பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது கவலை அளிக்கிறது – ஜூலி சங்

அமைதியான போராட்டக்காரர்களை கைது செய்தல் மற்றும் சிறைகளில் கைதிகளை நடத்துவது உட்பட பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கேள்விப்படுவது கவலை அளிக்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் தடுப்புக் காவலில் இருப்பவர்களிடம் கருத்துச் சுதந்திரம் மற்றும் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்வது இன்றியமையாதது என்றார்.

குறிப்பாக அரசாங்கம் அதன் சர்வதேச கடமைகளுக்கு இணங்க பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைத்து முக்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த விரும்புவதால், அது அடிப்படை சுதந்திரங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மட்டக்களப்பு சீயோன் ஆலய விஜயத்தின் போது கடும் மன உளைச்சலுக்குள்ளானதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

விஜயம் குறித்து அமெரிக்கத் தூதுவர் தனது X தளத்தில் குறிப்பிடுகயைில்,

நான் சீயோன் தேவாலயத்திற்குச் சென்று, 2019 இல் இடம்பெற்ற அந்த பயங்கரமான நாளின் தாக்கம் குறித்து போதகர் ரோஷன் மகேசனுடன் கலந்துரையாடியதில் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டது. இங்கு கொல்லப்பட்ட 25 க்கும் மேற்பட்ட குழந்தைகளால் சமூகம் மேம்படுவதற்கான ஒரு குணப்படுத்தும் ஆதரவைப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த பங்கு குறித்து பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.

சமூகங்களுக்கிடையில் இனவாத பதற்றங்களை தணிப்பதில் அவர்கள் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இலங்கையின் வெற்றி மற்றும் பன்முகத்தன்மைக்கு முக்கிய சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நிறுவப்பட்டுள்ள யேசு சபையைச் சேர்ந்தவரும் இலங்கை “கூடைப்பந்தாட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவருமான அமெரிக்காவில் பிறந்த யூஜின் ஜோன் ஹெபர்ட்டின் சிலையை அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் பார்வையிட்டுள்ளார்.

கடந்த 1948 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லூசியானாவிலிருந்து இலங்கை வந்த யேசு பையைச் சேர்ந்த யூஜின் ஜோன் ஹெபர்ட், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியை தேசிய சாம்பியன்ஷிப்களுக்கு வழிநடத்தினார். அப்போதும் அருட்தந்தை யூஜின் ஜோன் ஹெபர்ட், கூடைப்பந்து விளையாட்டை சமூகங்களை இணைக்கவும் புரிந்துணர்வை வளர்க்கவும் ஒரு இராஜதந்திர கருவியாகப் பயன்படுத்தினார் என்று அமெரிக்கத் தூதுவர் ஜுலிசங் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவின் 75 வருட கூட்டாண்மை இலங்கையர்களுக்கு எவ்வாறான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதை ஆராய்வதற்காக அமெரிக்கதூதுவர் ஜுலிசங் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் அதில் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்வதற்கும், முன்னேறுவதற்கும், ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கும் காணப்படும் வாய்ப்புகளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ள இலங்கையர்களிடம் இருந்து இனங்கண்டு பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் ஒன்று சேரந்து ஈடுபட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தூதுவர்‌ இலங்கையின்‌ உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எதிர்காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது.

2022 மே 9 ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தூதுவர் கருத்து தெரிவித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

இரண்டு வாரங்களிற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் கூட்டம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் குழுவின் தலைவர் உறுப்பினர்கள் முப்படை தலைவர்கள் பாதுகாப்பு செயலாளர் உட்பட்டவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்  தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளார்.

ஆயுதமேந்தாத ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து வெளிப்படையான விசாரணையை அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார், ஆர்ப்பாட்டங்களிற்கான மக்களின் உரிமையை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் என தனது கடிதத்தில் சரத்வீரசேகர  தெரிவித்துள்ளார்.

டயர்களை எரிப்பது வீதிகளை புகையிரத பாதைகளை மறிப்பது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அழி;ப்பது பொலிஸார் மீது கற்களை வீசி எறிவது போன்றவற்றை ஆர்ப்பாட்டங்களாக அமைதியான நடவடிக்கைகளாக கருதமுடியுமா என சரத்வீரசேகர தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தூதுவருக்கு இதனை கிரகிப்பதற்கான ஆற்றல் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை குறித்து  அறிக்கை வெளியிடுவதற்கு தனிநபருக்கு உள்ள உரிமை குறித்து அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள சரத்வீரசேகர பொலிஸார் ஆயுதமேந்தாத  ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டனர் என தெரிவித்ததன் மூலம் தற்போது எங்கள் நாட்டில் வசிக்கும் தூதுவர் இலங்கை குறித்து உலகிற்கு பாதகமான செய்தியை அனுப்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்களின் போது அமெரிக்க இராணுவம் எவ்வாறு நடந்துகொண்டது அவர்களை கட்டுப்படுத்தியது என்பதையும் சரத்வீரசேகர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது அறிக்கைகள் மூலம் ஜூலிசங்  அரசாங்கத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்தார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்களை உருவாக்கும் போது சகல தரப்பினருடம் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அவசியம் – ஜூலி சங்

வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய வகையிலும், நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளை பிரதிபலிக்கக்கூடிய வகையிலும் சட்டங்களை வடிவமைப்பதற்கு சகல தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அவசியம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (27) நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் உள்ளடங்கலாக புதிய சட்டமூல வரைபுகளின் தயாரிப்பின்போது சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து பொறுப்பான ஆட்சியியலை வலியுறுத்துவதில் சட்டத்தரணிகள் கூட்டிணைவு கொண்டிருக்கும் வகிபாகம் குறித்து விரிவாக ஆராய்ந்ததாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய வகையிலும், நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளைப் பிரதிபலிக்கத்தக்க வகையிலும் சட்டங்களைத் தயாரிப்பதற்கு சகல தரப்பினரதும் பரந்துபட்ட ஆலோசனைகள் மற்றும் நிலைப்பாடுகளைக் கவனத்திற்கொள்வது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களின் ஊடாக மீண்டெழ வேண்டும் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

“இலங்கை அதன் வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களின் ஊடாக மீண்டெழுவதற்கான சந்தர்ப்பமாக இந்த நெருக்கடியான தருணத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்“

இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – இலங்கை வணிக சபையின் 31ஆவது பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் இங்கு கருத்துரைக்கையில்,

“நிலை பேண்தகு அபிவிருத்தியையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைந்துக்கொள்ள இலங்கை மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையின் பிரகாரம் பல்வேறு மறுசீரமைப்புகளை இலங்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலும் பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் இந்த விடயத்தை வெற்றிக்கொள்ள முழுமையாக தம்மை அர்ப்பணித்து பணியாற்றுவதையும் நான் அறிவேன்.

அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் இலக்கானது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதுடன், அதற்கான தடைகளை நீக்குவதாகும் என்பதையும் அறிவேன்.

பழைய கலாசாரங்களின் பிரகாரம் நாம் ஆரம்பித்த அதே இடத்திற்கு மீண்டும் செல்வது அல்ல இலக்காக இருக்க வேண்டியது.

இலங்கை இன்னமும் நெருக்கடியில் இருந்து மீளவில்லை. அதுதான் நாம் வெற்றிக்கொள்ள வேண்டிய இலக்கு.

அமைவிடத்தின் ஊடாக இலங்கை தெற்காசியாவில் வளர்ச்சியடைந்த நாடாக மாற முடியும். வரலாற்றில் எதிர்கொண்ட சவால்களில் பாடங்களின் ஊடாக சகலரதும் பங்குபற்றலில் ஊடாக இந்த நெருக்கடியில் இருந்து மீள இதனை ஒரு சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும்“ – எனவும் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார்.

200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக வந்தவர்களை நினைவில் நிறுத்துகிறேன் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று முடிந்த தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனியானது 200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருகை தந்தவர்களை நினைவுகூருவதாக உள்ளது என்பதை தான் நினைத்துப் பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில்,

இலங்கையின் ஏனைய சமூகத்தினருடன் தாங்களும் சரிசமமாக வாழ்வதற்கான போராட்டத்தை நினைவுகூரும் விதத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு வார நடைபயணி முடிவுக்கு வந்துள்ளது.

200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக வந்தவர்களை நினைவுகூரும் விதத்திலும் முன்னெடுக்கப்பட்ட நடைபயணத்தில் கலந்துகொண்டவர்களை நினைவில் நிறுத்துகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

கறுப்பு ஜூலை நினைவு தின புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெறும் புகைப்படக்கண்காட்சியொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டுள்ளார்.

கறுப்பு ஜூலையின் 40வது வருடத்தின் போது சந்திரகுப்த தேனுவர மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் கலை விசேட கண்காட்சியை நான் பார்வையிட்டேன் என அவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

இந்த கலைப்படைப்புகள் கடந்த காலத்தின் காயங்களையும் அனைத்து இலங்கையர்களுக்குமான நியாயமான எதிர்காலத்தையும் வெளிப்படுத்தும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறன என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் நாடாளுமன்றத்திற்கு திடீர் விஜயம்

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்ததாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதியை நிலைநிறுத்துவதற்கான செயற்திட்டங்களை தொடர்ந்தும் செயற்படுத்துமாறு அமெரிக்க தூதுவர் கோரிக்கை

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்கு மிகவும் முக்கியம் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் Julie Chung வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் Julie Chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு வலுவான சட்டத்துறை அனைத்து பிரஜைகளும் நீதியைப் பின்தொடர்வதை ஊக்குவிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டின் நீதியை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் அவர் கோரிக்கை விடுததுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

யாராவது தும்மினால் கூட கருத்து வெளியிடும் ஜூலி சங் திருந்திவிட்டார் – விமல் வீரவன்ச

ஜூலி சங் திருந்திவிட்டார் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை அவர் வெளியிடுவதில்லை- விமல்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலிசங் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டார் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரகலய பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தற்போது சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதில்லை, அவர் நல்லவராக மாறிவிட்டார் யாராவது தும்மினால் கூட டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் என விமல்வீரவன்சதெரிவித்துள்ளார்