பொரளை லேக் டிரைவ் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்குள் சிலர் புகுந்து, தம்மை கட்டி வைத்து கொள்ளையடித்ததாக சீன பிரஜை ஒருவரின் முறைப்பாடு போலியானது என கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய 38 வயதான சீன வர்த்தகர், பிரமிட் மோசடிகள் மூலம் 40 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர், அவரது நண்பர் என சீன இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சீன பிரஜை, ஏனைய சீன பிரஜைகள் குழுவுடன் இணைந்து இந்த நாட்டில் பிரமிட் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததை மறைப்பதற்காக இந்த சீன நபரே திட்டமிட்டு கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
20ஆம் திகதி அவர் பொலிசில் முறையிட்டிருந்தார். தனது 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கொள்ளையடித்துள்ளனர் என அதில் குறிப்பிட்டனர்.
கடந்த 19ஆம் திகதி வியாபார நிமித்தம் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியதாக இந்த சீன பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். புகாரின்படி, அவர் தனது மொழிபெயர்ப்பாளருடன் ஊதா நிற கேடிஹெச் வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். வாகனத்தின் உரிமையாளரே தனது மொழிபெயர்ப்பாளர் மற்றும் சாரதி என சீன நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
மொழிபெயர்ப்பாளருடன் வீட்டிற்குள் நுழைந்த போது, வீட்டிற்குள் இருந்த முகமூடி அணிந்த மூன்று நபர்கள் தம்மைத் தாக்கி, கழுத்தில் வாளை வைத்து, கைகளைக் கட்டியதாக சீன வர்த்தகர் பொலிஸாரிடம் தெரிவித்தார். தான் துப்பாக்கி முனையில் கட்டப்பட்டதாக மொழி பெயர்ப்பாளர் போலீசாரிடம் தெரிவித்தார்.
அப்போது ஒருவர் தனது மொபைல் போனை எடுத்து சோதனை செய்ததாக சீன தொழிலதிபர், பொலிசாரிடம் கூறினார். தொலைபேசி பூட்டப்பட்டிருந்ததால் கொள்ளையர்கள் தம்மை அச்சுறுத்தியதாகவும், அதனைத் திறக்கும் போது, தனது நண்பர் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தான் சிக்கலில் இருப்பதாகவும் தெரிவித்ததாக சீன பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
செய்தி அனுப்பிய சிறிது நேரத்திலேயே வீட்டின் மணி அடித்ததையடுத்து வீட்டில் தங்கியிருந்த கொள்ளையர்கள் பீதியடைந்து வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். மூன்று கொள்ளையர்களும் வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அதே நேரத்தில் சீனப் பிரஜையின் நண்பர்களும் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது வழக்கத்திற்கு மாறான சம்பவம் என்பதால் இது குறித்து முதல் சந்தேகம் எழுந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு நண்பர்கள் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் தனது மற்றும் மொழிபெயர்ப்பாளரின் கைகளை அவிழ்த்ததாகவும் சீன நாட்டவர் பொலிஸாரிடம் கூறினார். வீட்டைச் சோதனையிட்டபோது, கொள்ளையர்கள் தமது வாகனத்தில் தப்பிச் சென்றதையும், சமையல்காரர் கை, வாய் கட்டப்பட்டு வீட்டின் உள்பக்கமாக அடைக்கப்பட்டிருந்ததையும் கண்டதாக கூறியுள்ளார்.
23.8 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான அமெரிக்க டொலர்கள், யுவான், தாய்லாந்து நாணயம், ஹொங்கொங் டொலர்கள், திர்ஹாம்கள் மற்றும் இலங்கை ரூபா என்பவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக சீன பிரஜை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி 11 கையடக்கத் தொலைபேசிகள், 7 மடிக்கணினிகள், ஐந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள், அர்மானி கைக்கடிகாரம், பெறுமதியான இடுப்புப் பட்டை மற்றும் வாகனங்கள் என்பன கொள்ளையிடப்பட்ட ஏனைய பொருட்களில் அடங்கும். அந்த சொத்துக்களின் மதிப்பு 17.7 மில்லியன் ரூபாய்.
கமரா அமைப்பு இருந்தாலும், பாதுகாப்பு கமரா காட்சிகளை சேமித்து வைத்திருக்கும் டி.வி.ஆரும் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக சீன நாட்டவர் புகார் அளித்துள்ளார்.
இந்த சீன பிரஜைகள் தங்கியிருந்த வீடு 70 மில்லியன் ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வீட்டில் இருந்தே இந்த மோசடி நடந்துள்ளது. பொலிசார் அந்த வீட்டை சோதனையிட்ட போது, பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கும்பல் தப்பிச் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சீன பிரஜைகள் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த நாட்டில் தங்கியிருந்து இந்த சர்வதேச பிரமிட் திட்டத்தை ஒன்லைனில் நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்பட்ட பல மடிக்கணினிகளையும் பொலிசார் கண்டுபிடித்தனர். சோதனையின் போது, அங்கு தங்கியிருந்த சுமார் 15 சீன பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட சுமார் 40 மடிக்கணினிகளை அவர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணையில், வாகன சாரதியகவும் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்ட நபருக்கு திட்டத்தை செயல்படுத்த ரூ.1.5 மில்லியன் வழங்கப்பட்டது தெரிய வந்தது..
இந்த நபர் கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சீன பிரஜையுடன் பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சீனப் பிரஜைகள் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் சிகரெட் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து முப்பதாயிரம் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொழும்பில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழு வீடுகளையும் இந்த கொள்ளையர்கள் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.