உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இன்று நாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படுகிறது.
தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் தமக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும் , ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கறுப்பு நிற ஆடையணிந்து , கொடியேற்றி கறுப்பு ஞாயிறு தினத்தை அனுஷ்டிப்பதாக இலங்கை கத்தோலிக்க பேரவை அறிவித்துள்ளது.
இன்றிலிருந்து ஆரம்பமாகும் இந்த அமைதிவழி கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு எதிக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி மற்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமயிலான தேசிய மக்கள் சக்தி என்;பன உள்ளிட்டவை ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூக தொடர்புகளுக்கான பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவிக்கையில் ,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கோரி இன்றிலிருந்து எமது அமைதி போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
எமது போராட்டம் இன்றுடன் நிறைவடையப் போவதில்லை. நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். கறுப்பு ஆடையணிந்து கறுப்பு கொடியேற்றி எமது போராட்டத்தை தொடருவோம்.
ஞாயிறு ஆராதனைகளின் பின்னர் , தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கோரி விஷேட ஆராதனைகளும் இடம்பெறும்.
இவை நிறைவடைந்ததன் பின்னர் தேவாலயத்திற்கு வெளியில் அமைதியான முறையில் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்.
காலை 8.40 முதல் 8.45 மணி வரை தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
இதே போன்று ஒவ்வொரு ஞாயிறு ஆராதனைகளின் பின்னரும் இடம்பெறும். அத்தோடு காலை 8.45 மணி முதல் 9.20 வரை தேவாலய வளாகத்தில் அமைதிவழி போராட்டமும் முன்னெடுக்கப்படும் என்றார்.