இலங்கையின் உள்விவகா ரத்தில் தலையிட கனடாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற புனர்வாழ்வு பணி யகச் சட்ட மூலத்தைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,
உலகில் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததை எவ்வாறு குற்றச் செயலாகக் கருத முடியும். விடுதலைப் புலிகள் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தி ருந்தாலும், பிரிவினைவாதிகள் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்து வரு கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்குக் கனடா தடை விதித்துள்ளது. கனடாவில் வாழும் பிரிவினைவாத தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடைக்காகக் கூறப்பட்ட காரணங்களில் உண்மையில்லை. போரை நிறைவுக் கொண்டு வந்த அரச தலைவர்கள், இராணுவத்தினர் அரசியல் நோக்கத்துக்காகத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இலங்கையில் சிவில் யுத்தம் ஒன்றும் இடம்பெறவில்லை மாறாக பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் இடம்பெற்றது என்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான போராட்டத்தை இன அழிப்புச் செயற்பாடு என்று சித்திரிப்பதை முதலில் நிறுத்திக்கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமிழ் மக்களையும், முஸ்லிம்களையும் கொன்று குவித்தார்கள், கருவில் இருந்த சிசுவைக்கூட அழித்தார்கள். இதனை ஏன் சர்வதேசம் மனித உரிமை மீறல் குற்றமாகக் கருதவில்லை?
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தி அனைத்து இன மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய இராணுவத்தினரைச் சர்வதேச நீதிமன்றக் குற்றவாளி கூண்டில் நிறுத்த சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சதி செய்கின்றன . இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் கனடா நாட்டில் நிற வெறிச் செயற்பாடுகள் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம் பெறுகின்றன. ஆகவே, இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்த முன்னர் கனடா தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும்.
இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மாத்திரம்தான் தமது அரசியல் தேவைகளுக்காக நல்லிணக்கம் இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் செய்கின்றார்கள். இலங்கையின் உள்விவகாரத் தில் தலையிட கனடாவுக்கு உரிமை கிடையாது – என்றார்.