இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பொருளாதார ஒத்துழைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (டிச. 21) சீதாவக்க தாவரவியல் பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது சீதாவக்க தாவரவியல் பூங்காவில் மரக்கன்று ஒன்றினை இந்திய உயர்ஸ்தானிகர் நாட்டினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டதாவது,
இலங்கை இந்திய நட்புறவு சில ஆண்டுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல நூற்றாண்டு கால வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு காலம் காலமாக வலுப்பெற்றுள்ளது.
ஜி 20 நாடுகளின் தலைவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் அயல்நாடுகள் பல்வேறு நலன்களை பெற்றுள்ளன.
உலகில் பலம் வாய்ந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
உயிர் பல்வகைமைத்தன்மை நிறைந்த இத்தகைய தாவரவியல் பூங்காக்களை பாதுகாப்பது அனைவரது பொறுப்பாகும்.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சீதாவக்க இராசதானி முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு இந்த தனித்துவமான சூழலின் இயற்கையும் ஒரு காரணமாக உள்ளது என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறுகையில்,
இலங்கையின் பசுமை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பொருளாதார ஒத்துழைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.
மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என்றார்.
இயற்கை வளங்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும். இந்தியாவின் மகத்தான உறவுகளையும் வரலாற்றையும் நினைவுகூருவதற்கும் அந்த உறவுகளை வலுப்படுத்திய பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தன போன்றவர்கள் நினைவுகூர வேண்டும்.
எமது பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராடும் சூழல், நட்பு, கொள்கைகளை இரு நாடுகளும் கூட்டு முயற்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என இதன்போது குறிப்பிடப்பட்டது.