மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும் போக்கை கடைப்பிடிக்கக்கூடாது – ஹக்கீம்

சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

அவரின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டு கன்சியூளர் பதவி மிகவும் பொறுப்புவாய்ந்த சேவையாகும். கடந்த காலங்களில் சிறந்த அதிகாரிகள் இந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதனால் எமது நாடு தொடர்பில் அவர்கள் சிறந்த முறையில் செயற்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அரசியல் ரீதியில் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால் ஜெனிவாவில் எமது விடயங்களை முறையாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்காலத்தில் மனித கடத்தல்கள் தொடர்பில் வெளிநாட்டு அதிகாரிகள் முக்கிய கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இம்முறை எமக்கு அவமானத் தோல்வி. இந்த தோல்விக்கான காரணம் என்ன என்பதை பார்க்கவேண்டும்.

ஜெனிவா தீர்மானங்களுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். மாறாக மனித உரிமை விடயத்தில் நலுவுவதற்கான முயற்சிகளை செய்யக்கூடாது. அரசாங்கம் தொடர்ந்து மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை அவமதி்க்கும் வகையிலேயே செயற்பட்டு வந்திருக்கின்றது.

இனங்களுக்கிடையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசிவந்த நபரை ஒருநாடு ஒருசட்டம் செயலணியின் தலைவராக அந்த அரசாங்கம் நியமித்தது. இந்த நடவடிக்கையை மேற்கொண்டபோது அப்போதைய நீதி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்யவும் முயற்சித்தார்.

அதேபோன்று கொவிட் தொற்றில் மரணிப்பவர்களை எரிப்பதற்கு விஞ்ஞான ரீதியில் எந்த அடிப்படையும் இல்லாத நிலையில், அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானத்தின் அடையிலேயே சடலங்களை எரிக்க தீர்மானித்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்களை நோவிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.

அத்துடன் ஜெனிவா மனித உரிமை பேரவையின் பந்தி 10இல் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு திர்மானம் எடு்ததவர்கள் யார் என்பதை கண்டறிந்து, இதற்கு பின்னால் வேறு சக்திகள் இருக்கின்றதா என தேடிப்பார்க்க விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். இந்த காரியத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதனால்தான் இம்முறை ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கவில்லை.

அத்துடன் அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என்பதில் ஜனாதிபதி முயற்சி செய்து வருவதை காணமுடிகின்றது. அதனை நாங்கன் வரவேற்கின்றோம். எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். அவரின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

ஆபத்தான நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் வாழ்வு – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் கடன் வழங்குநர்கள் விரைவில் பதிலொன்றை வழங்காவிட்டால், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அபாயத்தை எதிர்நோக்கலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடன்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் இணங்குவது அவசியம் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதனூடாக சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விரைவில் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடியினால் ஏற்படும் மனித உரிமை மீறல்களை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச நாணய நிதியம் தனது நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் மீது பயங்கரவாதச் சட்டம் : மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

யங்கரவாத தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமையவேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதிலிருந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதுடன் போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் இலக்குவைக்கப்பட்டு வருகின்றார்கள். அதுமாத்திரமன்றி மாணவ செயற்பாட்டாளர்களை தடுத்துவைப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகிய இருவரும் 90 நாட்களுக்கும் அதிகமான காலம் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை தொடர்ந்து தடுத்துவைக்குமாறு கடந்த வியாழக்கிழமை (நவ 17) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவ்விரு மாணவர்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி நேற்று வெள்ளிக்கிழமை (நவ 18) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1979ஆம் ஆண்டு ஒரு தற்காலிக நடைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது அப்போதிருந்து நபர்களை நீண்டகாலம் தன்னிச்சையாக  தடுத்துவைப்பதற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அச்சட்டத்தின் பிரயோகத்தினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தை  சேர்ந்தவர்களாகவோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பவர்களாகவோ இருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்தபோது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்த ரணில் விக்ரமசிங்க, இப்போது ஜனாதிபதி என்ற ரீதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாணவர்கள் இருவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைப்பதற்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தும் அதேவேளை, அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமையவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பொலிஸ் திணைக்களத்தில் மக்கள் நம்பிக்கை இழப்பு : மனித உரிமை ஆணைக்குழு

அண்மையகாலங்களில் பொலிஸாரின் சில முறையற்ற நடத்தைகள் மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதுடன் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கு இருக்கின்ற நன்மதிப்பையும் இல்லாமல்செய்திருக்கின்றது என்று பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு மத்தியில் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண் பொலிஸார் இருவரை கழுத்தில் பிடித்துத் தள்ளுகின்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டதுடன், அப்பொலிஸ் அதிகாரியின் நடத்தை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இச்சம்பவம் குறித்தும் அமைதிப்போராட்டத்தை சட்டவிரோதமான முறையில் நிறுத்துவதற்கும், அதில் கலந்துகொண்டோரைக் கைதுசெய்வதற்கும் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி அவ்விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு அவசியமான சில விபரங்களை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறுகோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

களுத்துறையிலிருந்து ஆரம்பமான அமைதிப்போராட்டம் பாணந்துறையில்வைத்து பாணந்துறை பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்டது. அதனை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இப்போராட்டத்தை இடைநிறுத்தியமைக்கான காரணம், யாருடைய உத்தரவின்பேரில் இடைநிறுத்தப்பட்டது, அந்த உத்தரவை செயற்படுத்தியது யார் என்ற விபரங்களை நீங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவேண்டும்.

அதேபோன்று பாணந்துறை பொலிஸ்நிலைய எஸ்.எஸ்.பி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது உரியவாறான உத்தரவுகளைப் பிறப்பித்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பாதுகாப்பதற்கு அவர் தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டது.

எனவே பாணந்துறை பொலிஸ்நிலைய எஸ்.எஸ்.பி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தவறியமைக்கான காரணத்தையும் நீங்கள் எமக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

மேலும் பொலிஸ் அதிகாரிகளின் தரப்பிலிருந்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்பது பற்றியும் தெளிவுபடுத்துங்கள். இவற்றை உறுதிப்பத்திரத்தின் வாயிலாக எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் எம்மிடம் கையளியுங்கள்.

அண்மையகாலங்களில் பொலிஸாரின் சில முறையற்ற நடவடிக்கைகள் ஏற்கனவே மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதுடன் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கு இருக்கின்ற நன்மதிப்பையும் இல்லாமல்செய்திருக்கின்றது.

எனவே பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு உங்களிடம் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

புனித யாக்கப்பர் தேவாலய படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

கடந்த 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளையில் இலங்கை விமான படையின் “சுப்பர் சொனிக்” விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியதில் 08 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 25க்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை திருப்பலியின் நிறைவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதோடு உயிரிழத்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி அஞ்சலியும் செலுத்தினர்.

குறித்த தேவாலயமானது 1861ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1881ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸ், நியூயோர்க்கில் நடைபெற்ற 77 ஆவது பொதுச் சபை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பித்தார்.

2022 செப்டெம்பர் 12 முதல் ஒக்டோபர் 7 வரை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களில் இலங்கை தொடர்பான தீர்மானமும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்த தீர்மானம் 20 க்கு 7 என்ற வாக்கு விகிதத்தில் நிறை வேற்றப்பட்டது.

இதேவேளை இலங்கை மீதான தீர்மானத்தை நடை முறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கவேண்டியேற்படும்.

இந்தநிலையில் அண்மைய ஆண்டுகளில், மனித உரிமைகள் பேரவை, தமது அதிகரித்து வரும் பணிகளின் காரணமாக நிதிச்சவால்களை எதிர்கொள்கிறது என்று மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸ் தெரிவித்துள்ளார். எனவே இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபை, நிதியளிக்கவேண்டும் என்று ஃபெடரிகோ வில்லேகாஸ் கோரிக்கை விடுத்தார்.

பொலிஸார் சிறுவர்களையும் சித்திரவதைக்கு உட்படுத்தும் மனநிலையில் உள்ளனர் அம்பிகா சற்குணநாதன்

பொலிஸார் எங்களை தாக்கினார்கள்.  அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர். அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் .எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள் எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்  மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

ஆசிரியர்கள் மாணவர்களிற்கு உடல்ரீதியான தண்டனையை வழங்கிய பொலிஸார் மாணவர்களை தண்டித்த  மில்லனியாசம்பவம் இலங்கையில் அரச அதிகாரிகள் சிறுவர்களிற்கு வன்முறைகளை தயக்கமின்றி பயன்படுத்துவதை  வெளிப்படுத்தியுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது புதிய விடயமல்ல,இது அமைப்பு ரீதியானது. தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் இவ்வாறான கலாச்சாரம்  தொடர்வதற்கு காரணமாக உள்ளது.

வன்முறைகளை இவ்வாறு மிகவும் சாதாரணமாக பயன்படுத்துவது சமூகத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக காணப்படுகின்றது.

எந்த வித தயக்கமும் இன்றி  உடனடியாக சித்திரவதைகளில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ள பொலிஸாருக்கு ஏனைய சூழ்நிலைகளில் வன்முறைகளை பயன்படுத்துவது கஸ்டமான விடயமாகயிருக்காது.

உதாரணத்திற்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வன்முறைகளை  அல்லது வீதியில் தவறான திசையில் வாகனத்தை செலுத்துபவர்களை தண்டிப்பது போன்றவை. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் எங்களை தாக்கினார்கள்  அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர் அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள் எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்  மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட தொடங்கியது.

சித்திரவதை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் அடையாளங்கள் தெரியாமலிருப்பதற்காக கால்பாதத்தில் கொட்டனால் அடித்துள்ளனர்- ஸ்கான் பண்ணுவதன் மூலம் மாத்திரமே ஏற்பட்ட காயங்களை கண்டுபிடிக்க முடியும்.

இவற்றை பொலிஸ் நிலையத்தில் வைத்து செய்யவில்லை பொலிஸ் ஜீப்பில் கொண்டு செல்கையில் இதனை தெரிவித்துள்ளனர் – வழமையான தந்திரோபாயம்.

பொலிஸார் ஆபாசமான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர்,இங்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து சித்திரவதைகளும் பெரியவர்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுபவை.

10 வயது மாணவர்கள் மீது  இந்த சித்திரவதைகளை பொலிஸார் பயன்படுத்தியமை மிருகத்தனம்  சமூகத்தில் ஆழமாக்கப்படுவதையும்,உளவியல் சமூக தலையீடுகள் அவசியம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் குழுவில் விவாதம்

இலங்கை குறித்து மனித உரிமைகள் குழுவின் அடுத்த அமர்வில் விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கமான, மனித உரிமைகள் குழுவின் நூற்று முப்பத்தி ஆறாவது அமர்வு நேற்று நிறைவடைந்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை அரசாங்கங்கள் செயற்படுத்துவதைக் கண்காணிக்கும், சுதந்திரமான நிபுணர்களின் அமைப்பாக மனித உரிமைகள் குழுவின்  நூற்று முப்பத்தி ஆறாவது  அமர்வு ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

 

அந்த அமர்வில், எதியோப்பியா, ஜப்பான், கிர்கிஸ்தான், நிகரகுவா, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு ஆகியன தொடர்பான அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மனித உரிமைகள் குழுவின் நூற்று முப்பத்தி ஏழாவது அமர்வு அடுத்த ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி தொடக்கம், மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில், இலங்கை, எகிப்து, பனாமா, பெரு, துர்க்மெனிஸ்தான் மற்றும் சாம்பியாவின் காலமுறை அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.