15 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்திய மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை 10 தவணைகளில் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 28 ஆம் திகதி 15 மில்லியனை இழப்பீடாக செலுத்திய அவர், மீதமுள்ள தொகையை 2024 ஜூன் 30 முதல் 2033 ஜூன் 20 வரை கட்டம்கட்டமாக 8.5 மில்லியனை செலுத்துவதாக கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் தங்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அவர்கள் செயல்படத் தவறியதால் உயிரிழந்தவர்களுக்கு மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500/- ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285/ ரூபா பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிருப்தி

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில் இலங்கையில் பொலிஸ் மா அதிபரின் வகிபாகம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுதல், பொது மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் போன்ற பொறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடைய மிகவும் முக்கியமான பங்கு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26, 2023 அன்று முடிவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிதுந்த ஜயவர்தன மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் உள்ளனர் எனப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பணிப்பாளராக கடமையாற்றிய போதே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இத்தாக்குதலில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான அப்பாவி மக்கள் உயிர்களையும் அவயவங்களையும் இழந்தனர்.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டுமென ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகள் எதிர்காலத்தில் வெளிவரும் – பேராயர்

ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் வெளிவரும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழாவின் விசேட ஆராதனையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று இடம்பெற்றது.

காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய இந்த திருவிழாவின் திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.

விசேட ஆராதனை நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பணத்தை வீசி எறிந்து கொள்கைகளை காட்டி சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்திலும் இன்னும் சில இடங்களிலும் குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் யாவர்? எவ்வாறு சம்பவித்தது என்று முறையான விசாரணைகளை நடத்தினார்களா? அதன் உண்மை தன்மை குறித்து ஆராய்தார்களா? சட்டம் எங்கே? நீதி எங்கே? இன்று வரையில் எதற்கும் பதில் இல்லை.
எங்களை ஏமாற்றலாம் என்று இவர்கள் நினைக்கின்றார்கள்.

நாங்கள் ஏமாறுவதில்லை. நீங்கள் தான் ஒருநாளில் ஏமாறுவீர்கள். தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் உயிர்களை காவுகொள்ள அனுமதி வழங்கியவர்கள், தைரியத்தை வழங்கியவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இன்று உயர்ந்த பதவிகளில் இருக்கின்றார்கள்.

ஆனால் அதற்கான பலன் உங்களை தேடி வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கூடிய விரைவில் நீங்களே உங்களை காட்டிக்கொடுத்து உங்களுக்கூடாகவே அந்;த உண்மைகள் அனைத்தும் வெளிவரும்.
இந்த தேவாலயத்தில் மிகப்பெரிய உற்சவம் ஒன்றை நடத்துவதற்கு அந்த நாள் வரும் வரை காத்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உயிர்த்தஞாயிறுதாக்குதல்களை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் – சந்திரிகா

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இது முஸ்லீம்களிற்கு எதிரானநடவடிக்கை இந்த நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது அது மீண்டும் நிகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்,என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், வைத்தியர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் – கர்தினால் மல்கம் ரஞ்சித் கலந்துரையாடல்

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (22)  இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரும் இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துடனான சந்திப்பு குறித்து பெருமிதமடைவதாக தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி, இந்த மிலேச்சத்தனமான தாக்குதலின் முழுமையான பின்னணி குறித்து சுயாதீனமானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கொழும்பு பேராயரின் மனுவை பரிசீலனைகு எடுத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த எழுத்தணை மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதன்போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை மே மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானித்தது.

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவற்றை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் விடுவிக்க கோரிய மைத்திரியின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்படுத்தப்பட்டு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங் குணவர்தன ஆகிய  இருவரடங்கிய நீதிபதிகள்  குழு முன்னிலையில் புதன்கிழமை (1) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து , அவற்றிலிருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த மேன்முறையீடு  மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதற்கமைய போதுமான புலனாய்வு தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை  தடுக்க  தவறியதன் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள்  தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர்  அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 12ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டுமெனவும்  முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவையும் , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவையும் , சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரி மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்தது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் தாக்குதல் ஒரு துயரச் சம்பவம் எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்- ஐநா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை நிலைநாட்டவேண்டும் நீதியை நிலைநாட்டவேண்டும் பாதிக்கப்பட்டவர்களிற்கு முழுமையான இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் அவர்களின் குடும்பத்தவர்களின் துயரத்தினை எவ்வளவு பெரிய இழப்பீட்டினாலும் ஈடுசெய்ய முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி இழப்பீட்டிற்கான உரிமைகளை அங்கீகரிப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் முன்னோக்கிய ஒரு படியை குறிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் செயற்பாடின்மை மற்றும் கண்காணிப்பின்மை குறித்து நீதிமன்றம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள லோரன்ஸ் தாக்குதல் எவ்வேளையும் தாக்குதல் இடம்பெறலாம் என புலனாய்வு பிரிவினர் தகவல் வழங்கியபோதிலும் முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு அதிகாரிகளும் தாக்குதலை தடுக்க தவறிவிட்டனர் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் உரிய இழப்பீட்டினை பெறுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் நிதிகளை வழங்கும்போது பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் பிரதிநிதிகளை கலந்தாலோசனை செய்யவேண்டும் எனவும் ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அதிகாரிகளிற்கான மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ள லோரன்ஸ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளின் முடிவுகளை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.