கடன் மறுசீரமைப்பு குறித்து சீனா உறுதியளித்தால் ஜனவரியில் ஐ.எம்.எப் உதவி – ஆளுநர் நந்தலால்

டிசெம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமை ப்புக்கான உறுதிமொழியை சீனா வழங்கினால், ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) நிதியுதவிக்கான அனுமதியைப் பெற முடியும் என்று இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இலங்கை பொருளாதார உச்சி மாநாடு 2022 இல் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு இலங்கை தற்போது செயற்பட்டு வருகிறது. கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவில் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பொதுவான ஒருமித்த கருத்தைப் பெறுவதே முன்னுரிமை என்று குறிப்பிட்டார். நவம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தாமதத்தின் பின்னர் சீனாவுடனான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சீனாவின் உறுதிமொழிகளைப் பெறுவதில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு ஆதரவாக பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஏற்கெனவே உறுதி அளித்துள்ளன என்று சுட்டிக்காட்டினார். திட்டமிட்டபடி நவம்பரில் சீனாவின் உத்தரவாதம் கிடைத்திருந்தால், நிதி உதவிக்கான ஐ.எம்.எப் பணிப்பாளர் சபையின் அனுமதி டிசெம்பரில் கிடைத்திருக்கும் என்றார். எவ்வாறாயினும், சீனாவின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தாமதம் இதனைத் தடுத்துள்ளது என்றும் டிசெம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதே இலங்கையின் முன்னுரிமை எனவும் தெரிவித்தார். அத்தகைய உடன்பாடு எட்டப்பட்டால், ஜனவரி மாதம் நிதி உதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – அலி சப்ரி நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை நீண்ட காலமாக கடனை திருப்பும் செலுத்துவதை இலங்கை நிறுத்தியுள்ள நிலையில் இது கடனாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை சீனா நன்கு அறிந்துகொண்டிருக்கும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய போராட்டங்கள் மக்கள் ஆதரவின்றி நடத்தப்படுவதாகவும், போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றாலும், மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர் அலி சப்ரி ஒவ்வொரு முறையும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கும் போது போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்டலினா ஜோர்ஜியேவா ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எகிப்தில் இடம்பெற்று வரும் கோப் – 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு பல்வேறு தரப்பினருடனும் முக்கிய சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமையவே நேற்று செவ்வாய்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அன்டலினா ஜோர்ஜியேவாவையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது கடன் முகாமைத்துவம் தொடர்பில் வெற்றிகரமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் கானா நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவின் சபாநாயகர் ஆகியோர் மொஹமட் நஷீட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடன்களின் ஸ்திரத்தன்மை குறித்த உத்தரவாதத்தை விரைந்து பெறும் முனைப்பில் இலங்கை

பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மை குறித்த நிதியியல் உத்தரவாதத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு இடையிலான தனித்துவமான ஒருங்கிணைவொன்று ஏற்படுத்தப்படுவதைத் தாம் ஊக்குவிப்பதாகத் தெரிவித்திருக்கும் நிதியமைச்சு, தமக்கிடையிலான (இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு இடையிலான) கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கூட்டிணைந்த உத்தரவாதத்தை வழங்குவதற்கு ஏதுவான வாய்ப்பை இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என்று விளக்கமளித்திருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்ட நிலையில், அதன்மூலமான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வது அவசியமாகும்.

அதற்கமைய கடன்களின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கடன்வழங்குனர்களிடமிருந்து உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதும், கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்றியமையாதவையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகால நுண்பாகப்பொருளாதார நிலைவரம், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்கள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை அதன் வெளியகக் கடன்வழங்குனர்களுக்கு விளக்கமளித்திருந்தது.

அதன்போது காண்பிக்கப்பட்ட சுருக்க விளக்கப்படம், கடன்வழங்குனர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் என்பன நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் இலங்கைக்கு பெருமளவான கடன்களை வழங்கிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் சீனா, ஜப்பான், இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, கொரியா, ஜேர்மனி, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் காணப்படுவதுடன் மொத்தக்கடன்களில் அவை முறையே (சதவீதங்களில்) 52.0, 19.5, 12.0, 2.9, 2.4, 2.2, 1.4, 1.4, 1.0, 0.9 சதவீதமான கடன்களை வழங்கியிருக்கின்றன.

இக்கணிப்பீட்டின்படி இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு மொத்தமாக 14.1 பில்லியன் டொலர்களை இலங்கை மீளச்செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடன்கள் ஸ்திரமற்றநிலையில் காணப்படும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்காது என்று வெளியகக்கடன்வழங்குனர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை, எனவே ‘பொதுகடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இருதரப்புக்கடன்வழங்குனர்கள் ஆதரவளிப்பர்’ என்ற நம்பிக்கையை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கக்கூடியவாறான நிதியியல் உத்தரவாதத்தை வழங்கமுன்வரவேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி இத்தகைய நிதியியல் உத்தரவாதத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு இடையிலான தனித்துவமான ஒருங்கிணைவொன்று ஏற்படுத்தப்படுவதைத் தாம் ஊக்குவிப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கை, தமக்கிடையிலான (இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு இடையிலான) கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கூட்டிணைந்த உத்தரவாதத்தை வழங்குவதற்கு ஏதுவான வாய்ப்பை இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என்றும் விளக்கமளித்திருக்கின்றது.

அத்தோடு இந்த உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமது அனைத்து இருதரப்புக்கடன்வழங்குனர்களுடனும் சர்வதேச நிதிவழங்கல் கட்டமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதாகவும் இலங்கை தெரிவித்திருக்கின்றது.