சீன எக்ஸிம் வங்கியிடமிருந்து சாதகமான சமிக்ஞை – ஷெஹான்

சீன எக்ஸிம் வங்கியுடன் (சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் ‘சாதகமானவையாக’ அமைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க கடந்த வியாழக்கிழமை நிகழ்நிலை முறைமை ஊடாக சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் வூ ஃபுலினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.

இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சீன எக்ஸிம் வங்கியின் தலைவரால் வெளிக்காட்டப்பட்ட பிரதிபலிப்பு சாதகமானதாக அமைந்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

‘அதேவேளை நாம் இந்தியாவுடனும் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றோம். எனவே தற்போது அவர்களிடமிருந்து ‘உத்தரவாதத்தை’ (கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான) பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியமுள்ளது.

அந்த உத்தரவாதத்தை வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நிச்சயமாக நம்புகின்றேன். இந்நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரை எதனையும் கூறவில்லை’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடித்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முதற்கட்ட உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் எட்டப்பட்ட நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இவ்வுதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைக் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அரசாங்கம் எதிர்வுகூறியிருந்தது.

இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் அவசியமான விடயமாகவுள்ள கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாடு இன்னமும் எட்டப்படாத நிலையில், இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சீன உயர் மட்டக் குழு இன்று இலங்கை விஜயம்

சீனாவின் சர்வதேச துறை துணை அமைச்சர் சென் சோவ் தலைமையில் சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (சனிக்கிழமை) இலங்கை வரவுள்ளது.

அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் அவர்கள் தங்கியிருந்து கலந்துரையாடலை முன்னெடுப்பார்கள் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனா 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இது என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு இணங்குமாறு சீனா, இந்தியாவிடம் கோரிக்கை

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

IMF தாமதத்திற்கு காரணம் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தமே – விஜயதாச ராஜபக்ச

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் பல நாடுகள் இலங்கையிலிருந்து விலகியிருப்பதே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட காரணம் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அந்த உடன்படிக்கை காரணமாக இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, பர்மா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் இலங்கையில் இருந்து பிரிந்து சென்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து கூட நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பானுடன் செய்து கொண்ட இலகு ரயில் ஒப்பந்தம் எவ்வித ஆய்வும் இன்றி இரத்துச் செய்யப்பட்டு இலங்கை இவ்வாறு பல நாடுகளை புண்படுத்தியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்றாலும், நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பது போல், உலகின் பிற நாடுகளும் நம் நாட்டின் மீது நம்பிக்கை வைக்கும் என்றார். இந்த நாடு மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியும், நமது நாட்டிற்கான கடன் தொகையைப் பெறுவதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சீனாவின் கொவிட் தொடர்பில் வெளிப்படைத் தன்மையை பேண வேண்டும்- உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீன அதிகாரிகள் நாட்டில் கொவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக நாட்டின் பல கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் தொற்றுகள் உயர்ந்துள்ளன மற்றும் பல நாடுகள் இப்போது சீனாவிலிருந்து பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு சேர்க்கைகள் மற்றும் இறப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்க விரும்புவதாகக் கூறுகின்றனர். தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிபரங்களையும் ஆராய விரும்புகிறது.

அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொவிட் சோதனைகளை விதித்துள்ளன, ஏனெனில் அவர்கள் வைரஸ் மீண்டும் பரவக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.

மேலும், சீனாவில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் விமானத்தில் ஏறும் முன் சோதனையை வழங்க வேண்டும்.

தமிழ் மண்ணில் வேரூன்றும் முயற்சியாகவே சீனா அரிசியை வழங்கியுள்ளது: ஐங்கரநேசன்

பட்டினியால் குடும்பங்கள் படும் அவலத்தை சீனா சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே அரிசியை வழங்கி வருவதாக, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தின்கீழ் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சீனர்களின் உணவுப் பண்பாட்டில் இடம்பிடித்துள்ள பசைத் தன்மைகூடிய ஸ்ரிக்கி றைஸ் அரிசியே இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் கடலட்டை எவ்வாறு இல்லையோ, அதேபோன்றே இந்த ரக அரிசியும் இல்லை.

சீனா மனிதாபிமான நோக்கில் அரிசியை வழங்கியிருந்தால் எங்களது பயன்பாட்டிலுள்ள அரிசியைத் தெரிவு செய்து வழங்கியிருக்கும். ஆனால், இந்தச் சீன அரிசியில் மனிதாபிமானம் இல்லை, வல்லாதிக்கப் போட்டி அரசியலே அதிகமாகவுள்ளது. பசியோடு இருக்கும் மக்களைச் சீன அரிசியை நிராகரிக்குமாறு எவருமே கோரமுடியாதபோதும் இந்த அரிசியிலுள்ள அரசியலை எமது மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி உடனடியாகத் தீரப்போவதில்லை. இதனாலேயே அரசாங்கம் பயன்படுத்தாமலுள்ள காணிகளை எடுத்து இராணுவத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது. இது உணவு உற்பத்தி என்ற பெயரில் காணிகளை கையகப்படுத்தும் மறைமுக நோக்கத்தையும் கொண்டுள்ளது.

வடக்குக் கிழக்கில் உள்ள வெற்றுக் காணிகளில் எமது பொது அமைப்புகள் அல்லது தன்னார்வலர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட முன்வரவேண்டும். பல வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். குத்தகை அடிப்படையிலேனும் பயிர்ச்செய்கைக்கு காணிகளை வழங்க அவர்கள் முன்வரவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பசியால் ஒரு சிறுவன் இறந்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சமூகத்துக்குமே இழுக்காகும்.

போர்க்காலத்தில் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டிருந்தபோது கூட பட்டினியால் எவரும் இறந்ததில்லை. பிரதேச செயலகங்களில் கிராம சேவையாளர் பிரிவுரீதியாகப் பட்டினியை எதிர்நோக்கியுள்ள வறிய குடும்பங்களின் விபரங்கள் உள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டுமே அன்னதானங்கள் என்று இல்லாமல் இக்குடும்பங்களின் சிலநாள் பசியையேனும் போக்க எமது ஆலயங்களும் முன்வரவேண்டும்’ என கூறினார்.

சீன மக்கள் பயன்படுத்தும் அரிசியையே வழங்கினோம் – சீன பிரதித் தூதுவர்

சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் கவலை தெரிவித்தார்.

சீன அரசின் நிவாரண அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக இலங்கைக்கான சீன பிரதித் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது தொடர்பில் ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நான் உட்பட சீன மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் அரிசியையே இங்கு வழங்கினோம். அந்த அரிசியை ஸ்ரிக்கி றைஸ் (sticky rice) என்று சொல்வார்கள்.

அதனை சமைப்பதற்கான வழி முறை என்பது சற்று வித்தியாசமானது என்றார்.

சீனாவினால் யாழ் மக்களுக்கு நிவாரண பொதிகள் கையளிப்பு

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில், யாழ்ப்பாண மக்களுக்கான நிவாரண பொதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

யாழ் மாவட்டத்தில் 1320 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக இன்றையதினம் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் கே.பாலகிருஸ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நட்பு ரீதியான உதவிகளை தொடர்ந்தும் சீனா இலங்கைக்கு வழங்கும்

சீனா நாடும், இலங்கை நாடும் கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம். இலங்கைக்கான சீனாத்தூதுவர் ஹுவெய் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, சீனா ஆகிய இருநாட்டின் நட்பு என்பது நட்பின் நண்பன் அந்தவகையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பு செய்வதற்கான உணவுப்பொதிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இது வந்து சீனாத்தூதரகத்தின் நிகழ்ச்சகத்திட்டமாக காணப்பட்டுகின்றன.

மேலும் ஒன்பது ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் எரிபொருள்கள் கிடைக்கபெறவுள்ளது. அவை யாழ்ப்பாண விவசாயிகள், கடற்றொழில் மீனவர்கள் ஆகியோர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

மேலும் பத்தாயிரம் மெற்றிக்தொண் அரிசி இலங்கைக்கு சீனா நாடு பெற்றுக்கொடுக்கப்படயிருக்கின்றது. இவ் அரிசிகள் மூலமாக வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட யிருக்கின்றது என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

தேசிய  மாணவர் படையணியின் மேம்பாட்டுக்கு சீனா நன்கொடை

தேசிய  மாணவர் படையணியின் மேம்பாட்டு  நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கான சீன தூதரகம் 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக  பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் வழங்கப்பட்டது. சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் வான் டொங் இந்த நன்கொடையை வழங்கி வைத்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க சீன தூதரகம் இந்த நன்கொடையை வழங்கியது.

நாட்டிற்கு நல்லொழுக்கமுள்ள இளைஞர்களையும் எதிர்காலத் தலைவர்களையும் உருவாக்கும் நோக்கிலும் தேசிய  மாணவர் படையணியின்  பயிற்சி நடவடிக்கைளை மேலும் மேம்படுத்தும் நோக்குடனும் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் சீன பிரதி பாதுகாப்பு இணைப்பாளர் கேர்ணல் காவோ பின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized