புகையிரத சேவையாளர்கள் சேவைக்கு சமூகமளிப்பதற்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க வலுசக்தி அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின் எதிர்வரும் நாட்களில் பயணிகள் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்.
புகையிரதசேவை மாத்திரமே போக்குவரத்து ஊடகத்தில் பொது மக்களுக்கு இறுதி தீர்வாக உள்ளது என புகையிரத சேவை தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர்.
எரிபொருள் பற்றாக்குறை பொதுப்போக்குவரத்து சேவைக்கு பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அரச மற்றும் தனியார் பஸ்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுப்படுகின்றன.
பஸ் கட்டணம் சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் பொது பயணிகள் பஸ் சேவையினை பயன்படுத்துவதை புறக்கணித்து புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.
இருப்பினும் பஸ்களில் சனநெரிசல் அதிகமாகவே உள்ளது. ஒருசில பகுதிகளில் பொதுபயணிகள் பாதுகாப்பற்ற முறையில் பஸ்ஸின் கூரையில் அமர்ந்தவாறு பயணம் செய்வதை அவதானிக்க முடிந்தது.
புகையிரத சேவைக்கு தேவையான எரிபொருளை விநியோகிப்பதில் எவ்வித சிக்கல் நிலையும் ஏற்படவில்லை என புகையிரத திணைக்களம் கடந்த வாரம் குறிப்பிட்டது.
புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைக்கும், சேவையில் ஈடுப்படுத்தப்படும் புகையிரதங்களின் எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.
அதிகரித்துள்ள பொது பயணிகளின் பயன்பாட்டிற்கமைய புகையிரத சேவையினை அதிகரிப்பது சாத்தியமற்றதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டது.
எரிபொருள் பற்றாக்குறை புகையிரத சேவையாளர்கள் சேவைக்கு சமூகமளிப்பதில் தாக்கம் செலுத்தியுள்ள காரணத்தினால் நேற்று 28 புகையிரத சேவைகளும், இன்றையதினம் 22 புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டன. அத்துடன் புகையிரத சேவைகளும் காலதாமதப்படுத்தப்பட்டன.
புகையிரத சேவையாளர்கள் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்றைய தினம் 22 புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டதால் கோட்டை புகையிரத நிலையத்தில் அமைதியற்ற தன்மை காணப்பட்டது.
புகையிரத சேவைக்காக அதிக நேரம் காத்திருந்த பொது பயணிகள் புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டதால் கலக்கமடைந்து எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புகையிரத சேவையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.
எரிபொருள் விநியோகத்தில் புகையிரத சேவைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தியும் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.
எரிபொருள் பற்றாக்குறை, பஸ் கட்டண அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் பொது மக்கள் தற்போது புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். பொது போக்குவரத்து சேவையில் புகையிரத சேவை மாத்திரமே தற்போது இறுதி தீர்வாக உள்ளது.
புகையிரத சேவையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு முறையான நடவடிக்கையினை முன்னெடுக்காவிடின் எதிர்வரும் நாட்களில் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கததினர் தெரிவித்தனர்.