இலங்கையின் கடன்மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத்தயார் – பிரான்ஸ்

கடன்களை மறுசீரமைப்பதற்கான இலங்கையின் முயற்சிக்குத் தாம் ஆதரவு வழங்கத்தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கொய்ஸ் பக்றெற் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தகப்பேரவையின் இலங்கை – பிரான்ஸ் வர்த்தகக் கவுன்ஸிலுடனான சந்திப்பின்போதே பிரான்ஸ் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கும் என்று உறுதியளித்துள்ள அவர், நீர்வழங்கல், சக்திவலு, நகர அபிவிருத்தி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு போன்ற துறைகளில் பிரான்ஸின் பங்களிப்பு குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையின் பொருளாதாரத்தில் உட்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பிரான்ஸ் கம்பனிகள் எத்தகைய பங்களிப்பை வழங்கமுடியும் என்பது குறித்தும் அவர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் பிரான்ஸுக்கான இலங்கைத்தூதுவர் மனீஷா குணசேகர, பிரான்ஸ் வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரான்ஸ் கம்பனிகளின் இலங்கைப் பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் சென்ற 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பல நாள் மீன்பிடி இழுவை படகில் குறித்த நபர்கள் புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தனிநபர்கள் குழுவில் பல நாள் மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 43 ஆண்கள் உள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கையின் நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது அனைவரின் நலனிற்கு உகந்தது – பிரான்ஸ் தூதுவர்

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்காக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன்  பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொய்ஸ் பக்டெட் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது இலங்கை உட்பட அனைவரினதும் நலனிற்கு உகந்த விடயம் என  தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது வெளிநாட்டுக்கடனை திருப்பி செலுத்தாதன் காரணமாக பிரான்சிலிருந்து இலங்கைக்கான கடன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை தனது நெருக்கடிகளிற்கு தீர்வை கண்டதும் கடன்களை வழங்குவது திருப்பி முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் முதல்  பாரிஸ் கிளப் இலங்கை விவகாரத்தில் தீவிரமாக செயற்படுகின்றது இன்றும் இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் கிளப் ஏனைய கடன் வழங்குநர்களுடன் விடயங்களை பரிமாறிக்கொள்கின்றது எனவும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடன்வழங்குவதை பத்து வருடங்களிற்கு ஒத்திவைக்கும் யோசனையை பாரிஸ் கிளப் முன்னெடுத்துள்ளது,இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக 15 கடன் மறுசீரமைப்பு யோசனையை முன்வைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இடைக்காலத்தில் பிரான்ஸ் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிதொகைகளை வழங்கிவருகின்றது என தூதுவர் தெரிவித்துள்ளார்.

இவை சிறிய தொகை என்றாலும் இலங்கைக்கு முக்கிய உதவியாக உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.