தமிழ் கட்சிகளை தடை செய்ய கூறும் சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். அவர்களை அழிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச பாரிய தவறிழைத்துள்ளார என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது