இந்திய விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்!

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால்  ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்தொழில் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக, வெளியான செய்தி தொடர்பில்,  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலிலையே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்தொழில் மேற்கொள்ள அனுமதிக்க  கூடாது என வலியுறுத்தியும் இதற்கு  நடவடிக்கை எடுக்க கோரியும் நேரில் சந்தித்து பேச வாய்ப்பு தருமாறு  ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோருவது.

ஐனாதிபதியிடம் இருந்து, கோரிக்கைக்கு  சாதகமான பதில் கிடைக்காது விட்டால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது.

அத்துடன் நாடாளுமன்றில் பேசிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமையை பரிசீலிப்பதாக தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது.

புனித ஸ்தலமான கச்சதீவினை கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பேச்சுக்களை நடாத்த அனுமதிக்க கூடாது என யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஊடகங்கள் வாயிலாக கோருவது போன்ற முடிவுகள் இந்த கலந்துரையாடலில் எட்டப்பட்டுள்ளன.

 

மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கடலட்டை பண்ணைத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்க- சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் கடற்றொழில் அமைச்சரின் முயற்சி பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அத்தகைய சிக்கல்கள் தோன்றாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அமைச்சரின் பொறுப்பாகும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வடக்கு மாகாணத்தில் கடலட்டை பண்ணைகள் மிகப் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடல்தொழில் அமைச்சர், தற்பொழுது ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு கடலட்டை பண்ணைகள் இருப்பதாகவும் இந்தப் பண்ணைகளை ஐயாயிரமாக உயர்த்த வேண்டுமென்றும் அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுப்பதாகவும் ஊடகங்களுடாக செய்திகளை வெளியிட்டுள்ளார். கடலட்டைகள் என்பது மிக விலைமதிப்புள்ள ஏற்றுமதிப்பொருள் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. முன்னரும் பாக்குநீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவிலிருந்து கடலட்டைகள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுது கடலட்டை பண்ணைகளை உருவாக்கி, அதன் மூலம் பாரிய அந்நியச் செலாவணியைக் கொண்டுவர முடியுமென்றும் குறுகிய காலத்திற்குள் மீனவர்கள் பெரும் பணம்படைத்தவர்களாக மாறலாம் என்றும் அமைச்சரினால் ஆசைவார்த்தைகள் கூறப்படுகின்றது.

கடலட்டை பண்ணைகள் அமைப்பதெற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. இரண்டு கடலட்டைப் பண்ணைகளுக்கு இடையில் ஏறத்தாழ 1000மீ இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் அத்தகைய இடைவெளியில்லை என்பது மீனவர்களின் குற்றச்சாட்டுகளாக இருக்கின்றது.

இரண்டாவதாக அப்பிரதேசங்களில் உள்ள மீனவர்களுக்கு பண்ணைகளை வழங்குவதை விடுத்து, அப்பிரதேசங்களைச் சாராதவர்களுக்கும் வெளியாட்களுக்கும் அந்தப் பண்ணைகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மூன்றாவதாக குறுகிய காலத்திற்குள் வருமானம் ஈட்ட முடியுமென்று மீனவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் புத்தளம், சிலாபம் போன்ற இடங்களில் இறால் பண்ணையில் ஏற்பட்ட இழப்புகள் கடலட்டைகள் பண்ணைகளுக்கும் ஏற்படலாம் என்ற அச்சமும் ஐயமும் தோன்றியுள்ளது. கடலட்டைப் பண்ணைகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக, பாரம்பரியமாக எமது மீன்பிடி, அதனூடாக வடக்கு மாகாணம் பெற்றுவந்த கடலுணவுகள், ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் இவையெல்லாம் அழிந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட இடங்களில் அமைசசரின் பிணாமிகளின் பெயரில் கடலட்டை பண்ணைகளுக்கான நிறுவனங்கள் திறக்கப்படுவதாகவும் அதன் பெயரில் பண்ணைகள் உருவாக்கப்படுவதாகவும் இதனால் அந்த பிரதேசத்து மீனவ மக்களுக்கு தொழில் செய்யும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. முன்னர் மீனவர்கள் தொழில் செய்த இடங்களில் பண்ணைகளை உருவாக்குவதன் ஊடாக, அந்த மீனவர்களுக்கான பாரம்பரிய தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இதன் காரணமாகவே பல்வேறு மீனவ சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இவை ஒருபுறமிருக்க, 5000 பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சுகளைக் கொடுக்கப்போவது யார் என்று பார்த்தால் அது யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே மையம்கொண்டுள்ள சீன நிறுவனம் ஒன்றே இந்த கடலட்டை குஞ்சுகளை வினியோகிக்கப்போகும் ஏக வினியோகஸ்தர்களாக இருக்கப்போகின்றனர். இந்த சீன நிறுவனம், கடலட்டை குஞ்சு பொரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உள்ளுர் மீனவர்களுடன் பரிமாறிக்கொள்வதற்குத் தயாரில்லை. அந்த தொழில்நுட்பம் ஏகபோக உரிமையாக சீனர்களின் வசமே இருக்கப்போகின்றது. இதனூடாக வடக்கில் சீனா நிரந்தரமாகக் காலூண்றும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றது.

அது மாத்திரமல்லாமல் சீன நிறுவனம் தீர்மானிக்கும் விலைக்கே பண்ணையாளர்கள் கடலட்டைக் குஞ்சுகளை கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். இந்த குஞ்சுகளின் மூலம் கிடைக்கப்பெறும் கடலட்டைகளை நாளை கொள்வனவு செய்யும் நிறுவனமாகவும் இதே சீனநிறுவனம்தான் திகழப்போகிறது. இதனால் குஞ்சுகளை கொள்ளை இலாபத்திற்கு விற்று, குறைந்த விலையில் கடலட்டைகளைக் கொள்வனவு செய்து சீனா இரட்டிப்பு இலாபத்தினை அடையப்போகிறது. மேலும், இந்தியாவுடன் மிக நீண்ட எல்லைத் தகராறுகளைக் கொண்டுள்ள சீனா, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காலூண்றுவதினூடாக இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளுக்கும் பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கக்கூடாது என்பதை எமது அமைச்சரும் மீனவ சகோதரர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது பாரம்பரிய மீன்பிடியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வடக்கு மாகாண மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் இங்கிருந்து கிடைக்கக்கூடிய கடலுணவுகள் கிடைக்காமல் போவதற்கான வழிமுறையாக இந்தப் பண்ணைத்திட்டங்கள் அமைந்துவிடக்கூடாது என்பதை அமைச்சருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோன்று கடலட்டை குஞ்சுகளுக்கான ஏகபோக வினியோகத்தை சீன நிறுவனத்திடம் கையளித்து, முழு மீனவ சமுதாயமும் அவர்களில் தங்கியிருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதும் மிக மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும் என்பதையும் அமைச்சருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடலட்டைப் பண்ணை அமைக்கும் நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பிலும் ஏராளமான கரிசனைகளை உருவாக்கும். ஆகவே இவை அனைத்தையும் கவனத்திலெடுத்து அமைச்சர் செயற்படுவார் என்றும் செயற்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

மீனவர்களுக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

Posted in Uncategorized

கடலட்டைப் பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் கைது

கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி மீனவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடிக் கரையோர தொழிலாளர்களாகிய தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாக தெரிவித்து குறித்த கடல் அட்டை பண்ணைக்கு எதிராக கடந்த 55நாட்களாக தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று பி.ப 2.30 மணியளவில் கிராஞ்சி இலவங்குடா மீனவர்கள் இருவர் ஜெயபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தினாதர், மற்றும் மகேந்திரன் எனப்படும் இருவரே அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக செயற்பட்டதாக அரச அதிகாரிகள் முறைப்பாடு செய்தவிடத்து இவ்வாறு குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குறித்த போராட்டத்தை முடக்குவதற்காகவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

கடற்தொழிலாளர்களுக்காக நாளாந்தம் 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க தீர்மானம்

கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும் தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் 22 நவம்பர் 2022 திகதியிடப்பட்ட விசேட அறிவித்தல் கடிதத்தை மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இதன்படி, மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தினமும் 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீனவர்களின் தேவைக்காக 357 மண்ணெண்ணெய் பவுசர்களை விடுவிக்க கடந்த வாரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் 206 பவுசர்களே (58%) பெட்ரோல் நிலையங்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இதற்காக அரசாங்கம் 33 இலட்சம் டொலர்கள் மேலதிக செலவீனங்களைச் செய்த போதிலும் மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் முறையாக மேற்கொள்ளப்படாததால் மீனவர்கள், மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகக் கருதப்படுவதுடன், இதன் மூலம் மக்களின் போஷாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே மீனவர்களுக்குத் தேவையான எரிபொருளின் அளவு மற்றும் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளை தீர்மானிக்கும் பொறுப்பு, கடற்றொழில் திணைக்களம், கடற்றொழில் அமைச்சு மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண கடற்றொழில் அமைச்சுகள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்றொழில் திணைக்களம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தனியார், கூட்டுறவு அல்லது அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள் ஊடாகவும் அல்லது கடற்படையினரின் உதவியுடன் மீனவர்களுக்கு தொடர்ந்து மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் எனவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலட்டை பண்ணைகளால் வடக்கு மீனவர்கள் பாதிப்பு

போரின் பின்னர் வடக்கு பகுதிகளில் அரச அனுசரணையுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றபோதிலும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறித்து அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

விவசாயிகள், மீனவர்கள் உட்பட சிறு கைத்தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் பற்றியும், அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை என்பதே பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அண்மைக்காலமாக வடக்கில் மீனவர்கள் கடலட்டை பண்ணைகளால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரச கட்டமைப்புகளில் முறைப்பாடு அளித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வடக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் உள்ள கடலட்டை பண்ணைகளால் உள்ளூர் மீனவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. மாறாக, அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அங்குள்ள கடலட்டை பண்ணைகளின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாகவும், அவர்கள் இந்த கடலட்டை பண்ணைகளின் விருத்திக்காக நிதியுதவி செய்வதாகவும் மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அந்த பண்ணைகளில் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தாமல், வெளியூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்தப் பண்ணைகள் வழங்கப்படுகின்றன.

அது மாத்திரமன்றி, கடலட்டை பண்ணைகள் அமைந்துள்ள கடல் பகுதிகளுக்கு பிரதேச மீனவர்களை கூட அனுமதிப்பதில்லை எனவும் அப்பகுதி மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அனுமதியற்ற கடலட்டை பண்ணைகளால் அப்பிரதேசத்தில் வாழும் மீனவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நலிவடைந்துள்ள மீனவர்களுக்கு மென்மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்தீவில் அண்ணளவாக 50 ஏக்கர் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் பவளப்பாறைகள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. அப்பிரதேசத்தை விட்டு அங்கு வாழும் மீனவர்களும் வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“இப்பிரதேசத்தில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டால், சிறு மீன்பிடி தொழிலாளர்களாகிய நாம் பிரதேசத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, இப்பிரதேசத்தின் பூர்வீக தொழிலான கடற்றொழிலை மேற்கொண்டு, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உரிமையை எமக்கு பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.