ஊழல் ஒழிப்பு சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். பாலியல் இலஞ்சம் கோருவதற்கு எதிரான விதிவிதானங்கள் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன்.
பாலியல் இலஞ்சம் கோரலினால் பாதிக்கப்பட்ட தரப்பினரது இரகசியத்தன்மையை பாதுகாக்கும் வகையில் புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதியமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு அரச சேவை மாத்திரமல்ல தனியார் சேவையும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளது. யுத்த காலத்தில் நாடு வங்குரோத்து நிலை அடையவில்லை.யுத்த காலத்தில் வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் டொலர் வரை திறைசேரியில் சேமிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு கையிருப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும். உண்டியல் மற்றும் அலாவா முறைமை ஊடான பண அனுப்பல்களுக்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியமை தற்போது பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணியாக உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு தனியார் தரப்பினரது பங்களிப்பு இன்றியமையாததாகும்.கடந்த 11 வருட காலமாக இலங்கைக்கு முறையாக செலுத்த வேண்டிய 54 பில்லியன் டொலர்களை பிரதான நிலை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள்.இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.
ஊழல் மோசடி இலங்கை வங்குரோத்து நிலை அடைவதற்கு பிரதான காரணம் என சர்வதேசம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.நடைமுறையில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டத்தின் ஊடாக உருவாக்கவுள்ளோம்.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்காக 1975 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.தற்போதைய சூழலில் இந்த சட்டம் செயற்பாடற்றதாக உள்ளது. ஆகவே இந்த சட்டத்தை நீக்கி சொத்து விபரங்களை ஒன்லைன் ஊடாக பதிவு செய்யக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு அமைய ஊழல் ஒழிப்பு சட்டத்தில் புதிய சரத்துக்களை உள்ளடக்கவுள்ளோம்.
ஜனாதிபதி, ஆணைக்குழுக்களின் தலைவர்கள், ஆளுநர்கள், மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பழைய சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.ஆனால் புதிய சட்டத்தில் இவர்கள் அனைவரையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது இலங்கைக்கு மிக முக்கியமானதொரு சட்டமாகும்.
பாலியல் இலஞ்சம் கோருவது பாரதூரமான குற்றமாகும்.அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலியல் இலஞ்சம் கோரல் நெருக்கடிக்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும் அவற்றை பகிரங்கப்படுத்துவது இல்லை.தமக்கு நேர்ந்த அநீதியை வெளியில் குறிப்பிட்டால் தமக்கும்,தம்மை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற நிலையில் இருந்துக் கொண்டு அவர்கள் அந்த கொடுமைகளை பகிரங்கப்படுத்துவதில்லை.
சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலத்தில் பாலியல் இலஞ்சம் கோரலினால் பாதிக்கப்பட்ட தரப்பினரது இரகசியத்தன்மையை பாதுகாக்கவும்,பாலியல் இலஞ்சம் கோரியவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் விசேட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்த சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.