வீட்டுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை வனத்துறையினர் விடுவிக்க கோரி மன்னாரில் மக்கள் போராட்டம்

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பிரதேச மக்கள் தமது கிராமத்தில் வசிக்கும் 113 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக கொம்பன்சாய்ந்தகுளம் பிரதேசத்தில் 46 ஏக்கர் காணியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்த போதிலும் வனத்துறையினர் இதுவரையில் அந்த காணியை விடுவிக்கவில்லை எனத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்தினம் முன்னெடுத்தனர்.

“எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கொம்பன்சாய்ந்த குளத்தில் எங்கள் மக்களுக்கு குடியிருப்புக் காணி அவசியம். எங்கள் ஊரில் ஒரு வீட்டில் மூன்று நான்கு குடும்பங்கள் வாழ்கின்றோம்.

இடவசதி போதாது. ஆகவேதான் இன்று போராடுகின்றோம். 2016ஆம் ஆண்டு இந்தக் காணியை எங்களுக்கு வழங்குவதாக வட மாகாண அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் வனவளத் திணைக்களத்தினர் இதனை இன்னும் விடுவிக்கவில்லை. முன்னாள் பிரதேச செயலாளர் இதனை செய்வதாக கூறினாலும் செய்யவில்லை. “போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தெரிவித்தார்.

இசைமாலைதாழ்வு பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு வீடுகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியின் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரித்து விவசாத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்துக்கு வந்த நானாட்டான் உதவி பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

இசைமாலைதாழ்வு கிராம மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மாவட்ட உதவிச் செயலாளரிடமும் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அத்திப்பட்டியை போல மன்னார் தீவும் மாயமாகும் – வினோ எம்.பி

 

நடிகர் அஜித் நடித்த ”சிட்டிசன்” என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமத்துக்கு நேர்ந்த கதியே இன்னும் 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவுக்கும் ஏற்படும்.

மன்னார் தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் பணிகளை  அவுஸ்திரேலியாவின்  நிறுவனமும் ,அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுக்கிறது.

மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்    பாராளுமன்ற உறுப்பினர்  வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை  (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  சுற்றாடற்றுறை மற்றும் வனஜீவராசிகள், வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அங்கு அகழ்வுப்பணிகளை  முன்னெக்கிறது.

மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களின் எதிர்ப்பையும் மீறி  மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடியவாறு இந்த கனிய  மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் அரசின், அரச நிறுவனங்களின்  ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களோடு  சேர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே  கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக  இந்த  ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது.

இதனூடாக அங்குள்ள சாதாரண மக்களை ஏமாற்றி சுமார் 2000 முதல் 3000 ஏக்கர் வரையான  காணிகளை அந்த மக்களின் வறுமைஇ அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் விலை பேசி ஏறக்குறைய மன்னார் தீவில் மட்டும் 2600 மில்லியன் ரூபாவுக்கு காணிகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆழ்துளை கிணறுகள் மூலமாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டாலும் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

சுமார் 40 அடி   ஆழத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒருகட்டத்தில் நிச்சயமாக நன்னீரும் கடல் நீரும் கலந்து குடிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கான நிலையை உருவாக்குகின்றது.

இதனால் மன்னார் தீவு மக்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரசு எந்த வகையில் இதற்கான அனுமதியை வழங்கியது என்பதுவே எமது கேள்வி.

தென்னிந்திய நடிகர் அஜித் நடித்த  ”சிட்டிசன்”என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமமே காணாமல் போகும்.  அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் மோசடியால் இந்த கிராமம் அழிந்தது.

கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்றி தமது சொந்த நலன்களுக்காக  அரசியல்வாதிகள் அந்தக் கிராமத்தை முற்றாக்கக்கடலுக்குள் அமிழ்த்தி விட்டு செய்த ஒரு காரியம்தான் தற்போது மன்னார் தீவிலும் நடக்கின்றது.

இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது .அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்கின்ற திட்டத்திற்கு   இந்த சுற்று சூழல் அமைச்சும் அரசும் உடந்தையாக இருக்கின்றன.

அரச அதிகாரிகளும் அது அரசின் உத்தரவு, மேலிட உத்தரவு எனக்கூறிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.இந்த திட்டங்களை மன்னார் தீவு மக்கள் விரும்பவில்லை. மீன் வளம் இல்லாது போகும் என மீனவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மன்னார் தீவு காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.

மெளலவியின் கருத்துக்கள் எமது மக்கள் மனதை புண்படுத்தியுள்ளது – ரெலோ வினோ எம்.பி சபையில் காட்டம்

இந்துக்களையும், அவர்களது கலை கலாசாரங்களையும் இழிவுபடுத்தும் வகையில் மௌலவி ஒருவர் கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது எமது மக்களின் மனங்களை கடுமையாக புண்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

இந்துக்கள் பெரிதும் போற்றுகின்ற, மதிக்கின்ற, ஆலயங்களில் மதிக்கப்படுகின்ற பரதநாட்டிய கலையை அந்த மௌலவி மிகவும் கேவலப்படுத்தியுள்ளார்.

இது மிகவும் வேதனையான விடயம். நாங்கள் சக மதத்தவரின் கலாசாரத்தை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

நாங்கள் முஸ்லிம் தமிழ் சமூகத்தினர் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மௌலவியின் கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல்லின மக்கள் வாழ்கின்ற போதும் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பது 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பெளத்த கலாசார நிகழ்வுகளுக்கு மாத்திரம் அதிகூடியளவு அதாவது 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஏனைய இந்து மற்றும் இஸ்லாமிய கலாசார நிகழ்வுகளுக்காக எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என வினோ நோகராதலிங்கம் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தொடர்ந்து கருத்துரைக்கையில்;

”இலங்கையை ஒரு பெளத்த சுற்றுலா மையமாக மாற்றும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதிலிருந்து இது ஒரு பெளத்த என்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது. பல்லின சமூகம் வாழ்கின்ற நாடாக இந்த நாட்டை ஜனாதிபதி அல்லது ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்றை அவசியமாகுமானால் இந்தியாவிடமே கோரவேண்டியுள்ளது. அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் நிலமலா சீதாராமன் திருகோணமலை ஆலயத்தை புனரமைப்பதற்கு உதவுவதாக கூறினார். ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மனவருத்தத்தை கொடுக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதியையே கோருகின்றனர், நிதியை கோரவில்லை. ஆனால் அவர்களுக்கான நட்டஈடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரோ ஒரு தரப்பை திருப்திப்படுத்துவதற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நிதி எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். முன்னதாக பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன அரசியல் தீர்வு அவசியமில்லை, பொருளாதாரத் தீர்வே அவசியம் என்றார். ஆனால், நிரந்தர அரசியல் தீர்வு இன்றி பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது இலங்கையின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கோ தீர்வுகாண முடியாது” எனது தெரிவித்தார்.

மன்னாரில் மேய்ச்சல் தரையை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்

நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (26) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்று போனதன் காரணத்தால் குறித்த போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் முன் னெடுக்கப்பட்டிருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பி, நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மத தலைவர்கள் என பலரும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு, இலுப்பை கடவை பகுதிக்கு தமது கால்நடைகளை கொண்டு சென்று பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மனித இழப்புக்களையும் சந்திக்க நேருவதுடன் பாரிய பொருளாதார இழப்புக்களையும் சந்திப்பதாகவும், அப்பகுதியில் உள்ளவர்களுடன் எமக்கு முரண்பாடுகளும் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

ஆகவே எமது கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேய்ச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பலவருடமாக கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் பலமுறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் நடை முறைச் சாத்தியமாக்கவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 12-10-2023 அன்று வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடை முறைப்படுத்தவில்லை என்பதே வேதனைக்குரிய விடயம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகவே புலனாகின்றது.

எனவே உடனடியாக எமக்குரிய மேச்சல் நிலத்தை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்ததோடு,மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மகஜர் வாசித்து கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரிலிருந்து அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல முயற்சித்த தொழிற்பயிற்சி உபகரணங்கள் ரெலோ தலைவர் செல்வம் எம்.பியால் தடுத்து நிறுத்தம்

மடு கல்வி வலயத்தில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பெறுமதி வாய்ந்த தொழிற் பயிற்சி உபகரணங்கள் குறித்த தொழிற்பயிற்சி கூடத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் முயற்சியால் வியாழக்கிழமை வியாழக்கிழமை (12) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற் பயிற்சி அலுவலகத்திலிருந்து அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட தொழிற் பயிற்சி உபகரணங்கள் அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தமாகிய நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

மன்னார் மாவட்டத்திற்கான தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இளையோர்களின் தொழிற்பயிற்சிக்கு என பல லட்சம் பெறுமதியான அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் வருகை குறித்த நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

எனினும் அவற்றை இங்குள்ள இளையோர்களின் தொழில் முயற்சிக்கு பயன்படுத்தாமல் அஹம்பாந்தோட்டைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக வியாழக்கிழமை (12) வாகனமும் வந்தது.

அப்பகுதி இளைஞர் யுவதிகள் மூலம் சம்பவத்தை கேள்விப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு வடக்கு மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில் குறித்த பொருட்களை ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த முயற்சி கைவிடப்பட்டது.

மேலும் குறித்த தொழிற்பயிற்சியை மன்னார் மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு ஆலயம் மத நல்லிணக்கத்தின் அடையாளம் – அமெரிக்க தூதுவர்

மன்னார் ஆயர் மற்றும் பிடெலிஸ் பெர்னாண்டோ ஆகியோர் சமய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மதத் தலைவர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜூலி சங் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,வரலாற்று சிறப்புமிக்க மடு மாதா ஆலயத்திற்கு சென்றேன். இந்த புனித இடத்திற்கு என்னை வரவேற்றதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாரில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் என்று மடு மாதா ஆலயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரை வலுச்சக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி ரணில்

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வருடம் மடுமாதா திருவிழா கூட்டுத் திருப்பலிப் பூஜையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும். திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதை அடுத்து மடுமாதாவின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது. வருடாந்த மடுமாத திருவிழாவில் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மடு மாதாவுக்கு மகுடம் சூட்டப்பட்டு 2024ஆம் ஆண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை நினைவுகூரும் நிகழ்வுகளை வருடம் முழுவதும் நடத்த ஆலய நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பாராட்டுக்குரியது எனவும் வத்திக்கான் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆசீர்வாதமும் இதற்கு கிடைக்கும் எனவும் மடு திருவிழாவில் கலந்து கொண்ட இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி அதி பிரையன் உடைக்வே ஆண்டகை Rev. Dr.Brian Udaigwe) தெரிவித்தார்.

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரிய பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய பிரையன் அவர்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் மத முகவராக மாறுவதா அல்லது நாட்டை ஒன்றிணைக்கும் மதத் தலைவராக மாறுவாரா என்பது அவரவர் செய்யும் செயற்பாடுகளிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

”மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது எமது நாட்டு கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும். இந்தத் திருவிழாவை தேசிய நிகழ்வாகக் கருதி அதனைப் பாதுகாக்கவும் தொடர்ச்சியாக நடத்தவும் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கி வருகிறது. அத்தோடு வருடாந்த மடு திருவிழாவை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து அருட்தந்தையர்களுக்கும் அரசாங்கம் சார்பில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மடுமாதாவிடம் பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பெற ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். கடந்த வருடம் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, பெருமளவான மக்கள் இங்கு வந்து மடு மாதாவின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் நாடினர். அந்த கடினமான நிலைமையில் மடு மாதாவின் ஆசீர்வாதமும் எமக்கு பலமாக அமைந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம் அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். மேலும், பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன். மேலும், இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.

அடுத்த மாதம் முதல் மன்னாரிலிருந்து கொழும்புக்கு நகர்சேர் கடுகதி ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ளஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுகிறது. அவரின் வேண்டுகோளுக்கு அமைய வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னார் ஆயர் கலாநிதி அதி வண. இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி மன்றத் தலைவர் கலாநிதி சந்ரா பெர்ணான்டோ உள்ளிட்ட அருட்தந்தையர்கள், கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்கள் அருந்திக பெர்னாண்டோ, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன

மன்னார் ரெலோ தலைமையகத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினை வேந்தல் இன்று திங்கட்கிழமை(5) மதியம் மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது தியாகி பொன் சிவகுமாரனின் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்த்,கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

மன்னாரில் ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது ஆண்டு நினைவு தினம் இன்று (6) மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) காரியாலயத்தில் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ் தலைமையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

முழுமையாக முடங்கியது மன்னார்

இலங்கை அரசாங்கத்தினால் பயங்கர வாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும்,மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றைய தினம் (25) செவ்வாய் கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது