இலங்கையின் கடன்மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத்தயார் – பிரான்ஸ்

கடன்களை மறுசீரமைப்பதற்கான இலங்கையின் முயற்சிக்குத் தாம் ஆதரவு வழங்கத்தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கொய்ஸ் பக்றெற் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தகப்பேரவையின் இலங்கை – பிரான்ஸ் வர்த்தகக் கவுன்ஸிலுடனான சந்திப்பின்போதே பிரான்ஸ் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கும் என்று உறுதியளித்துள்ள அவர், நீர்வழங்கல், சக்திவலு, நகர அபிவிருத்தி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு போன்ற துறைகளில் பிரான்ஸின் பங்களிப்பு குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையின் பொருளாதாரத்தில் உட்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பிரான்ஸ் கம்பனிகள் எத்தகைய பங்களிப்பை வழங்கமுடியும் என்பது குறித்தும் அவர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் பிரான்ஸுக்கான இலங்கைத்தூதுவர் மனீஷா குணசேகர, பிரான்ஸ் வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரான்ஸ் கம்பனிகளின் இலங்கைப் பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.