இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி

இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பயணிகள் கப்பல் சேவை காங்கேசன்துறை மற்றும் பாண்டிச்சேரி இடையே முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த படகு சேவைக்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் கொழும்புக்கு சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரிக்கு பயணம் செய்ய சுமார் மூன்றரை மணி நேரம் ஆகும் என கூறப்படுகின்றது.

ஒரு பயணத்தின் போது 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயணி ஒருவரிடமிருந்து 60 அமெரிக்க டொலருக்கு இணையான கட்டணம் வசூலிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பயணி 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம்

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார்.

யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி தைப்பொங்கலின் பின்னர் பெப்ரவரி ஆரம்பத்திற்குள் காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்குமென எதிர்பார்ப்பதோடு இரண்டு நிறுவனங்கள் இதனை ஆரம்பிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய கப்பல்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் அதேவேளை அவை 1000 மெட்ரிக் தொன்னிற்கும் குறைவாக கொள்ளளவுடையவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கே. கே. எஸ். – பாண்டிசேரி கப்பல் சேவை ஜனவரியில் – அமைச்சர் நிமால் தெரிவிப்பு

இந்தியா – இலங்கை இடையே விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதல்கட்டமாக பாண்டிச்சேரி – காங்கேசன்துறை ஜனவரி மத்தியில் ஆரம்பிக்கப்படும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவரின் அமைச்சில் நேற்று செவ் வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

தம்பதிவ யாத்திரைக்கு (இந்தியாவின் பௌத்த தலங்களுக்கான யாத்திரை) செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை பெரும் நிவாரணமாக அமையும். ஒரு பயணிக்கான கட்டணம் 60 அமெரிக்க டொலர் என்பதுடன் 100 கிலோ எடையுள்ள பொருட்களை ஒருவர் எடுத் துச் செல்லமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.