தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலை ஆஜராகினார்.

இவ்வாறு இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசினால்  40 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும்  அளிக்கப்பட்ட நிலையிலேயே  சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை   40 மேலதிக வாக்குகளினால் அரசினால் தோற்கடிக்கப்பட்டது.

சுகாதார  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான வைத்தியர் காவிந்த ஜயவர்தன கடந்த புதன்கிழமை  நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் முன்வைத்தார்.

மருந்து தட்டுப்பாடு,தரமற்ற மருந்து கொள்வனவு ,மருத்துவ சிகிச்சையின் போதான மரணங்கள், பாதிப்புக்கள் உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி   சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி  எம்.பி.யான வைத்தியர் காவிந்த ஜயவர்தன  இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை  கொண்டு வந்தார்.

கடந்த புதன்கிழமை கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை  விவாதத்திற்கு எடுக்கப்பட்டு  கடந்த 3 தினங்கள்  தொடர்ந்து இடம்பெற்ற விவாதம் மாலை 5,35 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணையை  அனுமதிக்கின்றதா என சபைக்கு தலைமைதாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையை கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வாக்களிப்பு கோரினார். அதன் பிரகாரம் மாலை  5,40  மணிக்கு   இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு   இடம்பெற்றது.

இதன்போது சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக   கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி, சுயாதீன எதிரணி  எம்.பி.க்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி . இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்தன

அதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக அரச தரப்பான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து சுயாதீன எதிரணி எம்.பி.க்களான  நிமல்லான்சா, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரும்  ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி வாக்களித்த நிலையிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை  40 மேலதிக வாக்குகளினால் அரசினால் தோற்கடிக்கப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான  இந்த   நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில்  38பேர் பங்கேற்கவில்லை.

வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்க விரைவில் சிகிச்சை மையம்

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார திணைக்களத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கடந்த ஒரு வருடமாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வைத்தியசாலைக்கு வரும்போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இருப்பினும், முற்று முழுதாக போதைக்கு அடிமையானவர்களை நீண்ட காலமாக வைத்து பராமரித்து சிகிச்சை அளிப்பதற்கென சிகிச்சை நிலையம் ஒன்று வட பகுதியில் இல்லை. அவ்வாறான ஒரு விசேட நிலையத்தை அமைப்பதாயின், அதற்கு பல்வேறுபட்ட வசதிகள் தேவையாக இருக்கின்றன.

இந்நிலையில், இவ்வாறானதொரு நிலையத்தை வடக்கில் அமைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் முயற்சிகளை எடுத்திருக்கிறார்.

அதேவேளை புதிதாக ஒருவர் போதைக்கு அடிமையாகாமல் குடும்ப உறுப்பினர்களும் சமூகத்தவர்களும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

வடக்கு வைத்தியசாலைகளில் பெரும் ஆளணி பற்றாக்குறை

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலே மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த,சத்தியமூர்த்தி தெரிவித்தார்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக காணப்படுகின்றார்கள்.

அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது.

தற்போதுள்ள நிலையில் புதிதாக உள்வாங்குவதில் தாமதம் காணப்படுகின்ற படியினால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம்-என்றார்

எஞ்சியிருந்த ஒரேயொரு குழந்தை கதிரியக்கசிகிச்சை நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறினார்

இலங்கையின் குழந்தைகளிற்கான மிக முக்கியமான விசேடவைத்தியர் ஒருவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கையின் ஒரேயொரு குழந்தைகளிற்கான கதிரியக்கசிகிச்சை நிபுணரே நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

விசேடவைத்தியர் சங்கத்தின் வைத்தியர் அசோக் குணரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

2024 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் 4000 விசேடவைத்திய நிபுணர்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தற்போது 2000 பேரே உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

விசேட வைத்தியர்களிற்கான ஓய்வூதிய வயது குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு காரணமாக எஞ்சியுள்ள 50 வீதமான வைத்தியர்களில் 250 பேரைஇழக்கவேண்டிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாட்டில் 1750 விசேடவைத்தியர்களே காணப்படும் நிலைமை உருவாகும் என தெரிவித்துள்ள அவர் அவசரமருத்துவ பிரிவை சேர்ந்த 30 வைத்தியர்களிற்கு விசேட வைத்தியர்கள் பயிற்சியை வழங்கினோம் ஆனால் அவர்களில் 20 பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024-25 இல் நாட்டிற்கு 289 மயக்கமருந்து நிபுணர்கள் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது ஆனால் இந்த வருடம் 155 பேரேஎஞ்சியிருப்பார்கள் 30 பேர் வெளிநாடுகளிற்கு சென்றுவிட்டனர் 60 வயதானவர்கள் ஓய்வு பெற்றால் 20 பேர் மாத்திரமே எஞ்சுவார்கள் என வைத்தியர் குணரட்ண தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் 100 விசேட வைத்தியர்களும் மயக்கமருந்து நிபுணர்களும் எஞ்சியிருப்பார்கள் என சொல்வது துரதிஸ்டவசமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரேயொரு குழந்தைகள் தொடர்பான கதிரியக்க நிபுணராக இருந்தார். அவரும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என வைத்தியர் குணரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கூரையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோபா குழுவின் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கூட்டத்தின் போது, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனவே, சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணரும் பணியை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 மருந்து விநியோகஸ்தர்களுக்கு 30 பில்லியன் ரூபா நிலுவை – சுகாதார அமைச்சு

 மருந்து விநியோகஸ்தர்களுக்கு 30 பில்லியன் ரூபா நிலுவைக் கொடுப்பனவை செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஶ்ரீ சந்திரகுப்தவிடம் வினவிய போது, இந்த பிரச்சினைகள் தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக கூறினார்.

அதற்கமைய, நிலுவைக் கட்டணங்களை செலுத்துவதற்கான நிதியை உடனடியாக வெளியிட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று முன்தினம்(26) முதல் அமுலாகும் வகையில் 60 வகையான மருந்துகளின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த 15 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் 63 வயது வரை நீடிப்பு

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு  நேற்று செவ்வாய்க்கிழமை (27) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே  சார்பில் ஆஜரான சட்ட மா அதிபர், அமைச்சின் தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைக்கும் அமைச்சரவை தீர்மானத்துக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே  இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

176 வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி எம்.ஏ.ஆர்.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜூன் 30 ஆம் திகதிக்குள் பிரேரணையின் மூலம் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையில் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை அதிகரிப்பு

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களுக்கான பாரிய பற்றாக்குறையை சந்தித்துள்ளது எனவும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு செல்லுதல், சில நிபுணர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுதல், அத்தோடு சமீபத்தில் அரசு வெளியிட்ட சுற்றறிக்கை பிரகாரம் ஒய்வு பெரும் வயது 60 என அறிவிக்கப்பட்டமை என்பன இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தும் காரணிகளாக அமைந்துள்ளன.

2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு 4,299 விஷேட மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

இடமாறுதல் பட்டியலின்படி, இருதயநோய் நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள், தோல்நோய் நிபுணர்கள், அவசரகால மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் நோயியல் நிபுணர்கள் உட்பட 750 பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் அவசரமாக நிரப்படவேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகள் உடனடியாகச் செயல்படத் தவறினால், அடுத்த ஆண்டுக்குள் தேவைப்படும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை 1,000 இற்கும் அதிகமாகும் என்று இந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றனர்.

வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யாவிடில் தொழிற்சங்க நடவடிக்கை

நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். நாளை திங்கட்கிழமை கூடவுள்ள மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவிக்கையில்,

நாட்டில் பாரியளவு வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நோயாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே, இந்த சந்தர்ப்பத்தில் மனித வலுவைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், தகுதிகளை நிறைவு செய்துள்ளவர்களுக்கான நியமனத்தை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர்களுக்கான தகுதிகளை நிறைவு செய்துள்ள 400 பேர் தமக்கான நியமனத்துக்கான காலம் கடந்தும் அவற்றை பெறாமல் உள்ளனர். சிரேஷ்ட வைத்தியர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரேனும் புதியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கமும், இலங்கை மருத்துவ சபையும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இவ்வாறானதொரு நிலைமை மே மாத இறுதியில் ஏற்படும் என்பதை நாம் இதற்கு முன்னரே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவித்திருக்கின்றோம்.

2014 மற்றும் 2015இல் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நிறைவு செய்து, வைத்திய பட்டப்படிப்பையும் நிறைவு செய்து காத்திருக்கின்ற மாணவர்களுக்கான நியமனங்களே தாமதப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சுமார் 8 ஆண்டுகளாக மனத வளங்கள் வீணடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள, ஆனால், மேற்கூறப்பட்டவர்களை விட தகுதி குறைவானவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளே நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே அடுத்த வாரத்துக்குள் சுகாதார அமைச்சு இதற்கான தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிட்டால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். அதற்கமைய, நாளை திங்கட்கிழமை அவசர மத்திய குழு கூட்டம் கூடவுள்ளது. இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்தை நாளை அறிவிப்போம். தீர்க்கமான முடிவொன்றையே நாம் எடுப்போம் என்பதை சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கின்றோம் என்றார்.