தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை – சஜித் பிரேமதாச

கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச பொது நிதிக் குழு மற்றும் வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) நிறுவனம் பகுப்பாய்வின் பிரகாரம், தெற்காசியாவிலேயே நமது நாடுதான் அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிடுகிறது.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டில் 3 மடங்கு அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கையில் 100 மின்சார அலகுகளுக்கு மாதத்துக்கு 5280 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 2078 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.

200 அலகுகளுக்கு எமது நாட்டில் 12960 ரூபாய் வசூலிக்கப்படுவதோடு தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 4609 ரூபாவே வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே,இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் மட்டுமின்றி,

தொழில்முனைவோருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சலுகை வழங்குங்கள். வாக்குகளை இலக்காகக் கொண்டு மின் கட்டணத்தை 4 சதவீதமாக குறைத்த விடயத்தில் திருப்திபட முடியாது.

மக்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக கட்டணக் குறைப்பை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்சாரசபை ஊழியர்களின் இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் உத்தரவு

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் 5000 பேர் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எவ்வித தயக்கமும் இன்றி இராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எந்த ஒரு ஊழியரின் ராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்கும்படி இலங்கை மின்சாரசபை நிர்வாகத்துக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளை இராஜினாமா செய்பவர்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து பாக்கிகளையும் வசூலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் சீர்திருத்தங்கள் தொடர்பான பணிகளை துரிதப்படுத்துமாறு மின்சாரசபை நிர்வாகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்தங்களில் செலவு குறைப்பு வழிமுறைகள், உற்பத்தித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளத்தை விரிவுபடுத்துதல் என்பன உள்ளடங்குகின்றன.

இந்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற அடையாள வேலைநிறுத்தத்தின் போது இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவித்த பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 5000 மின்சாரசபை ஊழியர்கள் ஒரே நேரத்தில் இராஜினாமா செய்யத் தயாராகி வருகின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில் அமைச்சரால் இந்த புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்களை அடக்குவதற்கு அமைச்சின் முயற்சிக்கு எதிராக மின்சாரசபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரட்சி காரணமாக அரசாங்கம் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்

அரசாங்கம் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.

தொடரும் வரட்சியான காலநிலை அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

அரசாங்கம் அவசரமாக மின்சாரத்தை தனியார் துறையினரிடமிருந்து கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ள அதேவேளை வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நஸ்ட ஈட்டை வழங்கவும் தீர்மானித்துள்ளது.

தனியார் துறையினரிடமிருந்து அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இந்த வாரம் அனுமதியளித்துள்ளது.ஆறுமாத காலத்திற்கு நாளாந்தம் 100 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

அடுத்த மாதம் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை நீர்மின்சாரஉற்பத்திபாதிக்கப்படுவதால் தேவை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள இலங்கை மின்சாரசபை நாளாந்தம் 150 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்யவேண்டியிருக்கும்என தெரிவித்துள்ளது.

நீர்மின் உற்பத்தியில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நுரைச்சோலைமின்நிலையத்தின் ஒரு பிரிவு தொழில்நுட்ப பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நாமலின் திருமண நிகழ்விற்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் போது, இலங்கை மின்சாரச சபை வழங்கிய சேவைக்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளின் ஹேவகே இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவரால் கோரப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே இலங்கை மின்சார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை ஜூலை 26ஆம் திகதி கேட்டிருந்ததாகவும், மின்சார சபை இன்று தகவல் வழங்கியதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெட்டியவில் உள்ள வீடொன்றில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்வார் எனவும் பாதுகாப்பு விளக்குகளை பொருத்துமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு, பின்னர் உபகரணங்களை அகற்றியதாகவும், இதற்காக 2,682,246 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

செலவிடப்பட்ட தொகை தொடர்பான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் தொகை வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மிஹிந்தலை விகாரையில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைப் போன்று மெதமுலன வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டுமென நளின் ஹேவகே தெரிவித்தார்.

இரண்டு ரஷ்ய அணு உலைகளை அமைக்க அரசாங்கம் பேச்சுவார்த்தை

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் இரண்டு அணு உலைகளை இயக்கி 300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே தெரிவித்துள்ளார்.

தேசிய மின்சார தேவையை ஈடுச்செய்ய கூடிய திட்டங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் நட்பு நாடுகளுடன் ஆராய்ந்து வந்தது. இந்தியாவுடன் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் மற்றுமொரு திட்டமாகவே ரஷ்யாவுடன் அணுமின் திட்டம் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் தீவு நாடான இலங்கை எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தனக்கென சொந்த அணுமின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் திட்டத்தில் செயல்படுகிறது.

இந்த திட்டத்தை துரிதப்படுத்தி கட்டுமானத்தை தொடங்கும் என்று இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையில் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்மொழிவு உள்ளது. மேலும் சர்வதேச அணுசக்தி முகாமை குறித்து ரஷ்ய நிறுவனம் ஆராய்வதுடன் நான்கு பணிக்குழுக்களை அமைத்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையின் முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் நிர்மாணிக்க முடியும் என்று பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை தெரிவித்திருந்தது. அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடட்டதற்கு அமைய நடைபெற்றால் ரஷ்ய தொழிநுட்ப உதவியுடனான முதலாவது அணு மின்நிலையத்தை 2032ஆம் ஆண்டில் இலங்கையில் நிர்மாணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டது.

இலங்கை அணுசத்தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து இலங்கை இறுதி முடிவு எடுக்கவில்லை – காஞ்சன விஜயசேகர

இலங்கையில் ரஷ்யா அணுமின் உலையொன்றை உருவாக்குவதற்கு அனுமதிப்பதா, இல்லை என்பது குறித்து இலங்கை இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் மிகப் பெரிய அணுமின் நிலைய நிறுவனமான ரொசாட்டோம் இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 500 மெகா வட் வலுச்சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர பல விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்க முடியும். இதனால், அரசாங்கம் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் ரஷ்யாவின் உதவியுடன் அணுமின் சக்தித் திட்டம் – சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு

இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சர்வதேச அணுசக்தி நிறுவன நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி அணுமின் நிலையத்தை மிதக்க வைப்பதா அல்லது நிலத்தில் நிர்மாணிப்பதா? என்பது பற்றிய விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அணுமின் நிலையங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கான பயிற்சிகளை ரஷ்யாவின், ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான (Rosatom) வழங்கவுள்ளது.

இந்தநிலையில் குறித்த அணு மின்சார நிலையத்தின் உற்பத்தி நிலையத்தின் திறன் 300 மெகாவோட்டாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதானி குழுமத்திற்கு கெளதாரி முனையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அனுமதி மறுப்பு

கிளிநொச்சி கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலருமு; கலந்து கொண்டனர்.

இதன்போது, அதாணி குழுமத்தினால் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக எடுக்கப்பட்டது. இதன்போது வாதங்களும் இடம்பெற்றன.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கௌதாரி முனைக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

குறித்த வீதியை காபெட் வீதியாக அமைப்பது தொடர்பாக எவ்வித உறுதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக்கூடாது என்றும் கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக முறையான நடைமுறைளை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அதன் தொடர்ச்சியாகவே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தீர்மானிக்க முடியும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து முதல் கட்டமாக 500MW மின்சாரத்தை பெற திட்டம்

இலங்கையின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து கம்பி இணைப்பு மூலம் ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் திட்டப்பணிகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அது எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு நிறைவடையும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.

இந்த மின்சார திட்டம் சம்பந்தமான சுற்றுச்சூழல் அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக 400 மில்லியன் டொலர்கள் செலவாகும்.

தலைமன்னாரில் இருந்து தமிழ்நாடு வரை கடலில் அமைக்கப்படும் தூண்கள் ஊடாக கம்பி இணைப்பு மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதுடன் முதல் கட்டமாக 500 மெகாவோட் மின்சாரமும் இரண்டாவது கட்டமாக 500 மெகாவோட் மின்சாரமும் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மின் இணைப்பு திட்டத்திற்கான செலவை இந்தியா ஏற்பது அல்லது மூன்றாவது தரப்பின் உதவியை பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இவ்வாறு மினசாரத்தை பரிமாறிக்கொள்கின்றன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார விநியோக இணைப்பு தொடர்பில் நீண்டகாலமாக கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் பத்திரகே கூறியுள்ளார்.

இரண்டு இணைப்புகளை கொண்டதாக இந்த மின்சார விநியோக திட்டம் நிர்மாணிக்கப்பட உள்ளது.

இலங்கையில் மேலதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது இந்தியாவுக்கு வழங்கவும் இலங்கையில் மின்சார தேவை அதிகரிக்கும் போது இந்தியாவிடம் இருந்து விலைக்கு வாங்கவும் இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் பத்திரகே மேலும் கூறியுள்ளார்.

இலங்கை அரசு அனுமதி வழங்கினால் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயார் – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் (Levan S. Dzhagaryan) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க தமது நாட்டு அதிகாரிகள் தயாராகவுள்ளதாக ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தேவையான எந்தவொரு கலந்துரையாடலுக்கும் விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.