கனடா தன் நாட்டில் இடம் பெறும் நிறவெறிச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் அவதானம் செலுத்த வேண்டும் – சரத் வீரசேகர

இலங்கையின் உள்விவகா ரத்தில் தலையிட கனடாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற புனர்வாழ்வு பணி யகச் சட்ட மூலத்தைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

உலகில் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததை எவ்வாறு குற்றச் செயலாகக் கருத முடியும். விடுதலைப் புலிகள் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தி ருந்தாலும், பிரிவினைவாதிகள் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்து வரு கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்குக் கனடா தடை விதித்துள்ளது. கனடாவில் வாழும் பிரிவினைவாத தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடைக்காகக் கூறப்பட்ட காரணங்களில் உண்மையில்லை. போரை நிறைவுக் கொண்டு வந்த அரச தலைவர்கள், இராணுவத்தினர் அரசியல் நோக்கத்துக்காகத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இலங்கையில் சிவில் யுத்தம் ஒன்றும் இடம்பெறவில்லை மாறாக பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் இடம்பெற்றது என்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான போராட்டத்தை இன அழிப்புச் செயற்பாடு என்று சித்திரிப்பதை முதலில் நிறுத்திக்கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமிழ் மக்களையும், முஸ்லிம்களையும் கொன்று குவித்தார்கள், கருவில் இருந்த சிசுவைக்கூட அழித்தார்கள். இதனை ஏன் சர்வதேசம் மனித உரிமை மீறல் குற்றமாகக் கருதவில்லை?

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தி அனைத்து இன மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய இராணுவத்தினரைச் சர்வதேச நீதிமன்றக் குற்றவாளி கூண்டில் நிறுத்த சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சதி செய்கின்றன . இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் கனடா நாட்டில் நிற வெறிச் செயற்பாடுகள் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம் பெறுகின்றன. ஆகவே, இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்த முன்னர் கனடா தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும்.

இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மாத்திரம்தான் தமது அரசியல் தேவைகளுக்காக நல்லிணக்கம் இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் செய்கின்றார்கள். இலங்கையின் உள்விவகாரத் தில் தலையிட கனடாவுக்கு உரிமை கிடையாது – என்றார்.

மகிந்த, கோட்டாபயவுக்கு ஏனைய நாடுகளும் தடை விதிக்க வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் ஒரு முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் கடற்படை அதிகாரி மீது தடை விதித்து கனடா மேற்கொண்டுள்ள நட வடிக்கைகளை ஏனைய அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண் காணிப்பு அமைப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஒரு நாடு எடுத்த சக்தி வாய்ந்த முடிவு இது என்று தெரிவித் துள்ள மீனாட்சி கங்குலி, உலகின் மற்ற பெரிய நாடுகளும் இதே போன்ற நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1983 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட “மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்” அனைவரும் சம்பந்தப்பட்டவர்கள் – என்று அவர் கூறுகிறார்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:- கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, கனடா “சர்வதேச சட் டத்தை மீறுபவர்களுக்கு எதிரான சர்வ தேச தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். இதில் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் ஆகியவை அடங்கும்.

மகிந்த ராஜபக்ஷ 2005-2015 வரை ஜனாதிபதியாக இருந்தார், உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்கள் உட்பட, இலங்கை இராணுவப் படைகள் ஏராள மான போர்க்குற்றங்களை இழைத்துள்ளன. இராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று காயப்படுத்தியது. பல போராளிகள் மற்றும் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர் . ஐக்கிய நாடுகள் சபை, ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிற குழுக்கள் அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகளின் விரிவான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச போரின் இறுதிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். போர்க்குற்றங்களை தவிர, ஊடகவியலாளர்கள் மற்றும் செயல்பாட் டாளர்களின் கடத்தல் மற்றும் கொலை செய்ததில் தொடர்புடையவராக கருதப் படுகிறார் . அவர் 2019 இல் ஜனாதிபதி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதாரத்தை அவர் தவறாகக் கையாண்டதால் தூண்டப்பட்ட வெகுஜன எதிர்ப்புகள் அவரை ஜூலை 2022 இல் இராஜிநாமா செய்யவைத்தன.

உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட ‘மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்’ சம்பந் தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு முன்னாள் இராணுவத்தினருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடுத்த கோரிக்கைகள் நீண்டகாலமாக கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஆணையர் “மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் நம்பகத் தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மேலும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை ஆராயுமாறு” அரசாங்கங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

கனடாவின் பொருளாதாரத் தடை கள் முக்கியமானவை, ஏனெனில் – முதல் முறையாக – அவை குற்றங்கள் செய்யப் பட்டபோது ஒட்டுமொத்த கட்டளையில் இருந்தவர்களை குறிவைக்கின்றன. இதை மற்ற அரசுகளும் பின்பற்ற வேண்டும். பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை அவர்களின் தலைமைப் பாத்திரம் எதுவாக இருந்தா லும் அவர்களைக் கணக்குப் போட்டு நீதியை உறுதிப்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது – என்றும் கூறியுள்ளார்

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தடை விதிக்க பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராக கனடா தடைவிதித்துள்ள நிலையில், பிரிட்டனின் பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருவது குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் கரெத் தோமஸ் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் தடைவிதிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்திவரும் பின்னணியில், கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே கரெத் தோமஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் தடைவிதித்திருக்கின்றது.

ஆனால் இங்குள்ள பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு உதவும் வகையில் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருகின்றார்கள்’ என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

கனடாவின் செயற்பாடு பொறுப்பற்ற செயலாகும் – அலி சப்ரி அதிருப்தி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கு இடையில் இன்று (ஜன 11) புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இலங்கையின் அதிருப்தியை அமைச்சர் அலி சப்ரி வெளிப்படுத்தியுள்ளார்.

மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கனேடிய அரசாங்கத்தினால் பல்வேறு முக்கிய தடைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் கனேடிய உயர்ஸ்தானிகரை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு வரவழைத்து அமைச்சர் இலங்கையின் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தமை இந்த முக்கியமான தருணத்தில் பொறுப்பற்ற செயலாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நல்லிணக்கத்தை அடைவதற்காக ஆழமான  பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் நாடு ஈடுபட்டுள்ள வேளையிலேயே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் இந்த நடவடிக்கையானது தற்போதைய சந்தர்ப்பத்தில் உதவியற்றதும் , இலங்கையிலுள்ள சமூகத்தினரை ஓரங்கட்டுவதைப் போன்ற செயற்பாடுமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர்களை தடை செய்வதுமாத்திரம் போதாது- சர்வதேச நீதி பொறிமுறை அவசியம் – புலம்பெயர் செயற்பாட்டாளர்

தனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது  குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் என இலங்கையின் நீதி மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பின் ஆலோசகர் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

தடை ராஜபக்ச சகோதரர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அமெரிக்க கனடா இங்கிலாந்து போன்ற நாடுகளிடமிருந்து பல வருடங்களாக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது இலங்கை தான் தொடர்ச்சியாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது, எனவும் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு பின்னர் கனடா தடைகளை அறிவித்துள்ளமை தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள்  இலங்கையை துரத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது  குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த, கோட்டாபய ராஜபக்ச மீது பொருளாதார தடைகளை விதித்தது கனடா

முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கையர்கள் மீது கனடா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இராணுவத்தை சேர்ந்த மிருசுவில் படுகொலையாளி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோரே தடைவிதிக்கப்பட்ட ஏனைய இருவருமாவர்.

கனேடிய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில், கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, 1983- 2009 வரையான ஆயுதப் போரின் போது மனித உரிமைகளை மீறுவதற்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடைகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

“சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள், பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு ஒரு பரிவர்த்தனை தடையை விதிக்கின்றன, இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் முடக்கி, குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவிற்கு அனுமதிக்க முடியாததாக மாற்றும். பொறுப்புக்கூறல் தொடர்பில் கனடா மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கு அர்த்தமுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் முன்னேற்றத்தையும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கிறது. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் நீதிக்கு தகுதியானவர்கள். எனவேதான், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை நிறுவுவதற்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு கனடா தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்தவர்களுக்குத் தொடரும் தண்டனை விலக்கை கனடா ஏற்றுக்கொள்ளாது என்ற தெளிவான செய்தியை இந்தத் தடைகள் வெளிப்படுத்துகின்றன.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்காக வாதிடுவதற்கு தொடர்புடைய பலதரப்பு அமைப்புகள் உட்பட சர்வதேச பங்காளிகளுடன் கனடா தொடர்ந்து ஒத்துழைக்கும், இது நாட்டிற்கான பாதுகாப்பான, அமைதியான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான முக்கியமான படியாகும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழுவின் ஒரு பகுதியாக கனடா, 51/1 தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் சமாதானத்தை அடைவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தொடர்ந்து வாதிடும்.

இலங்கையில் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் போக்குவதற்கான அவசர அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நோக்கிய முயற்சிகளுக்கு கனடா ஆதரவளிக்கிறது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் செயற்படுவதை நாங்கள் வலுவாக ஊக்குவிக்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கனடா 3 மில்லியன் நிதியுதவி

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு 3 மில்லியன் (ஏறத்தாழ 817 மில்லியன் இலங்கை ரூபாய்) டொலர்களை கனடா வழங்குகிறது என்று இலங்கையிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் (IFRC) மனிதாபிமான முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த உதவி வழங்கப்படுகிறது.

அவசரகால உணவு உதவி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள், பாதுகாப்பான நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை மிகவும் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்கு ஆதரவளிப்பதற்கு, ஐ.நா மற்றும் IFRC மூலம் அவர்களின் உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து இந்த பங்களிப்பு வழங்கப்படும்.

மேலும், இலங்கையின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்தல் உட்பட இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கும் தொடர்ந்து சர்வதேச உதவித் திட்டங்களை கனடா முன்னெடுத்துள்ளது.

இந்த இக்கட்டான காலங்களில் அனைத்து இலங்கையர்களுடனும் கனடா தொடர்ந்து நிற்கிறது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான இலங்கையை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது என்று உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான கனடாவின் புதிய தூதுவர் எரிக்வோல்ஸ்

இலங்கைக்கான கனடாவின் புதிய தூதுவராக எரிக்வோல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

1995 முதல் கனடா இராஜதந்திரியாக பணியாற்றி வரும் எரிக்வோல்ஸ் தென்கொரியா துருக்கி ருமேனியா ஆகியவற்றிற்கான   தூதுவராக  பணிபுரிந்துள்ளார்.

Posted in Uncategorized

அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை – சம்பந்தன்

இலங்கையில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள அவ்வர்த்தகப்பிரமுகர்கள் குழுவினர், தமிழ்மக்களுக்கு மிக அவசியமான 5 – 6 தீர்வுகளைப் பட்டியலிட்டு தம்மிடம் வழங்கினால் அதனை கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடியத்தூதுவருடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்க தம்மால் முடியும் என்றும், அதனூடாக பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யும் அதேவேளை அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தையும் வழங்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் தலைமையில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் 17 பேரடங்கிய குழுவொன்று கடந்த வாரம் நாட்டை வந்தடைந்துள்ளதோடு பல தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றது  என்பது குறிப்பிடத்தக்கது.