கோட்டாபய, புட்டினுக்கு Call எடுத்ததாக கூறுவது பொய் – உதயங்க வீரதுங்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து உரையாடியதாக கூறப்படும் கதை முற்றிலும் பொய்யானது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் ஜனாதிபதியின் உறவினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியை தொடர்புக்கொள்ள தனியான அலைவரிசை உள்ளது

கடந்த பெப்பரவரி மாதம் ரஷ்ய ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புக்கொள்ள கோட்டாபய ராஜபக்ச மறுத்தார். நித்திரைக்கு செல்லும் முன்னர் குட் நைட் என்று சொல்வதற்காக ரஷ்ய ஜனாதிபதியை தொடர்புக்கொள்ள முடியும் என்று நினைத்தீர்களா?.

இதனால், ஜனாதிபதி புட்டினுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. ரஷ்ய ஜனாதிபதியை நினைத்த மாத்திரத்தில் உடனடியாக தொடர்புக்கொள்ள முடியாது அதற்கு வழிமுறைகள் உள்ளன.

ரஷ்ய ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்புக்கொள்ள ஒரு அலைவரிசை உள்ளது. அதில் தொடர்புக்கொண்டால், தொடர்புக்கொள்வதற்கு முன்னர் எனக்கு தெரியும்.

இந்த அலைவரிசை ஊடாக தொடர்பை ஏற்படுத்தாமல், வேறு வழியில் தொடர்புக்கொண்டால், ராஜதந்திர முறைகளுக்கு அமைய இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகள் உரையாட முடியாது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ரஷ்யாவுக்கான தூதுவர் பதவியை பணத்திற்கு விற்றுள்ளார். ஜனாதிபதி மாத்திரமல்ல, செயலாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

ரஷ்ய விமானங்கள் மூலம் இலங்கைக்கு ஒரு வாரத்திற்கு 12 லட்சம் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. அமெரிக்க சார்பு ஜனாதிபதி அதனை கிடைக்காமல் செய்துள்ளார்.

எரிபொருளை இறக்குமதி செய்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தை ரஷ்யாவுக்கு சென்ற அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அங்கு எண்ணெயை மாற்றிக்கொண்டு வருவார்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தால், அதனை செய்து காட்ட தயார் எனவும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

உதயங்க வீரதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சித்தியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.