ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் – அனுரகுமார இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இன்று (09) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் பெட்ரிக் மெகார்த்தி (Patrick McCarthy), சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான பகுப்பாய்வாளர் நெத்மினி மெதவல மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் நடப்பு மனித உரிமைகளின் நிலைமை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயன்முறை பற்றி இரு தரப்புக்கும் இடையில் விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

குறிப்பாக இலங்கையில் நல்லிணக்க செயன்முறையை உன்னிப்பாக அவதானிப்பதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எதிர்வரும் தேர்தல் செயன்முறைக்குள் அரசியல் கட்சிகளால் பின்பற்றபட வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தினர்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கலாசாரமானது தொடக்கத்தில் இருந்தே ஒழுக்கநெறிக் கோவையை அடிப்படையாகக் கொண்டிருந்ததென்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கு வலியுறுத்தியதோடு, அவர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தெரிவித்தாக . அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் அநுரவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் காமென் மொரெனோவுக்கும்  (Carmen Moreno) தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் நடைபெற்றது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி  மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு   கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தலைப்போன்றே தேர்தல்களை பிற்போடுதல் பற்றியும்  கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் நிகழ்நிலை  பாதுகாப்பு  சட்டம் (Online Safety bill) பற்றியும் இந்த உரையாடலின்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு,

இருதரப்பினருக்கும் இடையில்  உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுமத்தின் பிரதிப் பிரதானி லார்ஸ் பிறெடால் (Lars Bredal) தேசிய மக்கள்  சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர்  விஜித ஹேரத்   ஆகியோர்  பங்கேற்றனர்.

அரசியல், சமூகம், பொருளாதாரம் உட்பட அனைத்து பிரிவுகளையும் புதிய மாற்றத்திற்குள்ளாக்கும் அரசியல் இயக்கம் அவசியம் – அநுர குமார

வெறுமனே ஆட்சி மாற்றத்தினால் எந்தவிதமான பயனும் கிடையாதென்பதும், இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் ஒரே பிடியில் எடுத்து மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற புதிய அரசியல் இயக்கமொன்று அவசியமெனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார்.

கடந்த 27 ஆந் திகதி மாத்தறையில் நடாத்தப்பட்ட மேற்படி மாவட்டத்தின் அதிட்டன (திடசங்கற்பம்) முப்படைக் கூட்டமைவின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த மாநாட்டில் அநுரகுமார தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

அரசியல் சூடுபிடித்துள்ளது. தேர்தல் அண்மித்திராத நிலையில் அரசியல் இவ்விதமாக சூடுபிடித்தமை இலங்கையில் ஒருபோதுமே நிலவவில்லை. அண்மைக்காலமாக இலங்கை மக்கள் அரசியல் ரீதியாக மிகவும் அதிகமாக விழிப்படைந்து வருகிறார்கள். விழிப்புணர்வடைந்த அரசியல் முனைப்புநிலையை அடைந்துவருகிறார்கள்.

இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் இறுதியளவில் எமது நாட்டில் இருப்பது புதிய அரசாங்கமாகும், புதிய ஆட்சியாகும். அந்த புதிய அரசாங்கத்தை, புதிய ஆட்சியை தேசிய மக்கள் சக்தியினுடையதாக மாற்றிக்கொள்ள நாமனைவரும் முனைப்பாக பங்களித்துள்ளோம்.

எமது நாடு பயங்கரமான யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவேளையில் தமது உயிர் உள்ளிட்ட அனைத்தையுமே அர்ப்பணித்து யுத்த முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டுவந்தாலும் அன்று நீங்கள் எதிர்பார்த்த சாதகமான நாடொன்றில் நன்றாக வசிக்கின்ற மக்கள் பற்றிய எதிர்பார்ப்பு முழுமையகவே சிதைக்கப்பட்டுவிட்டது.

யுத்தம் நிலவிய காலத்தைப் பார்க்கிலும் சீர்குலைந்த, உயிர்வாழ்வது மிகவும் கடினமான மற்றும் உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்குள்ளான நாடாக விளங்குகின்றது. அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டியது எம்மால் கைவிடமுடியாத பொறுப்பாகும்.

இந்த நெருக்கடிகளை மட்டுப்படுத்தப்பட்ட ஒருசில விடயங்களுக்குள் முடக்கிவிட ஒருசிலர் எதிர்பார்க்கிறார்கள். பொருளாதாரரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளமை உண்மைதான்.

மக்களின் அத்தியாவசிய பண்டங்கள்மீது வரிவிதிக்கப்படுவது, தொழிலொன்றைத் தேடிக்கொள்ள இயலாது, கிடைக்கின்ற சம்பளத்தில் சீவிப்பது சிரமமானது. நாட்டைவிட்டுச் செல்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையடைந்து உள்ளதென்பது போன்ற விடயங்கள் உண்மையே. எனினும் மறுபுறத்தில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து, குற்றச்செயல்கள் மலிந்துள்ளன.

அண்மையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து வெலிகம பொலீஸ் ஆளுகைப் பிரிவுக்கு வருகை தந்த ஒரு குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தர்கள். அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள் மீது வெலிகம பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் இறந்து மற்றுமொருவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

இறுதியில் கொழும்பு பொலீஸாரும் வெலிகம பொலீஸாரும் ஒருவர்மீது ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டார்கள். வழிப்பறிக்கொள்ளைக்காரன்போல் வீதியில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியவேளையில் நிறுத்தாமையால் நாரம்மல சாரதியை சுட்டுக்கொன்றார்கள். மதியபோசனம் உண்டுகொண்டிருந்த பிக்குவை சுட்டுக்கொன்றார்கள். பெலியத்தையில் ஐவரைக் கொலைசெய்தவர்கள் யாரென இன்னமும் தெரியாது.

அனைவரதும் உயிர்கள் பாதுகாப்பற்ற அராஜகநிலை உருவாகி உள்ளது. 1993 காலத்திலும் இவ்வாறான நிலைமை காணப்பட்டு ஜனாதிபதி பிரேமதாசவின் படுகொலைக்குப் பின்னர் சற்று தணிந்தது. உங்களதும் எனதும் எம்மனைவரதும் உயிர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பொருளாதாரம் சீரழிந்தது மாத்திரமல்ல மக்களின் உயிர்கள் பற்றிய பாதுகாப்பற்ற நிலைமையின்பேரில் ஆட்சிக்குவர சிலவேளைகளில் திட்டமிடுவதாகவும் இருக்கக்கூடும்.

இது அதிகாரத்திற்காக உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடலாகாது. எந்தவொரு பிரஜைக்கும் அரசாங்க அலுவலகமொன்றில் இருந்து பணிகளை மேற்கொள்ளமுடியாத சீரழிந்த அரச சேவையே காணப்படுகின்றது.

பொலீஸ் மா அதிபரொருவரை நியமித்துக்கொள்ள முடியாமல் பதிற்கடமையாற்றுவதற்காக நியமித்தவருக்கு கரட், கிழங்கினைக் காட்டிக்காட்டி தமக்குத் தேவையாக நடவடிக்கைகளை ஈடேற்றிக்கொள்கிறார்கள். நீதி பரிபாலனம் தொடர்பில் சந்தேகம் குவிந்துள்ளது. குற்றச்செயல் புரிபவர்கள், மோசடிப் பேர்வழிகள், ஊழல்பேர்வழிகள் ஒன்றுசேர்ந்த குடும்பங்களின் அருவருப்பான, அழுகிப்போன அரசியலே நிலவுகின்றது.

இரும்பு மூட்டைக்கே கரையான் அரித்துவிட்டால் ஏனையவை பற்றிப் பேசுவதில் பிரயோசனமில்லை. உலகின் ஒருசில நாடுகளில் பொருளாதாரம் சீரழிந்தாலும் ஏனைய முறைமைகள் வழமைபோல் நிலவும்.

எமது நாட்டில் சீரழிந்த இந்த முறைமைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றை நிலைநாட்டுவதை விடுத்து ஆட்சிமாற்றம் அல்லது தலைமைத்துவ மாற்றம் பயன்தர மாட்டாது. மனிதர்கள் சிந்திக்கின்றவிதத்தைக்கூட மாற்றியமைக்கத்தக்க முறைமையொன்று தேவை.

இந்த சமூகத்துடன் எம்மால் முன்நோக்கி நகர முடியாது. பொருளாதாரம், அரசியல், சமூகம் அனைத்தையுமே புதிய மாற்றத்திற்கு இலக்காக்கின்ற அரசியலொன்று தேவை. அண்மைக்காலமாக பல வாய்ப்புகள் உருவாகியபோதிலும் நாட்டை மேம்படுத்துகின்ற நோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை.

மேலைத்தேய ஆதிக்கத்திற்கு 133 வருடங்கள் அகப்பட்டிருந்த ஒரு நாடு சுதேசிகளின் கைகளுக்கு கிடைத்ததும் வெள்ளைக்காரனுக்கு இரண்டாம்பட்சமாகாத அளவுக்கு நாட்டைக் கட்டியெழுப்ப எந்தளவு ஆழமான உணர்வு ஏற்படவேண்டும்? எம்மிடம் உருவாகாத இந்த நோக்கு இந்தியாவின் காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தேசிய இயக்தைச்சேர்ந்த தலைவர்களிடம் இருந்தது.

இந்த நோக்கு இன்று சந்திரனுக்குப் போகின்ற ஒரு இந்தியாவை உருவாக்கி இருக்கின்றது. தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என எற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு பெண் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியர் எனும் கொடியின்கீழ் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள்.

குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மலையக மக்களை நாடற்ற நிலைமைக்கு மாற்றியதும் தமிழ் அரசுக் கட்சியை உருவாக்க திருவாளர் செல்வநாயகம் முன்வந்தார். 1956 இல் இருந்து மொழிப் பிரச்சினையொன்றை இழுத்துப்போட்டுக் கொண்டதால் 58 அளவில் சிங்கள – தமிழ் கலவரம் உருவாகியது.

ஸ்ரீ எழுத்தில் கறுப்பெண்ணெய் பூசத் தொடங்கினார்கள். 1970 நடுப்பகுதியில் வடக்கில் ஆயுத இயக்கமொன்று உருவாகின்றது. 2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகின்றது.

எமது ஆட்சியாளர்கள் உருவாக்கியது முரண்பாட்டு வரலாறாக அமைந்தபோதிலும் இந்திய ஆட்சியாளர்கள் உருவாக்கியதோ ஒருமைப்பாட்டினையாகும். தேசம் ஒன்றாக எழுச்சிபெறுகின்ற வரலாற்றினை அவர்கள் எழுதும்போது முரண்பாடுநிறைந்த வரலாற்றினை எழுதவேண்டியநிலை எமக்கு எற்படுகின்றது.

உலக நாடுகள் இருபதாம் நூற்றாண்டில் பிரமாண்டமான முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கையில் நாங்கள் அந்த நூற்றாண்டினைக் கைவிட்டுவிடுகிறோம். உலகில் உருவாகியுள்ள நவீனத்துவத்திற்கு ஒத்திசைவு செய்யத்தக்க இலங்கையொன்று எமக்குத் தேவை.

எனவே எம்மெதிரில் இருப்பது வெறுமனே ஆட்சிமாற்றத்திற்குப் பதிலாக புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி நாட்டைக்கொண்டுசெல்கின்ற புதிய ஆட்சியாகும். அதற்காக நாட்டை மீண்டும் விழித்தெழச் செய்வித்து தேசத்தை ஒருமைப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.

நாங்கள் வடக்கு மக்களை அழைக்கவேண்டியது 13 ஐ தருகிறோம் என்றல்ல: பெடரல் தருகிறோம் என்றல்ல. இந்த அனர்த்தத்தில் இருந்து விடுபடுவதற்காக நாங்கள் ஒன்றுசேர்ந்து போராடுவோம் என்றே கூறவேண்டும். கப்பம் கொடுத்து வாக்குகளைப் பெறுகின்ற கலாசாரத்திற்குப் பதிலாக புதிய மறுமலர்ச்சி யுகத்துடன் ஒன்றுசேருங்கள் எனக்கூறி அதிகாரத்தின் சுக்கானை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் அதிகாரத்தை எடுப்பதென்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆரம்பமேயன்றி இறுதிக்கட்டமல்ல. எமக்கு எதிராக ஒன்றுசேரக்கூடிய அனைத்துச் சக்திகளும் ஒரே மேடைக்கு வருகின்றன. திடீர் விபத்து காரணமாக ஒருவர் இறந்தாலும் என்பிபி ஐ பிடித்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் அந்த அளவுக்கு திகைப்படைந்துள்ளார்கள். அவர்களின் அசிங்கமான, காடைத்தனமான, கீழ்த்தரமான அரசியலை சதாகாலமும் முன்னெடுத்துச்செல்ல முடியுமென்று அவர்கள் நினைத்தார்கள். பல தசாப்தங்களாக அவர்களின் குற்றச்செயல்களையும், ஊழல்களையும் வெளியில் வர இடமளிக்காமல் பிரதான ஊடகங்களில் தணிக்கை செய்திருந்தார்கள்.

இப்போது சமூகவலைத்தலங்களை தடைசெய்யப்போகின்ற ஐயாமார்களுக்கு நாங்கள் கூறுவது ” இப்போது குதிரை தப்பியோடிவிட்டது, லாயத்தை மூடுவதில் பலனில்லை” என்றாகும். இப்போது அவதூறு, அவமதிப்பு, பயமுறுத்தல், அச்சுறுத்தல்களை முன்வைத்து வருகிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்டுள்ளது அவதூறு, அவமதிப்பு, பயமுறுத்தல், அச்சுறுத்தல்களுக்கு கட்டுப்படுவதற்காக அல்லவென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். பலதசாப்தங்களாக பெரிகோட்டின் இருபுறத்திலும் வைத்திருந்த பாதுகாப்புப் பிரிவின் இளைப்பாறியவர்களும் நாங்கள் அனைவரும் இந்த பக்கத்தில் ஒன்றுசேர்ந்திருக்கிறோம். பெரிகோட்டின் அந்தப் பக்கத்தில் அவர்கள் தனித்துப்போய் இருக்கிறார்கள்.

ஜெனரல்மார்கள், அட்மிஜரால்மார்கள், எயார் மார்ஷல்கள், மேஜர் ஜெனரல்கள், நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இப்படி ஒன்றாக இருந்தாலும் அவர்கள் சதாகாலமும் அவர்களின் பைக்குள்ளே அனைவரையும் வைத்துக்கொள்ளவே நினைத்தார்கள். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவினைக்கண்டு அச்சமடைந்தவர்கள் சிறுபிள்ளைத்தனமானவற்றை அமைத்திட முயற்சிசெய்கிறார்கள்.

ஆனால் நாங்கள் எப்போதுமே கூறுவதைப்போல் கொப்பி பண்ணமுடியும், ஆனால் இணையானதாக்கிட முடியாது. இந்த ஒவ்வொருவரும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை, நல்ல நாட்டை எதிர்பார்த்து வந்தவர்களேயன்றி அவர்களிடம் தனிப்பட்ட தேவைகள் கிடையாது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், உளவுத்துறைப் பிரதானி போன்றவர்கள் பதற்றமடைந்துள்ளார்கள். எனினும் நாங்கள் பதற்றமடையவில்லை.

தம்மை இந்த பேரழிவிலிருந்து விடுவித்துக்கொள்வார்கள் என்ற பாரிய எதிர்பார்ப்பு எம்மீது மக்களுக்கு இருகின்றது. கலவரமடைந்து, பொய்க்கிடங்குகளில் விழுந்து அந்த மக்களின் எதிர்பார்ப்பினை நாங்கள் சிதைக்கப்போவதில்லை.

புயலில் சிக்கியுள்ள இந்த படகினை மிகச்சிறந்த தந்திரோபாயத்தை தெரிவுசெய்து வெற்றியை நோக்கி வழிப்படுத்துவோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒரு வார்த்தைகூட பிசகக்கூடாது. ஐ.ரீ.என் தலைவர் சுதர்ஷன குணவர்தன “சமபிம” என பாரிய லிபரலுக்காக தோற்றியவர்கள் அவற்றைப் பிடித்துக்கொண்டு அடிக்கிறார்கள்.

நடவடிக்கைகளை மேற்கொண்டதும் வெற்று ஆசாமிகள். அதனால் ஒருசொல்கூட பிசகுவதற்கு எமக்கு உரிமை கிடையாது. நாங்கள் எந்நேரத்திலும் மனதால் அல்லது மூளையால் முடிவுகளை எடுக்கவேண்டும். அதனால் நாங்கள் பொறுமையுடனும் கவனமாகவும் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக அசிங்கமான, அழுகிப்போன, துர்நாற்றம் வீசுகின்ற அரசியலை சுத்தஞ்செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு சட்டமும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும் இருக்கின்ற நிலைமையை நாங்கள் மாற்றியமைத்திடவேண்டும். அனைத்து அதிகாரங்களும் ஒரே வளையத்தின் கைகளிலேயே இருக்கின்றன. அவையனைத்தையும் மாற்றியமைத்து பொருளாதார ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும்.

எமது கல்வியை பாரிய மாற்றத்திற்கு இலக்காக்கிட வேண்டும். ஒவ்வொரு பிரஜைக்கும் உணவுவேளையொன்றை வழங்குவதற்கான வழிமுறையை உறுதிப்படுத்திட வேண்டும். நாங்கள் தொடக்கத்திலேயே பிரஜைகளுக்கு உணவு, சுகாதாரம், கல்விக்கு உத்தரவாதம் அளிப்போம்.

நெருக்கடியை முகாமை செய்வதற்காகவே சர்வதேச நாணய நிதியம் இடையீடு செய்துள்ளது. எமது ஆட்சியின்கீழ் நெருக்கடியை முகாமைசெய்து மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க புதிய அணுகுமுறைக்குள் நாட்டைக் கொண்டுசெல்வோம். குற்றச்செயல்களிலிருந்தும் போதைப்பொருள்களிலிருந்தும் இந்த நாட்டை மீட்டுப்பதற்கான திட்டம் எம்மிடம் இருக்கின்றது.

ஊர்களில் இருந்தவர்களை அரசியல்வாதிகளின் குற்றச்செயல்களுக்கு ஈடுபடுத்தி எமது நாட்டின் பாதாளக்கோஷ்டியை பாரியளவில் வளர்த்தெடுத்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தன கோனவல சுனிலுக்கு மன்னிப்பு வழங்கினார். ஆர். பிரேமதாச சொத்தி உபாலியை நிறைவேற்றுச் சபைக்கு எடுத்தார். சந்திரிக்கா குமாரதுங்க பெத்தெகான சஞ்சீவவை தனது பாதுகாப்பு பிரதானியாக நியமித்துக்கொண்டார். நாமல் ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்குபவர் ஜுலம்பிட்டியெ அமரே. இந்த ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்புப் பிரிவுகளின் ஜெனரல்மார்களின் பாதுகாப்பு போதாதென பாதாளக்கோஷ்டியிடம் ஒப்படைத்தார்கள்.

இந்த நிலைமையை மாற்றியமைத்திட புதிய எழுச்சி, ஒருமைப்பாடு, புதிய மலர்ச்சி எமது நாட்டுக்கு அவசியமாகும். அந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் பாரிய செயற்பொறுப்பு இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவிடம் கையளிக்கப்படுகின்றது. அதனை சிறப்பாக ஈடேற்றுவீர்கள் என்பது எம்மனைவருக்கும் உறுதியானதே

தமிழ் கட்சிகளை தடை செய்ய கூறும் சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். அவர்களை அழிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச பாரிய தவறிழைத்துள்ளார என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ரணில் ராஜபக்சவிடம் தமிழ் மக்கள் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம் – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது என்று தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இந்திய விஜயத்துக்கு முன்னர் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினர்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

“தான் ரணில் ராஜபக்ச அல்ல ரணில் விக்கிரமசிங்கதான் என்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஜனாதிபதி கூறியது நகைப்புக்குரியது. தற்போது ரணில் – ராஜபக்ச அரசுதான் ஆட்சியில் உள்ளது. ராஜபக்சக்கள் பட்டாளத்தின் ஆசியில்தான் ஜனாதிபதி கதிரையில் ரணில் இருக்கின்றார். எனவே, ராஜபக்சக்களின் குணாதிசயங்கள் ரணிலிடம் உண்டு. அவரிடம் தமிழ் மக்கள் – அவர்களின் பிரதிநிதிகள் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.” – என்றார்

நாட்டின் அரசியல் கலாசாரத்தில்தான் பிரச்சினையே தவிர சட்டத்தில் அல்ல – அநுர குமார

எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவத்தபோதே அவர் இதனைக் குறிப்பிடடுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதாரக் குற்றவாளிகள் எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எமது நாட்டில் சட்டம் பலமாகத்தான் உள்ளது. அதானால்தான் தேங்காய் திருடியவரும், இலஞ்சம் வாங்கிய கிராமசேவகரும், பொலிஸாரும்கூட சிறைக்குச் செல்கிறார்கள்.

ஆனால், இந்தச் சட்டத்தில் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் சிக்குவதில்லை. அரசியல் பலத்தால் இதிலிருந்து இவர்கள் இலகுவாக தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்த குழியிலிருந்து வெளியே வர, ஸ்தீரமான மற்றும் நேர்மையான அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்தான் இன்று ஜனாதிபதியாக உள்ளார். நாட்டுக்குள் சட்டவிரோதமாக தங்கத்தை கடத்த முயன்றவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவ்வாறு எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில்தான் பிரச்சினைக் காணப்படுகிறதே ஒழிய, சட்டத்தில் அல்ல.

குற்றவாளிகளை பாதுகாக்கும், குற்றவாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கும், குற்றவாளிகள் சட்டத்தை இயற்றும் ஒரு நாடாளுமன்ற சம்பிரதாயம் முதலில் மாற்றமடைய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Posted in Uncategorized

ரணிலுக்கு வெகுவிரைவில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி அதிகரிப்பு பொருளாதார கொள்கையினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் பாடம் கற்பித்தார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.

ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இனிதும பகுதியில் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்த மக்கள் தற்போது உண்மையான அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துள்ளமை வரவேற்கத்தக்கது.

நாட்டுக்கும், தமக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் அரசாங்கத்தை தோற்றுவிப்பார்கள்.

ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இரண்டு பிரதான அரசியல் கட்சிகளினால் நாட்டை முன்னேற்ற முடியாது,அரசியல்வாதிகள் மாத்திரம் தான் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். இவர் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை,கடன் செலுத்தாமல் அந்த நிதியை கொண்டு எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஏப்ரல் 12ஆம் திகதி செலுத்த வேண்டிய அரசமுறை கடன்களை செலுத்த போவதில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

8 சதவீதமாக இருந்த பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதால் பொருள் மற்றும் சேவைகளின் கட்டணம் சடுதியாக உயர்வடைந்தது.சமூக பாதுகாப்பு அறவீட்டுதொகை என்ற புதிய வரி அதிகரிக்கப்பட்டு மக்களிடமிருந்த நிதி சூறையாடப்பட்டது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளிறுகிறார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 400 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

நாட்டின் வங்கி கட்டமைப்பின் பிரதான நிலை தரப்பினர்களில் 50 சதவீதமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இதுவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி கொள்கையின் பெறுபேறு.

மறுபுறம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் தக்க பாடம் கற்பித்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், டெலிகொம் நிறுவனம் மற்றும் லிட்ரோ நிறுவனம் உட்பட இலாபம் பெறும் நிறுவனங்களை விற்பனை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதுவே ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது.அரச நிதியை கொள்ளை அடிப்பது ராஜபக்ஷர்களின் கொள்கை, அரச வளங்களை விற்பனை செய்வதும், மோசடியாளர்களுடன் டீல் வைப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்தால் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணைக்கு முரணாக அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். தேர்தலை நடத்தினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு அரச வரபிரசாதம், பாதுகாப்பு வழங்குவதை தவிர்த்துக் கொண்டு அந்த நிதியை கொண்டு தேர்தலை நடத்தலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் அதன் விளைவு எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார் என்றார்.

தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – அநுரகுமார

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது. தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓடி வந்து நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (02) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு விரைவாக வந்து பதிலளித்து விட்டு,மீண்டும் விரைவாக சபையை விட்டுச் செல்கிறார்.2023 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின்  வேட்பு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இம்மாதத்துக்குள் வெளியிட வேண்டும். தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பினால் இந்த அதிகாரம் உரித்துடையாக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரியுள்ளதை அறிய முடிகிறது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகாரம் உள்ளது,ஆகவே  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனையை கோருவது பயனற்றது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தலை   எந்நேரமும் வெளியிட முடியும்.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு,ஆனால் ஆணைக்குழு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றமை ஏதோவொரு சூழ்ச்சி இடம்பெறுவதை நன்கு அறிய முடிகிறது.ஆகவே ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விரைவாக வருகை தந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதையும் ஓடி வந்து குறிப்பிட வேண்டும்.

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் சமிஞ்சையை எதிர்பார்த்த நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது.ஆகவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா எவ்வாறு செயற்பட்டார்,யாருக்காக செயற்பட்டார்,எவரது அரசாங்கத்தில் எந்த பதவி வகித்தார் என்பதை நன்கு அறிவோம்.அவர் சுயாதீன நபர் அல்ல,அரசியல் ரீதியில் இவர் தொடர்புப்பட்டார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனையை கோருவது அவசியமற்றது.அத்தடன் சட்டமாதிபரின் ஆலோசனையை நாட்டு மக்களுக்கு குறிப்பிடப் போவதில்லை எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே தேசிய தேர்தல் ஆணைக்குழு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.