வெடுக்குநாரி மலையில் வழிபாடுகள் மீள ஆரம்பம்

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பூசைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை இனம் தெரியாத நபரினால் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு முன்னெடுக்கப்பட்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆலயம் சார்பில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது வவுனியா நீதவான் நீதீமன்றத்தினால் அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வதையும், ஆலய வழிபாட்டுக்கும் அரச உத்தியோகத்தரினால் தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக நேற்றைய தினம் ஜேசுதகுருக்கல் தலைமையில் சுபவேளையில் பூசைகள் மற்றும் வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் முழுமையாக முடங்கியது

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும் தமிழர்களின் பாரம்பரிய இன, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடக்கு, கிழக்கில் இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள் வெறிச்சோடி போயுள்ளதாக தெரியவருகிறது

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் வவுனியா நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,

எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்க்க நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் செயலாளர் ந.கருணாநிதி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குகன், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நி.பிரதீபன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆதரவு கோரி 6 கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய இந்துக் கோயில்கள் சங்கம் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பிரித்தானிய இந்துக் கோயில்கள் சங்கம் தனது பூரண ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானிய இந்துக் கோயில்கள் சங்கங்கள் ஆகிய நாம், எதிர்வரும் செவ்வாய்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவை தெரிவித்து கொள்வதுடன், மற்றைய புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி, இவ் ஹர்த்தாலுக்கு உங்கள் முழு ஆதரவை தெரிவிக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இவ் ஹர்த்தாலை முன்னின்று நடத்தும் அத்தனை கட்சிகள், சங்கங்கள் யாவருக்கும் எமது சிநேகபூர்மான நட்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் அதேவேளை, உங்கள் இது போன்ற பணிகள் தொடர வேண்டுமென தாழ்மையாக வேண்டி கொள்கிறோம்.

நாட்டில் வாழும் எமது உறவுகளை எந்த பாகுபாடுமின்றி இவ் ஹர்த்தாலில் பங்கு கொண்டு இதனை முன்னெடுத்து மிக வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்குமாறு உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாயக மக்கள் அனைவரும் ஹர்த்தாலில் பங்கெடுத்து வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்க வேண்டும்

பிரான்ஸ் தமிழர் உரிமை மையம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலிற்கு பூரண ஆதரவினை வழங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் (Tamil Centre for Human Rights – TCHR, Est.1990) ஆகிய நாம், எதிர்வரும் செவ்வாய்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவை தெரிவித்து கொள்வதுடன், மற்றைய புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி, இவ் ஹர்த்தாலிற்கு உங்கள் முழு ஆதரவை தெரிவிக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இவ் ஹர்த்தாலை முன்னின்று நடத்து அத்தனை கட்சிகள், சங்கங்கள் யாவருக்கும் எமது சிநேகபூரமான நட்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் அதேவேளை, உங்கள் இது போன்ற பணிகள் தொடர வேண்டுமென தாழ்மையாக வேண்டி கொள்கிறோம்.

நாட்டில் வாழும் எமது உறவுகளை எந்த பாகுபாடுமின்றி இவ் ஹர்த்தாலில் பங்கு கொண்டு முன்னெடுத்து மிக வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்குமாறு உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் 25ஆம் திகதி ஹர்த்தால் : 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ் விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த கதவடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

இவ் ஊடக சந்திப்பில் தமிழரசிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா, டெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

யாழ்.பண்ணை பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டு தினத்தில் அன்று தீவக நுழைவாயிலில் நயினாதீவு அம்மனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இதனை அடுத்து யாழ்ப்பாண பொலிஸாசாரினால் குறித்த சிலையினை அகற்ற அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சிலையுடனு தொடர்புடையோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பு கட்டளை விடுதிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சிறிகாந்தா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த வழக்கு தொடர்பாக பொலிஸாரின் வழக்கீட்டு தகமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் குறித்து கேள்வி எழுப்பி இருவரும் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இதனை அடுத்து எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக வழக்கு எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர், சட்டத்தரணி சிறிகாந்தா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

இன்று யாழ்ப்பாணத்திலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி தலைவர்களும் பிரதானிகளும் அதேபோன்று தமிழ் அரசுக் கட்சியினுடைய தலைவரும் ஒன்று கூடி வருகின்ற 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய பாரிய கதவடைப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு மக்களுக்கு அறைகூவல் விடுப்பதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து அதே போன்று தொல்லியல் நடவடிக்கைகளினாலே எங்களுடைய பூர்வீகத்தை அழித்தொழிக்கின்ற அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் தேசிய கட்சிகள் மதத் தலைவர்கள் சமூக அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி இதற்கான எதிர்ப்பு போராட்டம் என்று நடத்துவதாக முடிவு எட்டப்பட்டிருந்ததது. எதிர்வரும் 24ஆம் தேதி இந்த போராட்டம் நடத்தப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது இறுதி முடிவாக இருக்கவில்லை.

இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்வரும் 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதாக கட்சி தலைவர்கள் தீர்மானத்தை எட்டி உள்ளனர். இதற்கு அனைத்து சமூக அமைப்புக்கள் மதத்தலைவர்கள் பொது அமைப்புகள் அனைவருடைய ஆதரவையும் கோரியுள்ளார்கள். பாராளுமன்றத்திலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்ற பொலிஸார் கடும் முயற்சி

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசனி அம்மனை குறிக்கும் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.

நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர்.

உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு அனுமதியுமின்றி அமைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் சிலையை அகற்ற தீவிர நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த அரச மரத்தை கடற்படையினர் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்தது – வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகம்

இந்திய தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்ததாகவும், விரைவில் தீர்வு கிடைக்க ஆவன செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்தில் வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் உட்பட வவுனியாவை சேர்ந்த இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்பு இந்துமாமன்ற பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழு இந்திய தூதுவரை நேற்று (10.04.2023) மாலை சந்தித்திருந்தது.

சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை மீண்டும் விக்கிரகங்கள் வைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் ஏற்படுத்தும் தடைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எல்லையோர கிராமங்களில் நடைபெறும் ஆக்கிரமிப்புக்களுடன் சைவ அடையாளங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பாகவும் இதன்போது இந்திய தூதுவருக்கு ஆவணங்கள் ஊடாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்மால் முடிந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக இந்திய தூதுவர் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதனால் இந்த சந்திப்பு திருப்தி தருவதாக அமைந்தது என ஆலய நிர்வாகத்தினர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.