பிரித்தானிய பிரதமரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெற்றது.

எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டின் போது இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது புதிதாக பதவியேற்றுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரட் பாகோருக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்றும் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஸ்லோவேனியா ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டேரஸ்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் – 27’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தேசிய சுற்றாடல் மற்றும் அது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் தெளிவுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் 27’ மாநாடு எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் பங்கேற்கும் அதேநேரம், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலும் உரையாற்றவுள்ளார். இதேவேளை, அங்கு நடைபெறவுள்ள உலக உணவு பாதுகாப்பு பேரவை மற்றும் உலக தலைவர்களின் பேரவையிலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் சாசனத்தின் கீழ் இணங்கியுள்ளமைக்கு அமைய காலநிலை தொடர்பான உலகின் கூட்டு இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கோப்-27 இல் நாடுகள் ஒன்றிணைகின்றன.

கிளாஸ்கோவில் நடந்த கோப் – 26 மாநாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அதன் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தமக்குள்ள பொறுப்புகளை மேலும் வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்காக இம்முறை உலக நாடுகள் கோப்-27 இல் ஒன்றுகூடி தீர்மானம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணிலின் கட்டுப்பாட்டில் 4 அமைச்சுக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 4 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பின் 44(3) பிரிவின் பிரகாரம், பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன ஜனாதிபதியின் கீழ் இயங்கும்.

இந்த 4 அமைச்சுக்கள் தவிர, பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் கீழுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட முயற்சிக்கும் ரணில் – திஸ்ஸ விதாரண

மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டுள்ளதை போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.

திட்டமிட்ட வகையில் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிடின் நீதிமன்றம் செல்வோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளமை அவதானத்திற்குரியது. மாகாண சபைகள் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும். மாகாண சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை 2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 139 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளுராட்சிமன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தப்பா அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, அவரும் அறிக்கைக்கு எதிராகவே வாக்களித்தார். இதனை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லை நிர்ணய மீளாய்வு குழுவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமித்தார்.

3 மாத காலத்திற்குள் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்க நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சூழ்ச்சி வெற்றிப்பெற்றது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கத்திற்கமைய மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது.எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இவரது கருத்திற்கமைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு தொகுதிவாரி முறைமையிலான தேர்தல் முறைமை சிறந்தது என அறிக்கை சமர்ப்பித்துள்ளது,தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது,பிரதமர் தினேஷ் குணவர்தன

பாராளுமன்றம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நடைபெறவில்லை என ஜனாதிபதி சபாநாயகருக்குக் கடிதம்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை  மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட  முன்மொழிவுகளை  அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  ஜனாதிபதி எழுத்து மூலம்  அறிவித்துள்ளார்.

இந்த  முன்மொழிவுகளில், தேசிய சபையை ஸ்தாபிக்கும் நடவடிக்கை  மாத்திரமே இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  இன்று  (03)    அனுப்பியுள்ள இந்த  எழுத்துமூல    அறிவிப்பில்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீண்டகால முறைமை மாற்றங்களை ஏற்படுத்தும்  நோக்கில் முன்மொழியப்பட்ட யோசனைகளில்  வங்கி விவகார  மற்றும் நிதிச் சேவைகள்  தொடர்பான குழு  (Committee on Banking and Financial Services), பொருளாதார ஸ்திரப்படுத்தல்  தொடர்பான குழு (Committee on Economic  Stabilization) மற்றும் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான  குழு  (Committee on Ways and Means) ஆகியவற்றை வங்கி விவகாரங்கள் தொடர்பில் நியமிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும் அவை இதுவரை  முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி  சபாநாயகருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்கவும், பாராளுமன்ற  வரவுசெலவுத் திட்ட  அலுவலகத்தை நிறுவவும் முன்மொழியப்பட்ட போதும் அவையும் செயற்படுத்தப்படவில்லை.

இந்த  பரிந்துரைகளின்படி 17 பாராளுமன்ற துறைசார்  மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டியுள்ள  போதிலும் அவற்றுக்கான தலைவர்கள்  இது வரை நியமிக்கப்படவில்லை எனவும் அவற்றுக்கு நியமிக்கப்படும் இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான அளவுகோல் இன்னும் தயாரிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்   தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட வரவு செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் இதனால் அரசாங்கம் எதிர்பார்க்கும்  முறைமை  மாற்றம் (System Change)  மிக விரைவாக எட்டப்படும் எனவும் ஜனாதிபதி   நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்துக்கான சட்டமூலத்துக்கும் அமைச்சரவை  அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, சட்டமா அதிபரின்  அனுமதியைப் பெற்ற  பின்னர்  அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க உத்தேசித்துள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ள  ஜனாதிபதி , இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

வடக்கில் சரணாலயம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் காணுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் அளவில் சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், சரணாலயங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட தெற்கிற்கு வர வேண்டிய சூழல் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பொருத்தமான காணிகளை ஆராயுமாறு வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்