பாண்டிச்சேரி – KKS க்கான படகு சேவையை விரைந்து முடிக்க அரசாங்கம் திட்டம்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வடக்கு மற்றும் பாண்டிச்சேரிக்கான படகு சேவையைத் தொடங்க, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சுங்கம் மற்றும் குடிவரவுத் துறையினருக்கான வசதிகளும் மார்ச் மாத இறுதிக்குள் ஏற்படுத்தி கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பயணிகளை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கும், புறப்படுவதற்குமான சேவையை வழங்குவதற்கு படகுகள் உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவின் பல இடங்களுக்குச் செல்லும் விமான சேவைகள் அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

கே. கே. எஸ். – பாண்டிசேரி கப்பல் சேவை ஜனவரியில் – அமைச்சர் நிமால் தெரிவிப்பு

இந்தியா – இலங்கை இடையே விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதல்கட்டமாக பாண்டிச்சேரி – காங்கேசன்துறை ஜனவரி மத்தியில் ஆரம்பிக்கப்படும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவரின் அமைச்சில் நேற்று செவ் வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

தம்பதிவ யாத்திரைக்கு (இந்தியாவின் பௌத்த தலங்களுக்கான யாத்திரை) செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை பெரும் நிவாரணமாக அமையும். ஒரு பயணிக்கான கட்டணம் 60 அமெரிக்க டொலர் என்பதுடன் 100 கிலோ எடையுள்ள பொருட்களை ஒருவர் எடுத் துச் செல்லமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.