மின் கட்டண அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சரவைக்கு கூட எம்மை மீறி செயற்பட முடியாது – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

மின் கட்டண அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சரவைக்கு கூட எம்மை மீறி செயற்பட முடியாது. இதற்காக சட்டமா அதிபரையோ , நீதிமன்றதையோ நாட வேண்டிய அவசியமும் இல்லை.

சட்டத்தின் பிரகாரம் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமக்கே காணப்படுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (டிச.05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது முகாமையாளரின் மின் கட்டண திருத்த யோசனையே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிஷ்டவசமாக அமைச்சரவை அது தொடர்பான தீர்மானத்தை ஒரு வாரத்திற்கு காலம் தாழ்த்தியுள்ளது. அமைச்சரவை அந்த யோசனையை அங்கீகரிக்காது. மாறாக அமைச்சரவை அதற்கு அங்கீகாரமளித்தாலும் , பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை ஏற்காது.

கடந்த மாதம் மின் உற்பத்திக்காக நிலக்கரிக்கு பதிலாக எரிபொருள் பயன்படுத்தப்பட்டமையினால் 13 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது.

எனவே உரிய நேரத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும். தொழிற்துறைகளின் வீழ்ச்சிக்கு மத்தியில் மின்கட்டணத்தை அதிகரிப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெறுவதற்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆணைக்குழுவிற்கு எதனை செய்ய முடியும் , எதனை செய்ய முடியாது என்பது சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே எமக்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவையும் கிடையாது. இறுதி தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் எமக்கிருக்கிறது. அதனை முகாமைத்துவம் செய்யும் இயலுமையும் எமக்கு காணப்படுகிறது.

முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கமைய 180, 300 அலகுகளை விட அதிக மின்சாரத்தை உபயோகிப்பவர்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மாறாக நிலையான கட்டணங்களே அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இல்லாத மக்களிடமிருந்து மேலும் மேலும் சுரண்டுவதற்கு எம்மால் இடமளிக்க முடியாது.

எம்மை மீறி அமைச்சரவையினாலும் இவ்விடயத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான சட்டத்தினை தயாரித்தார் என்பதற்காக அவரால் அதற்கு உரிமை கோர முடியாது.

இது மக்களின் சட்டமாகும். ஆணைக்குழு உறுப்பினர்களான எம்மால் அரசியல் செய்ய முடியாது. அதே போன்று அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இருக்க முடியாது.

மின் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் அதனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே செய்ய முடியும். எம்மை மீறி கட்டண திருத்தங்களை மேற்கொள்வதாயின் ஆணைக்குழு தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

காஞ்சனவின் கருத்து தவறானது: சம்பிக்க விளக்கம்

இலங்கை மின்சார சபை அடைந்துள்ள இலாபம் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ள கருத்தை நிராகரிப்பதாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

நீர்மின்னுற்பத்தி பாவனை அதிகரிக்கப்பட்டதால் கமந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபை ஒப்பீட்டளவில் இலாபமடைந்துள்ளதாக மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர செவ்வாய்கிழமை (ஜன. 3) டுவிட்டர் வலைத்தளத்தளம் ஊடாக செய்தி வெளியிட்டிருந்தார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் இலங்கை மின்சார சபை கடந்த இரு மாதங்களில் இலாபம் பெறவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை இலங்கை மின்சார சபையின் நிதி நிலைமை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிடும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை அதிகரிக்காமல் இருந்திருந்தால் இலங்கை மின்சார சபை மாதாந்தம் 11 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மின்னுற்பத்திக்காக கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நீர்மின்னுற்பத்தியின் பயன்பாடு முறையே 635.5 மற்றும் 655 ஜிகாவாட் மணிநேரமாக காணப்பட்டது.ஆகவே இக்காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையின் செலவுகள் குறைவடைந்துள்ளன.

பொய்யான மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்களை குறிப்பிடுவதற்கு முன்னர் நிலைமையை அறிந்துக் கொண்டு கருத்துக்களை குறிப்பிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மின் கட்டணத்தை அதிகரிக்க IMF நிபந்தனையே காரணம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திடம் இலங்கை பொருளாதாரத்திற்கு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை கோரியுள்ளது.

இந்த சர்வதேச நிதியங்கள் விதித்துள்ள இந்த நிபந்தனைகளின் காரணமாகவே இன்று மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட வரியில்லா வர்த்தக வளாகத்தை நேற்று (03) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியம் நமது பொருளாதாரத்தை மறுசீரமைக்க ஒரு திட்டத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறது. மானியங்கள் சாத்தியமில்லை என்ற நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய வேண்டும். அதற்கு நாங்கள் அடிபணியாவிட்டால் அல்லது அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தேவையான கடன் தொகை கிடைக்காது. சர்வதேச ஆதரவும் கிடைக்காது.

இன்று மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். அது தான் காரணம். இதை விரும்பி செய்யவில்லை.

மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான உத்தேச அறிக்கையை வெளியிட்டார் காஞ்சன விஜேசேகர

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வங்கிகள், பொது இடங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான உத்தேச அறிக்கையை இது காட்டுகிறது.

அந்த ஆவணங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

Posted in Uncategorized

காஞ்சனாவின் ஆலோசனைகளை குப்பைத் தொட்டியில் போடவும் – மின் பொறியாளர் சங்கம்

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த திட்டக் கொள்கையை நிராகரிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“திட்டக் கொள்கையினை மாற்றுவதற்கு சட்டம் இருக்கிறது. திருத்தம் இருக்கிறது. சுயேட்சையான ஆணைக்குழு இருக்கிறது. அந்த ஆணைக்குழு அந்தச் சட்டத்தின்படி அமைப்பை மாற்றினால் அதற்கு ஒரு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

ஆனால் மின்துறை அமைச்சர் இதற்கெல்லாம் மாறாக புதிய கொள்கையை அமுல்படுத்த சென்றார். ஆனால், அந்தக் கொள்கையைக் கிழித்து குப்பைத் தொட்டியில் போடுமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இதற்கு, இலங்கை மின்சார சபை சார்ஜிங் முறையை மாற்ற விரும்பினால், ஒரு முறை உள்ளது. மின் கட்டணம் 75 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாங்கள் முறைமையை மாற்ற முயற்சிக்கும் போது, ​​இந்த ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக அமைச்சர் கூறினார். மக்களுக்கு ஒரு அமைப்பு தேவையில்லை என்று கூறிய அமைச்சர் தற்போது தனக்கு சாதகமான கொள்கையை உருவாக்கி மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு முறையை கொண்டு வர முயற்சிக்கின்றார்.

எங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால், அதை பொதுமக்களிடம் முன்வைத்து விவாதிக்க வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

மின் கட்டணத்தை உயர்த்தும் யோசனையை ஒத்திவைத்தது அமைச்சரவை

உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை கூட்டத்தில் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்தார். இதேவேளை, அமைச்சரவை பத்திரத்தை பரிசீலித்து முடிவெடுப்பதை அடுத்த வார கூட்டத்திற்கு அமைச்சரவை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தேவைகள், முன்மொழியப்பட்ட கட்டணக் கட்டமைப்பு, எரிசக்தி முன்னறிவிப்பு மற்றும் நிதி குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளித்ததாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. தேவைகள், முன்மொழியப்பட்ட கட்டண அமைப்பு, எரிசக்தி முன்னறிவிப்பு மற்றும் நிதி குறித்து அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது. முன்மொழிவுகள் மீதான அவதானிப்புகளுக்காக அமைச்சர்களின் அமைச்சரவைக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முன்மொழிவுகள் தொடர்பான அவதானிப்புகளுக்காக அமைச்சரவைக்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.” என குறித்த டுவிட்டர் பதிவில் காஞ்சன குறிப்பிட்டுள்ளார்.

மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு

மின்கட்டண திருத்தம் ஊடாக இந்த ஆண்டில் 777 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்டிக் கொள்ள மின்சார சபை எதிர்பார்த்துள்ளது.

நடுத்தர வருமானம் பெறும் 50 இலட்சம் மின்பாவனையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்.

முறையாக செயற்படாவிட்டால் முட்டைக்கு நேர்ந்துள்ள கதியே மின்சாரத்திற்கு நேரிடும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எவ்வித பரிந்துரைகளையும் மின்சாரத்துறை அமைச்சு முன்வைக்கவில்லை.

பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திறகு அப்பாற்பட்ட வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை மின்சாரத்துறை அமைச்சர் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது நியாயமற்றது.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கான மின்கட்டணத்தை 125 சதவீதத்தாலும்,பெரு தொழிற்துறைக்கான மின்கட்டணத்தை 150 சதவீதத்தாலும். சுற்றுலாத்துறைக்கான மின்கட்டணத்தை 150 சதவீதத்தாலும் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் (2022) ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் நூற்றுக்கு 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டதால் மின்பாவனைக்கான கேள்வி நூற்றுக்கு 15 சதவீதத்தால் குறைவடைந்தது,சிறு மாற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மின்பாவனைக்கான கேள்வி முழுமையாக குறைவடையும்.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆணைக்குழுவிற்கு முரணாக மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

கடந்த ஆகஸட் மாதம் 31ஆம் திகதி மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ‘இதனால் இலங்கை மின்சார சபை 220 பில்லியன் ரூபா இலாபம் அடைந்து. இலாபத்தை காட்டிலும் நட்டம் அதிகமாக உள்ளது என மின்சார சபை குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்து இவ்வருடம் 777 பில்லியன் வருமானத்தை பெற்றுக் கொள்ள இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது.

இந்த இலாபத்தில் 100 பில்லியன் ரூபாவை நடுத்தர வருமானம் பெறும் 50 இலட்ச மின்பாவனையாளர்களிடமிருந்து அறவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

குறைந்த மின் அலகுகளை பாவிக்கும் மின்பாவனையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

முட்டை பிரச்சினை நாட்டில் பெரும் பிரச்சினையாகவுள்ளது. முட்டை விலை அதிகரிப்பை தொடர்ந்து முட்டை மாபியாக்கள் முட்டைகளை பதுக்கி அதிக விலைக்கு விற்கிறார்கள், முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை கூட அரசாங்கத்தினால் நியமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைய செயற்படாவிட்டால் முட்டைக்கு ஏற்பட்டுள்ள கதியே மின்சாரத்திற்கு ஏற்படும் என்றார்.

Posted in Uncategorized

மின் கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்படும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி

எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், எதிர்வரும் மாதத்தில் 07 நிலக்கரி கப்பல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பருவகால நிலக்கரி கப்பல்களை கொள்வனவு செய்ததில் எஞ்சியிருந்த கப்பல்களில் இருந்து இந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என்றும், கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், நாட்டு மக்கள் வாழ்க்கை முறைக்கு மாற்றியமைக்க வேண்டும் என்றும் மின்சார அமைச்சர் குறிப்பிட்டார்.

மின் பொறியாளர்கள் சொல்வது போல் அடுத்த வருடம் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுமா என்று செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், மின்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் அந்த பொறியாளர்களின் விருப்பம் நிறைவேறும் என்றார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை மீட்பதற்காக அல்ல என தெரிவித்த அமைச்சர், 2023 ஆம் ஆண்டு மின் உற்பத்திக்கான செலவை ஈடுசெய்வதற்காகவே இந்த மின்கட்டணத்தை உயர்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மின் கட்டண திருத்தத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதியுதவி வழங்குவதற்கு உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்பில் வழங்கப்படக்கூடிய சலுகைகள் தொடர்பில் உரிய பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களுடன் கலந்துரையாடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது – சோபித தேரர்

அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களிடமிருந்து இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது. அந்த கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என குறிப்பிட்டார்.

மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால், அதற்கெதிராக சட்ட ரீதியாக குரல் கொடுப்பதற்கு மக்கள் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் பேரவையினால் திங்கட்கிழமை (டிச. 26) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்சார சபைக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்கு அமைச்சரிடம் காணப்படும் ஒரேயொரு மாற்று வழி கட்டணத்தை அதிகரிப்பது மாத்திரமேயாகும். இதன் மூலம் மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை சுமத்துவதே இவர்களின் நோக்கமாகும்.

அண்மையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் தற்போது 10 சதவீதம் மின்சார பாவனையை குறைத்துக் கொண்டு;ள்ளனர். அது மாத்திரமின்றி 16 சதவீதமான தொழிற்துறைகள் இதன் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் எதனைப் பற்றியும் கவனத்தில் கொள்ளாத அமைச்சர் மக்கள் மீது சுமைகளை சுமத்தியேனும் மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுசெய்யவே முயற்சிக்கின்றார்.

இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். இவ்வாறு கட்டணத்தை செலுத்தாமலிருப்பது வறுமையிலுள்ள மக்கள் அல்ல. முன்னாள் அமைச்சர்கள் , தற்போதைய அமைச்சர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

அதே போன்று அரசாங்கத்தின் சகாக்களின் நிறுவனங்களும் , அரச நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறு 39 பில்லியன் ரூபா மின் கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது, மக்களின் சுமைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் நியாயமானதா?

மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி குறித்த வேலைத்திட்டங்கள் எவற்றைப் பற்றியேனும் அமைச்சர் சிந்தித்திருக்கின்றாறா? எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பவற்றைப் பயன்படுத்தி மாத்திரம் மின் உற்பத்தியில் ஈடுபட எதிர்பார்த்துள்ளமையின் நோக்கம் , தமக்கு கிடைக்கப் பெறும் தரகுப்பணம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியும் பரிந்துரையும் இன்றி அமைச்சரின் தன்னிச்சையான விருப்பத்திற்கு அவ்வாறு மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்க முடியாது. மாறாக அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் மக்கள் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளை இதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

மின் கட்டண அதிகரிப்பு – மக்களுக்கு கடவுளே துணை – டலஸ் டலஸ் அழகபெரும

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டு மக்களுக்கு கடவுள் துணை என பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.

மின்கட்டண திருத்தம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. பொருளாதார பாதிப்பின் சுமையை நாட்டு மக்கள் மீது முழுமையாக சுமத்த முடியாது.

அரசாங்கம் பல்வேறு செலவுகளை குறைத்துக்கொண்டால் மக்கள் மீதான வரி விதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சுக்களை விஸ்தரித்துக்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளது.

38 இராஜாங்க அமைச்சுக்கள் அவசியமற்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை ஒரு இராஜாங்க அமைச்சுக்களை கூட நியமிக்காமல் வரையறுக்கப்பட்ட அமைச்சுக்களுடன் அரச நிர்வாகத்தை முன்னெடுத்தார். இதனை அரசாங்கம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.

மின்கட்டண அதிகரிப்பால் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் மொத்த மின்பாவனையாளர்களில் 30 அலகுக்கும் குறைவான மின் அலகினை பாவிக்கும் 14 இலட்சம் மின்பாவனையாளர்கள் உள்ளார்கள்.

இவர்கள் பொருளாதார ரீதியில் கீழ்நிலை மட்டத்தில் உள்ளவர்கள். இவ்வாறான நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டு மக்களுக்கு கடவுள் தான் துணை என பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.

மின்கட்டண திருத்தம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும். மக்களிடம் வளம் இருந்தால் தான் மின்கட்டணத்தை செலுத்துவார்கள்.

மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் எவ்வாறு வாழ்வது என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றார்.