சாத்தியமாகத விடயங்களாவே காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நீதிகோரி காணாமல்போனவர்களின் உறவுகள் துணிச்சலுடன் வீதிக்கு இறங்கி இன்றுடன் 8 வருடங்களாகின்றன என தெரிவித்துள்ள ஐடிஜேபி இதன் பின்னர் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை அறியாமலே 240 முதிய உறவினர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரித்து 37 சிவில்சமூக அமைப்புகளும் 19 சிவில்சமூக செயற்பாட்டாளர்களும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் அவர்கள் கடந்தகால ஆணைக்குழுக்களின் தோல்விகளை சுட்டிக்காட்டுகின்றனர் அவர்கள் வெளியிட்ட ஆவணங்களை அரசாங்கங்ம் பகிரங்கப்படுத்த தவறியதை சுட்டிக்காட்டுகின்றனர் புதிய ஆணைக்குழுவிற்கு போதிய அதிகாரங்கள் இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர் பொருத்தமான நீதிப்பொறிமுறை இன்மை கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியமையையும் சுட்டிக்காட்டுகின்றனர் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் அமைத்து, நாம் அடையாளம் கண்ட 36 ஆணைக்குழுக்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இவற்றில் மூன்றில்

ஒரு, அதாவது 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. பெரும்பாலான ஆவணங்கள்

அரசாங்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும், வெறும் ஒருசில ஆணைக்குழுக்களின் அறிக்கைகளே அவ்விணையத்தில் பதிவேற்றம்

செய்யப்பட்டுள்ளன. உண்மையில், கடந்த கால ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட 22 அறிக்கைகளில், வெறும் 11 அறிக்கைகளின் பிரதிகள் மட்டுமே

எம்மால் கண்டுபிடிக்கமுடிந்தது.எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது

மேலும், கடந்த காலங்களில், என்ன நடந்தன என்பதை நிறுவுவதற்கான விசாரணை வடிவங்களே மேற்கொள்ளப்பட்டன, மாறாக, குற்றத்திற்குக்

காரணமானவர்களைப் பொறுப்புக்கூறவைப்பதற்காக அல்ல, இதனால், அதே நபர்களால் திரும்பத்திரும்ப பெரும் அநீதிகள் மேற்கொள்ளப்பட வழிவகுத்தது.

சிறிலங்கா ஜனாதிபதி அண்மையில் பரிந்துரைத்துள்ள பொறுப்புக்கூறல் முயற்சி தொடர்பான கடுமையான கவலைகளை இது எழுப்புகின்றது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தில் கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்வதன் மூலமாக அவற்றின் உள்ளடக்கங்களை அங்கீகரிப்பதேஎனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது

உண்மையை நோக்கிய முதலாவது படியாக அமையும். நேர்மைத்தன்மையுடன் செயற்படுவதற்கு, படலந்த சித்திரவதைக்கூடத்தில் நடந்த சித்திரவதைகளும்

தடுத்து வைப்புக்களும் ரணில் விக்கிரமசிங்கவிற்குத் தெரியாமல் நடந்திருப்பது சாத்தியமில்லை5 என்று கூறும் பத்தலந்த ஆணைக்குழுவின் அறிக்கை

போன்ற, ஜனாதிபதியின் பெயரையும் உள்ளடக்கும் அறிக்கைகளையும் இதில் உள்ளடக்கவேண்டும்.

இதுவரை வெளியிடப்படாத அறிக்கைகளை வெளியிடும்படியும், கடந்த கால அறிக்கைகள் அனைத்தையும் பின்வரும் ஜனாதிபதி இணையத்தளத்தில்

வெளியிடும்படியும் சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம்.எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது

Posted in Uncategorized

மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை பின்னோக்கி வேகமாக பயணிக்கின்றது

இலங்கை மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் பின்னோக்கி வேகமாக பயணிக்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசியப் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை இன்னமும் தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றது.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துவதிலும், சர்வதேச மனித உரிமைகளை மட்டுப்படுத்துவதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழாக இலங்கையானது மனித உரிமைகள் விடயத்தில் வேகமாக பின்நோக்கிச் செல்கின்றது.

விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ‘காணாமல் போனவர்களின்’ குடும்பங்களுக்கு பதில்களை வழங்குவதாகவும், துஷ்பிரயோகங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதாகவும் உறுதியளித்தது.

அத்துடன், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்வதேச கவனத்தின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன. இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் சட்டமூலத்தை, உள்நாட்டுப் போர் அட்டூழியங்களுக்குத் தீர்வு காண்பதாகக் கூறப்படும் நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் மௌனமாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை கையாள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த ஆண்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரியல் அமைப்பின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் மக்களை அடக்குறைக்கு உட்படுத்தும் அடைக்குமுறைச் சட்டத்தினை அமுலாக்குவதற்கு தயாராகியுள்ளார்.

அத்துடன்,1990 களில் இருந்து தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய குறைந்தது 10 ஆணைக்குழுக்களை நியமித்துள்ளன.

அந்த வகையில் தற்போதைய புதிய சட்டங்கள் வெறுமனே முந்தைய தோல்வியுற்ற முயற்சிகளை பிரதிபலிப்பதோடு பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் புறக்கணித்துள்ளதோடு இலங்கையின் சர்வதேச சட்டக் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் பின்தங்கிய செயற்படுகளையே வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார்.

தனிப்பட்ட முறையில் திலித் ஜயவீரவும் மவ்பிம ஜனதா கட்சியும் நாட்டு மக்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கும் குழு அல்ல. எனவே நீங்கள் எங்களை நம்பலாம். இந்த இலங்கை அரசியலில் 75 வருடங்களாக தொடர்ந்து சீரழிக்கப்பட்ட அரசியலுக்கு முடிவு கட்டுவோம்’’ என்றார்.

யாழில் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவரது வாக்குமூலம் நேற்று வியாழக்கிழமை (01) எம்மால் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

இதேவேளை சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற கட்டளையின் பேரில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரது வாக்குமூலம் எம்மால் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று பதிவுசெய்யப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கல்லீரல் செயலிழப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா். இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன.24-ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட அவா், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்

பொதுமக்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்க வேண்டும் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்கவேண்டாம் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த தனது அவதானிப்புகள் குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

பயங்கரவாதகுற்றம் என்பதற்கான வரைவிலணக்கத்தை கணிசமான அளவில் குறைக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பயங்கரவாத குற்ற சந்தேகநபருக்கு எதிராக பிறப்பிக்கப்படும் தடுப்பு உத்தரவு நீதித்துறையின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பயங்கரவாத குற்றச்செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட எந்த சந்தேகநபருக்கும் எந்த நேரத்திலும் பிணைவழங்கும் அதிகாரம் நீதிபதிகளிற்கு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் சட்டத்தின் உதவியை நாடுவதற்கான உரிமை வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இந்த உரிமையை கண்மூடித்தனமான நியாயமற்ற நிபந்தனைகள் இன்றி வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்கவேண்டாம் எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு நீதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன – கனடிய பிரதமர்

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தைப்பொங்கல் நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே அவர் இந்த கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் தமது தந்தையாரின் தலைமையிலான லிபரல் கட்சி 1800 இலங்கை தமிழர்களை கனடாவில் குடியேற்றியது.

இந்த தொகை கடந்த பல தசாப்தங்களில் அதிகரித்து இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடாக கனடா பார்க்கப்படுகிறது.

அத்துடன் கனடாவின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு வியக்கத்தக்கது.

இதன் காரணமாகவே 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தை தமிழர் வரலாற்று மாதமாக கனேடிய அரசாங்கம் பிரகடனம் செய்தது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கனடா தொடர்ந்தும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் செயற்பட்டு வருகிறது.

அத்துடன் வேறு எந்த நாடும் நடைமுறைப்படுத்தாத வகையில் இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.