தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பு – இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் – புதிய தீர்மானத்தை சமர்ப்பித்தனர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்துள்ளனர்.

அமெரிக்க காங்கிரசின் டெபராரொஸ் பில் ஜோன்சன் இருவரும் இணைந்து ஈழத்தமிழர்கள் ஜனநாயகரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம் செய்யப்படவேண்டும், நீடித்த அமைதியான அரசியல் தீர்வை காண்பதற்கு பொதுவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் இருகட்சி தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் தமிழ்இன அழிப்பின் 14 வருடநினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபட்ட தருணத்திலேயேஅமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர்.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் தமிழர் தாயகப்பகுதிகளை இலங்கை இராணுவம் தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளதாகவும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ்மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக குரல் எழுப்புவதை தடுக்கும் ஆறாவது திருத்தச்சட்டம் காரணமாக கருத்துசுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள தீர்மானம் தெரிவித்துள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்,ஈழத்தமிழர்களின் பாராம்பரிய தாயகத்தை அங்கீகரிக்கவேணடும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் தீர்மானத்தின் நகலில் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தை சரியான எண்ணிக்கைக்குள் பேணுவோம் என அமெரிக்க அதிகாரியிடம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி

இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணி, பாரம்பரிய இராணுவக் கடமைகளில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம்) திருமதி அஃப்ரீன் அக்தருடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் திருமதி அக்தரிடம் தெரிவிக்கப்பட்டன.

அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

மேலும் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவும் அமெரிக்காவின் முயற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகளை அதன் பாதுகாப்புக் கொள்கையில் முன்வைப்பதற்கான இலங்கையின் முயற்சிகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.

இச்சந்திப்பை நினைவுகூரும் வகையில், பிரதி உதவிச் செயலாளர் அக்தர், இராஜாங்க அமைச்சர் தென்னகோனுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் இ.சொனெக், தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் மதசிறுபான்மையினத்தவர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்கின்றது – அமெரிக்கா

2022 இல் இலங்கையில் மதசிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டார்கள் என அமெரிக்கா மதசுதந்திரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனான சந்திப்பின்போது அமெரிக்க தூதரக அதிகாரிகள் மோதலுக்கு பிந்தைய நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு பகுதியாக இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களை மதித்து அவர்களை அரவணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர் என அமெரிக்க இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மதசிறுபான்மை குழுக்களை சேர்ந்தவர்களை துன்புறுத்தல் அவர்களிற்கு எதிரான பாரபட்சம் குறித்த கரிசனைகைளை தெரிவிப்பதற்காக தூதரக மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளை சந்தித்தனர் என தெரிவித்தனர் என அமெரிக்கா மத சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

மின்சாரதுறை மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு

வலு சக்தி துறை மற்றும் மின்சாரத்துறை மறுசீரமைப்புக்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் அதன் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் திங்கட்கிழமை (08) அமைச்சில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் ஆலோசகர் அரிந்தம் கோஷ் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் 8 வாரங்களுக்குள் மறுசீரமைப்புக்களுக்கான வரிபடத்தை தயாரித்து , அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி வேண்டி நிற்பவர்களுடன் அமெரிக்கா ஐக்கியமாக நிற்கிறது-ஜூலி சுங்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் அமெரிக்கா கெளரவிப்பதோடு, நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஐக்கியமாக நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் செய்தியில், “நான்கு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை இன்று நான் நினைவுகூர்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் அமெரிக்கா மரியாதை செலுத்துகிறது. நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஐக்கியமாக நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஐ.எம்.எவ் உதவி தமிழ் மக்களுக்கு எதிரான கலாசார இனவழிப்பை மேற்கொள்வதற்கான உந்துசக்தியை வழங்கியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டமானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை மீண்டும் இலங்கைக்கு வழங்கியிருப்பதுபோல் தெரிவதாக ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

அண்மையகாலங்களில் நீராவியடி பிள்ளையார் கோயில், குருந்தூர்மலை சிவன்கோயில், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் என்பன உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் சைவசமய வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டுவரும் சம்பவங்களை அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு கடுமையாகக் கண்டித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டமையானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை இலங்கைக்கு மீண்டும் வழங்கியிருப்பதுபோல் தெரிகின்றது என்றும் அக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டுமொருமுறை சர்வதேச சமூகத்தை வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ள ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு, இந்த அட்டூழியங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் பாராமுகமாக இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறும் அக்குழு அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்; அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் கடந்த ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு விசாரணை செய்து அவர்களை தண்டிக்க அரசாங்கம் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மே 9 அன்று கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறை சம்பவத்தின் பின்னர் 3,300 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 2,000 ற்கும் அதிகமானோர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய அனுமதிக்கு அமெரிக்கா வரவேற்பு

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, பொருளாதார மீட்சிக்கான பாதையின் ஒரு முக்கியமான படி இதுவென்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும் என்றும் வேலைத்திட்டங்கள் மற்றும் பொருளாதாரம் பாதையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அனைவரும் பயன்பெறும் வகையில் சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு தீர்வு காணும் கட்டமைப்பு மற்றும் நீடித்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் நாடு எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள்வதற்கு வலுவான சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழலுக்கு எதிரான சட்டத்தை மறுசீரமைப்பது உட்பட ஊழலைச் சமாளிக்கும் முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

உறுதியான வங்கி முறையை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்றும் நிதி மேற்பார்வை மற்றும் நெருக்கடி மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் இலங்கைக்கு தற்போது அவசியம் – அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.