முல்லைத்தீவில் மனிதப் புதைகுழி தடயங்களை அழிக்க அரசு முயற்சி

முல்லைத்தீவில் அகழப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் தடயங்களை அழிப்பதற்கு முயற்சிக்கலாம் என்றும் அந்த விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா தனரஞ்சினி தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- இன்றுடன் 2,390 ஆவது நாளாக பல இன்னல்களுக்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தெருவில் நின்று போராடி வருகின்றோம்.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்ப்பட்ட காணாமல் போனோர் பணிமனை இன்று வரை தனது பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லை. ஆயினும், ஜெனிவா கூட்டத் தொடர் வருகின்ற காலப் பகுதிகளில் தாமும் வேலை செய்வதாகவும், அவர்களது விவரங்களை பெற்று மக்களுக்கு தாம் பதிலளிப்பதாக காட்டுவதற்காகவும் தமது பணிகளை மும்முரமாக வெளிக்காட்டுகின்றனர். நாளையதினம் (இன்று) கிளிநொச்சி மாவட்டத்தில் ஓ.எம்.பி. அலுவலகம் வந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை அழைத்து அதற்கான பரிகாரம் வழங்கப் போவதாக அறிய முடிகின்றது.

நாம் பல மாவட்டங்களில், பல இடங்களில் மற்றும் பல காலங்களில் ஓ. எம்.பி. பணிமனையை எதிர்த்து நின்றோம். அதாவது மாவட்ட ரீதியாக அவர்கள் எந்தவிதமான செயல்படுகளையும் செய்யாதவாறு எதிர்த்தோம். இன்றும் நாம் ஓ.எம்.பி.அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அந்த அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவோ தீர்வு கிடைக்கப் போவ தில்லை என்பதால் தான் 38 ஆவது கூட்டத்தொடரில் இருந்து இன்று வரை ஜெனிவாவில் உண்மையான குரலினை பதிவு செய்து வருகின்றோம்.

ஓ.எம்.பி.அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முனையாது விலகிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் சார்ந்து அரச சம்பளம் வாங்கும் மாவட்ட செயலகமாக இருப்பினும் அல்லது பிரதேச செயலகமாக இருப்பினும் அங்கே பணிபுரிபவர்களால் கூட அந்தப் பதவிகளில் இருப்பதால், எமது உறவுகளின் உயிர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்க முடியாமல் உள்ளனர். ஆனால், அரசாங்கத்துக்கு சார்பாக வேலை செய்வதற்கு மக்களிடம் வருகின்றனர். மக்களின் பணிகளைச் சரியாக செய்வதில்லை. தமது தேவைகளுக்காகச் செல்லும் மக்களை இருக்க வைத்துவிட்டு அவர்கள் தொலைபேசியுடன் இருப்பார்கள். ஆனால், ஓ.எம்.பி. அலுவலகம் என்றவுடன் அங்கு வழங்கப்படும் ஜூஸிற்கும், சிற்றுண்டிக்குமாக வேலை செய்வதை கண்டிக்கிறோம்.

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழிகள் எங்கிருந்து வந்தன? யாரால் ஆக்கப்பட்டன? அதனை இல்லாது ஒழிப்பதற்காகத்தான் அகழ்வுப் பணிகளில் அரச படைகளும் இணைந் துள்ளன. அந்த அகழ்வுகள் நீதியான முறையில் இடம்பெறுதல் வேண்டும். இலட்சக்கணக்கில் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூறமுடியாது அரசு தவிர்த்து வருவதுடன் அரசாங்கத்தினால் ஜெனிவா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் உள்ளது.

ஆகவே, அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் நாடுகளை ஏமாற்றும் நோக்கில் இந்த தடயங்களை அழிக்கலாம். ஆகவே புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி மனித நேயத்துடன் உள்ள அனைத்து உலக நாடுகளும் இவை குறித்த உண்மையினை அறிய உதவ வேண்டும்-என்றார்.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.

2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள் ஒவ்வொரு மாதமும் 30ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும், சர்வதேசத்திடம் நீதி கோரிய பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் உண்மையை தேடிக்கண்டறியும் பணி தொடரும் – மகேஷ் கட்டுலந்த

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தின் விளைவாக தமது அலுவலகத்தின் பணிகள் ஒருபோதும் மழுங்கடிக்கப்படமாட்டாது என்றும், காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை தேடிக் கண்டறியும் தமது பணி தொடரும் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிதல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், இழப்பீட்டை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் ஓரங்கமாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை முன்னிறுத்திய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் செயலிழக்கும் என்றும், இவையனைத்தும் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கிலான நடவடிக்கைகள் மாத்திரமே என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், இதுகுறித்து கருத்து வெளியிட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தை தொடர்ந்து தமது அலுவலகத்தின் செயற்பாடுகள் வலுவிழக்கும் என தான் கருதவில்லை எனவும், ஏனெனில், இவ்விரண்டு கட்டமைப்புக்களினதும் பணிகள் வெவ்வேறானவை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தின் பின்னரும், காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டறியும் தமது அலுவலகத்தின் பணிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று தற்போதைய சூழ்நிலையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அவசியம் என்று தெரிவித்த மகேஷ் கட்டுலந்த, அக்கட்டமைப்பின் உருவாக்கத்தைத் தாம் வரவேற்பதாக குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் 2300 ஆவது நாளை எட்டியது

வவுனியாவில்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வியாழக்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றுடன் 2300 ஆவது நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையிலான போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தீர்வு கிடைக்கும் வரை இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

ஓ.எம்.பி அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் தெரிவிப்பு

ஓ.எம்.பி அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதேவேளை தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் பொறிமுறை எமக்கு நம்பிக்கையில்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இன்றைய தினம் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வருகை தந்த 4 அதிகாரிகளை சந்திப்பதற்காக வந்திருந்தோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கவிதா ரதீஸ்வரனும், யாழ்மாவட்டத்தினை சேர்ந்த ஸ்ரீ நிலோயினியும் இந்த சந்திப்பில் என்னுடன் கலந்து கொண்டனர்.

நான்கு அதிகாரிகளில் ஒருவர் கொழும்பு தலைமையகத்தில் இருந்தும் ஏனைய மூவரும் அமெரிக்க ராஜாங்க அமைச்சில் இருந்து வந்தும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைக்கு பொறுப்பானவர்கள். அதில் மனித உரிமை, மத சுதந்திரம் மற்றும் நீதி பொறிமுறைகளை என வேறு வேறு துறைகளிற்கு பொறுப்பானவர்கள்.

அந்த வகையில், எமது துயரங்களை மனம் விட்டு அவர்களிடம் தெரிவித்தும் நாம் எதிர்பார்க்கும் தீர்வுகளை பொறுமையாகவும், விளக்கமாகவும் கூறியிருந்தோம்.

அத்துடன் ஓ.எம்.பி அலுவலகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் அத்துடன் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் பொறிமுறை குறித்தும் அதிருப்தியை வெளியிட்டோம்.

அவர்கள் நாம் கூறியவற்றை பொறுமையாக கேட்டனர். நம்பிக்கை தரும் விதமாக நாம் உரையாடியதன் காரணமாக எமது பேச்சுவார்த்தையை 1 மணித்தியாலங்களில் முடித்து கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

காணாமல் போனோர் அலுவலகத்துக்கு போதிய ஒத்துழைப்பினை வழங்குமாறு கனேடிய அதிகாரியிடம் ஜெஹான் பெரேரா கோரிக்கை

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் எதிர்வருங்காலங்களில் சிறப்பாக செயற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால், அவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியிடம் சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைனுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜெஹான் பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (08) கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது தற்சமயம் கனேடிய அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு எத்தகைய உதவிகள் தேவைப்படுகின்றன என்று அந்நாட்டின் சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைன் ஜெஹான் பெரேராவிடம் கேட்டறிந்துகொண்டார்.

அதற்குப் பதிலளித்த கலாநிதி ஜெஹான் பெரேரா தற்போது இலங்கையில் இயங்கிவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன பற்றி எடுத்துரைத்ததுடன், அந்த அலுவலகங்கள் தற்போது உரியவாறு முழுமையாக இயங்காத போதிலும், அவை உண்மையைக் கண்டறிவதை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட சிறந்த கட்டமைப்புக்கள் என்று சுட்டிக்காட்டினார். எனவே எதிர்வருங்காலத்தில் அக்கட்டமைப்புக்கள் சிறப்பானமுறையில் இயங்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால், அவற்றுக்கு ஆதரவளிக்குமாறும் அவசியமான உதவிகளை வழங்குமாறும் ஜெஹான் பெரேரா நவீதா ஹுஸைனிடம் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று இலங்கையைப் பொறுத்தமட்டில் மொழிசார் கற்கைநெறிகளுக்கும், பயிற்சி வழங்கலுக்கும் கனேடிய அரசாங்கம் முன்னுரிமையளித்துவரும் நிலையில், அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு குறித்தும் அவதானம் செலுத்துமாறு கனேடியப் பிரதிநிதியிடம் கலாநிதி ஜெஹான் பெரேரா வேண்டுகோள்விடுத்தார்.

மேலும் மாகாணசபைகளைப் பலப்படுத்துவதை முன்னிறுத்தி அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும், அதற்கு அவசியமான கட்டமைப்புக்களை நிறுவுமாறும் அவர் கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைனிடம் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது

காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்த அல்லது காரணம் கூற நீதிமன்றம் உத்தரவு

ஆட்கொணாவு மனு மீதான கட்டளை இராணுவத்தினருக்கு எதிரானதாகவுள்ளமை மிகப்பெரிய வெற்றி எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்தவும் அல்லது காரணம் கூறவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை  சசிதரன்  (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கெலம்பஸ்) ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு  நேற்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆட்கொணர்வு மனுக்கள் 3 மீதான தீர்ப்புகள்   வழங்கப்பட்டன. போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்த குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்ற நீதிவானால் வழங்கப்பட்டது.

இதன் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் இருப்பதில் மன்று திருப்தியடைந்து அவர் இராணுவத்தினரின் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என்ற தொனியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் அல்லது அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை விளக்கவும் எதிர்வரும் மாதம் 22 ஆம் திகதி வழக்குகள் திகதியிடப்பட்டுள்ளன.

அத்துடன் ஆட்கொணர்வு மனுமீதான கட்டளை இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானதாக ஆக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி. ஏனெனில் 2009 ஆம் ஆண்ட தொடக்கம் தங்களுடைய உறவினர்களை தேடி வந்த பயணம் 2013 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 9 வருடங்களுக்க பின்னர் பூரணமாக நிறைவடைந்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர் இதற்கான காரணத்தினை சொல்லித்தான் ஆகவேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் அவர்களை சார்ந்தது. இதுவரை காலமும் ஏதோ காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தவர்களிடம் அதற்கான பொறுப்பை இந்த நீதிமன்றம் கேட்கின்றது. அதை சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிமன்றத்தின் மூலம் எமக்கு கிடைத்த ஒரு வெற்றி மற்றும் நிவாரணமாகவே இதனை கருதவேண்டியுள்ளது என்றார். .

அத்துடன் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன, எனவே, இனிமேலாவது காணால் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மட்டுமல்ல மேலும் பல விடயங்கள் தொடுர்பாக பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை! – அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக வேண்டியும், சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்கலைக் கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு வந்துள்ளார்கள். இதற்கு வலுச் சேர்ப்பதற்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து 500 இற்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டுள்ளோம். எமது போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே திருக்கோவிலில் வைத்து எமது உறவுகளை தங்கவேலாயுதபுரத்திற்குச் செல்வதற்குப் புறப்பட்ட வேளை இருவர் முகமூடிகளை அணிந்து கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை உடைத்துவிட்டுச் சென்றனர். இதனால் சாரதி நூலிடையில் உயிர் பிழைத்துள்ளார். தற்போது நாம் தேடிக் கொண்டிருப்பது எமது உறவுகளைத்தான். நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தங்கராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தங்கராசா செல்வராணியின் தலைமையில் பேரூந்துகளில் பொதுமக்கள் தமது காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் புகைப்படங்களைத் தாங்கியவண்ணம், செவ்வாய்கிழமை (07) நண்பகல் மட்டக்களப்பை வந்தடைந்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-

எனக்கு திங்கட்கிழமை(06) நள்ளிரவு 12 மணி வரையில் 6 நீதிமன்ற உத்தரவுகள் கிடைத்துள்ளது. செவ்வாய்கிழமை(07) நீதிமன்றிற்குச் சென்றுதான் தற்போது இப்போராட்டத்திற்குச் சமூகம் கொடுத்துள்ளேன். புலனாய்வாளர்கள் எம்மை மிகவும் துன்பப்படுத்துகின்றார்கள்.

நாங்கள் தேடிக்கொண்டிருப்பது எங்கள் உறவுகளைத்தான் நாங்கள் அயுதம் ஏந்திப் போராட வரவில்லை. தடிகளைக் கொண்டு வரவில்லை, எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையே கேட்டு வருகின்றோம். எமது போராட்டம் வெற்றி பெறவேண்டும். 170 இற்கு மேற்பட்ட எமது உறவுகளை இழந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தற்போதுள்ள உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். எமக்கான நீதி இந்த போராட்டத் தொடரில் வரவேண்டும் என இதன்போது அவர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக யாழில் பதிவு

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓ.எம்.பி. அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனொரு கட்டமாக யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒருசிலர் அதிகாரிகளிடம் காணாமல் போன தமது உறவுகள் குறித்து பதிவுகளை மேற்கொண்டனர்.

அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

காணாமல் போனோர் அவலுலக விசாரணை : எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

244 குடும்பங்களை விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது.

அவர்கள் மேற்கொள்ளும் விசாரணைக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.