இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சுமந்திரன் இந்திய அரசிடம் கோரிக்கை

அரசியலமைப்பு ரீதியிலான தீர்வு திட்டத்தை நோக்கிய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஆர்வத்துடன் கலந்துக்கொள்கிறோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறைந்தது அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதுடன், இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பினையும் கோருவதாக  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற 9 ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள  எம்.ஏ.சுமந்திரன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏ.என்.ஐ. செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு திட்டத்தில் அந்த மக்களின் சார்பாக இந்தியாவே முன்னின்று செயற்பட்டது. எனவே அரசியலமைப்பு ரீதியிலான தீர்வு திட்ட விடயத்தில் இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதொன்றாகும்.

தற்போது அரசாங்கத்திற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றினேன்.

பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னரான ஒரு கால வரையறைக்குள் தீர்வு திட்டத்தை அடைவதற்கான அரசுடனான பேச்சுவார்த்தைகளில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கலந்து கொண்டு வருகின்றோம். முழுமையான அதிகாரபகிர்வு நோக்கிய தீர்வு திட்டத்தில் எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குவோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுவே பெரும் சிக்கலாகும். எனவே தான்  குறைந்தது அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதுடன், இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பினையும் கோருகின்றோம்.

அதேபோன்று கால தாமதமின்றி மாகாணசபைத் தேர்தலை நடத்தவும், எந்தவொரு தேர்தலையும் ஒத்தி வைக்கக் கூடாது என்றும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். எனவே இலங்கை வாழ் தமிழர்களுக்காக இந்தியா துணை நிற்க வேண்டும் என்றார்.

சமஷ்டித் தீர்வே என்பதில் தமிழ்த் தலைமைகள் அனைவரும் ஒற்றுமை

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் தங்களுக்குள் கட்சிகள், அணிகளாகப் பிரிந்து நின்றாலும், தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே ஒரே வழி என்பதில் மிக உறுதியாகவும், ஒருமித்த நிலைப்பாட்டிலும் உள்ளனர் எனும் அரசின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் பதிலளித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தலைவர்கள் பிளவுபட்டிருக்கின்றார்கள் என்று சாக்குப் போக்குக் கூறி, சமாளிப்பதை விடுத்து, சமஷ்டித் தீர்வுக்கு வழி பாருங்கள்.

தமிழ்த் தலைமைகள் வெவ்வேறு கட்சிகளில் வெவ்வேறாகப் பிரிந்து நிற்கலாம். அவர்களின் அணுகுமுறைகள், போக்குகள் வேறுபடலாம். ஆனால், தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலேயே தீர்வு என்பதில் அவர்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளார்கள்.

இந்நிலையில், தமிழ் தலைமைகளிடையே பிளவு, வேறுபாடு, கருத்து முரண்பாடு, குத்துவெட்டு என்று சாக்குப் போக்குச் சொல்லி விடயத்தைச் சமாளிப்பதை விடுத்து, தமிழ் தலைமைகளின் இந்த ஒன்றுபட்ட நிலைப்பாட்டை கவனத்தில் எடுத்து, அதில் பொதிந்துள்ள நீதி, நியாயத்தைப் புரிந்து கொண்டு, விரைந்த தீர்வுக்கு முன்வாருங்கள்.

மேலும், காலத்தை இழுத்தடித்துச் சாக்குப் போக்குக் கூறிச் சமாளிப்பதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.