கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமை தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை டோக்கியோ நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
வௌிநாடு அல்லது வேறு ஒரு தரப்பினரது தலையீட்டுடன் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய செயற்றிட்டங்களை இரண்டு தரப்பினரதும் இணக்கப்பாடுகள் இல்லாமல் நிறுத்துவதற்கு அல்லது இரத்து செய்வதற்கு முடியாதவாறு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக சட்டங்களை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
அனைத்து பாரிய செயற்றிட்டங்கள் தொடர்பிலான யோசனைகள், அந்த செயற்றிட்டங்களின் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியதை கட்டாயமாக்குவதாகவும் ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்காக ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக ஜப்பான் பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.
இதனிடையே, ஜப்பானின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான அமைச்சர் Taro Kono-வை ஜனாதிபதி இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை நகர்த்துவதற்கான திட்டம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையினரையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையின் 20 ஆவது ஆண்டு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளை ஆரம்பிப்பதற்காக தொழில் முயற்சியாளர்களின் பூகோள இயக்கமொன்றை உருவாக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.