இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் சாக்குப்போக்கில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கவோ அல்லது விற்பனை செய்யவோ நடவடிக்கை எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு பல நிறுவனங்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்து பல தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவை இந்த செயல்முறைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்து தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கூறினார்.
இதற்கான வழிமுறைகள் மற்றும் காலக்கெடு விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
இறுதிச் சட்டத்திற்கு முன்னர் அமுல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்கள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.